மணிமேகலை துறவும் பவுத்த தத்துவமும்
மணிமேகலை துறவும் பவுத்த தத்துவமும்
- எழுத்தாளர்: செந்தீ நடராசன்
சமயம் வேறு, தத்துவம் வேறு, தர்க்கம் வேறு, அறவியல் வேறு. ஒரு நெறியினைப் பின் பற்றும் மக்கள் கூட்டத்தை ஒரு சமயத்தவராக கருதலாம். அச்சமயத்தைப் பின்பற்றும் எல்லா மக்களும் அச்சமயத்தின் தத்துவ தருக்கக் கூறு களைத் தெரிந்திருக்க வேண்டுமென்றில்லை.
அது அறிவர்களின் செயல். ஒரு சமயத்தின் இலக்கினை அடைவதற்கு உதவும் விதத்தில் அச் சமயத்திற்கு ஒரு கட்டுக்கோப்பான ஒழுக்க நெறி வலியுறுத்தப்படும். உலகைப் படைத்த ஒருவனை ஏற்காத பௌத்த, சமண, ஆசீவக சமயங்கள் பிறப்பறுக்கும் குறிக்கோளை அடைவதற்காகக் கண்டிப்பான நடைமுறைகளை- ஒழுக்க நெறிகளை- மக்களுக்குச் சொல்கிறது. எனவேதான் அவர்கள் சார்பில் அறநூற்கள் குவிந்தன. இது சமயத்தின் அறவியல் பகுதி.
உலகம், உலகத்து உயிர்கள் மற்றும் உலகப் பொருட்கள் ஆகியவற்றின் பரிணாமம் (தோற்றம், ஒடுக்கம்) குறித்துப் பேசுவது தத்துவம் அத்தத் துவம் உலகப் பொருளை உண்மை எனக்காண்பது, மாயை அல்லது கருத்து எனக் காண்பது என்று இரு பிரிவுகளாகப் பிரித்து காண்பர். படைத்தோன் ஒருவனை ஏற்பது, மறுப்பது (ஆத்திக தத்துவம், நாத்திக தத்துவம்) என்றும் இருவகையாகப் பகுத்து காண்பதுண்டு. இந்தியத் தத்துவங்களைப் பொறுத்தவரை வைதீக (வேதம் சார்ந்த) தத்துவங்கள், அவைதீக தத்துவங்கள் என்று பிரிப்பது இயல்பாகியுள்ளது.
பவுத்தம் அவைதீக சமயம்; படைத்தோன் ஒருவனை ஏற்காத சமயம்; ஆன்மா என்றொன்று இல்லை எனக் கூறும் அநான்மவாதிகள் பவுத்தர்கள். லோகாயதவாதிகளும் ஆன்மாவை ஒப்புக்கொள் வதில்லை. ஆனால் உயிரின் மறுபிறப்பை லோகா யதவாதிகள் மறுப்பார்கள். ஆன்மாவை மறுக்கும் பவுத்தர்கள், உயிர் மீண்டும் மீண்டும் பிறக்கும் என்பர். மரணத்திற்குப் பின் அது கொண்ட உடலுடன் செய்த நல்வினை தீவினைப் பயனால், அறுவகை பிறவிகளில் ஒன்றில் சென்று சேரும் என நம்புகின்றனர். நல்வினை தீவினை கோட் பாட்டை இந்தியத் தத்துவத்திற்கு முதலில் தந்தவர் புத்தர் என்றே தோன்றுகிறது.
சங்க காலம் கி.மு. 3 முதல் கி.பி. 2 வரை என்னும் போது, தமிழுக்கும் சங்க இலக்கியத் திற்கும் பவுத்த சமயமும் அதன் தத்துவமும் புதிதில்லை என்றே ஆகிறது. ஒரு வளமையான தத்துவ விசாரம் தமிழிலும் பாலியிலும் காஞ்சியில் நிகழ்ந்திருப்பதை இங்கு நினைவு கூர வேண்டும்.
தமிழகத்தில் சமய தத்துவத்தின் தர்க்கமெனும் அறிவார்ந்த செயல்பாடுகளை நமக்குத் தெரி விக்கும் முதல்நூல் ‘மணிமேகலைத் துறவு’ எனலாம். (மணிமேகலை காப்பியம் தொடக்கத்தில் அவ் வாறே அறியப்பட்டது.)
பவுத்தத்தின் வரலாறு
புத்தரின் வரலாற்று காலத்தில் சாக்கியர்கள், வரிஜ்ஜிகள், விதேகர்கள், மல்லர்கள் போன்ற அரச வம்சங்கள் வைதீக சார்பற்றவை. இனக்குழு அரசின் இயல்புடையவை. குருவம்சங்கள், பாஞ் சாலர்கள், சௌராஷ்டிரர்கள், இச்சவாகுகள் போன்ற சத்திரிய வம்சங்கள் வைதீக சார்பு உடையவை; யாக உயிர்ப்பலிகளில் ஆழ்ந்திருந் தவை. அக்காலத்தில் உலகம், உயிர் குறித்த அறி வார்ந்த சிந்தனைகள் பல்கிப் பெருகின. அத்தகைய அறிஞர் பெருமக்களுள் சிலரே, கௌதம புத்தர், மகாவீரர், கோசல மற்கலி புத்தரா, கக்குட காட்டியானார், பூர்ண காசியப்பர், அஜித கேச கம்பளர் போன்றோர்.
புத்தரின் தத்துவத்தின் தொடக்கத் தளம் சாங்கியம் என்றே படுகிறது. ஆனால், அதையும் கடந்து சுதந்தரமான ஒரு ஒழுக்க நெறியைக் கட்ட மைத்து, மிகக் கட்டுப்பாடான சங்கம் கண்டவர் புத்தர் எனலாம். எல்லா தத்துவவாதிகளையும் போல புத்தரும் கடந்த காலத்தில் தனக்கு ஒரு தீர்வைத் தேடினார் எனலாம். அவரது சங்கம் இனக்குழு சமுதாயத்தின் ஒரு லட்சிய வடிவம் என்பர்.
ஆனால் புத்தருக்குப்பின் புத்த சமயத்தில் பிளவுகள் ஏற்படுகின்றன. அவை தேராவாதம், மகா சாங்கிகம் எனப்பட்டன. தேராவாதிகள் பழமையையும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் பின்பற்றி புத்தரின் ஆதி நெறியில் பிறழாது நிற்க, புது ரத்தங்கள் புத்தரில் மனிதத் தன்மை கடந்த இறைத் தன்மையைக் கண்டு பவுத்தத்தைப் பெரு மக்கள் சமயமாக மாற்றும் பாதையில் நகர்ந்தனர். நாளாவட்டத்தில் இவ்விரு பிரிவுகளும் பலவாகப் பிரிந்தன. அவற்றுள் 18 முக்கியப் பிரிவுகள் இனம் காணப்பட்டுள்ளன. சம்பந்தர் அறுவகை தேரர் என்பதால் அவர் காலத்தில் தேரர்களில் ஆறு பிரிவுகள் இருந்ததாகத் தெரிகிறது.
தேராவாதப் பிரிவுகளுள் வைபாஜ்யவாத பவுத்தத்தை அசோகர் பின்பற்றினார். பவுத்தம் மேற்கும், தெற்கும், கடல் கடந்தும் பரவ அவர் காரணமானார். மௌரிய பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் தலையெடுத்த மூன்று வைதீக அரசுகளால், பவுத்தம் வடக்கே சிறிது குன்றி, தெற்கில் நகர்ந்து இலங்கையில் நிலை கொண்டது.
கனிஷ்கரின் முயற்சியில் கூட்டப்பட்ட பவுத்த சமயப் பிரிவுகளின் பேரவையில் தேராவாதர்களோ, வைபாஜ்யவாதிகளோ ஓரங்கட்டப்பட்டதாகவே தெரிகிறது. மகா சங்கிகர்கள் புத்தரின் போதனை களைப் “பிபாஷா” என்ற நூலாகத் தொகுத்த தாகத் தெரிகிறது. அது இப்போது கிடைக்க வில்லை. அதன் மூலப்பிரதியின் சில பகுதிகள் சீன மொழிபெயர்ப்புகளில் இருந்து கிடைக் கின்றன.
அந்தப் பேரவையில் மஹாயானர்கள் ஒரு சிறு பிரிவாக இடம் பெற்றிருந்தனர். அதுவே இரண்டு தலைமுறைகளுக்குப் பின், நாகார்ஜுனர், ஆர்ய தேவர் ஆகிய இருவரால் எழுச்சி பெறு கிறது. இவர்கள் முன் வைத்த ‘சூன்யவாதத்’ தத்துவம் பவுத்தத் தத்துவத்தை மற்றொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. இந்த சூன்ய வாதமே சங்கரரின் அத்வைத கொள்கைக்கு முன்னோடி என்பர்.
ஓரிரு தலைமுறைகளுக்குப் பின் மைத்ரேய நாதர், நாகார்ஜுனரின் மஹாயானத்தில் விஞ்ஞான வாதத்தை இணைக்கிறார். சூன்யத்தில் ஒன்று மில்லாது போவதை ஏற்க முடியாமல் அதன் பின்னரும் உள்ளுணர்வு எஞ்சி நிற்கிறது என்று அது கூறும். அதுவே யோகசார பவுத்தம்.
பல நூற்றாண்டுகளாகச் சூன்யவாதத்திற்கும் விஞ்ஞானவாதத்திற்கும் இடையே நடந்த மோதலுக்குப்பின் விஞ்ஞானவாதத்தை இட்டு நிரப்ப மகா சுகவாதம் வருகிறது.
அது பவுத்தத்தின் இறுதி இலக்கான நிர்வாணத்திற்குப் பிறகு சூன்யம், விஞ்ஞானம், மகாசுகம் என்ற மூன்று அம்சங்களை முன் வைக் கிறது. இம்மகா சுகவாதமே வஜ்ராயினம் தோன்றக் காரணம் ஆகிறது. பவுத்தப் பிரிவுகளிலேயே சிற்பக் கலைக்கு அதிக விருந்தளித்தது வஜ்ரா யினமும் மந்திராயனமுமே!
வஜ்ராயனத்தைப் புரிந்துகொள்ள
ஆதி பவுத்தம் இரு மார்க்கங்களைச் சொன்னது. ஒன்று ஸ்ராவகாயனம். மற்றொன்று பிரத்தி யேகாயனம். ஸ்ராவகர்கள் புத்தரின் போதனைகளைக் கேட்பார்கள். ஆனால் அவர்களது விடுதலைக் காக மற்றொரு புத்தரின் வருகை வரை காத்திருக்க வேண்டும். இதனிடையே ஸ்ராவர்கள் போதனைகள் செய்யலாம். ஆனால் முயன்றாலும் அவர்களால் பரிநிர்வாணத்தை அடையவும் முடியாது. பிறர் அடைய உதவவும் முடியாது.
பிரத்யேகர்கள் மனபக்குவத்தில் மேலானவர்கள். அவர்கள் தம் சுய முயற்சியால் - புத்தர் துணையின்றி- நிர்வாண நிலை பெற முடியும். ஆனால் பிறர் அதைப் பெற உதவ இயலாது.
தேராவாதப் பிரிவுகளின் இந்த நிலைப் பாட்டின் தொடர்ச்சியாக மஹாயானம் அல்லது போதிசத்துவயானம் எழுகிறது. அது முந்தைய சமய நிலைப்பாடுகளைத் தாழ்வானதாகக் ஹினாயான மாகக் கூறியது. அவர்கள், சுய முயற்சியில் நிர்வாண நிலையினை- ஏன் புத்த நிலையினைக் கூட அடைய முடியும்; பிறரும் அடைய உதவ முடியும் என்று கூறினர். இதுவே இருபெரும் பிரிவின் நிலைப்பாட்டின் அடிப்படை வேறுபாடு.
மேற்கூறிய மூன்று நிலைப்பாடுகளை பவுத்தத்தின் நான்கு தத்துவ மார்க்கங்களான
(1) சர்வாஸ்திவாதம் (சௌத்ராந்திகம்)
(2) வாகா யர்த்தபங்கா (பைபாஷிகா)
(3) விஞ்ஞானவாதம் (யோகசாரம்)
(4) சூன்யவாதம் (மத்யமிகம்) எதிர் கொண்டன.
பைபாஷிகம் ஸ்ராவக்யானம் மற்றும் பிரத் யேகயானம் ஆகியவற்றை விளக்குகிறது. மகா யானம் இருவகைப்படும்; பரமித்தானயம், மந்திரா னயம். முதல் வகையைச் சௌத்ராந்திகா, யோக சாரம் (மத்யமகம்) ஆகியவை விளக்குகின்றன. மந்தராயனம், யோக சாரத்தாலும் மத்தியமிகத் தாலும் மட்டுமே விளக்கப்படுகிறது.
கி.பி. ஆறாம் நூற்றாண்டை ஒட்டி அசங்கரின் மூலமாகத் தாந்தரீகத்தின் தாக்கம் மகாயானத்தில் ஏற்படுகிறது. தேவதைகள் போன்றோர் உதவிகள் சரளமாக ஏற்கப்படுகின்றன.
சுயமாகத் தன் முயற்சிகள் மூலம் விடுதலை பெறுவதைக் கடின நெறியாக உணர்ந்தனர். அதை விடத் தங்கள் மீட்சிக்குத் தெய்வங்களின் துணை நாடுவது எளிது. மாந்திரீகம் தாந்தரீகம், அற்புதம் முதலியன வெகுவாக வரவேற்கப்பட்டன. லௌகீக சித்திகளுக்கு ஏங்கினர். மகோ மகோபாத்தியாய ஹரிபிரசாத் சாஸ்திரி ‘தற்கால பவுத்தம்’ என்ற தனது நூலில் இவ்வாறு கூறுவார்.
“தாந்தரீகம் என்ற சொல்லைச் சாதாரண மக்கள் வேதமல்லாத மரபாகவே புரிந்து கொள்கிறார்கள். சக்தியை முன்னிலைப்படுத்தும் தாந்தரீகம் ஆண்- பெண் ஆற்றல்களின் இணைவை மையம் கொண்டது.” அவைதீக மதமான பவுத்தத்திற்கு இதனை ஏற்பதில் சிரமம் இருக்கவில்லை.”
இதன் வெளிப்பாட்டைச் சிற்பங்களில் காண லாம். தியான புத்தர்களோடு சக்தியின் வடிவான தாராதேவி (சக்திதேவி), தனியாகவோ, அருகமர்ந் திருப்பதாகவோ, மடியில் அமர்ந்திருப்பதாகவோ, ஆலிங்கன நிலையிலோ சித்திரிக்கப்படும். எதிரும் புதிருமான இவ்வாலிங்கன நிலையைத் திபத்தியர்கள் ‘யப்-யும்’ (Yab-Yum என்பர்.
2
தர்க்க நெறியும் மணிமேகலையும்
தர்க்கத்தை மணிமேகலை மிக விரிவாக இரு காதைகளில் விளக்குகிறது. சமயக்கணக்கர் உரைத்திறம் கேட்ட காதையில் பரபக்கமாகவும், தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதையில் சுபக்கமாகவும் அது கூறப்படுகிறது.
தேராவாதத்தில் தருக்கம் இல்லை. புத்தர் தத்துவ விசாரணைகளையும் தருக்க விவாதங் களையும் மறுதலித்தவர், மகாயனர் தம் கொள்கை நிறுவுவதற்குத் தருக்கவாதத்தை ஏற்றனர். நாகார்ச் சுனரின் உபய கௌசல்ய சூத்திரம் முதல் தருக்க நூல். ஆனால் அவர் பெரிதும் நையாயிக தருக்கத் தையே கையாண்டார்.
சௌத்தராந்திக யோகசாரர்கள் அதனை மேம்படுத்தி பவுத்த நெறிக்கு உகந்ததாக்கினர். தமிழில் சாத்தனார் மணிமேகலையில் அதை அழகுற கையாளுகிறார். 29-வது காதை முழுவதும் அதற்கே ஒதுக்குகிறார்.
அளவை
சமயக்கணக்கர் உரைதிறம் கேட்ட காதையில் சாத்தனார் அளவைவாதியிடம் (பிரமவாதி) சமயக் கணக்கு கேட்கும் பகுதியில் பத்து வகை அளவையை விளக்குகிறார். அவை யாவன, காட்சி, கருத்து, உவமை, ஆகமம், அருத்தாபத்தி, இயல்பு, ஐதிகம், அபாவம், மீட்சி, உள்ள நெறி.
உலகாயதவாதிகள் காட்சி அளவை மட்டுமே ஏற்பர். சௌத்ராந்திகர் என்னும் தேராவாதப் பிரிவினரும் காட்சி அளவை மட்டுமே கொண்டனர். சௌத்ராந்திக யோகசாரர்களோ காட்சி அளவையோடு, அனுமானம் எனப்படும் கருத்தளவையும் ஏற்பர். இதுவே மணிமேகலை பவுத்தத்தின் அளவை.
மணிமேகலையில் சாத்தனார், தர்க்கம் தத்துவம் ஆகியவற்றை விளக்கும் பாங்கு அவரைச் சௌத்ராந்திக யோகசார பிரிவினராக இனம் காட்டுகிறது.
மணிமேகலையில் தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதையில் தர்க்கவியல் பேசப்படுகிறது. அறவண அடிகளிடம் மணிமேகலை,
“அடிகள் மெய்ப்பொருள் அருளுக என்ன
நொடிகுவென் நங்காய் நுண்ணிதின் கேள் நீ
ஆதிசினேந்திரன் அளவே இரண்டே...” (29: 45-47)
எனத் தொடங்கி, பவுத்தம் ஏற்கும் இரு அளவை களான காட்சியளவை, கருத்தளவை ஆகியவை குறித்து விரிவாக விளக்குகிறார்; தொடர்ந்து வரும் 423 வரிகளிலும் இதுவே பேசப்படுகிறது.
காட்சி
காட்சி அளவை என்பது கண் வழி வண்ணமும், செவி வழி ஓசையும், மூக்கு வழி மணமும், நாவழி சுவையும், மெய் வழி ஊறும் உணரப்பட்டு உலகை அறிதல், உயிர், இந்திரியம், மனம், ஒளி ஆகியவை உதவியால் உண்மை அறிவதாகும்.
கருத்து
கருத்தளவை அல்லது அனுமானம் 3 வகைப்படும்.
1. பொது (சாமான்யதோ திருஷ்டம்) காட்டில் யானையின் பிளிறல் கேட்டு யானை உண்டு என்று அனுமானித்தல்.
2. எச்சம் (சேஷ வத்து) ஆற்றில் வெள்ளத் தைக் கண்டு மழை பெய்திருப்பதை அறிதல்.
3. முதல் (பூர்வ வத்து) - கார்மேகத்தை கண்டு இது மழை பொழியும் எனத் துணிதல்.
தத்துவம்
அடுத்துவரும் “பவத்திறம் அறுக” எனப் பாவை நோற்றக் காதையில் தத்துவக் கருத்துக்கள் விவரிக்கப்படுகின்றன. மணிமேகலை,
* புத்தம், தர்மம், சங்கம் என்னும் மும்மணிகளை வணங்குகிறாள்.
* திருவடியே சரண் எனச் சங்கத்தில் சரணாகதி அடைகிறாள்.
* அதன் பின் அறவண அடிகளின் தத்துவ விளக்கம் நிகழ்கிறது.
இங்கு கவனிக்கத்தக்க செய்திகள் சாத்தனாரின் புத்தர் பற்றிய கருத்துக்கள்.
துடித (துசித) லோகம் என்பது புத்தராகத் தோன்றும் ஒருவர் அதற்கு முன் இருக்கும் இடம் ஆகும். கௌதம புத்தர் துடித லோகத்தில் பிரபா பாலர் என்ற போதி சத்துவராக இருந்தபோது தேவர்கள் உலகத்து உயிர்கள் உய்ய தோன்ற வேண்டுமென மிகவும் இரந்து வேண்ட, போதி மரத்தடியில் கௌதம புத்தராகத் தோன்றினார். தீய சக்தியான மாரனை வென்றவர் அவர். காமம், வெகுளி, மயக்கம் எனும் மூவகைக் குற்றம் ஒழித்தவர். அவரும் அவருக்குப் பின் தோன்றிய அளவிறந்த புத்தர்களும் உரைத்த அறங்களை அறவண அடிகள் மணிமேகலைத் தத்துவமாகப் போதிப்பதாக அமைகிறது.
நிதானம் 12:
12 நிதானங்கள் அல்லது சார்புகள் உயிரைத் தொடர்சங்கிலி போல் பிணைக்கின்றன. அவை: பேதைமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன் என்பன.
பேதமையில் தொடங்கிச் சங்கிலிபோலத் தொடரும் சார்புகள், இறுதி நிதானமான வினைப் பயனால் மீண்டும் பேதமையில் இணைந்து சங்கிலிப் பிணைப்பாகிறது. ‘மண்டில வகையால்’ (வட்டமுறை) இருக்கும் இச் சார்பை நீக்குவதே உயிர் முயலவேண்டுவது.
அறியாமை (பேதமை) எனும் முதல் சார்பு அறுந்தால் இதர சார்புகளும் பிடிமானம் அற்று அழியும் என்று சார்பு நீக்க வழிமுறை கூறப் படுகிறது.
நிதானவகை (30: 25-26) கண்டம் நான்கு.
நிதானவகை நான்கு கண்டங்களாகக் குறிக்கப் பெறுகிறது.
முதற்கண்டம் - பேதைமை, செய்கை (2)
இரண்டாம் கண்டம் - உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நகர்வு (5)
மூன்றாம் கண்டம் - வேட்கை, பற்று, பவம் (3)
நான்காம் கண்டம் - தோற்றம், வினைப்பயன் (2)
சந்திகள் மூன்று
முதல் கண்டத்தின் செய்கை இரண்டாம் கண்ட உணர்வுடன் இணைவது முதல் சந்தி. இவ்வாறே, நுகர்வும் வேட்கையும் இரண்டாம் சந்தி. பவமும் தோற்றமும் மூன்றாம் சந்தி.
உலகம் மூன்று
மேல் உலகு, கீழ் உலகு, நடு உலகு.
மூன்றுலகிலும் அளவில்லா உயிர்கள் உள்ளன.
உயிர்கள் ஆறு வகை
1. மக்கள் 2. தேவர் 3. பிரமர் 4. நரகர் 5. விலங்கு 6. பேய்கள்
நல்வினை, தீவினைக்கேற்ப தமக்குரிய ஒரு கருவில் உயிர் சென்று பிறக்கும். வினைகளுக்கேற்ப பேரின்பம் அல்லது கவலை அடையும்.
தீவினை (10)
உடம்பில் தோன்றுவன: கொலை, களவு, காமம் (3)
சொல்லில் தோன்றுவன: பொய், புறங்கூறல், கடுஞ்சொல், பயனற்ற சொல் (4) உள்ளத்தில் தோன்றுவன: பிறர்பொருளைக் கவர நினைத்தல், கோபப்படல், மயக்கம் கொள்ளல் (3)
வினைப்பயனை உணர்ந்த அறிவாளர் இத் தீவினைகளைச் செய்யார். செய்தால் விலங்கு, பேய், நரகர் ஆகி கவலையில் சிக்கி உழல்வர்.
நல்வினை
பத்து தீமைகளில் இருந்து விடுபட்டு, நல்லொழுக்கத்தை மேற்கொண்டு, தானம் வழங்கு வதில் ஈடுபடுவது, அதனால் தேவர், மக்கள், பிரமர் என்ற பிறப்புகள் எடுப்பர். நல்வினைப் பயன் அனுபவிப்பர்.
சாத்தனார் நல்வினை தீவினை விளக்கங்கள் அளித்த பின் சங்கிலித் தொடராக உள்ள நிதானங்கள் பற்றி விளக்கம் அளிக்கிறார். நாம் புரிந்துகொள்ளும் பொருளில் கூறுவதானால்,
“ஓர் உயிர் அறியாமை என்னும் இருளில் மூழ்கி இருக்கிறது. இதனால் ஏற்படும் செயல் என்னும் சலனங்களினால் விழிப்புணர்வு ஏற்படுகிறது. தொடர்ந்து ஜீவன்களாகி வாழ ஆரம்பிக்கின்றன. அது ஐம்புலன் மற்றும் மனம் ஆறு வாயில்கள் மூலம் பொருள்களுடன் தொடர்பு ஏற்படுத்தி நுகர்வு, தணியாத ஆசை முதலியன எழுந்து, பொருட்களில் பற்று ஏற்படுத்துகிறது. இப்பற்றால் தன்னலம் ஏற்பட்டு பவம் என்னும் கருமத் தொகுதி களுக்கு ஆளாகிறது. இத்தன்னல தொடர்ச்சி பிறப்பு, பிணி, மூப்பு, மரணம் ஆகியவற்றிற்குக் காரணமாகிறது.”
எனவே துன்பத்திற்கு மூலகாரணமான அறியா மையை (பேதைமையை) அழிக்க வேண்டும். துன்பச் சங்கிலியின் பேதைமைக் கண்ணி அறுபட, அடுத்தடுத்து அனைத்து கண்ணிகளும் அறுபடும். இது உயிருக்கான சார்பு நீக்கம்- துன்ப மீட்சி. இந்த பன்னிரு சார்பு நீக்கம் என்பது உயிரை நிர்வாண நிலைக்கு இட்டுச் செல்லும்.
இதனைத் தொடர்ந்து சாத்தனார் சார்புகள் அல்லது நிதானங்களை நான்கு கண்டமாக (முன் உரைத்தது போல்) வகுத்து, முதல் கண்டம் தீவினைக்கு அடிப்படைக் காரணம் ஆகிறது என்கிறார். இதனாலேயே இரண்டாம் கண்ட மாகிய உடல் சாரும் ஜீவனும்; நுகர்ச்சி முதலியனவும் ஏற்படுகிறது. அதனால் வேட்கை பற்று கருமத் தொகுதிகள் ஏற்படுவது மூன்றாம் கண்டம். நான்காம் கண்டத்தில் உயிர் அடையும் பிணி, மூப்பு, சாவு என பிறந்த உடம்பில் வரும் துன்பங்கள் விவரிக்கப்படுகிறது.
மூவகைப் பிறப்புகளாவன
1. சமாதி ஞானமே வீடுபேறு எனத் துணிந் திருத்தல் (அரூப தாது) இங்கு உரு இல்லை.
2. உணர்வு உள்ளடங்க உருக்கொண்டு தோன்றியிருத்தல் (ரூப தாது).
3. உணர்வும் உருவும் உடன் நிகழுமாறு, கூட்டமாக வாழும் மக்கள், தெய்வம் போன்றவையாகத் தோன்றியிருத்தல் (காம தாது).
காலம் மூன்று
காலம் பற்றிய பவுத்தத்தின் பார்வை வித்தியாசமாக இருக்கிறது.
1. உண்மையை மறந்த பேதமையும் அதன் சார்பாக வரும் செய்கையும் இறந்த காலம்.
2. உணர்வு, அருவுரு முதலான இவை எல்லாம் நிகழ்காலம்.
3. பிறப்பு, பிணி, மூப்பு, சாவு, அரற்றல், கவலை, கையறு நிலை ஆகியவை எதிர்காலம்.
வீடு பேற்றின் இயல்பு
வினைப்பயன் முதலியன துன்பம் பயப்பன. பிறப்புக்குரிய உடம்புகள் நிலையில்லாதவை. உயர்திணை, அஃறிணை ஆகிய எப்பொருளுக்கும் ஆன்மா என்றொன்று இல்லை- என உலக இயற் கையைப் பகுத்துணர்வதே வீடு பேற்றிற்கு உறுதி.
வாய்மை நான்கு
பவுத்த தம்மத்தின் முழுமையான வடி வத்தைக் கட்டமைப்பது நான்கு வாய்மைகளே அவை,
1. துன்பம்/ துக்கம்
2. துன்ப காரணம்
3. துன்ப நீக்கம்
4. துன்பம் நீக்கும் வழி
கந்தம்
உருவம், வேதனை, குறிப்பு, பாவனை, உள்ள அறிவு ஆகியவை ஐந்து கந்தங்கள். இவற்றின் தொகுதியால் உயிர் செயல்படுகிறது.
துன்ப காரணம்
காமம், வெகுளி, மயக்கம் ஆகியவை துன்ப காரணம். எனவே அவற்றை நீக்கி நிலையாமை (அநித்தம்) ஆன்மா இல்லையென்ற அறிவு, அருவருக்கத்தக்கன எனப் பகுத்தறிந்து, எல்லா உயிர்களிடத்திலும் அன்பு பேணி, பிற உயிர்களின் துன்பம் கண்டு மனம் உருகி, அறவுரை கேட்டு, கேட்டவற்றைச் சிந்தித்து, கேட்டவாறு ஒழுகி, உண்மை தெளிந்து உய்க என அறவண அடிகள் மணிமேகலைக்கு ஞானதீபம் தெளியக் காட்டினார். அவளும் பிறப்புக்கான குற்றம் நீங்குவேன் என நோற்கலானாள்.
3
சாத்தனாரின் மணிமேகலையில் புத்தர் தோற்று வித்த தேராவாதம் தொடங்கி, மந்தராயன தத்துவப் பிரிவு வரையிலான பண்பாட்டுத் தாக்கம் உள்ளது என்றே தோன்றுகிறது.
1.மணிமேகலை சுட்டும் தத்துவம் சௌத் ராந்திக யோகசாரம் ஆதல் வேண்டும். சௌத்திராந்திகம் தேராவாதத்தின் பிரிவு. யோக சாரம் மகாயனப்பிரிவு. இவை இரண்டிற்குமிடையேயான கோட்பாட்டு நெருக்கத்தில் சௌத்திராந்திக யோக சாரம் பிறக்கிறது. முந்தையது காட்சி அளவையை மட்டும் கொள்வது சௌத்தி ராந்திக யோகசாரம் காட்சியுடன் அனு மான அளவையையும் தர்க்கவியலுக்கு ஏற்றுக் கொண்டது.
2. ஆதி தேராவாதம் போல தர்க்க தத்துவ விதண்டாவாதத்திலிருந்து இது ஒதுங்கி யிருக்கவில்லை.
3. முழு ஆற்றலுடன் தெளிந்த தத்துவ ஞானத் துடன் தன்மதம் நிறுவும் முயற்சியில் சாத்தனார் முனைந்து ஈடுபடுகிறார்.
4. தேராவாதிகள் புத்தரை மனிதராக- அதிமனிதராக மட்டுமே காண்கிறது. உலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் அறிவராக - ஞானியாக - புத்தராக அவரைக் காண்கிறது. மகாயனவாதிகளோ அவரைத் தெய்வமாக, வழிபாட்டிற்குரியவராக வளர்த்தெடுக்கிறது.
புத்தரின் உருவப் படிமங்கள் பூஜைக்குரியதாக்கப்படு கின்றன. வஜ்ராயினம் ஒருபடி மேலே சென்று ஆதிபுத்தர், தியானபுத்தர்கள், மனுஷ்ய புத்தர்கள், தேவ போதி சத்து வர்கள் இவர்களின் தேவிகள் என உருவ வழிபாட்டை வளர்த்தெடுக்கிறது.
அப்பாலே (Metaphysical) சமய உலகைப் படைக்க முயல்கிறது. அதன் இறுதிக் கட்டமாக, தெய்வமென கும்பிடப் பெறும் போதி சத்துவர்கள், தேவதைகள், தாரா தேவி போன்ற சக்தி தேவிகள், யட்சர்கள், யட்சிகள் ஆகியோரின்
படிம வழிபாடுகள் பெருகுகின்றன. மாறாக, மணிமேகலையில் பீடிகை (புத்தரின் திருப்பாத) வழிபாடும் அற வாழி (தர்ம சக்கரம்) வழிபாடுமே குறிக்கப் பெறுகிறது. எனவே சாத்தனார் தேரா வாத நம்பிக்கையிலேயே அதிகம் காலூன்றி யுள்ளார் எனத் தெரிகிறது. ஆனால் இக்காலகட்டத்தில் புத்தரின் படிமங்கள் தமிழகத்திற்கு வந்துவிட்டதால் மகாயன பவுத்த பிரிவும் தமிழகத்தில் இருந்தது என்றே கொள்ள வேண்டும்.
4
மேற்சொன்ன மகாயன- மந்த்ராயன சமயங் களின் நம்பிக்கைகளும் காப்பியத்தினுள் ஊடுருவி யுள்ளன. இயற்கை இயந்த பல சம்பவங்கள், அற்புதங்கள் மூலம் கதை நகர்கிறது.
(அ) வருங்காலம் உரைத்தல்
.... தையல் நின்துறவும்
அன்றே கனவில் நனவென அறைந்த
மென்பூ மேனி மணி மேகலா தெய்வம்
மணிமேகலைக்கு வருமுன் உரைத்த செய்தி கூறப்படுகிறது.
(ஆ) அற்புதம்
காப்பியம் முழுவதுமே மணிமேகலா தெய்வமே கதையை நகர்த்துபவள் ஆகிறாள். மணிமேகலைக்கு உருமாறும் வித்தை, வானில் சஞ்சரிக்கும் வித்தை போன்றவற்றை அளிக்கிறாள். உதயணனிடம் இருந்து காப்பாற்றி, வான்வழி எடுத்து சென்று மணிபல்லவ தீவில் சென்று சேர்க்கிறாள்.
.... பாண்டு கம்பளம்
தான் நடுக்குற்ற தன்மை நோக்க
ஆதி முதல்வன் போதி மூலத்து
நூதன் ஆவோன்
எனப் போதிசத்துவன் தோற்றம் அறிந்து இந்திரன் எதிர்வினை புரிவது குறிக்கப் பெறுகிறது.
(இ) முற்பிறப்பு உணர்தல் நிகழ்கிறது
(உ) மணிமேகலை பவுத்த தர்மத்தை வலியுறுத்து வதை நோக்கமாக கொண்டே காப்பியம் படைக்கப் பட்டுள்ளது.
சுத்த பிடகத்தில் மிகுதியாக கூறப்படுவது பசி போக்கும் பேரறமே. ஆபுத்திரன் கதையும் அமுதசுரபியும் மணிமேகலை பசிப்பிணி தீர்க்க அப்பாத்திரம் பயன்படுத்துவதும் இங்கு நினைவு கூரத்தக்கது.
(ஊ) புத்தர் ஸ்ராவகர் என்னும் இல்லறத்தார் அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்க 5 சீலங் களைப் போதித்தார். அவை - கள் உண்ணாமை, காமமின்மை, கொல்லாமை, பிறர் பொருள் கவராமை, பொய்யாமை- இவை பஞ்ச சீலம் எனப்படும். (கொல்லாமையைக் குறிப்பிட்ட புத்தர் புலால் உண்ணாமையைக் கூறவில்லை.)
புத்த பிக்குகள் அடங்கிய சங்கத்துக்குத் தச்சசீலம் குறித்தார். அவை
கொலையே களவே காமத்தீவிழைவு
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில
சொல்லெனச் சொல்லில் தோன்றுவ நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லாக்காட்சி என்று
உள்ளந் தன்னில் உருப்பன மூன்றும் எனப்
பத்து வகையால் (மணி : 30: 66-72)
எனச் சாத்தனார் பிடகப் பகுதியை மொழி பெயர்த்துள்ளார். மணிமேகலையில், ஆதிரையின் கணவன் சாதுவன் நரமாமிசம் தின்னும் இனக் குழுவினரிடம் சிக்குகிறான். அந்த நாகர் தலைவன் சாதவனுக்கு இனக்குழு மரபுப்படி பெண், மது முதலியன கொடுக்கச் சொல்கிறான்.
வருந்தினன் அளியன் வம்மின் மக்காள்
நம்பிக்கு இளையள்ஓர் நங்கையைக் கொடுத்து
வெங்கள்ளும் ஊனும் வேண்டுவ கொடும்என...
(16 -75-77)
சாதுவன் அவற்றை மறுத்து, தலைவனுக்குக் கள்ளுண்ணலை ஒழித்தல், காமம் நீக்கல், உயிர்ப் பலி- நரபலி தவிர்த்தல் பற்றியெல்லாம் போதனை செய்கிறான். இது பவுத்த தத்துவமான பஞ்சசீலக் கொள்கை பரப்புரையாக அமைகிறது. தொடர்ந்து,
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல்அறம் செய்வோர் நல்லுலகு அடைதலும்
அல்அறம் செய்வோர் அருநரகு அடைதலும்..
என, உயிர் நிலையாமையை விளக்கி, உயிர் போன பின் உடல் வெந்தழலில் வேகும்போது உணர் வதில்லை. ஆதலால், உடல் வேறு, உயிர் வேறு என விளக்குகிறார். இவ்வுயிர் கனவில் கூட உடலை விட்டு பல காதம் செல்வதை அனைவரும் அறிவீர். இறந்தபின் தன் வினைப்பயன் துய்க்க ஏற்ற உடல் ஒன்றை ஏற்கும் - என உயிர் குறித்த பவுத்தத் தத்துவம் விளக்கப்படுகிறது. ஆன்மாவிற்கும் உயிருக்குமான வேறுபாடு நுணுகிய ஒன்றாகவே உள்ளது.
வைதிக நூற்களில் கருமம் என்பது பெரும் பாலும் கிரியை/ சடங்கு என்ற பொருளிலேயே பயன்படுகிறது. இந்திய தத்துவங்களில் புத்தரே முதன் முதலில் குசலகருமம், அகுசலகருமம் (நல் வினை, தீவினை) என வரையறுத்து, மனத்தில் தூய்மை, சொல்லில் தெளிவு, செயலில் நேர்மை என்ற திரிகரணத் தூய்மையைத் தெளிவுபடுத்து கிறார். அதுவே தமிழ்மொழியில் உண்மை, வாய்மை, மெய்ம்மை என்ற அழகு தமிழில் வழங்கி வந்திருப்பதுவும் தமிழில் பவுத்தத்தின் பழமைக்கு மற்றொரு சான்று.
பவுத்தத்தின் மற்றொரு முக்கிய அம்சம் உயிர்களிடம் பரிவும் கருணையும் காட்டி அவர்கள் உய்ய செயல்படுவது. புத்தரை பரதுக்கத் துக்கி என்பர். பொதுவாகச் சமணர் மீது தன் முயற்சியால் சுய விடுதலைக்கு உழைப்பவர் என்றொரு குற்றச்சாட்டு உண்டு. அவர்கள் பிறர் பற்றி கவலைப்படுவதில்லை என்பர். சில தேரா வாத மரபுகளில் இது பயின்றதும் உண்மையே. ஆனால் மகாயனப்பிரிவு தன்னிலும் பர உயிர் நிர்வாண நிலையை அடைய உழைப்பதைப் பெருங்கடமையாகக் கொண்டு ஒழுகியது.
பவுத்த சமய கலைச் சொற்களை அழகு தமிழில் அவர் கையாளுவதைக் காணும்போது, அச்சமயம் தமிழ் மக்களின் சமயமாக நீண்ட காலம் வழக்கில் இருந்து வந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நன்றி : http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-sep-2014/27152-2014-09-26-05-40-40
Comments
Post a Comment