பவுத்தத்தின் காலடிச் சுவடுகள்
பவுத்தத்தின் காலடிச் சுவடுகள்
நாம் பல காலமாக யுவான் சுவாங் என அழைக்கும் சீன யாத்திரீகரின் சரியான உச்சரிப்பு பெயர் சுவான் ஸாங். சீனாவில் புறப்பட்டு நிரந்தரமாகப் பனி மூடிய பல மலைகளைக் கடந்து சுவான் ஸாங் துருக்கிய அரசர் ஒருவரின் நாட்டுக்குச் சென்றார். சுவான் ஸாங்கின் பயணத் திட்டங்களைக் கேட்டறிந்த அந்த அரசர், “எதற்காக இந்தியா செல்ல விரும்புகிறீர்கள்? அது வெப்பமான நாடு. அங்குள்ள மக்கள் அந்நியர்களை நன்றாக நடத்த மாட்டார்கள்” என்று கூறினார்.
ஆனால், சுவான் ஸாங் தான் எடுத்த முடிவைக் கைவிடவில்லை. அவருடைய விருப்பத்தை ஏற்ற துருக்கிய அரசர் சுவான் ஸாங்கின் பயணத்துக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். ஆப்கானிஸ்தானைக் கடந்துதான் அவர் இந்தியா வர வேண்டும் என்பதால், ஆப்கன் மொழியை புரிந்துகொள்ள உதவியாக அவருக்குத் துணையாக ஒரு மொழிபெயர்ப்பாளரையும் அனுப்பி வைத்தார்.
இந்தியாவில் கால்பதிப்பு
பால்க், பாமியன் ஆகிய பகுதிகளில் கனிஷ்கர் புத்த மதத்தைப் பரப்பி 500 ஆண்டுகளுக்குப் பிறகும் அம்மதம் அங்கே சிறப்புடன் விளங்கியது. அங்கு எண்ணற்ற பவுத்த நினைவுச் சின்னங்களையும் புத்தரின் புனிதப் பொருட்களையும் சுவான் ஸாங் பார்த்தார். அங்கிருந்த பவுத்த மடாலயங்களில் புத்தரின் தண்ணீர்க் குவளை, அவருடைய துடைப்பம், பற்களுள் ஒன்று ஆகியவற்றை ஃபாஹியானைப் போலவே, சுவான் ஸாங்கும் பார்த்தார்.
பிறகு, இந்துகுஷ் மலைத் தொடரைத் தாண்டி காபூல் பள்ளத்தாக்கை அவர் அடைந்தார். அங்கும் பவுத்த மதம் தழைத்திருந்தது. அதன் பிறகு சுவான் ஸாங் இந்தியா வந்தார். கைபர் கணவாய் வழியாக அவர் வந்திருக்க வேண்டும். வழியில் பெஷாவர் பள்ளத்தாக்கு மட்டும் செழிப்பாக இருந்தது. இப்பகுதிக்கு வந்தபோதுமெகஸ்தனிஸை போலவே, கரும்பில் இருந்து சர்க்கரை உற்பத்தி செய்யப்படுவதைக் கண்டு சுவான் ஸாங்கும் ஆச்சரியப்பட்டார்.
பவுத்தத் தலங்கள்
சிந்து நதியைக் கடந்து கனிஷ்கருடைய காலத்திலேயே கல்விக்குப் பெயர் பெற்றிருந்த காஷ்மீருக்குச் சென்றார். அங்கே, மத நூல்களை பிரதியெடுக்க சுவான் ஸாங்குக்கு உதவியாக 20 எழுதுபவர்களை காஷ்மீர் மன்னர் வழங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குள் எழுதும் பணியை சுவான் ஸாங் முடித்துக்கொண்டார். பிறகு, வட இந்தியாவில் அந்நாளில் வலிமைமிக்க அரசராக இருந்த ஹர்ஷரின் கனோஜ் நாட்டை வந்தடைந்தார். அந்த நாடெங்கும் பயணிகள் தங்கிச் செல்ல விடுதிகளும், பவுத்த மடாலயங்களும் கட்டப்பட்டிருந்தன.
பிறகு சிராவஸ்தி, கபிலவஸ்து, குசிநகரம், காசி, சாரநாத், கயை, வைஷாலி, பாடலிபுத்திரம், ராஜகிரஹம் என புத்தர் வாழ்ந்த தலங்கள் பலவற்றுக்கும் சுவான் ஸாங் யாத்திரை சென்றார். அவருடைய யாத்திரையின் நோக்கமே அதுதானே.
இந்த நகரங்களில் பலவும், மாமன்னர் அசோகர் நிறுவிய நினைவுச் சின்னங்களும் ஃபாஹியான் காலத்தில் இருந்ததைவிடவும் பாழ்பட்டு கிடந்தன. அலகாபாத், காசி நகரங்களில் சுவான் ஸாங்கால் அதிக பவுத்தர்களை பார்க்க முடியவில்லை.
( Thanks to : Tamil Hindu )
Comments
Post a Comment