சைவ வெறியும் மாட்டுக்கறியும் எழுத்தாளர்: மீனா மயில்

கறுப்பு மை குறிப்புகள் 7
       உலகம் முழுக்க உணவுமுறை என்பது ஒவ்வொரு நாட்டின், ஒவ்வொரு மனித இனக் குழுவின் பண்பாட்டு அடையாளமாகவே இருந்து வருகிறது.உணவுப் பண்பாடு என்பது மத அடிப்படையிலானதாக இல்லாமல் புவியியல் மற்றும் தட்பவெப்பம் சார்ந்ததாக இருப்பதால், எந்த நாடும் தன் மக்கள் இதைத்தான் தின்று தொலைக்க வேண்டுமென எதிர்பார்ப்பதில்லை; கட்டாயப்படுத்துவதில்லை. அவ்வாறு உட்கொள்ளுவது பாவச் செயல் என்றோ, குறிப்பிட்ட உணவை உண்ணுகிறவர்கள் தரம் தாழ்ந்தவர்கள் என்றோ விலக்கி வைக்கும் வழக்கம் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
beef_300மேற்கத்திய, அரபு, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் என உலகின் எத்திசை திரும்பினாலும் அவரவரின் புவிச் சூழல் மற்றும் தட்பவெப்பத்திற்கு ஏற்ப உணவுமுறை அமைந்திருக்கிறது. மிக முக்கியமாக சைவ – அசைவ ஏற்றத்தாழ்வுகள் எங்குமில்லை. உணவு என்ற ஒற்றைச் சொல்லுக்குள் பிரிவுகளும் பிரிவினைகளும் இல்லை. மரக்கறியும் மாமிசமும் தனி மனிதரின் விருப்பத் தேர்வாக அமைந்து வயிற்றை நிரப்புகின்றனவே ஒழிய, அவை மதம் சார்ந்த பண்பாட்டு நிர்பந்தமாக ஆவதில்லை. அதனாலேயே உலக மனிதர்கள் எங்கு சென்றாலும், அவர்களுக்கு உணவு ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை.
முதல் நெருப்பை மூட்டி உணவை சமைத்துண்ணத் தொடங்கிய ஆதி மனிதனின் பட்டியலில், காய்களும் கிழங்குகளும் விலங்குகளும் சேர்ந்தே இருந்தன. வேட்டையாடித் தின்று தீர்த்த மரபணுக்களையே நாம் ஒவ்வொருவரும் சுமந்து கொண்டிருக்கிறோம். இதற்கு எந்த இனக்குழுவும் விதிவிலக்கல்ல. பூமி முழுவதும் வெவ்வேறு நில அமைப்புகளில் நிறைந்திருக்கும் எண்ணற்ற மனிதர்கள், உணவென்பதை பசிக்கும் ருசிக்குமான தீர்வாக மட்டுமே கருதும் நிலையில், இந்தியர்கள், மிகக் குறிப்பாக இந்துக்கள், அதிலும் குறிப்பாகப் பார்ப்பனர்கள் – தங்களின் ஆதிக்க உணர்வின் அடையாளமாக, பாகுபாட்டின் ஒரு கூறாக, சக மனிதரைத் தாழ்த்தி வைப்பதற்கானதோர் ஆயுதமாக, உணவைக் கையாண்டு வருகின்றனர்.
மதம், மொழி, இனம் சாதி என இந்துக்கள் எத்தனையோ வகையாகப் பிரிந்திருக்கின்றனர். உணவு ரீதியாகவும் அவர்கள் மூன்றாகப் பிரிந்திருக்கின்றனர் : சைவ இந்துக்கள், மாட்டுக்கறி மட்டும் உண்ணாத அசைவ இந்துக்கள், மாட்டுக்கறி உண்ணும் அசைவ "இந்து'க்கள். இதில் மாட்டுக்கறி உண்ணும் அசைவ "இந்து'க்களான தீண்டத்தகாத மக்களுக்கு – அவர்களின் தொழில்கள், கலைகள், வாழ்விடங்கள் போன்றவை இழிவுபடுத்தப்பட்டு வெறுத்து ஒதுக்கி வைக்கப்பட்டதைப் போலவே உணவுப் பழக்கமும் தீண்டாமையின் குறியீடானது. மாட்டுக்கறி உண்ணுதல் என்பது, தலித் மக்கள் மீது திணிக்கப்பட்ட விஷயமில்லை; காலங்காலமாக அவர்களின் விருப்ப உணவாக அது இருந்து வருகிறது.
பார்ப்பனர்களின் சைவ வெறிக்கு முன், சாதி இந்துக்களின் வெறுப்புணர்விற்கு முன், தீண்டத்தகாத மக்களின் மாட்டுக்கறி – தன் எல்லா தகுதிகளையும் இழந்து, போதைப் பொருளைப் போல ரகசியமாக உட்கொள்ளப்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.
ஆட்டிறைச்சியும், கோழிக்கறியும் முக்கிய சாலைகளில் முகத்திற்கு நேராக விற்கப்படுவதைப் போல, மாட்டுக்கறி விற்கப்படுவதில்லை. மக்கள் புழக்கம் அதிகமுள்ள சாலைகளில் பிற கறிக்கடைகளைப் போல, மாட்டிறைச்சிக் கடைகளை திறந்து வைத்துவிற்கும் துணிவு இங்கு எவருக்குமில்லை. தலித் மக்களும், முஸ்லிம்களும் வசிக்கும் சேரிப் பகுதிகளில் மட்டுமே அவை இயங்குகின்றன. உணவகங்களிலும் இதே நிலைதான். மாட்டுக்கறி உணவு கிடைக்கும் உயர்தர உணவகங்களை எங்கும் பார்க்க முடிவதில்லை. நடுத்தர அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இயங்குகின்றன. மற்றபடி சாக்கடை ஓடும், ஒளியற்ற ஒதுக்குப்புறங்களில் தள்ளுவண்டிகளில் நடத்தப்படும் இரவுக் கடைகளில்தான் மாட்டிறைச்சி உணவு விற்கப்படுகிறது. அதை வாங்கி உண்ணும் மக்கள் தங்கள் முகத்தைப் பிறர் பார்த்துவிடாதவாறு இருளில் பதுங்கியிருந்தபடியே அவசரமாக உண்டு முடிப்பர் அல்லது பொட்டலம் கட்டிக் கொண்டு செல்வர்.
மாட்டுக்கறி உண்பதன் மூலம் தன் சாதி வெளியே தெரிந்துவிடுமோ என்ற பதற்றமும் அச்சமும், வெளியிடத்தில் அதை உண்ணும் ஒவ்வொருவருக்குமே இருக்கத்தான் செய்கிறது. தனது விருப்ப உணவை உட்கொள்வதில் இப்படியொரு இழி நெருக்கடி வேறெந்த நாட்டிலாவது எவருக்காவது உண்டாகுமா என வியப்பாக இருக்கிறது. தலித் மக்கள் தங்களின் எல்லைக்குள் மிக சுதந்திரமாக உண்டு களிக்கும் மாட்டிறைச்சியை, பிற சமூகத்தினர் விரும்பினாலும் வெளிப்படையாக உண்ண முடியாது. அதை இந்து சமூகத்தின் ஆதிக்க மூளை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. மாட்டிறைச்சியை உண்ணுவது, ஜாதி மாறி திருமணம் செய்து கொள்வதைப் போன்றதொரு சனாதனக் குற்றமாகவே கருதப்படுகிறது. ஏனெனில், மாட்டிறைச்சி என்பது வெறுமனே உணவல்ல; அது இந்துக்களின் அரசியல்! சாதிய அடுக்கை தக்க வைப்பதற்காகப் பன்னெடுங்காலமாக அவர்கள் கட்டமைத்து வைத்திருக்கும் சூழ்ச்சி!
மாட்டுக்கறியை சேரி மக்கள்தான் தின்பார்கள் அல்லது தீண்டத்தகாத சமூகத்தில் பிறந்தால் மட்டுமே மாட்டுக்கறியைத் தின்னத் தோன்றும் என்ற மாயை இங்கு நிலை நாட்டப்பட்டிருக்கிறது. இந்த மாயையை ஆய்வு ரீதியாக முதன் முதலில் தகர்த்தவர் அம்பேத்கர். பகுத்தறிவு ரீதியாக உடைத்தெறிந்தவர் பெரியார். அம்பேத்கரையும் பெரியாரையும் அறிந்து கொள்ள விரும்பாத இந்து பொது சமூகம், மாட்டிறைச்சியை சிந்தனையிலும் எண்ணியிராத புனிதர்களாக தங்களை கருதிக் கொண்டிருக்கிறது. உண்மையில், மேற்கத்தியர்களையும், முஸ்லிம்களையும் போல அனைத்துப் பிரிவு இந்துக்களும் – பார்ப்பனர், பார்ப்பனரல்லாதவர்; தலித், தலித் அல்லாதவர் என்ற பாகுபாடுகளின்றி எல்லோருமே அசைவர்களாகவும் குறிப்பாக மாட்டிறைச்சி உண்ணுகின்றவர்களாகவுமே இருந்து வந்திருக்கின்றனர். அதுவே இயற்கை! சைவர்களாகவே தோன்றிய மனித இனம் என ஏதுமில்லை. அப்படியிருந்தால் அது இயற்கை முரண்! பார்ப்பனர்கள் அப்படிப்பட்டவர்களாக நாம் நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம்.
மத போதனை, இறை நம்பிக்கை, ஆன்மிக வாழ்வியல் நெறிகள் போன்றவையே உயிர்களைக் கொல்லக்கூடாது என்ற அடிப்படையில் சைவத்தை வலியுறுத்துகின்றனவே தவிர, மனித இனம் அடிப்படையில் எல்லாவற்றையும் உண்டு களிக்கவே விரும்புகிறது. அவ்வகையில் இன்று பசுவை கோமாதாவாக வணங்கி, அசைவத்தை வெறுக்கும் பார்ப்பனர்களும், மாட்டிறைச்சி உண்பதை இழுக்காகக் கருதும் பிற சாதி இந்துக்களும், ஒரு காலத்தில் (பவுத்தத்தின் மத்திய காலம் வரையிலும்) மிக மகிழ்ச்சியாக அவற்றை உண்டு வந்தனர். பொதுச் சமூகத்தின் பொது புத்திக்கு எட்டாதவாறு இந்த உண்மைகள் வரலாற்றின் அடியாழத்தில் புதைக்கப்பட்டுவிட்டன.
மாட்டிறைச்சி உள்ளிட்ட அசைவ உணவு வகைகளை பார்ப்பனர்கள் உண்ணாமல் போனதற்கு – அவர்களின் இந்து மதத்திற்கும், மதத்தின் பெயரால் இந்த மண்ணில் விதைக்கப்பட்ட நச்சுக் கருத்தியல்களுக்கும் பவுத்தத்தால் உண்டான நெருக்கடியே காரணம். இங்கு வந்து குடியேறிய நாடோடி ஆரியர்களுக்கு, கடவுளுக்கான காணிக்கையாக ஆயிரக்கணக்கான விலங்குகளை பலி கொடுப்பதும், அதற்கான சடங்குகளை செய்வதும், பலி கொடுத்த விலங்குகளை பாகம் பாகமாக பங்கிட்டு உண்ணுவதும் வழக்கமாகவே இருந்தது. விவசாயம் செய்து உணவை உற்பத்தி செய்யும் முறை தோன்றும் வரையிலும் ஆரியர்களின் முக்கியத் தொழிலாகவும் உணவீட்டும் முறையாகவும் – இந்த சடங்குகளும் விலங்கு பலியும் இருந்ததற்கான சான்றுகள் வேதத்திலேயே காணக் கிடைப்பதை பல ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன. வேதங்கள் மட்டுமல்லாமல் இந்து மத நூல்களான மநு தர்மம், உபநிடதங்கள், கிரஹசூத்திரம் என பலவற்றில் இதற்கான சான்றுகள் நிறைந்திருக்கின்றன.
அய்ம்பதிற்கும் மேற்பட்ட விலங்குகள் கடவுளுக்கு பலிகொடுக்க தகுதியானவை என வேதத்தில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இவற்றில் முக்கியமானவை காளையும் பசுவும். சடங்குகளின்றி கடவுளுக்கு காணிக்கையை செலுத்திவிட முடியுமா? பார்ப்பனர்களின்றி சடங்குகள்தான் சாத்தியமா? “பசு, கன்று, குதிரை மற்றும் எறுமையை உண்ணுவது இந்திரனின் வழக்கம்'' என்றும் (6/17/1) “பெண்ணின் மண விழாவில் காளையும், பசுவும் வெட்டப்படுகின்றன'' என்றும் குறிப்பிடுகிறது ரிக் வேதம்.
“மாமிசம் உண்பது பாவமில்லை; ஏனெனில் உண்பது உண்ணப்படுவது என இரண்டுமே பிரம்மனால் படைக்கப்பட்டிருக்கின்றன'' என்றும் “மதச் சடங்குகளை முறையாகச் செய்யும் ஒருவர், மாமிசத்தை உண்ணவில்லையெனில், இறப்பிற்கு பின்னர், தனது இருபத்தி ஒன்றாவது மறுபிறவியில் பலி விலங்காகப் பிறக்க நேரிடும்'' என்றும் மநுதர்மம் கூறுகிறது.
யாகம் என்ற பெயரில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான விலங்குகளை பலி கொடுத்து, அதைப் பங்கிட்டு ருசித்து உண்ட பார்ப்பனர்களுக்கு இன்று ரத்த நெடியும், மாமிசத் துண்டமும் குமட்டலை உண்டாக்கித் தீண்டத்தகாதவையாக அவற்றை மாற்றியதற்கு காரணம் – பவுத்தத்தின் தீவிரமும் புத்தரின் அறிவுரைகளும்தான்! பார்ப்பனியம் வேரூன்றிய மண்ணில், பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தையும் மூடக் கருத்தியல்களையும் நிராகரித்தபடியே பவுத்தம் பரவத் தொடங்கியது. விவசாய உற்பத்தி ஒரு புரட்சியாக சமூகத்தில் மாற்றங்களை விதைத்துக் கொண்டிருந்த நேரத்தில், விலங்குகளை பலியிடும் வழக்கமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. காரணம், விவசாயப் பணிகளுக்கு இந்த விலங்குகள் உறுதுணையாக இருந்ததுதான். இந்தக் காலகட்டத்தில் பார்ப்பனர்களின் ஒரே அடையாளம் விலங்குகளின் உயிர்ப்பலி மட்டுமே.
அய்நூறு எருதுகள், அய்நூறு ஆண் கன்றுகள், அய்நூறு பெண் கன்றுகள், அய்நூறு ஆடுகள் என இத்தனையும் ஒரே நேரத்தில் வெட்டுக் களத்திற்கு இழுத்து வரும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன. தெய்வ காரியம் என்ற பெயரில் பார்ப்பனர்கள் இதை கொண்டாட்டமாகவே நிகழ்த்தி வந்தனர். இது போன்ற உயிர் பலிகள் ஒருபோதும் நற்பலன்களை தருவதில்லை என புத்தர் அறிவுறுத்தினார். விலங்குகளை தேவையில்லாமல் பலி கொடுப்பதையும், துன்புறுத்துவதையும் எதிர்த்த புத்தரின் கருத்துகள் – புதிய பொருளாதாரப் புரட்சியான விவசாயத்திற்கு ஆதரவானதாக ஏற்கப்பட்டு, முக்கியத்துவத்தைப் பெற்றன.
எனில், புத்தர் சைவரா என்ற கேள்வியும், அவரின் அறிவுரை களால்தான் பார்ப்பனர்கள் திருந்தினார்களா என்ற கேள்வியும் வரும். புத்தர் எப்போதும் சைவராக இருந்ததில்லை. மாட்டிறைச்சி, பன்றிக்கறி என அவர் அசைவ உணவை உண்டவர். உணவுத் தேவைக்காக அன்றி, மதச் சடங்குகளுக்காக எண்ணற்ற விலங்குகளை உயிர்த் தியாகம் என்ற பெயரில் பலி கொடுப்பதையே அவர் எதிர்த்தார். புத்தர் வலியுறுத்தியஅகிம்சையானது, இன்று பார்ப்பனர்கள் கடைப்பிடித்து வருவதைப் போன்று, காந்தி வலியுறுத்தியதைப் போன்று கண்மூடித்தனமானதல்ல. படைப்பு என்பதை மறுத்து இயற்கையின் உயிர் சுழற்சி விதியை அவர் ஆழ புரிந்திருந்தார். கண்ணுக்குத் தெரியாத, அறிவுக்கு எட்டாத விஷயங்களை கற்பித்து மக்களை சிறைப்படுத்துவதை விடவும், இயற்கை குறித்த உண்மைகளை எடுத்துரைத்து, மூட நம்பிக்கைகளில் மூழ்கியிருந்தவர்களை விடுவிக்க முயன்றார். இதனாலேயே பவுத்தம் பார்ப்பனியத்திற்கான நெருக்கடியாக மாறியது.
தலித் மக்கள் பவுத்தத்தின் பால் ஈர்க்கப்பட்டு, பார்ப்பனியத்தின் பிடியிலிருந்து நழுவிக் கொண்டிருந்தனர். இந்த இக்கட்டினை எதிர்கொண்டாக வேண்டி, தங்களுக்கு பழக்கப்பட்ட மூர்க்கத்தை பயன்படுத்தத் தொடங்கினர் பார்ப்பனர்கள். மன்னர்களை ஏவி பவுத்த துறவிகளை அடித்துத் துன்புறுத்தியதும், போதி மரம் உள்ளிட்ட பவுத்தக் குறியீடுகளை அழித்ததும் பிந்தைய வரலாறாக நடந்து முடிந்தன. பார்ப்பனர்களின் வன்முறையாலேயே பவுத்தம் இந்தியாவிலிருந்து அகற்றப்பட்டது. எனினும் பவுத்தத்தால் புகழிழந்த – விலங்குகள் உயிர்த் தியாகத்தை அதன் பின்னர் கையிலெடுக்க பார்ப்பனர்கள் துணியவில்லை. மாறாக, அவர்கள் இயற்கைக்கு எதிரான, அறிவுக்கு ஒவ்வாத வேறொரு மூடக் கருத்தியலை விதைக்கத் தொடங்கினர். அதுதான் பசுவை புனிதமாக்கி முன் வைத்த புதிய அரசியல்.
புத்தரைக் கடந்து சிந்திக்கவும், பவுத்தம் வளர்த்தெடுத்த பகுத்தறிவை சிதைக்கவும் வேண்டி பசுவை இந்து மதத்தின் புனித அடையாளமாக அறிவித்தனர். பசுவின் உடலில் பல தெய்வங்கள் குடி கொண்டிருப்பதாகக் கதையளந்தனர். கிருஷ்ணனை ஆயர் குலத்தில் பிறக்க வைத்து மாடு மேய்க்க வைத்தனர். நன்னாட்கள், விழாக்கள் என எது நடந்தாலும் அதைக் காரணமாக வைத்து ஆயிரக்கணக்கான விலங்குகளைக் கொன்று குவித்த அதே பார்ப்பனர்கள், பசுவுக்கு மரியாதை செய்து புதிய சடங்குகளை உருவாக்கினர். இதற்கு முக்கியமான இன்னொரு காரணம், விவசாயப் பொருளாதாரம் தழைக்கத் தொடங்கிய காலம் என்பதால், உழைக்கும் மக்கள் அனைவருக்குமே கால் நடைகள் மீது பெரிதளவிலான பற்று தோன்றியிருந்தது.
ஏர் பூட்டி உழுதல், கிணற்று நீர் இறைத்தல், போக்குவரத்து, சிறுநீர் மற்றும் சாணம் கொண்டு நிலத்திற்கு உரமேற்றுதல் என கால்நடைகள் விவசாயத்திற்கு பெரிதும் உதவின. இதனால் இயல்பாகவே கால்நடைகளை கண்மூடித்தனமாக பலி கொடுக்க ஒரு எதிர்ப்புணர்வு கிளம்பியிருந்தது. பின்னர் பார்ப்பனர்களுக்கு பிழைக்க என்னதான் வழி? எக்காலத்திலும் உடலுழைப்பு சார்ந்த பணிகளை அவர்கள் செய்ததில்லை. அதனாலேயே பசுவை தெய்வமாக்கி, புதிய சடங்குகளை உருவாக்கினர். பசுவை "மாதா' என்று அறிவித்து வணங்கத் தொடங்கினர். தலை முதல் வால் வரை எல்லாவற்றையும் ருசித்து உண்டவர்கள் அதற்கு ஈடு செய்யும் விதமாக, பால் முதல் சிறுநீர் வரை அனைத்தையும் புனிதமானதாக அறிவித்தனர்.
தங்கள் தொழிலை வளப்படுத்தும் கால்நடைகளை கடவுளாகவே வணங்கும் மனநிலையில் இருந்த மக்கள், பார்ப்பனர்களின் சடங்குகளை ஏற்கத் தொடங்கியிருக்க வேண்டும். தாங்கள் கைவிட்ட பின்னர் மாட்டிறைச்சியை எவருமே உண்ணக் கூடாது என்ற ஆதிக்க மனப்பான்மையில் பசுவை வெட்டுவதையும் உண்ணுவதையும் பார்ப்பனர்கள் எதிர்க்கத் தொடங்கினர்.
புத்தரின் அகிம்சை அறிவுறுத்தலிலும் உயிர்பலி எதிர்ப்பிலும் சமூக நலன்கள் அடங்கியிருந்தன. ஆனால், உயிர் பலி கொடுப்பதற்கும் சரி, பசுவை புனிதமாக்கி சைவத்திற்கு மாறியதற்கும் சரி, பார்ப்பனர்கள் சொன்ன காரணங்களில் மூடத்தனத்தை தவிர எந்த நியாயங்களும் இருக்கவில்லை. வெட்டுக் களத்தில் ஆயிரக்கணக்கான விலங்குகளை பலி கொடுத்து, அவற்றை தின்று தீர்த்த அதே பார்ப்பனர்கள், பசுவை புனிதமாக்கிய தங்களின் புதிய கொள்கை மாற்றத்திற்கு பின்னர், புத்தர் பசுவை வணங்கவில்லை என்றும் அவர் சைவரில்லை என்றும் பழி சுமத்தத் தொடங்கினர். "கோ மாதா எங்கள் குல மாதா' என்று பார்ப்பனர்கள் கூவி அழைத்தும் தலித் மக்களும் பவுத்தத்தை பின்பற்றியவர்களும் மாட்டிறைச்சி உண்ணுவதைக் கைவிடவில்லை. காரணம், வலுவாக வேரூன்றியிருந்த சாதிய அமைப்பு, தலித் மக்களை நிலங்களுக்குள் அனுமதிக்கவில்லை. சாதிய அடுக்கில் மேலிருந்தவர்கள் நிலங்களுக்கு உரிமையாளர்களாக விவசாயத்தை தன்வசப்படுத்திக் கொண்டனர்.
பொது வளங்கள் எதற்குள்ளும் அனுமதி மறுக்கப்பட்டு, தீண்டாமைச் சிறைக்குள் அடைக்கப்பட்டவர்களுக்கு பார்ப்பனர்களையும் அவர்களைப் பின்தொடர்ந்த சாதி இந்துக்களையும் போல கால்நடைகள் மீது பற்றுக்கொள்ள எந்த நியாயமும் இருக்கவில்லை. சாதி இந்துக்களுக்கு அடிமட்ட வேலைகளைச் செய்வதே தொழிலாக்கப்பட்டு, அதற்கு கூலி என எதுவும் வழங்கப்படாத நிலையில், உணவுக்காக கையேந்தி நிற்கும் அவலச் சூழலில், செத்த மாடுகளும் தீண்டத்தகாத மக்களுக்கு உணவாகின. இந்தப் பின்னணியில் பார்த்தால், மாட்டிறைச்சி வெறுமனே கைவிட முடியாததொரு உணவுப் பழக்கமாகவே தீண்டத்தகாத மக்களிடம் நீடித்து வந்திருப்பது புரிபடும். மாடுகளுக்காகவோ, மாட்டிறைச்சி உண்ணும் விஷயத்திலோ அவர்களுக்கு எவ்விதமான முட்டாள்தனமான பற்றுணர்வுகளும் இருக்கவில்லை.
தங்களிடமிருந்து சுய மரியாதை உட்பட எல்லாவற்றையும் சுரண்டிக் கொண்ட பார்ப்பனியத்தின் அறைகூவலை மீறி, தீண்டத்தகாத மக்கள் மாட்டிறைச்சியைத் தொடர்ந்து உண்ணுவது பார்ப்பனியத்திற்கான ஒருவிதமான எதிர்ப்போ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில், பார்ப்பனர்கள் மாதா என்றும் புனிதம் என்றும் அறிவித்த ஒன்றை வெட்டி உணவாக்குவது, வெறுமனே ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியாக மட்டுமே நீடித்து வந்திருக்க முடியாது. இந்திய விவசாய முறையின் வெற்றிக்கு முக்கிய காரணம் கால்நடைகள்தான் என பல சர்வதேச ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. கால்நடைகளைப் பராமரிக்கும் இந்த விவசாய முறையை இந்து வாழ்வியலாகவே அவை முன் மொழிகின்றன. உண்மையில் அது பவுத்த வாழ்வியல் முறை. புத்தரே கால்நடை பராமரிப்பைத் தொடங்கி வைத்த முதல் மனிதர் என்ற உண்மை முற்றிலுமாக மறைக்கப்பட்டுவிட்டது.
beef_340பார்ப்பனர்களுக்கு இப்படியொரு வரலாறு இருக்கிறது சரி. இதர சாதி இந்துக்கள் ஏன் மாட்டிறைச்சியை வெறுக்கிறார்கள்? இதற்கு அம்பேத்கர் சொல்லும் விளக்கமே பொருத்தமானது. தங்களைவிட உயர்ந்தவர்களை – தாழ்ந்தவர்கள் பின்பற்றுவதன் மூலமே சமூகத்திற்குள் பண்பாடு பரவுகிறது. அதன்படி பார்ப்பனர்களைப் போலவே நடந்து கொள்ளும் ஆவல் கொண்டு, பசுவை வணங்கத் தொடங்கி, மாட்டிறைச்சி உண்ணுவதை அவர்கள் கைவிட்டனர். எனினும், பார்ப்பனர்கள் தங்களைப் போல மாற எவரையும் அனுமதிப்பதில்லை என்பதால், சாதி இந்துக்கள் மாட்டிறைச்சி உண்ணாத அசைவர்களாகவே நின்று விட்டனர். தலித்துகளிலும் பள்ளர்கள், பசுவை வணங்கி மாட்டிறைச்சியை வெறுக்கின்றனர். மாட்டிறைச்சி உண்ணும் பறையர்கள் மீதும் அருந்ததியர்கள் மீதம் பள்ளர்கள் செலுத்தும் உட்சாதி தீண்டாமையானது, சாதி இந்துக்களிடமிருந்து அவர்கள் கற்றதுதான். இப்படியாக பார்ப்பனரைத் தொடர்ந்து சாதி இந்துக்களும், பள்ளர்களும் மாட்டிறைச்சி உண்ணுவதைக் குற்றச் செயலாக்கிவிட்டனர்.
மாட்டிறைச்சி குறித்து இந்துத்துவவாதிகள் நிலைநாட்டும் இன்னொரு வரலாற்றுத் திரிபு – "இந்தியாவில் தீண்டத்தகாத மக்கள் மட்டுமே மாட்டிறைச்சி உண்ணுகிறார்கள். இந்த தீய பழக்கம் முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பின்னரே நிகழ்ந்தது' என்பதுதான். இஸ்லாமியப் படையெடுப்பு நிகழ்ந்து 700 ஆண்டுகள்தான் ஆகின்றன. உண்மையில், வரலாற்றுக் குறிப்புகளின்படி, முகலாயப் பேரரசரான பாபர், மகனுக்கு எழுதிய உயிலில், பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் பசுவை மதிக்கவும், பசுவதையைத் தவிர்க்கவும் கேட்டுக் கொண்டிருக்கிறார். பாபர் மட்டுமல்ல அக்பர், ஷாஜஹான், அவுரங்கசீப், அஹமது ஷா உள்ளிட்ட பல முகலாய மன்னர்கள் பசுவைக் கொல்லத் தடை விதித்திருக்கிறார்கள்.
முகலாய மன்னர்களின் இந்த பெருந்தன்மை உட்பட முஸ்லிம்கள் பற்றிய பல வரலாற்று உண்மைகள், இந்துத்துவவாதிகளால் முற்றிலுமாக திரிக்கப்பட்டு வருகின்றன. டெல்லி பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் வரலாற்று அறிஞர் டி.என். ஜா. எழுதிய, "புனிதப் பசு: இந்திய உணவுப் பண்பாட்டில் மாட்டிறைச்சி' என்ற நூல், மாட்டிறைச்சியின் வரலாற்று உண்மைகளையும், இந்துத்துவவாதிகள் அதை வைத்து நடத்தும் மத அரசியலையும் தெளிவுபடுத்துகிறது.
வேதங்களையும் மநுதர்மத்தையும் யார் படிக்கப் போகிறார்கள்? அப்படியே படித்தாலும் அது பொது சமூகத்தின் அறிவுக் கண்ணை ஒருபோதும் திறக்கப் போவதில்லை. பகுத்தறிவை விடவும் பன்னெடுங்காலமாக விதைக்கப்பட்டிருக்கும் மூடக் கருத்தியல்கள் வீரியமிக்கவை என்பதாலேயே இந்துத்துவவாதிகள் தொடர்ந்து மாட்டிறைச்சியை முன் வைத்து, அவ்வப்போது அரசியல் செய்து வருகின்றனர். சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில் இந்த அரசியல் மிகத் தீவிரமாக நடைபெற்றது. 1966 ஆம் ஆண்டு இந்து அமைப்புகள் பசுவதைத் தடையை வலியுறுத்திப் போராட்டம் செய்தன. சங்கராச்சாரி இதற்காக உண்ணா நிலைப் போராட்டம் நடத்தினார். அப்போதைய பிரதமரான இந்திரா காந்தி, இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. ஊர்வலத்தைத் தடுக்க நடந்த துப்பாக்கிச் சூட்டில் பல "சாது'க்கள் உயிரிழந்தனர்.
இந்துத்துவவாதிகளின் பசுவதைத் தடைக்கு பொதுமக்களின் ஆதரவு எப்போதுமே கிடைக்கவில்லை. காரணம், கேரளம், மேற்கு வங்காளம் மற்றும் ஏழு வடகிழக்கு மாநிலங்கள் தவிர்த்து பிற மாநிலங்களில் பசுவைக் கொல்லத் தடை இருக்கிறது. கொல்வதற்காக பசுவை கடத்துவது குற்றமெனினும், இந்த மாநிலங்களுக்கு தொடர்ந்து பசுக்கள் அனுப்பப்படுகின்றன. எனினும் தார்மீக ரீதியாக ஒவ்வொரு இந்துவிடமும் பசுவதைக்கு எதிரான ஓர் உளவியல் விதைக்கப்பட்டிருக்கிறது. இந்த உளவியலின் வேர் எங்கு சென்று முடிகிறதெனில், மாட்டிறைச்சியை உண்ணும் முஸ்லிம்கள் மற்றும் தலித் மக்கள் மீதான வெறுப்புணர்வாக சென்று சேர்கிறது.
இந்தியாவில் நடந்த பல மதக் கலவரங்களுக்கு மூல காரணமாக பசு இருந்திருக்கிறது. முஸ்லிம்களையும் தலித்துகளையும் இக்கலவரங்களில் பசுவின் புனிதத்தை காப்பதற்காக பலியெடுக்கின்றனர் இந்துத்துவவாதிகள். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அரியானா மாநிலம், ஜஜ்ஜார் மாவட்டம் துலியானா கிராமத்தில் தேவேந்திரா, வீரேந்திரா, தயாசந்த் டோட்டாராம் மற்றும் ராஜு ஆகிய அய்ந்து தலித் இளைஞர்கள் இந்துத்துவவாதிகளால் கொலை செய்யப்பட்டனர். அவர்கள் செய்த குற்றம் செத்த மாட்டின் தோலை உரித்தது. கர்கோன் மாவட்டம் பட்ஷாபூரைச் சேர்ந்த தேவேந்திரா தோல் வியாபாரம் செய்பவர். 40 கிராமங்களில் இறந்த விலங்குகளின் தோலை உரித்து விற்க, ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் 35 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஏலம் எடுத்திருந்தார். கைலாஷ் என்னும் தோல் வியாபாரிக்காக 40 ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள தோல்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, மேலும் நான்கு இளைஞர்களோடு துலியானா நோக்கி கிளம்பினார். செத்த மாடு ஒன்றை வாங்கிக் கொண்டு, கைலாஷûம் இவர்களோடு வந்திருந்தார்.
துலியானா காவல் நிலையத்திற்கு அருகில் வாகனம் பழுதடைந்து நின்றுவிட, வண்டியிலிருந்த செத்த மாட்டை எடுத்து தோல் உரிக்கத் தொடங்கினர் அய்வரும். அவ்விடத்திற்கு வந்த காவலர்கள் பசுவதைத் தடைச் சட்டத்தைப் பற்றி சொல்லி லஞ்சம் கேட்க, அதற்கு மறுக்கவே எல்லோரையும் இழுத்துச் சென்று சிறையில் அடைத்து விட்டனர். தோல் உரிக்கப்பட்டு தெருவில் கிடந்த மாட்டைப் பார்த்து, அந்த வழியே சென்ற வி.எச்.பி. மற்றும் பஜ்ரங்தள் வெறியர்கள் பசு உயிரோடு வதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக கதை கட்டி ஒரு பதற்றத்தைத் தோற்றவித்தனர். அவ்வளவுதான். சாதி இந்துக்களும் இந்துத்துவவாதிகளும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, பசுவை வதைத்த குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு கூச்சல் போட்டனர். ஏற்கனவே காவலர்களிடம் அடி வாங்கி காயமடைந்திருந்த தலித் இளைஞர்களை, வேத சாஸ்திரங்களின்படி கொல்ல வேண்டுமென கூச்சல் போட்டபடி இந்த வெறியர்கள் காவல் நிலையத்தின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். அறுபதிற்கும் மேற்பட்ட காவலர்கள், 3 மாவட்ட நீதிபதிகள், மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் என எல்லோரும் பதற்றப் பகுதிக்கு வந்திருந்தனர்
வெறியேற ஏற அடக்க மாட்டாமல் காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அய்வரையும் தெருவிற்கு இழுத்து வந்து, வேட்டையாடித் தீர்த்தது இந்துவெறி கும்பல். சில நிமிடங்கள் தான்... தேவேந்திராவின் சிதைந்த தலைக்கருகில் பாராங்கல் கிடந்தது. அவரது தம்பி வீரேந்திராவின் உடல் வெட்டுக் காயங்களுடன் எரிக்கப்பட்டிருந்தது. மற்ற மூவரும் கல்லடியாலேயே சிதைக்கப்பட்டிருந்தனர். செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக மனிதர்களை உயிரோடு வேட்டையாடிக் கொல்லும் வெறியை என்னவாக இனங்காண்பது? பசுவதைத் தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்து மாடுகளை வெட்டவும், மாட்டிறைச்சியை உண்ணவும் தடை வருமானால், இந்நாட்டில் என்ன மாதிரியான கொடூரங்கள் நடந்தேறும் என்பதற்கு இதுவொரு எடுத்துக்காட்டு. தவிரவும், மாட்டுத் தலையை கோயில்களிலும், இந்துத்துவா அலுவலகங்களிலும் தாங்களே வீசிவிட்டு, அதையே காரணமாக வைத்து, முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுப்பதும், அவர்களை சிறைக்கு அனுப்புவதும் இந்துத்துவாதிகளின் கொள்கைச் செயல்பாடாக தொடர்ந்து நடக்கிறது. தங்களின் வெறுப்புணர்விற்கு மதச் சõயமும் புனித அரிதாரமும் பூசிக் கொண்டு, தலித்துகளையும் சிறுபான்மையினரையும் அழித்தொழிக்கத் துடிக்கும் இந்து வெறியர்களுக்கு ஒரு கூரிய ஆயுதமாக இருக்கிறது பசு.
பாபா ராம்தேவ் போன்றவர்கள், இந்த நாட்டில் அசைவ விலங்குகளான புலிகளைப் பாதுகாக்க சட்டம் இருக்கிறது. ஆனால் சைவ விலங்கான பசுவைப் பாதுகாக்க வழியில்லை என்று புலம்புவதோடு, தொடர்ந்து பசுவதைக்கான தடையை வலியுறுத்தி வருகிறார். இந்துத்துவவாதிகள் கற்பனை செய்து கொண்டுள்ளதைப் போல, உண்மையில் பசுவிற்கு அத்தனை பெரிய தட்டுப்பாடு ஒன்றும் வந்துவிடவில்லை. அதன் விருத்தியை நம்மால் அதிகரித்துவிட முடியும். உயிர் சுழற்சியின் உச்ச விலங்கான புலி இல்லையென்றால், சைவ விலங்குகள் அதிகரித்து காடுகளை தின்றே அழித்துவிடக் கூடும். அதன் பின்னர் காடுகளும் இருக்காது, விலங்குகளும் இருக்காது, மனிதர்களும் வாழ முடியாது.
விவசாயத்திற்கு கால்நடைப் பராமரிப்பு அவசியம் என்பதை எவரும் மறுக்கவில்லை. ஆனால், உணவுக்கõக வெட்டப்படும் மாடுகளின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, மேட்டுக்குடிகளின் ஆடைகளுக்காகவும் அலங்காரத்திற்காகவும், ஏற்றுமதிக்காகவும் உரிக்கப்படும் மாடுகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகம். இந்தியாவில் மிகப் பெரிய தோல் தொழிற்சாலைகளை நடத்துகிறவர்களும், தோலாடைகளை உடுத்துகிறவர்களும் நிச்சயம் மாட்டிறைச்சி உண்ணும் மக்களில்லை. பசுமைப் புரட்சியும், புதிய பொருளாதாரக் கொள்கைளும் நிலத்தைப் பாழ்படுத்திவிட்டன. உயிர்ப்பற்ற நிலங்களாலேயே உண்மையில் கால்நடைகள் அழிந்தனவே தவிர, முஸ்லிம்களாலும் தலித்துகளாலும் அல்ல.
இந்தியாவின் சொற்ப மக்களைத் தவிர, பலரும் மாட்டிறைச்சியை உண்ணுகிறார்கள். பல மேட்டுக்குடி இந்தியர்கள் இந்தியாவுக்கு வெளியே மாட்டிறைச்சியை உண்ணுகிறார்கள். உலகம் முழுக்கவே மாட்டிறைச்சி ஒரு முக்கிய உணவாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சொற்ப இந்துக்களுக்காக, பசுக்கள் மீதான அவர்களின் பற்றுணர்ச்சிக்காக உலகமே அதை கைவிட வேண்டுமென எதிர்பார்ப்பது, ஜனநாயகத்திற்கு எதிரானக் கருத்தியலின்றி வேறில்லை. பிடிக்காத ஒரு உணவை தின்றுதான் ஆக வேண்டுமென என வலியுறுத்தி சட்டம் இயற்றுவது எவ்வளவு அறிவின்மையோ, அதைப் போலத்தான் பிடித்த ஒரு உணவை உண்ணக் கூடாது என தடை விதிப்பதும். உணவுத் தேர்வு என்பது தனி மனித சுதந்திரத்தின் அடிப்படையில் அமைய வேண்டுமே ஒழிய, சட்டத்தின் வலியுறுத்தலாக அமைவது நிச்சயம் உரிமை மீறலே.
மாட்டிறைச்சி உண்ணுவதால் எந்த உடல்நலக் கேடும் உண்டாவதில்லை. மாட்டிறைச்சி உண்ணுவதால் தீராத நோய்க்கு ஆட்பட்டு எவரும் செத்து மடியவில்லை. அப்படியிருக்கும்போது இந்துத்துவவாதிகள் தங்களின் தனிப்பட்ட கருத்தையும் பற்றுணர்ச்சியையும் இந்தியாவின் பல்வகை மக்களுடையதாக உலகத்திற்கு காட்டுவது கண்டிக்கத்தக்கது. கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளின்போதுகூட, மாட்டிறைச்சியை உணவுப் பட்டியலில் சேர்க்கக் கூடாது என டெல்லி மாநகராட்சித் தீர்மானம் நிறைவேற்றியது. பா.ஜ.க.வின் ராஜ்நாத் சிங், "மாநகராட்சியின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், டெல்லியின் பெரும்பான்மை மக்களின் பண்பாடு மற்றும் மதப் பற்றுணர்ச்சியை அது மதிக்கிறது. அது மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டின் குரலாக அது ஒலிக்கிறது' என குறிப்பிட்டார். மாட்டிறைச்சி உண்ணாத பார்ப்பனர்களும் சாதி இந்துக்களும் மட்டும்தான் இந்தியாவா என்ன?
இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தவர்களும் சீனர்களும் புழு பூச்சிகளையும், பாம்பு, தவளைகளையும் உண்கிறார்கள். இவையும்தான் விவசாயத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் உதவுகின்றன. அதனால் உண்ணக்கூடாது என தடை கொண்டு வருவது சரியாகுமா? புழு பூச்சிகளை தின்பதை நம்மால் நினைத்துப் பார்க்கவும் முடிவதில்லை. அதற்காக அதை உணவாகக் கொண்டவர்களை தரம் தாழ்ந்தவர்களாகக் கருதுவது தகுமா? மதப் பற்றுணர்ச்சிகளை விடவும் தனி மனித உரிமைகளும், ஜனநாயகமுமே மனித வாழ்வின் நெறிகளாக வேண்டும். மாட்டிறைச்சி மட்டுமல்ல, எந்த உணவையும் உட்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் உரிமை அவரவருடையதாகவே இருக்க வேண்டும். இல்லையெனில், அதுவொரு வதையாகவே மாறிவிடும்.
தலித்துகளை அடிமைகளாகவும், முஸ்லிம்களை அழிக்கப்பட வேண்டியவர்களாகவும் கருதும் சாதி இந்துக்களின் ஆதிக்க மனோபாவம், அவர்களின் எல்லா உரிமைகளையும், நலன்களையும், கொண்டாட்டங்களையும் பறித்துவிட எப்போதும் துடித்துக் கொண்டிருக்கிறது. பசு குறித்த பிரச்சாரம் இத்தனை தீவிரமாக இருந்தும் இந்துத்துவவாதிகளால் மாட்டிறைச்சி உண்ணுவதைத் தடுக்க முடியவில்லை. அதனாலேயே ஒரு சட்டத்தை இயற்றி அதை குற்றச் செயலாக நிலைநாட்ட விரும்புகிறார்கள். சட்டம் இயற்றப்பட்ட பின்னர் அதைக் காரணமாக வைத்தே முஸ்லிம்களையும் தலித்துகளையும் கிறித்துவர்களையும் தாக்கலாம் இல்லையா? மாட்டிறைச்சி உண்ணுவதற்கு எதிரான இந்துத்துவவாதிகளின் நெருக்கடி அதிகரித்து வருகிற நிலையில், குற்றவுணர்ச்சியோடு மறைந்திருந்து உண்ணும் பெரும்பான்மை சமூகம், அதைவொரு சமூக நிகழ்வாகக் (பெரியார் செய்ததைப் போல) கொண்டாடப் பழக வேண்டும். பசுவை பார்ப்பனர்கள் ஆதிக்கத்தின் குறியீடாக வைத்திருக்கும்போது, அதை உண்ணுவதை தங்களுடைய விடுதலையின் குறியீடாக, விட்டுக் கொடுக்க முடியாத உரிமையாகப் பாதுகாக்க வேண்டும்.
Thanks To : http://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/2011-sp-562439341/14936-2011-06-02-05-53-45

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள்