இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் எழுத்தாளர்: அ.ஜெகநாதன்

(பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் உள்ள அம்பேத்கர் ஆய்வு மையம் 2005 ஆகஸ்ட் 5, 6 தேதிகளில் நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் திருத்திய வடிவம்)

“எங்களுடைய எஜமானர்களாக இருப்பது உங்களுடைய நலன்களுக்கு உகந்ததாக இருக்கக் கூடும். ஆனால் உங்களுடைய அடிமைகளாக இருப்பது எங்களுக்கு எவ்வாறு ஏற்புடையதாக இருக்கும்?”
-துசிடிடெஸ்

‘இரட்டை வாக்குரிமை தலித்துகளுக்கு கிடைத்த ஓர் அரசியல் ஆயுதம்’ என அம்பேத்கர் வர்ணித்தார். அரசியல் தளத்தில் இக்கோரிக்கை தற்போது மேலெழும்பி வருகிறது. தலித் தலைவர்களான தொல். திருமாவளவன், டாக்டர். கிருஷ்ணசாமி ஆகியோருக்கு இந்நேரத்தில் நன்றி கூற வேண்டும். (இவர்கள் மட்டும் தான் இக்கோரிக்கைகளை முன்னெடுத்த தலித் தலைவர்கள் என ஒற்றை வரியில் சொல்லிவிட முடியாது. அம்பேத்கர் நூற்றாண்டு தொடங்கிய காலத்தில் வெளியே தெரியாமல் இருந்த தலித் அமைப்புகள் மடை வெள்ளம் போல் இக்கோரிக்கையை முன்வைத்தே ஆர்ப்பரித்து வெளியே வந்தன. அவ்வாறு முன்னெடுத்த தலித் அமைப்புகள் குறித்த ஆய்வை தனியே மேற்கொள்ள வேண்டும்) இதே போன்று சிந்தனைத் தளத்தில் ஜெய்சன், ரவிக்குமார் போன்றோர் இக்கோரிக்கை குறித்தான ஆய்வை மேற்கொண்டனர். இதேகாலத்தில் இரட்டை வாக்குரிமை கோரிக்கை குறித்தான பங்கீட்டு ஆய்வுகளை கோ.கேசவன், அ.மார்க்°ஸ், தொ.பரமசிவன் ஆகியோர் மேற்கொண்டனர்.

Girl
இன்று இக்கோரிக்கை வெகுசன சொல்லாடலாக மாறி இருக்கிறது. இத்தருணத்தில் தனித்தொகுதி முறைக்கான வரலாறு எங்கிருந்து துவங்கின, அதன் வரலாற்று பரிமாணங்கள் என்ன? தனித்தொகுதி முறை எவ்வாறு பறிக்கப்பட்டு புனா ஒப்பந்தம் ஏற்பட்டது? புனா ஒப்பந்தத்திற்கு பிறகு இக்கோரிக்கையை அம்பேத்கர் எழுப்பவில்லையா? இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இரட்டை வாக்குரிமையை அம்பேத்கர் கைவிட்டாரா? என்பது குறித்து, இக்கட்டுரை விவாதிக்கும்.

1

தனித் தொகுதி - இரட்டைவாக்குரிமை - கூட்டுத் தொகுதி - இன்றைய தனித்தொகுதி என்பதாக நாம் பகுத்துக் கொள்வோம். இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு பொருள் உண்டு. தனித்தொகுதி முறை என்பது ஒரு வகுப்பாருக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட தொகுதி. இத்தொகுதியில் ஒதுக்கப்பட்ட ஒரு வகுப்பாரை அதே வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். துரதிஷ்டவசமாக தலித்துகளுக்கு இத்தொகுதி முறை செயல்படுத்தப்படவில்லை. அவர்கள் நியமனம் வழியாகவே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரட்டை வாக்குரிமை எனும் திட்டத்தில் ஒரு தலித் இரண்டு ஓட்டுகளுக்கு உரிமையாளர். தனது இனத்தை சேர்ந்த வேட்பாளருக்கு ஒரு ஓட்டு, பொதுத்தொகுதியில் உள்ள பொதுவாக்காளரைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு ஓட்டு. இவ்விரண்டாவது ஓட்டைத்தான் அம்பேத்கர் “விலை மதிப்பற்ற தனிச் சலுகையாகும். ஓர் அரசியல் ஆயுதம் என்ற முறையில் அதன் மதிப்பு கணக்கிடற்கரியது” (அ.நூ.10ப:351-352) எனக்கூறினார்.

கூட்டுத்தொகுதி முறையிலும் இரண்டு ஓட்டுக்கள் உண்டு. கூட்டுத்தொகுதி முறை புனா ஒப்பந்தத்தால் உருவான தொகுதி முறையாகும். பூர்வாங்கத் தேர்தலில் தலித் மக்கள் முதல்நிலைத் தலித் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பர். அதிகபட்சமாக 4வேட்பாளர்கள் இந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். பின்னர் கலப்பு வாக்களிப்பு முறையில் இந்நால்வரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். சிலர் இம்முறையை மேலெழுந்தவாரியாகப் பார்த்து இதனை இரட்டை வாக்குரிமை எனக் கூறுகின்றனர். இரட்டை வாக்குரிமைச் சொல்லாடலை கூட்டுத்தொகுதி முறைக்கு பயன்படுத்துவது தவறான அரசியல் சொற்பிரயோகமாகும். அல்லது மயக்கமுறு சொற்சிலம்பம். இவை இரண்டிற்கும் பாரதூர வேறுபாடு இருக்கிறது. எனவே இதனை கூட்டுத்தொகுதி முறை என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்தது இன்றைய தனித்தொகுதி முறை. இம்முறை கூட்டுத்தொகுதி பெற்றெடுத்த போலியோ குழந்தை. அல்லது சவக்குழந்தை. இங்குள்ள வேட்பாளன் முடமானவன் அல்லது சடமானவன். இவனால் ஒரு பிரயோசனமும் இல்லை .

ஆங்கிலேய அரசு இந்திய அரசியல் வெளியை சீர்திருத்த முயன்றது. 1882ல் இச்சீர்திருத்தம் துவங்கியது. இக்காலகட்டத்தில் அரசியல் ரீதியாக பரிணமித்து தங்களுக்கென தனிப்பிரதிநிதித்துவம் வேண்டும் என முதல் கோரிக்கையை எழுப்பியவர்கள் தலித்துகளே என கோ. கேசவன் குறிப்பிடுகிறார். “இரட்டைமலை சீனிவாசன், பண்டிதர் அயோத்திதாசர் ஆகியோரின் முன்முயற்சியால் தொடங்கப்பட்ட திராவிட மகாஜன சபை 1.12.1891ஆம் நாளில் இயற்றிய தீர்மானம் இப்படிக் கூறுகிறது: எல்லா மாவட்டங்களிலும் உள்ள கிராம பஞ்சாயத்துகள் நகராட்சி மன்றங்கள் ஆகியவற்றில் ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் குறைகளை எடுத்துரைக்கும் விதத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் உரிய பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் ” என கோ. கேசவன் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். லார்ட் மார்லி (1906) அவர்களின் சீர்திருத்தம் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டபோது இந்து மு°லிம் பிரச்சனை தீவிரமாகியது. இக்காலத்தில் வாழ்ந்த அயோத்திதாசர், மிண்டோமார்லி அவர்களின் சீர்திருத்தத்தை வரவேற்று முகமதியர்கள் “ஓர் வகையில் இந்தியர்களேயாம்” என நேசக்கரத்தை நீட்டுவார். “இராசாங்க ஆலோசனை சங்கத்துள் நூறு பெயர் நியமனமாக வேண்டுமானால் சாதிபேதமற்ற திராவிடர்களாம் இந்தியர்கள் (தலித்கள்) 25 பெயரையும், சாதி பேதமுள்ள திராவிடர்கள் (சூத்திரர்கள்) 25 பெயரையும், முகமதியர்கள் 25 பெயரையும், யுரேஷியர்கள 13 பெயர்களையும், நேட்டிவ் கிறிஸ்டியன்கள் 12 பெயர்களையும் நியமித்து ஆலோசனைகளை நிறைவேற்றுவதனால் சகல குடிகளும் சுகம் பெறுவார்கள்”(அ.சி. 1/104) என அயோத்திதாசர் குறிப்பிடுகிறார்.

அயோத்திதாசரின் இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டபோது மார்லியின் செயல்பாட்டை அயோத்திதாசர் கண்டிக்கவும் தவறவில்லை. “இத்தேசத்தில் வாசஞ்செய்யும் முகமதியர்களை இந்தியர்களாக பாவிக்காது முகமதியர்கள் வேறு, இந்துக்கள் வேறு என்று பிரிக்க ஆரம்பித்துக் கொண்டார். ஆனால் இந்துக்களுள் இடிபட்டு நசிந்து வரும் முக்கிய வகுப்பாரை கவனித்தாரில்லை” (அ.சி. 1/103) என அயோத்திதாசர் தனது தமிழன் இதழில் எழுதினார். தலித்களின் நலனோடு உறவாடுவதைக் காட்டிலும் மார்லி இசுலாமிய கனவான்களுடன் உறவாடுவதையே பெரிதும் விரும்பினார். இசுலாமிய கனவான்களுக்கு தனது மாளிகையில் விருந்து கொடுத்து உபசரிக்கும் அளவுக்கு மார்லி இசுலாமியர்களுடன் நெருங்கிச் சென்றார். இசுலாமியர்கள் ஆண்டை இனத்தவர் என்பதாலேயே மார்லி அவர்களோடு நெருங்கினார். இதனைப் போன்றே பின்னாளில் காந்தியும் ‘ஆண்ட பரம்பரைக்கே’ மரியாதை செலுத்தினார். இவ்வாறாக 1906ல் உருவான மிண்டோமார்லி சீர்திருத்தம் தலித்துகளுக்கு எதிராகச் சென்றது. இதன்பின்னர் 1919ல் மாண்டேகு செம்°போர்டு அறிக்கை வெளிவந்தது.“தீண்டத் தகாதவர்களின் பிரச்னையை இந்த அறிக்கை தெள்ளத் தெளிவாக ஒப்புக் கொண்டது. இது மட்டுமின்றிச் சட்டமன்றங்களில் அவர்கள் பிரதிநிதித்துவம் பெறத் தகுந்த ஏற்பாடு செய்வதாகவும் அறிக்கையைத் தயாரித்தவர் கள் உறுதி கூறினார்கள்” (அ.நூ. 10/167) என அவ்வறிக்கை கூறியது. இதற்குப் பின்னர் வாக்குரிமையையும், தேர்தல் முறையையும் தீர்மானிப்பதற்காக சவுத்பாரோ குழு அமைக்கப்பட்டது. மிண்டோ மார்லி குழுவைப் போன்று தலித்களை இக்குழுவும் ஏற்கவில்லை. ஆனால் இக்குழுவின் போக்கை அன்றைய இந்திய அரசு ஏற்கவில்லை.“தீண்டப்படாதவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்குக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று அறிக்கை யைத் தயாரித்தவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் அறுபது அல்லது எழுபது சாதி இந்துக்கள் இருக்கும் ஒரு சட்டமன்றத்தில் இச் சமூகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு உறுப்பினரைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதனைச் சாதிக்க முடியும் என்று எதிர்பார்ப்பது விந்தையிலும் விந்தையாக இருக்கிறது” (மேலது/167) என்பதாக இந்திய அரசு குறிப்பெழுதியது.

அரசியல் சீர்திருத்தத்தின் தொடர்ச்சியாக சைமன் கமிஷன் 1929ல் இந்தியாவிற்கு வந்தது. அக்கமிஷனில் இந்தியர் யாரும் இல்லை எனக் கூறி இந்திய தேசிய காங்கிரஸ் நிராகரித்தது. அதேவேளையில் இந்தியா வில் இருந்து சிறுபான்மைப் பிரிவினரும் தலித் அமைப்புக்களும் இக்கமிஷனை நிராகரிக்கவில்லை. “சைமன் குழுவின் முன் பதினெட்டு தீண்டப்படாத வகுப்புச் சங்கங்கள் தீண்டப்படாதவர்களுக்கெனத் தனிவாக்காளர் தொகுதிகள் வேண்டும் என்று கோரியிருந்தன. பகிஷ்கரித் ஹித்தகாரினி சபையின் சார்பில் கோரிக்கை அறிக்கையைச் சைமன் குழுவிடம் (அம்பேத்கர்) அளித்தார்.” (தனஞ்செய்கீர்/162) இவ்வறிக்கை யின் 13ம் பகுதியில் “தாழ்த்தப்பட்ட வகுப்பினரைப் பொறுத்தவரை, பொதுத் தொகுதி களில் சுதந்திரமான தேர்தல் என்பது இயலாது என்பது சபாவின் கருத்து. மறுபுறத்தில் வகுப்புகள் அடிப்படையிலான தேர்தல் தொகுதிகளைச் சபா விரும்பவில்லை.

பொதுத் தொகுதிகளில் ஒதுக்கப்பட்ட இடங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குக் கொடுக்கப்பட்டால் அது போதுமானது என்பது அதன் கருத்து” (அ.நூ.4/193) என அம்பேத்கரின் அறிக்கை கூறியது. அதேவேளையில் சைமன் கமிஷனில் அம்பேத்கர் சாட்சியம் அளித்த தருவாயில் சைமன் கமிஷன் பின்வருமாறு வினா தொடுத்தது. “35. வயது வந்தோர்க்கெல்லாம் வாக்குரிமை என்பது இல்லாவிட்டால் ? டாக்டர் அம்பேத்கர்: அப்படியானால் நாங்கள் தனியான வாக்காளர் தொகுதிகளைக் கோருவோம்” (மேலது/228) என அம்பேத்கர் பதிலளித்திருக்கிறார்.

இங்கு ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சைமன் கமிஷனிடம் மொத்தம் 18 தலித் அமைப்புகள் கோரிக்கை மனுவை அளித்தன. இவற்றில் அறுதிப் பெரும்பான்மையான தலித் அமைப்புகள் தனித்தொகுதி முறைகள் வேண்டும் என்றிருக்கின்றன. அம்பேத்கரின் அமைப்பு ‘வயது வந்தோருக்கு வாக்குரிமை இல்லை எனில் தனித் தொகுதிமுறை தேவை’ எனக் கோரியது. சென்னை மாகாண தாழ்ந்த வகுப்பினர் சங்கத்தைச் சேர்ந்த இரட்டைமலை ஆர். சீனிவாசன் தனி நியமனம் வேண்டும் எனக் கோரினார். தனித்தொகுதி முறை வேண்டாம் எனக் கூறிய இவ்விருவரைத்தான் ஆங்கில அரசு வட்டமேஜை மாநாட்டிற்கு பின்னாளில் வரவழைத்தது வியப்புறும் நிகழ்வாக இருக்கிறது.சைமன் கமிஷன் தனது அறிக்கையை 1930 மே மாதத்தில் வெளியிட்டது. “வெள்ளைக் கவர்னர் பார்த்து அனுமதிக்கும் தாழ்த்தப்பட்டவர்கள், தேர்தல்களில் அபேட்சகர்களாக நிற்கலாம்” (ஏ.எ°ஸ்.கே/51) என அவ்வறிக்கை கூறியது. “இது அப்பட்டமான நியமனமே தவிர தேர்தலாகாது.

நமது பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடம்தான் இருக்க வேண்டும். எவ்வித நிபந்தனையும் இன்றி நமது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்காகப் போராடுவோம்” (மேலது /51) என அம்பேத்கர் 1930 ஆக°ஸ்ட் 8-ல் நாக்பூரில் நடந்த ‘டிப்ரஸ்ட் கிளாஸ் காங்கிரஸ்’ மாநாட்டின் தலைமையுரையில் கூறினார். இந்நிலையில் 1930 நவம்பர் 12 அன்று பிரிட்டிஷ் மன்னர் ஐந்தாவது ஜார்ஜ் இந்திய வட்ட மேஜை மாநாட்டைத் துவங்கி வைத்தார். ‘இந்தியாவுக்கான புதிய அரசியல் சட்டம் நிர்ணயிக்கப்படும் முன்னர் இந்தியர்களின் பிரதி நிதிகள் ஒரு விவாதத்திற்கு அழைக்கப்படுவர்’ (அ.நூ.16/63) என்ற பிரிட்டிஷ் அறிவிப்பை ஒட்டியே இவ்வட்ட மேஜை மாநாடு கூட்டப்பட்டது. இந்தியா வில் முதன்முதலாக அரசியல் கோரிக்கையை எழுப்பியவர்கள் தலித்துகள் தான் என முன்னர் பார்த்தோம். 39 ஆண்டுகள் கழித்துதான் ஆங்கில அரசு தலித்துகளை அரசியல் ரீதியாக அங்கீகரித்திருக்கிறது என்பதோடு தனித் தொகுதி கோரிக்கைக்கு அழுத்தம் தராத இரண்டு தலித் தலைவர்களை வட்ட மேஜை மாநாட்டிற்கு அழைத்திருக்கிறது என்பதை இங்கு கவனப்படுத்தலாம்.

முதலாம் வட்டமேஜை மாநாட்டில் அம்பேத்கரும், இரட்டைமலை சீனிவாசனும் இணைந்தே செயலாற்றினார் என்ற போதும் அம்பேத்கரின் நிலைப்பாடே இங்கும் தொடர்ந்தது. வட்ட மேஜை மாநாட்டின் மூன்றாம் துணைக்குழுவின் (சிறுபான்மையோர்) இரண்டாம் அமர்வில் “கூட்டுத் தொகுதி அல்லது தனித்தொகுதி என்ற பிரச்சனையில் எங்கள் நிலைமை இதுதான். ஒடுக்கப்பட்டோர் தங்கள் சமுதாய அமைப்புக்கான மாற்றங்களை ஏற்றுக் கொள்ளச் சிறிது அவகாசம் விரும்புகிறார்கள். அந்தக் கால இடைவெளிக்குப் பின்னர் வயது வந்தோர்க்கெல்லாம் வாக்குரிமை என்பதை எங்களுக்கு கொடுத்தால், நாங்கள் கூட்டுத்தொகுதியையும் அதற்குள் அடங்கிய ஒடுக்கப்பட்ட இருக்கைகளையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். வயது வந்தோர்க்கு வாக்குரிமை எனும் உரிமையை எங்களுக்கு நீங்கள் கொடுக்கவில்லை என்றால் எங்கள் பிரதிநிதித் துவத்தைப் பெற தனித்தொகுதி முறையை நாங்கள் கேட்க வேண்டி இருக்கும். இது எங்களுடைய நிலைமை” (அ.நூ 5/47) என அம்பேத்கர் உரையாற்றினார்.

Gandhi and Ambedkar
சைமன் கமிஷனிடம் கொடுத்த அறிக்கையையும் சைமன் கமிஷனின் கேள்விக்கான பதிலையுமே இப்பேச்சு பிரதிபலிப்பதாக இருக்கிறது என்பதோடு இக்கருத்தை ஒட்டியே அம்பேத்கரும் இரட்டைமலை ஆர்.சீனிவாசனும் ஒரு அறிக்கையை மூன்றாம் துணைக்குழுவிற்கு அளித்தனர். “வருங்காலத் தன்னாட்சி இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அரசியல் காப்புரிமைக்கான ஒருதிட்டம் மூன்றாம் துணைக்குழுவின் (சிறுபான்மையோர்) அறிக்கைக்குப் பின்னிணைப்பு. டாக்டர் பீமாராவ் ஆர். அம்பேத்கரும் இராவ் பகதூர் ஆர். ஸ்ரீனிவாசனும் அளித்தது” (மேலது /69) எனத் தலைப்பிட்ட அறிக்கையில் பின்வரும் வாசகங்கள் இடம் பெற்றிருக்கின்றன. “தன்னாட்சி பெற்ற இந்தியாவில் பெரும்பான்மையினர் ஆட்சியின் கீழ் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை உட்படுத்திக் கொள்ள சம்மதிப்பதற்கான நிபந்தனைகள்” (மேலது/69) என்ற பேரில் நிபந்தனை எண்:4 சட்டமன்றங்களில் போதுமான பிரதிநிதித்துவம் எனும் தலைப்பில் “ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களைக் காப்பதற்காக சட்டமன்றம் மற்றும் நிர்வாகத்துறை செயலின்மீது செல்வாக்குச் செலுத்துவதற்கு அவர்களுக்குப் போதுமான அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அரசின் கீழ்காணும் வாசகங்கள் தேர்தல் சட்டத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் .

1. நாட்டின் மாநில மற்றும் மத்திய சட்ட மன்றங்களில் போதிய பிரதிநிதித்துவத்திற்கான உரிமை.

2.அவர்களின் சொந்த வகுப்பாரைத் தங்களின் பிரதிநிதிகளாக, அ) வயது வந்தோர் வாக்குரிமை மூலமாகவும் ஆ) முதல் பத்து ஆண்டு காலத்திற்குத் தனிவாக்காளர் தொகுதி (separate electrorate) மூலமாகவும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட வேண்டும். அதன் பின்னர் கூட்டு வாக்காளர் தொகுதி முறை வயது வந்தோர் வாக்குரி மையுடன் சேர்ந்து வந்தாலொழிய, அத்தகைய கூட்டு வாக்காளர் தொகுதி முறை ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் விருப்பத்திற்கு மாறாக அவர்கள் மீது திணிக்கப்பட மாட்டாது என்பது தெளிவாக் கப்படுகிறது.” (மேலது/77) என அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

அம்பேத்கர் சைமன் கமிஷனில் கொடுத்த அறிக்கை, பதில் முதலிய வைகளின் பிரதிபலிப்பே இங்கு சட்டப் பாதுகாப்பு நிபந்தனையாகவும் வெளிப்பட்டிருப்பதை மீண்டும் ஒரு முறை இங்கு நாம் கவனப் படுத்துவோம். இவ்விடத்தில் தொ.பரமசிவனின் சொல்லாடலை இணைத்து நோக்குவோம். “தலித் மக்களுக்கான தனி ஒதுக்கீடு என்கிற கோரிக்கையை 1932-ல் வட்டமேஜை மாநாட்டில் அம்பேத்கர் முன் வைக்கிறார். அந்தக் கோரிக்கை இரட்டைமலை சீனிவாசனால் அவருக்கு எடுத்துத்தரப்பட்டது. இரட்டைமலை சீனிவாசன் அதை திராவிட இதழி லிருந்து எடுத்துக் கொடுக்கிறார். 1921-ல் திராவிட இதழில் ஜனக சங்கர கண்ணப்பன் தலித் மக்கள் மட்டுமே வாக்களித்து தங்கள் பிரதிநிதி களைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுமுறை வேண்டுமென்று எழுதினார். இது தானே வரலாறு” என தொ.ப. புதியகாற்று நேர்காணலில் கூறியிருக்கிறார்.

இங்கு தொ.ப. வட்டமேஜை மாநாட்டின் வருடத்தை மாற்றிக் கூறுகிறார். 1932ல் 3ம் வட்டமேஜை மாநாடுதான் கூட்டப்பட்டது. இதற்கு இரட்டை மலை ஆர்.சீனிவாசன் செல்லவில்லை. 1930-31ல் நடந்த இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டிற்குத்தான் சென்றார். இரட்டைமலை சீனிவாசன் முதலில் திராவிடனில் வந்த தனித்தொகுதி முறையை பார்த்து இக்கோரிக்கையை எழுப்பவில்லை. 1891லேயே தனிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கையை அயோத்திதாசருடன் இணைந்து வலியுறுத்தினார். பின்னாளில் அவர் தனி ஒதுக்கீடு மட்டும் போதும் என தனது இலக்கை சுருக்கிக்கொண்டார். ஆனால் அம்பேத்கரின் அணுகுமுறை பகிஷ் கிரிதா ஹிதாகாரணி சபாவில் இருந்து உதித்திருக்கிறது. சீனிவாசனின் பாதிப்பு அம்பேத்கரின் கருத்தாக்கம் மீது பரவவில்லை என்பதோடு அம்பேத்கரின் கருத்து மாற்றம் அறுதிப் பெரும்பான்மையான தலித் அமைப்பின் கருத்துரிமையிலிருந்தும். அவரது சபையில் இருந்துமே உருமாறியிருக்கிறது. இதுதான் வரலாறு. பெரியாரியத்துக்கு (பிற்பட்டவர்களுக்கு) மாற்றான தலித் வரலாறு.

முதலாம் வட்டமேஜை மாநாட்டில் முன்வைக்கப்பட்ட இக்கோரிக்கை யை இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் காந்தி பலமாக எதிர்த்தார். (இரட்டை வாக்குரிமைக்கு எதிரான காந்தியின் செயல்பாட்டை அடுத்த பகுதியில் காணலாம்) இவ்வட்டமேஜை மாநாட்டில் ஏற்பட்ட அம்பேத்கர்-காந்தி மோதல் மிகப்பெரும் போராட்டத்தை ஏற்படுத்தியது. காந்தியையும் காங்கிரசை யும் இந்தியாவில் உள்ள தலித் அமைப்புகள் நிராகரித்தன. அம்பேத்கரை யும், இரட்டைமலை சீனிவாசனையும் தலித் அமைப்புகள் தங்களது தலைவர்களாக அங்கீகரித்து தீர்மானங்கள் இயற்றின. அதே வேளையில் காந்திய ஆதரவுப் பத்திரிக்கைகள் அம்பேத்கரை தேசத் துரோகி எனச் சித்தரித்தது. இங்குள்ள சாதி இந்துவைச் சேர்ந்த தனிநபர் ஒவ்வொருவரையும் அம்பேத்கரை கொலை செய்யத் தூண்டும் மனோபாவத்திற்கு தேசியப் பத்திரிக்கைகள் செய்திகளை பிரசுரித்தன. இக்காலகட்டத்தில் கப்பல் பயணம் மேற்கொண்ட, இந்தியாவின் புகழ்பெற்ற ஒரு பத்திரிகையாளரான டி.ஏ.இராமன் என்பவரிடம் அவருடன் பயணம் செய்த ஒருவர், இவ்வுலகில் நான் எவரையேனும் என்றேனும் ஒரு நாள் கொலை செய்தால் அவர் அம்பேத்கராகத் தான் இருப்பார் என்று தம் வெறியைக் (த.கீ./265) கொட்டியதாக தனஞ்செய்கீர் எழுதுகிறார்.

வட்டமேஜை மாநாட்டில் காந்தியால் முடியாத செயலை வாக்களிக்கும் முறைக் கணக்கெடுப்பின் வழியாகத் தடுத்துவிடலாம் என சாதி இந்துக்கள் முயன்றனர். இரண்டாம் வட்டமேஜை மாநாடு முடிந்த தருவாயில் புதிய அரசியலமைப்பில் எத்தகைய வாக்குரிமை முறையைக் கையாள வேண்டும் என்பதை ஆராய்வதற்காக லோதியன்தலைமையில் ஒரு குழுவை அன்றைய ஆங்கிலேய அரசு அமைத்தது. 1931 டிசம்பரில் உருவான இக்குழு ஜனவரியில் தனது பணியை மேற் கொண்டது. இக்குழுவிற்கு உதவும் பொருட்டு ஒவ்வொரு மாகாணங்களிலும் அதிகாரிகள் அல்லாதவர்களைக் கொண்ட மாகாணக் கமிட்டி அமைக்கப்பட்டது. இம்மாகாணக் கமிட்டியும்; அந்தந்த மாகாண அரசுகளும் தனித்தனியே ஒரு அறிக்கையை லோதியன் குழுவில் சமர்பித்தது.

அன்றைய பிரிட்டீஷ் பிரதமர் லோதியன் கமிட்டிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். “இந்திய வட்டமேஜை மாநாட்டில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து நடைபெற்ற விவாதங்களிலிருந்து ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாயிற்று. அதாவது தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குப் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப் புதிய அரசியல் அமைப்புச் சட்டம் வகை செய்யவேண்டும். நியமனத்தின் மூலம் அவர்களுக்குப் பிரதிநிதித் துவம் அளிக்கும்முறை உசிதமானதல்ல என்பது புலனாயிற்று. நாடு முழுவதற்குமான அடிப்படையிலோ அல்லது மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க, திட்டவட்டமான சக்தியாக தாழ்த்தப்பட்டோர் விளங்கும் மாகாணங்களிலோ அவர்களுக்குத் தனித் தொகுதிகள் அமைப்பதென முடிவு செய்யப்பட்டால், இவ்வாறு அவர்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் வழங்கும் முறையை வகுப்பதற்கு உதவக்கூடிய வகையில் உங்கள் கமிட்டி அவசியமான தகவல்களைச் சேகரித்து அளிக்கவேண்டும்”(அ.நூ. 10/170-171)என அக்கடிதத்தில் குறிப் பிட்டிருந்தார். இதனால் லோதியன் குழு வெளியிட்ட கேள்விப் பட்டியலில் “தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என எந்தச் சமூகங்களை நீங்கள் சேர்த்துக் கொள்வீர்கள்? தீண்டத்தகாதவர்கள் தவிர வேறுவகுப்பினரையும் இப்பட்டியலில் சேர்த்துக் கொள்வீர்களா?” (மேலது /171) என்ற கேள்விக்கு மாகாணக் கமிட்டிகள் அதிர்ச்சி கரமான தகவல்களையும் புள்ளி விபரங்களையும் கொடுத்திருக்கிறது.

பஞ்சாப் மாகாண வாக்குரிமை கமிட்டியில் இருந்த தலித் பிரதிநிதி களான கே.பி.தின் முகமது, திரு.ஹன்ஸ் ராஜு ஆகியோர் 13,10,709 தலித் வகுப்பினர் இருப்பதாக கூறினார். மாகாணக் கமிட்டி “பஞ்சாப்பில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இருக்கின்றனர் என்று கூறுவது சாத்தியமல்ல” (மேலது/173) எனக் கூறியது. அதைப் போன்று பஞ்சாப் அரசாங்கம் இக்கேள்விக்கு பதிலளிப்பதையே தவிர்த்தது. இதைப்போன்று ஐக்கிய மாகாணம் பீகார், ஒரிஸா, வங்காளம் முதலான மாகாணங்கள் தலித்துகளே இல்லை என்றது.அல்லது தலித்துகளின் எண்ணிக்கையை குறைத்து கூறியது.

1911 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்போது தலித்துகள் 5கோடி இருப்பதை அனைவரும் ஒத்துக்கொண்டனர். ஆனால் 1932ல் சாதி இந்துக்கள் தலித் மக்களின் தொகையை ஏன் குறைக்க முற்பட்டனர் என்ற கேள்வி இங்கு எழலாம். “இதற்குப் பதிலளிப்பது மிகவும் எளிது. 1932 வரை தீண்டத்தகாதவர்கள் எத்தகைய அரசியல் முக்கியத்துவத் தையும் பெற்றிருக்கவில்லை” (மேலது /176). அரசியல் நோக்கங்களுக்காக தலித்துகள் இந்துக்களின் ஒரு பகுதியாக பார்க்கப்பட்டனரே ஒழிய வருணத்துக்குள் அவர்கள் இழுக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் அரசியல் சுபிட்சத்தை சாதி இந்துக்களும், முஸ்லிம்களும் பங்கிட்டுக் கொண்டனர். 1932ல் அப்பங்கீட்டில் தலித்துகளால் பிரச்சனை எழுந்தது. அதனாலேயே சாதி இந்துக்களும் அவர்களுடன் இணைந்து முஸ்லிம்களும், சீக்கியர்களும் தலித் மக்களின் எண்ணிக்கையை படுபாதாளத்திற்குக் குறைத்தனர் அல்லது தலித்துகள் என்ற ஒரு வகுப்பே இல்லை என வாதிடவும் செய்தனர்.

தனி வாக்குரிமைக்கான பிரச்சனை இத்தோடு முடிந்து விடவில்லை. தலித்துகளுக்கு இன்னொரு பக்கமிருந்தும் எதிர்ப்பு வந்தது. “தாழ்த்தப்பட்டவர்கள் என்னும் பிரிவில் தீண்டத்தகாதவர்கள் மட்டுமின்றிப் பொருளாதாரரீதியிலும் பின்தங்கி இருக்கும் வகுப்பினரும் சேர்க்கப்பட வேண்டும் என்று பிற்பட்ட வகுப்பினரின் பிரதிநிதிகள் வாதிட்டனர்” (மேலது/180). ஆனால் இக்கோரிக்கையை பிற்பட்டவர்கள் தவிர்த்த உயர்சாதி இந்துக்களும், தலித்துகளும் ஏற்கவில்லை. தலித்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சூழ்ச்சி என உயர்சாதி இந்துக்களும், உயர்சாதி இந்துக்களை எதிர்ப்பதற்காக தங்களுடன் இணைந்து கொண்டு பின்னர் தங்களது நலனிற்கு இவர்களாலேயே - பிற்படுத்தப்பட்டவர்கள் - குந்தகம் ஏற்படும் என்பதற்காக தலித்துகளும் இக்கோரிக்கையை எதிர்த்தனர். (தமிழகத்தில் பக்தி இயக்கத்தில் இருந்து திராவிட இயக்க காலம் வரை பிராமணரல்லாதார் கூட்டணி எனும் பெயரில் தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் இணைக்கப்பட்டனர். இருந்தும் ‘நந்தன்கள் தான்’ எரிக்கப்பட்டனர். அரசியல் அபிலாசைகளை பிற்படுத்தப் பட்டவர்களே அனுபவித்தனர். இதனை தலித் தலைமை 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் உணர்ந்திருப்பதை இங்கு ஒப்பிட்டு நோக்கவும்). “ஆனால் , பிற்பட்ட வகுப்பினர் இதற்கு இணங்கவில்லை. தங்களைத் தாழ்த்தப்பட்ட இனத்தவர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்றே இவர்கள் பிடிவாதமாக வலியுறுத்தி வந்தனர். தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள இதுதான் எளிதான வழி என்று அவர்கள் நினைத்ததே இதற்குக் காரணம். ஆனால், தீண்டத் தகாதவர்கள் இதனை எதிர்த்ததால் பிற்பட்ட வகுப்பினர் திசைதிரும்பி இந்துக்களுடன் சேர்ந்து கொண்டனர். அது மட்டுமல்ல, தீண்டத்தகாதவர்கள் என்ற வகுப்பினரே இல்லை என்று இந்துக்களை விட மிக உக்கிரமாக மறுக்கவும் தலைப்பட்டனர்” (மேலது / 181) என அம்பேத்கர் கூறுகின்றார்.

ஆக, தலித்துகளின் தனித் தொகுதி கோரிக்கைக்கு காந்தி மட்டும் காரணமாக இருக்கவில்லை. அல்லது இந்து மதம் மட்டும் காரணமாக இருக்கவில்லை. உயர்சாதி இந்துக்கள், பிற்பட்ட இந்துக்கள், இசுலாமியர்கள், சீக்கியர்கள் என அனைவரும் தடைக்கல்லாகவே இருந்திருக்கின்றனர். தலித்துகளின் பிரச்னையில் மொழி, இனம், மதம் தாண்டி அனைவரும் ஓரணியில் சேர்ந்து எதிர்ப்பதை இங்கு நாம் கவனப்படுத்தலாம். (தமிழக அரசியலில் திராவிட அரசியல் மீதான விமர்சனத்தை தலித்துகள் மேற்கொண்டபோது வலது, இடது, தமிழ்தேசிய, சனநாயக, பெண்ணிய சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து கருத்தியல் ரீதியிலான தாக்குதலை தலித்துகள் மீது மேற்கொண்டதை இங்கு ஒப்பிட்டுக் கொள்ளவும்). காந்தி, சாதி இந்துக்கள், இசுலாமிய, சீக்கியஎதிர்ப்புகளை தலித் அமைப்புகள் நேரடியாக எதிர் கொண்டு போராடியதன் பயனாக 1932 ஆகஸ்ட் 17ம் தேதி ஆங்கில அரசு வகுப்புத் தீர்ப்பை வழங்கியது.

“மாட்சிமை தங்கிய மன்னர் பிரான் அரசாங்கம் வழங்கிய வகுப்புத் தீர்ப்பு - 1932” என்ற தலைப்பில் பிரிட்டிஷ் அரசு பின்வரும் வாசகத்தை அத்தீர்ப்பில் வெளிப் படுத்தியிருக்கிறது.

6. முகமதிய, ஐரோப்பிய, சீக்கிய தொகுதிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கான தேர்தல் மாகாணம் முழுவதும் தனிவாக்காளர் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்கும் அடிப்படையில் நடைபெறும்.

7. . . . . . . . . . . . . . . 8. . . . . . . . . . . . . . . .

9. வாக்களிக்கத் தகுதிபெற்ற “தாழ்த்தப்பட்ட வகுப்பினர்’ஒரு பொதுத் தொகுதியில் வாக்களிப்பர். இந்த வகுப்பினர் இந்த முறையால் மட்டும் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறுவது சாத்தியமில்லை என்பதால் அட்டவணையில் காட்டியுள்ளபடி அநேக தனி இடங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படும். தேர்தல் விதி முறைப்படி “தாழ்த்தப்பட்ட வகுப்பினர்” மட்டுமே வாக்களிக்கும் தனித் தொகுதிகளில் நடைபெறும் தேர்தல்கள் மூலம் இந்த இடங்கள் நிரப்பப்படும். மேலே குறிப்பிட்டுள்ளவாறு, இத்தகைய ஒரு தனித்தொகுதியில் வாக்களிக்கும் ஒருவர் பொதுத் தொகுதியில் வாக்களிக்கவும் உரிமை பெற்றிருக்கிறார்” (அ.நூ 15/668-669) என வகுப்புத் தீர்ப்புக் கூறியது.

தலித் அமைப்புகளின் 39 ஆண்டு காலப் போராட்டத்தின் விளைவாக பெறப்பட்ட இரட்டை வாக்குரிமை வரலாற்றின் கதை இதுதான். பல எதிர்ப்புகளையும் மீறி பெற்ற இரட்டை வாக்குரிமை காந்தியத்தால் எவ்வாறு தடுக்கப்பட்டது என்பதை அடுத்துக் காண்போம்.

2

முதலாம் வட்ட மேஜை மாநாட்டை காங்கிரஸ் புறக்கணித்தது. (காங்கிரஸ் புறக்கணித்தற்கான காரணம் இங்குத் தேவையில்லை.) இதனால் தனது பிரதிநிதிகள் என எவரையும் காங்கிரஸ் இந்த வட்ட மேஜை மாநாட்டிற்கு அனுப்பவில்லை. ஆனால் முதலாம் வட்ட மேஜை மாநாட்டின் நடவடிக் கையை காந்தியும் காங்கிரசும் மிக உன்னிப்பாக கவனித்து வந்தது. இம்மாநாடு முடிவுற்ற தருணத்தில் மலபார்ஹில்லில் தங்கியிருந்த காந்தி 1931 ஆகஸ்ட் 6ம் நாள் அம்பேத்கருக்கு கடிதம் எழுதினார். “அம்பேத்கருக்கு நேரம் ஒதுக்க முடியுமானால் அன்றிரவு 8மணிக்கு தானே வந்து அவரைச் சந்திப்பதாக காந்தி அக்கடிதத்தில் எழுதியிருந்தார்” (த.கீ./238). அன்றிரவு அம்பேத்கருக்கு காய்ச்சல் கண்டிருந்ததால் காய்ச்சல் தணிந்த பின் தானே வந்து சந்திப்பதாக காந்திக்கு அம்பேத்கர் கடிதம் எழுதினார்.

அம்பேத்கர் ஆகஸ்ட் 14ம் நாள் பகல் 2 மணிக்கு காந்தியை சந்திக்கச் சென்றார். அந்த முதல் சந்திப்பை தனஞ்செய்கீர் பின்வருமாறு வர்ணிக்கிறார். “. . . அப்போது காந்தி அவருடைய கட்சிக்காரர்களுடன் பேசியவாறே சில பழங்களைத் தின்று கொண்டிருந்தார். அம்பேத்கரும் அவருடைய தோழர்களும் காந்திக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு அங்கிருந்த விரிப்பின் மீது அமர்ந்தனர்.

Man
முகமதியர் அல்லாத, ஐரோப்பியர் அல்லாத தலைவர்களிடமும் பிரதிநிதிகளிடமும் காந்தி எப்பொழுதும் நடந்து கொள்கின்ற முறைப்படி அம்பேத்கரைச் சற்று நேரம் நேராகப் பார்க்காமல் மிஸ்.லேடு அவர்களோடும் மற்றவர்களோடும் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். காந்தியின் அக்கரையின்மை மேலும் சிறிது நேரம் நீடித்தால் மோதல் ஏற்படுமோ என்று அம்பேத்கருடன் வந்திருந்தவர்கள் அஞ்சினார்கள். அந்நிலையில் காந்தி அம்பேத்கரின் பக்கம் திரும்பிப் பார்த்தார்” (த.கீ./238) என தனஞ்செய்கீர் இச்சூழலைக் குறித்து எழுதுகிறார். இச்சந்திப் பின் போது காந்தி தலித் மக்களுக்கான தனித்தொகுதிமுறையை ஏற்கவில்லை என்பதை அம்பேத்கர் காந்தியுடனான உரையாடலிலிருந்து அறிந்து கொண்டார். ஆனால் காந்தி வட்டமேஜை மாநாட்டிலும் பின்னர் இந்தியாவிலும் மிகப் பெரிய நெருக்கடியை கொடுப்பார் என அம்பேத்கர் நினைக்கவில்லை. காந்தி இரட்டை வாக்குரிமை கோரிக்கையை வட்டமேஜை மாநாட்டில் நிராகரிப்பார் என்பது தெரிந்தே அம்பேத்கர் வட்டமேஜை மாநாட்டிற்கு பயணமானார்.

காந்தியின் வட்டமேஜை உரையாடலை காண்பதற்கு முன்னர் காங்கிரசின் வகுப்புவாரித் திட்டம் என்ன என்பதை இங்கு நாம் முதலில் காண வேண்டியிருக்கிறது. வகுப்பு பிரச்னை சம்பந்தமாகவும், இதரப் பிரச்சனைகள் சம்பந்தமாகவும் காங்கிரஸ் காரிய கமிட்டி சில முடிவுகளை அப்போது எடுத்திருந்ததாகத் தெரிகிறது. “பரிசுத்தக் கலப்பின்றி ஏற்படக் கூடிய தேசியமே காங்கிரசின் லட்சியம். சுதந்திர இந்தியாவில் பிரச்னைகளை எல்லாம் தேசியவாதம் பற்றியே முடிவு செய்து கொள்ள முடியும் என்பது காங்கிரஸ் நம்பிக்கை. ஆயினும் அனுபவத்தில் இக்கொள்கை பல உருவத்துடன் தோன்றி வருகிறது. லாகூர் தீர்மானம் ஒரு குறிப்பிட்ட நிலையைக் குறித்துக்காட்டும். பொதுவாக முஸ்லிம்கள் முதலிய பல சிறுபாலார் வகுப்புகளும், விஷேசமாக சீக்கியரும் நேரு அறிக்கையின் முடிவை ஏற்றுக் கொள்ள மறுப்பதால் கொள்கையைச் சிறிது விட்டுக் கொடுக்க லாகூரில் காங்கிரஸ் இசைந்தது. வரும் அரசியல் ஸ்தாபனத்தில் எந்த வகுப்பு சம்பந்தமான முடிவும் குறிப்பிட்ட வகுப்பினர்க்குத் திருப்தியளித்தாலன்றிக் காங்கிரசால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது” (சீதா/431-32) என காங்கிரசின் வரலாற்றை எழுதிய பட்டாபி சீதாராமையா கூறுகிறார்.

காரியக் கமிட்டி இசுலாமியர் தவிர்த்த சீக்கிய நலனையும் ஏற்றுக் கொண்டது. அதே வேளையில் ‘எந்த வகுப்பு சம்மந்தமான முடிவும் குறிப்பிட்ட வகுப்பினர்க்குத் திருப்தியளித் தாலன்றி காங்கிரஸ் ஏற்காது’ எனவும் கமிட்டி முடிவெடுத்திருக்கிறது. மேலெழுந்த வாரியாகவோ அல்லது ஆழமாகவோ இத்தீர்மானத்தை நோக்கும் போது முற்போக்கானதாகவே தெரியும். அது எதுவானதாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நாம் இத்தீர்மானத்தை ஒட்டி காந்தி வட்டமேஜை மாநாட்டில் நடந்து கொண்டாரா?

வட்டமேஜை மாநாட்டில் காந்தி 1931 செப் 15 அன்று முதன்முதலில் உரை நிகழ்த்தினார். இவ்வுரையில் தலித்துகளின் தனித்தொகுதி குறித்தான கருத்தை முன் வைக்கவில்லை. இரண்டு நாள் கழித்து சமஸ்டி கட்டமைப்பின் கூட்டத்தில் காந்தி பேசினார். “இங்கு நான் காங்கிரசின் சார்பாகப் பேசுகிறேன். இந்து -முஸ்லிம் -சீக்கியர் குழப்பத்தை சிறப்பான கவனத்திற் குரியதாகக் கருதுவதற்கு காங்கிர° தன்னைத்தானே சமரசம் செய்து கொண்டுள்ளது. அதற்கு வரலாற்று ரீதியான திடமான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் அந்த சித்தாந்தத்தை எந்த உருவத்திலும் அல்லது வடிவத்திலும் காங்கிரஸ் விஸ்தரிக்காது... ஆகவே ஒரு கூடுதல் சிறப்புப் பிரதிநிதித்துவத்தையும் நான் வன்மையாக எதிர்க்கிறேன்” (அ.நூ.16/92) என்ற பேச்சை காந்தி இக்கூட்டத்தில் வெளிப்படுத்தினார்.

நாம் முன்னர் கூறிய காரியக் கமிட்டியின் திட்டத்தில் இருந்து காந்தி இங்கு விலகிச் செல்வதை முதலில் குறிப்பிட வேண்டும். இரண்டாவதாக முஸ்லிம், சீக்கியர்களுக்கான தனித் தொகுதி முறைக்கு வரலற்றுரீதியிலான திடமான ஆதாரங்கள் உள்ளன என்கிறார் காந்தி. அது என்ன வரலாற்றுத் திடமான ஆதாரம்? என வினவும்போது அவர்கள் ஆண்ட பரம்பரையினர் என்ற பதில் கிடைக்கிறது. வரலாறு ‘தலித்துகளுக்கு அடிமை பரம்பரையை விதித்தது’. ‘நாடாண்டவன்’ தனிச்சிறப்பு பெறலாம். ‘அடிமை’அது குறித்து சிந்திக்கக்கூடாது என்பதுதான் காந்தியின் உள்ளக்கிடக்கையாக இருந்திருக்கிறது. இதனாலேயே தலித்துகளின் தனித்தொகுதி முறையை தடுப்பதற்காக செப்.17க்குப் பின்னர் காந்தி சூழ்ச்சி நாடகத்தில் இறங்க ஆரம்பித்துவிட்டார். இச்சூழ்ச்சியை சபை ஒத்திவைப்பின் மூலம் நிறைவேற்ற காந்தி துடித்துக் கொண்டி ருந்தார். 1931 செப்.28 அன்று நடந்த சிறுபான்மை கூட்டத்தை சர்.அலிஇமாம், ஆகாககான் மற்றும் மாளவியா போன்றோர் கூட்டத்தை ஒத்தி வைக்கக் கோரினர். இவ்ஒத்திவைப்பை அம்பேத்கர் நிபந்தனை யுடன் ஒத்துக் கொண்டார். இவ் ஒத்திவைப்பின் போது எத்தரப்பும் தீர்வை நோக்கி நகரவில்லை. மீண்டும் 1931 அக்டோபரில் சிறுபான்மை கமிட்டி கூடியது. இக்கமிட்டியின் கூட்டத்தை ஒருவாரத்திற்கு ஒத்திவைக்குமாறு திரு.காந்தி கூறினார். இரண்டு நாளில் நிறைவேற்ற முடியாத சூழ்ச்சியை ஒரு வாரத்தில் நிறைவேற்றி விடலாம் என காந்தி கனவு கொண்டிருந்தார். காந்தியின் இக்கோரிக்கை ஏற்கப்பட்டு தலைவர் சபையை ஒத்திவைத்தார். இப்போதும் அம்பேத்கர் நிபத்தனையுடன் இவ்ஒத்திவைப்பை ஏற்றுக் கொண்டார்.

இவ்வொரு வார காலத்தில் தலித்துகள் தவிர்த்த ஏனையோருடன் அதாவது இசுலாமிய, சீக்கியர்களிடம் மிகப் பரிவுடன் நடந்து கொண்டார். தலித்துகளை ஓரம் கட்டும் வித்தையின் வாயிலாக இக்கூட்டை அமைக்க முயன்றார். இசுலாமிய, சீக்கிய சச்சரவுகளில் இருந்து காந்தி தனது வேலைத்திட்டத்தை தொடங்கினார். “ஒரு நடுவரின் முடிவுக்குக் கட்டுப்படுவதற்காகத் (இரு) தரப்புகள் ஒப்புக் கொண்ட போது இப்பிரச்சனை தீர்வை நெருங்கி விட்டதாக ஒரு கட்டத்தில் தோன்றியது. இந்த நடுவர் யாராக இருப்பார் என்பது தங்களுக்குத் தெரியாதவரை இந்த விஷயத்தை மேலும் தொடர சீக்கியர்கள் மறுத்துவிட்டனர். நடுவரின் பெயரை வெளியிடுவதற்கு மு°லிம்கள் தயாராக இல்லாத கராணத்தினால் இந்த விஷயம் தோல்வியை அடைந்தது” (அ.நூ.16/103) என அம்பேத்கர் எழுதுகிறார்.

பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தபின் 1931 அக்டோபர் 8 அன்று காந்தி வட்டமேஜை மாநாட்டில் உரை நிகழ்த்தினார். வீழ்த்தப்பட்ட ஒரு ‘புனிதபுலி’ வீறு கொண்டு உரையாற்றுவதைப் போன்றும், குடிகாரனின் உளறலும், வெறி பிடித்தவனின் கூச்சலுமாகவும் அவ்வுரை இருந்தது. இங்கு வந்திருக்கும் அனைவரும் அரசாங்கத்தால் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்றும் அவர்கள் மக்களது பிரதிநிதிகள் இல்லை என்றும் உரையாற்றினார். தான் மட்டுமே ஏகபோக மக்கள் பிரதிநிதி என பறைசாற்றிக் கொண்டார்.

“அவர் தொடக்கத்திலேயே ஏனைய இந்தியப் பிரதிநிதிகள் ஒவ்வொருவரையும் சிறுமைப்படுத்தும் சிறுபிள்ளைத்தனமான போக்கில் இறங்கினார். அவர்களது நேர்மை குறித்தும் அவர்களது பிரதிநிதித்துவம் குறித்தும் ஐயம் தெரிவித்தார். மிதவாதிகளைச் சொகுசான அரசியல்வாதிகளென்றும், தொண்டர் படைகளற்ற தலைவர்களென்றும் சாடினார். முஸ்லிம் மக்களின் பிரதிநிதியாக, அங்கு வந்திருந்த முஸ்லிம் பிரதிநிதிகளைவிட தாமே தகுதி படைத்தவர் என்று கூறிக் கொண்டார். அவரது உரை ஒவ்வொன்றின் முடிவிலும் ஏனையோருக்கு குமட்டலூட்டும் வகையில் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டிருந்தார்” (அநூ.10/253)) என அம்பேத்கர் காந்தியின் உரையை மதிப்பிட்டு எழுதுகிறார்.

‘புனிதப் புலி’ ஏன் வீழ்த்தப்பட்டது? என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும் அம்பேத்கரைத் தனிமைப்படுத்துவதற்கு காந்தி ஓர் அணியை உருவாக்கினார் என்பதை முன்னர் கண்டோம். இவ்வணியில் இருந்த இசுலாமியர்களுக்கு காந்தி சலுகை காட்ட முன்வந்தார். இசுலாமியர்கள் பதினான்கு அம்ச கோரிக்கையை முன்வைத்தனர். (அ.நூ.15ன் பிற்சேர்க்கை, அ.நூ.16 பக்- 119,120, 121). காந்தி அதனை ஏற்றுக் கொண்டார். “இதற்குப் பதிலுதவியாக தனி ஒதுக்கீடு கோட்பாட்டின் பயன் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் ஆகிய மூன்று சமயத்தவருக்கும் தொடர்வதை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டுமென்று கேட்டார்” (அ.நூ.16/122). தலித் மக்களின் கோரிக்கை ஏனைய சிறுபான்மையினர் ஒத்துக் கொள்ளக் கூடாததுவே அவரது செயல்பாட்டின் உள்ளீடாக இருந்ததை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். காந்தியின் இத்திட்டம் இசுலாமியர் களோடு உடன்பாடு கொள்வதற்காக உருவாக்கப்படவில்லை. மாறாக தலித் மக்களின் கோரிக்கையை முறியடிப்பதற்காகவே உருவாக்கப் பட்டது. இவ்உடன்பாடு “தீண்டப்படாதவர்களுக்கு எதிரான சதியே. சதி என்று சொல்வதைக் காட்டிலும் தாழ்த்தப்பட்டவர்களின் முதுகிலே குத்துதல் என்பதே பொருத்தமாயிருக்கும்” (அ.நூ.10/304) என்பதாக அம்பேத்கர் மதிப்பிட்டார். இத்திட்டம் மு°லிம்களின் கண்ணியத்தால் முறியடிக்கப்பட்டது. இச்சூழ்ச்சியின் செயல்பாடுகள் தோல்வியைத் தழுவினாலும் காந்தி தளரவில்லை. 1931 நவம்பர் 12ம் தேதி “பிகாடியிலுள்ள ரிட்ஸ் ஓட்டலில் ரைட் ஆனரபில் எச்.எச் ஆகாகான் தங்கியிருந்த அறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த முஸ்லிம் பிரதிநிதிகளின் கூட்டத்திற்கு காந்தியார் கையில் திருக்குரானின் படியொன்றை எடுத்துக் கொண்டு சென்றிருந்தார். அங்குக் குழுமியிருந்த முஸ்லிம் பிரதிநிதிகளை நோக்கி, “தீண்டப் படாதவர்களின் தனிப் பிரதிநிதித்துவததை ஆதரிப்பதன் மூலம் நீங்கள் ஏன் இந்து சமுதாயத்தைப் பிளவுபடுத்த முனைகிறீர்கள்? இத்தகையச் செயலைத் திருக்குரான் அனுமதிக்கிறதா? எப்பகுதியில் அது அனுமதிக்கிறது என்று காட்ட முடியுமா? காட்ட முடியவில்லை என்றால் உங்கள் உடன்பிறப்புகளாம் இந்து சமூகத்திற்கெதிரான கொடுங்குற்றத்தை கைவிட்டு விடுவீர்களா?”என்று மன்றாடினார்”. (அ.நூ.10/306) காந்தியின் இச்செயல்பாட்டை நாகரீக மனிதன் எவனும் சகித்துக் கொள்ள மாட்டான். இச் செயல்பாடு காந்தியச் சதியின் உச்சபட்சம் .

காந்தி தலித் மக்களை இந்து மதத்தின் ஓர் அங்கம் என்றார். அம்பேத்கர் தலித் மக்கள் இந்து மதத்தின் ஓர் அங்கம் அல்ல,அவர்கள் கண்ணுக்குத் தெரியாத முள்வேலிகளால் பிரிக்கப் பட்டிருக்கின்றனர் என்றார். இருந்தும் காந்தி சற்றும் தனது வருண தர்மப் பாசத்தை கைவிடத் தயாரில்லை. இதற்கு சில காரணமும் இருந்தன. இரட்டை வாக்குரிமையை இன்றிருக்கின்ற பலரும் வெறும் அரசியல் கோரிக்கையாகவே பார்க்கின்றனர். ஆனால் காந்தி இப்பிரச்சனையை சரியாகவே கண்ணோக்கினார். பண்பாட்டின் வழிநின்று இப்பிரச்சனையை நோக்கினார். ஒருவேளை இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்குமானால் இந்து மதத்தில் இருந்து தலித்துகள் என்றோ பிரிந்திருப்பர். இரட்டை வாக்குரிமைக்குள் ஒழிந்திருக்கும் இச்செயல்பாட்டை காந்தி உணர்ந்து கொண்டார். இதனாலேயே மிகப்பெரும் சூழ்ச்சி வலையை பின்னினார். உதாரணத் திற்கு காந்தியின் சொல்லாடல் ஒன்றை இங்கு நாம் காண்போம். “ஒவ்வொரு சிற்றூரிலும் இருவேறு பிளவுபட்ட சமூகங்கள் இருப்பின் இந்து சமயத்தின் கதி என்னவாகும் என்று பொறுத்துக் கொள்ள இயலாது. தீண்டப்படாத மக்களின் அரசியல் உரிமைகளைப் பற்றிப் பேசுவோர் இந்தியாவைப் பற்றியும், இந்திய சமுதாய அமைப்பு இன்று எவ்வாறு நிலவுகிறது என்பதைப் பற்றியும் அறியாதவர்களாயிருக்க வேண்டும். எனவே தீண்டப்படாதோரின் அரசியல் உரிமைக் கோரிக்கையை எதிர்ப்பதில் நான் தன்னந்தனியாக நிற்க நேரினும், எனது உயிரையும் தந்து எதிர்க்கத் தயங்கமாட்டேன் என்பதை மிக மிக வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்” (அ.நூ.10/294-295) என சிறுபான்மையோர் குறித்த துணைக் குழுவில் பேசினார். (தலித்துகளுக்கு எதிரான இம் மாதிரியான காந்தியின் சொல்லாடலை விரிவாக காண அம்பேத்கர் தொகுதி 10,16) காந்தியின் இச்செயல்பாட்டை அம்பேத்கர் மிகச்சரியாகவே புரிந்து வைத்திருந்தார். அதனாலேயே காந்தியின் ஒவ்வொரு அசைவையும் தனது வாதத்திறமையால் சிதறடித்துக் கொண்டே இருந்தார்.

வட்டமேஜை மாநாட்டில் காந்தி என்ற ஒருவரால் சிறுபான்மை குழுவில் ஒற்றுமை இல்லாமல் போய்விட்டது. எனவே “வட்டமேஜை மாநாட்டின் இரண்டாவது கூட்டத் தொடர்கலைக்கப்பட்ட போது வகுப்பு பிரச்சனை சம்மந்தமாக மத்தியதம் செய்து, தமது தீர்ப்பை அளிப்பதற்கு தமக்கு அதிகாரம் தரும் கையெழுத்திட்ட ஓர் வேண்டுகோளைச் சமர்பிக்கும்படி பிரதமர் தெரிவித்த யோசனையை சிறுபான்மைக் குழுவின் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர். திரு.காந்தி உட்பட பல பிரதிநிதிகள் அவ்வாறே செய்தனர்” (அ.நூ. 16/123). ஆனால் அம்பேத்கர் அப்படி ஒரு செயல்பாட்டில் கையெழுத்திடவில்லை.

3

வட்டமேஜை மாநாட்டின் தோல்வியோடு முதலில் இந்தியாவிற்கு புறப்பட்டவர் காந்திதான். காங்கிரஸ் கூறிய பூரண சுயராஜ்யம் என்ற கோரிக்கையையோ, தீர்க்க முடியாமல் இருந்த சிறுபான்மைப் பிரச்சனையையோ காந்தியால் தீர்த்துவைக்கப் படவில்லை. தோல்வியை சுமந்து கொண்டு வந்த காந்தியை அம்பேத்கர் மிக நுணுக்கமாக மதிப்பிடுவார். “துரதிஷ்டவசமாகக் காங்கிரஸ் தனது பிரதிநிதியாகத் திரு.காந்தியைத் தேர்வு செய்தது. இந்தியாவின் வருங் காலத்தை வழி நடத்திச் செல்வதற்கு இவரை விட மோசமான ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருக்க முடியாது. அனைவரையும் ஒன்றுபடுத்தும் சக்தி என்ற முறையில் அவர் ஒரு தோல்வியேயாவார்... இந்தியப் பிரதிநிதிக் குழுவை ஒன்று படுத்துவதற்குப் பதிலாக திரு.காந்தி பிளவை அதிகப்படுத்தினார். அறிவாற்றல் என்ற கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும்போது திரு. காந்தி தம்மை அதிக விபரமற்றவராக நிரூபித்துக் கொண்டார்” (அ.நூ. 16/89-90) என அம்பேத்கர் மதிப்பிடுகிறார். அன்றைய வைராயாய் இருந்த இர்வீனின் மதிப்பீடு வேறுவகையாக இருக்கிறது. 1931 மே மாதம் 5ம் தேதி லண்டன் ஹைட்பர்க் ஹோட்டலில் இர்வின் பிரபுவிற்கு அளிக்கப்பட்ட விருந்தொன்றில் இர்வின் பின்வருமாறு காந்தியை மதிப்பிடுகிறார். “இந்தியாவைப் பற்றி நான் அறிந்த வரையில், காந்திஜி இலண்டனுக்கு வரின் இப்பாதுகாப்புகள் சம்பந்தமாகவும் விவாதத்திற்கு வரும் இதர விஷயங்கள் சம்மந்தமாகவும் ஓர் ஒப்பந்தத்திற்கு வர தம்மாலான முயற்சி செய்வாரென நான் நம்புகிறேன்” (சீதா/408) என இர்வின் காந்தி குறித்த தனது மதிப்பீட்டை முன்வைக்கிறார். அம்பேத்கர்-இர்வின் ஆகியோரது மதிப்பீட்டில் பாரதூரமான வேறுபாடு இருப்பதை நாம் இங்கு அவதானிக்கலாம். இர்வின் அப்போதுதான் காந்தியுடன் ஓர் உடன் பாட்டிற்கு வந்திருந்தார் என்பதையும் இங்கு நாம் மனதில் நிறுத்த வேண்டும். இதனாலேயே இர்வின் ‘நகைப்புதரும் மதிப்பீட்டை’ வழங்கியிருக்கிறார். இர்வினின் மதிப்பீடு நகைப்புச் செயல்தான் என்பதை வட்டமேஜை மாநாட்டில் காந்தியின் செயல்பாட்டை அறிந்தவர் யாரும் கூறுவர். எனவே நாம் இத்துடன் இதனை நிறுத்தி விட்டு கட்டுரையின் பொருளுக்கு வருவோம். எந்தச் சட்ட நுணுக்கமும் தெரியாத காந்தியின் புனிதத் தோல் உரியப்பட்டதுதான் மிச்சமாக இருந்தது. புனிதத் தோல் உரித்த நிலையில் காந்திக்கு பம்பாயில் படோடபமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ( பட்டாபி சீதாராமய்யாவின் காங்கிரஸ் மகாசபை சரித்திரம் எனும் நூலிலும் அம்பேத்கர் தொகுதி-10லும் காண்க) அதே வேளையில் முதன்முதலாக தலித் மக்கள் காந்திக்கு கறுப்புக் கொடி காட்டினார். இக்கருப்புக் கொடி காட்டுதலில் ஏற்பட்ட கைகலப்பில் இருபக்கமும் 40 பேர் இறந்ததாக அம்பேத்கர் குறிப்பிடுகிறார். காந்திக்கு எதிராக ஒரு பெரும் மக்கள் திரள் போராட்டம் செய்ததும் இப்போதுதான் என அம்பேத்கர் குறிப்பிடுவார்.

வாணவேடிக்கை, மலர்தூவல், மோதலுக்கு நடுவே வரவேற்கப்பட்ட காந்தி ஜனவரி 4ம் தேதி கைது செய்யப்பட்டு எரவாடா சிறைக்கு அனுப்பப்பட்டார். நாட்டில் கைதுகளும், தடியடிகளும் எங்கும் நடைபெற்று வந்தன. இந்து முஸ்லிம் கலவரமும் தீவிரமாக நடந்தது. அம்பேத்கர் ‘பாகிஸ்தான் அல்லது இந்தியப்பிரிவினை’ எனும் நூலில் 236ம் பக்கத்தில் இருந்து 264ம் பக்கம் வரை 1920-ல் இருந்து 1940 வரை நடந்த கலவரங்களை படம்பிடித்துக் காட்டியுள்ளார். 1929ல் இருந்து 1940 வரையிலான 9 ஆண்டுகளில் 210 நாட்கள் இந்து-முஸ்லிம் கலவரம் நடைபெற்றது. (பம்பாயில் மட்டும்) இக்கலவரத்தில் 550 பேர் கொல்லப்பட்டதாக அம்பேத்கர் கூறுகிறார். இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் 1932ல் பம்பாயில் நடந்த இரண்டு கலவரமாகும்.

“1932ல் மீண்டும் இரு கலவரங்கள் நிகழ்ந்தன. முதலாவது கலவரம் சிறிய அளவில் நடைபெற்றது. இரண்டாவது கலவரத்தில் 217பேர் கொல்லப் பட்டனர். 2713 பேர் காயமடைந்தனர். இது 49 நாட்கள் நீடித்தது” (அ.நூ..15/267) என அம்பேத்கர் குறிப்பிடுகிறார். 9 ஆண்டுகளில் இறந்த 550 பேரில் 217 பேர் 1932ல் இறந்திருக் கின்றனர். இறப்பே இவ்வாறு இருக்கும் போது பொருள் சேதம் எவ்வளவு ஏற்பட்டிருக்கம் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.

“தேசத்தந்தையும்”; “இசுலாமியப் பாதுகாவலனும்”; இன்றைய இந்துத்துவச் சிந்தனைக்கு எதிராக காட்டப்படுபவருமான காந்திக்கு இச்செயல்பாடுகள் தெரியாமல் போய்விட்டன. அல்லது அவரது அர்த்தராத்மாவோ உணராமல் போய்விட்டது. அவரது அர்த்தராத்மா இந்துமதம் பிளவுபடாமல் இருக்க வேண்டும் என்பதையே உணர்ந்து கொண்டிருந்தது. இதனைப் பட்டாபி சீதாராமய்யா பின்வருமாறு விவரிக்கிறார். “மகாத்மாவுக்கு பளிச்சென்று ஒரு வெளிச்சம் தோன்றியது. ஒரு யோசனையும் பிறந்தது. ஒரு உறுதியும் வளர்ந்தது. ஒரு பிரதிக்சையும் எழுந்தது. அவரது ஆத்மாவும் ஒரு ஆக்ஞை இட்டது. ஆண்டவன் கட்டளை அவரது செவிகளில் விழுந்தது. உடனே அவர் மார்ச் மாதம் 11ம் தேதியன்று தமது பிரார்த்தனையை முடித்துவிட்டு இந்திய மந்திரியான சர். ஷாம்பூல் ஹோருக்கு ஒரு கடிதம் எழுதினார்” (சீதா/472) என்பதாக காந்தி கடிதம் எழுதிய நிகழ்ச்சியை சீதாராமையா விவரிக்கிறார். காந்தியின் ஆத்மா மதக்கலவரத்தில் இரத்தம் சிந்திக் கொண்டிருந்த மக்களை காப்பாற்ற வேண்டும் என ஆக்ஞையிடவில்லை. மாறாக ‘இந்து மதம் பிளவுபட்டுவிடும் அதை உடனே தடு மானிடா’ என கட்டளையிட்டிருக்கிறது. இவரைத் தான் இன்றைய ‘முற்போக்காளர்கள்’ மதச்சார்பின்மையின் குறியீடாக கட்டமைக்கின்றனர்.

நிற்க. இந்திய மந்திரியாக இருந்த சாமுவேல் ஹொருக்கு காந்தி எழுதிய கடிதத்தை ‘சரித்திரப் புகழ்பெற்ற கடிதம்’ என காந்தியவாதிகள் தலைப்பிடுகின்றனர். “வட்டமேஜை மாநாட்டில் சிறுபான்மையினரின் கோரிக்கை சமர்பிக்கப்பட்ட போது, நான் பேசியது உங்களுக்கு ஒரு வேளை ஞாபகமிருக்கலாம். தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித் தேர்தல் தொகுதி அளிப்பதை என் உயிரைக் கொடுத்தாவது நான் எதிர்ப்பேன் என்று என் பிரசங்கத்தின் இறுதியில் குறிப்பிட்டேன். . . தனித் தொகுதி ராஜியரீதியாக எப்படியாயினும், அது தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் ஹிந்து மதத்திற்கும் அபாயகரமானது என்பதே எனது உறுதியாகும்.

... அவர்கள் சாதி ஹிந்துக்களிடையே எவ்விதம் பரவி யிருக்கிறார்கள் என்பதையும், சாதி ஹிந்துக்களை அவர்கள்எப்படி அண்டி சீவனம் செய்து வருகிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஹிந்து மதம் சம்மந்தப்பட்ட வரையில், தனித்தொகுதி அதைத் துண்டு துண்டாகப் பிளந்து சின்னா பின்னமாக்கிவிடும்” (காந்தி தொகுதி 7/759 அழுத்தம் என்னுடையது) என காந்தி அவரது கடிதத்தில் கூறியுள்ளார்.

காந்தியின் சதித்திட்டத்தை முன்னர் பார்த்தோம். இச்செயல்பாடு காந்தியின் நேர்மையின்மையை காட்டுகிறது. ‘மத்தியஸ்தம் செய்து ஒரு தீர்ப்பைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளும் வேண்டுகோளில் தாமும் கையெழுத்திட்டிருப்பதை பற்றி திரு.காந்தி கவலைப்படவில்லை” (அ.நூ.16/136). எனவே பிரிட்டிஷ் அரசும் காந்தியின் கடிதம் குறித்து கவலைப்படவில்லை. ஆகஸ்ட் 17ம் தேதி பிரிட்டிஷ் அரசு வகுப்புத் தீர்ப்பை வெளியிட்டது. காந்தியின் கடிதம் புறக்கணிக்கப் பட்டதால் மீண்டும் காந்தி ஆகஸ்ட் 18ம் தேதி அன்று பிரிட்டிஷ் பிரதமர் ராம்ஷே மெக்னால்டுக்கு கடிதம் எழுதினார். செப்டம்பர் 8ம் தேதி காந்தியின் கடிதத்தை நிராகரித்து பிரதமர் ஒரு கடிதம் எழுதினார். இதனால் செப்.4ம்தேதி தனது உண்ணாவிரதத்தை உறுதிபடுத்தி செப்.20ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அக்கடிதத்தில் அறிவித்திருந்தார்.

திட்டமிட்டபடி காந்தி செப்.20ம் தேதி பகல் 12 மணிக்கு உண்ணாவிரதத்தை துவங்கினார். இவ் உண்ணாவிரதம் தலித் மக்களின் தனித்தொகுதி முறையை மட்டும் எதிர்த்தல்ல. தலித் மக்களுக்கு எந்த ஒரு இடஒதுக்கிட்டுத் தொகுதியையும் (கூட்டுவாக்களார்)அளிக்கக்கூடாது. அவர்கள் பொதுத்தொகுதியில் இருந்துதான் போட்டியிட வேண்டும் என்பது தான் காந்தியின் நிலைப்பாடு. எனவே இதனை இங்கு மனதில் நிறுத்தி காந்தியின் காவியம் புகழ்பெற்ற உண்ணாவிரதத்தில் நடந்த கூத்துக்களை தொடர்ந்து காணலாம்.

காந்தியின் உண்ணாவிரதத்தை அறிந்ததும் மதன்மோகன் மாளவியா செப்.19ம் தேதி பம்பாயில் இந்துத் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டினார். இச்சமயத்தில் ராஜகோபாலச்சாரி ஒரு அறிக்கை வெளியிட்டார். “மகாத்மாஜி உபவாசத்தைத் தொடங்கும் தினமாகிய செப்.20ம் தேதியன்று இந்தியாவிலுள்ள முப்பத்தைந்து கோடி மக்களும் உபவாசமிருந்து ஆண்டவனைக் குறித்து பிரார்த்தனை செய்ய வேண்டும். அதற்கு முதல் நாள் அன்று மாலையில் கிராமங்கள் உள்பட எல்லா இடங்களிலும் பொதுக் கூட்டங்கள் கூட்டப்பட்டு, தனித்தொகுதி சம்பந்தமான தமது தீர்ப்பை பிரதமர் மந்திரி வாபீஸ் வாங்கிக் கொள்ள வேண்டுமென்றும் காந்திஜியின் உயிரைக் காப்பாற்றித் தரவேண்டும் என்றும் கடவுளைத் தியானிக்க வேண்டும் என்றும்” (சீதா /485) அந்த அறிக்கை கூறியது.

அம்பேத்கர் அன்று ஒரு அறிக்கை வெளியிட்டார். “என்னைப் பொருத்தவரை நான் எந்த யோசனையையும் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறேன். ஆயினும் தீண்டப்படாத மக்களின் உரிமைகள் எந்த வகையிலும் குறைக்கப்படுவதை நான் அனுமதிக்கமாட்டேன். தெளிவானதொரு திட்டமின்றி வெறுமனே கூடி மாநாடு நடத்துவதாலோ, விவாதிப்பதாலோ எத்தகைய பயனும் விளையாது... மகாத்மா அழிவே இல்லாத மனிதர் அல்லர். காங்கிரசும் அப்படித்தான். இந்தியாவில் பல மகாத்மாக்கள் இருக்கிறார்கள்... மகாத்மாக்கள் வந்தார்கள். மகாத்மாக்கள் மறைந்தார்கள். ஆனால் தீண்டப்படாதவர்கள் மட்டும் தீண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்” (த.கீ./298) என அவ்வறிக்கை கூறியது.

ஒட்டுமொத்த இந்தியாவும் தேச நலன் / காந்தி நலனுக்கு எதிராக அம்பேத்கரை முன்னிறுத்தியது. அம்பேத்கரால் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. (அன்றைய இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் சுயமரியாதை இயக்கம் அம்பேத்கரை ஆதரித்தது. ஆனால் அவ்வியக்கம் காந்திக்கு எதிராக, இரட்டை வாக்குரிமைக்கு ஆதரவாக எவ்வித போராட்டத்தையோ அல்லது கூட்டங்களையோ கூட்டவில்லை. சுயமரியாதை இயக்கம் தவிர்த்த ஏனையோர் அனைவரும்- இடதுசாரிகள் உட்பட- அம்பேத்கரை எதிர்மறையாகவே பார்த்தனர். அந்தவிதத்தில் சுயமரியாதை இயக்கத்தை இங்கு நாம் பாராட்டலாம்)அதேவேளையில் “காந்தி, உண்ணாவிரம் மேற்கொண்டது இந்து சமூகம் உடைந்து போவதிலிருந்தும், பிளவுபடுவதிலிருந்தும் அதனை காப்பாற்று வதற்காகவே அன்றி,தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடுதலையை தேடித் தருவதற்காக அல்ல என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது” (அ.நூ10/361) என்ற மதிப்பீட்டின் வழியே அம்பேத்கர் புனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். இவ்ஒப்பந்தம் 24ம் தேதி கையெழுத்தானது. ஆனால் காந்தி உண்ணா விரதத்தை முடிக்கவில்லை. “...கவர்மெண்ட் அறிக்கை பூராவையும் தாம் படித்து பார்த்து பின்னர்தான் உபவாசத்தை நிறுத்த முடியுமென அவர் தெளிவாகக் கூறிவிட்டார்” (சீதா/49). அவ்வாறு படித்துப் பார்த்த பின்னர் உண்ணாவிரதம் 26ம் தேதி மாலை 5.30 மணியளவில் விலக்கிக் கொள்ளப்பட்டது. உண்ணாவிரதம் முடிவுற்ற பின்னிரண்டு நாட்களில் அதாவது “27, 28ம் தேதிகளில் தமக்கு வெகு பிரியமான பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்டு (ரவீந்திரநாத் தாகூரிடம்) மகாத்மா மன மகிழ்ந்தார்”. (சீதா/49) இதுதான் காந்தி. எவை எப்படியோ காந்தி நகைச்சுவை மிகுந்த நாடகத்தை நடத்தி (இந்நகைச்சவை நாடகத்தை முழுவதுமாக படிக்க விரும்புவோர், பட்டாபி சீதாராமையா நூலையும், அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, அம்பேத்கர் நூல் தொகுதி 15,16ரைப் பார்க்கலாம்) தலித் மக்களின் வாழ்வுரிமையை பறித்துக் கொண்டார்.

காந்தியின் இத்தலித் படுகொலை புனா ஒப்பந்தம் எனும் பெயரில் இன்றும் வரலாற்றில் இரத்த வாடையோடு ஒட்டி இருக்கிறது. இவ்ஒப்பந்தத்தில் மொத்தம் 9சரத்துகள் உள்ளன. இவ்ஒப்பந்தம் பூர்வாங்க தேர்தல், பொதுத்தேர்தல் என்ற இரண்டு தேர்தல் கொள்கையை வெளிப்படுத்துகிறது .

4

ஒரு வெற்றியின் கதை காந்தி செய்த படுகொலையால் தோல்வியைத் தழுவியது. இக்கதை இத்தோடு முடிவுற்றதா? இக்கோரிக்கையை அம்பேத்கர் பின்னர் எழுப்பவில்லையா? என இங்கு வினவத்தோன்றும். எனவே அதனை தொடர்ந்து நாம் காணலாம். அம்பேத்கர் புனா ஒப்பந்தத்தை 1935ல் நிராகரித்தார். புனா ஒப்பந்தத்தின் போது காந்தியப் பாசத்தில் திளைத்த எம்.சி.ராஜா 1938ல் புனா ஒப்பந்தத்தை நிராகரித்தார். பின்னர் அம்பேத்கரும் எம்.சி.ராஜாவும் இணைந்து இக்கோரிக்கைக்கு உயிரூட்டினர். எம்.சி.ராஜா இறந்த பின்னர் அம்பேத்கர் என்.சிவராசுடன் இணைந்து 1955 வரை இக்கோரிக்கையை தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருந்தார். இதன் வரலாற்றை இங்கு சுருக்கமாகக் காணலாம்.

Meeting
1935ம் ஆண்டு இந்திய வரலாற்றின் மிக முக்கிய ஆண்டாக இருந்திருக்கிறது. அம்பேத்கர் ‘சரித்திரப் புகழ் பெற்ற’ புனா ஒப்பந்தத்தை நிராகரித்தார். ‘இந்துவாகப் பிறந்து விட்டேன். இந்துவாகச் சாகமாட்டேன்’ என்ற கொள்கை முழக்கத்தையும் இந்த ஆண்டில்தான் அறிவித்தார். இதற்கடுத்த ஆண்டில் சுதந்திரத் தொழிலாளர் கட்சியை துவங்கினார். துரதிஷ்டவசமாக இக்கட்சியை அம்பேத்கர் கலைத்தார். 1940ல் அட்டவணைச் சாதியினர் கூட்டமைப்பை நிறுவினார். இதற்குப் பின்னர்தான் இக்கோரிக்கை மீண்டும் உத்வேகம் எடுத்தது.

இக்கோரிக்கை இந்திய அரசியல் வானில் ஏன் மீண்டும் உதிக்க வேண்டும்? அதற்கான காரணம் என்ன? 1. காங்கிரஸ் தலித்துகளின் ரட்சகராக மீண்டும் மீண்டும் தன்னை அறிவித்துக் கொண்டது. இதற்கு 1937ல் நடந்த தேர்தல்கள் துணைபோயின. 2.காங்கிரஸ் வேட்பாளர்கள் அடிமையாக சட்டமன்றத்தில் வீற்றிருந்தனர். 3.எம்.சி.ராஜா காங்கிர° பாசத்தை துறந்து அம்பேத்கருடன் மீண்டும் இணைந்தார்.

1937ம் வருடம் நடந்த தேர்தல் புனா ஒப்பந்தத்தின்படி நடைபெற்றத் தேர்தலாகும். இத்தேர்தலில் காங்கிரஸ் 151 இடங்களில் மொத்தம் 78 இடங்களைக் கைப்பற்றியது. காந்திதான் ரட்சகர் என்ற பொய் பிரச்சாரத்திற்கு இத்தேர்தல் முடிவுகள் காரணமாக இருந்தன. இத்தேர்தல் முடிவுகளை காணும் ஒருவர் காங்கிரசின் பிரச்சாரத்தில் உண்மை உண்டுதானே என்ற கூட எண்ணுவர். ஒரு மனிதனை மயக்கமுறும் நிலைக்கு இத்தேர்தல் முடிவுகள் இழுத்துச் சென்றாலேயே ஒருவன் இதனை உண்மை என நம்புகிறான்.

முதலில் அன்றைய இந்தியாவில் தேர்தல் முறைகள் எவ்வாறு பகுக்கப்பட்டிருந்தன என முதலில் காணலாம். 1935ம் வருட இந்திய அரசாங்கச் சட்டத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட இரண்டு விதமான வாக்காளர் தொகுதிகள் உள்ளன. 1. பிரதேச ரீதியில்லாதவை 2. பிரதேசரீதியானவை. பிரதேசரீதியான வாக்காளர் தொகுதிகள் மூன்று வகைப்படும். 1. தனியான பிரதேச ரீதியான வாக்காளர் தொகுதிகள். இவை தனிவாக்காளர் தொகுதிகள் என சுருக்கமாக அழைக்கப்படும். 2. பொது பிரதேச ரீதியான வாக்காளர் தொகுதிகள். 3. தனி இடங்கள் ஒதுக்கப் பட்ட கூட்டு பிரதேசரீதியான வாக்காளர் தொகுதிகள். இவை பொதுவாக கூட்டுத் தொகுதிகள் என அழைக்கப்படுகின்றன” (அ.நூ.16/248)

இங்கு கூட்டுத்தொகுதி முறை குறித்து மட்டும் காண்போம். ஒரு கூட்டுத் தொகுதி அவற்றுள் தனித் தொகுதியை ஒத்திருந்தாலும் வாக்களிக்கும் உரிமை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தப்படவில்லை. “ஒதுக்கப்பட்ட இடத்திற்கான தேர்தல் முடிவை அறிவிப்பதில் வெற்றி பெறும் வேட்பாளர் அந்தச் சமூகத்தின் வாக்களார்களில் குறிப்பிட்ட அளவு வாக்குகளைப் பெற்றாக வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை.” (மேலது/251). தனித்தொகுதி முறையில் அந்த சமூக வேட்பாளரை அதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்கள் யாவரும் இக்கூட்டுத்தொகுதியில் வாக்களிக்க முடியாது. எனவே கூட்டுத்தொகுதி ஒருவிதத்தில் பொதுத் தொகுதி யேயாகும். ஏனெனில் இப்பொதுத் தொகுதியிலும் தனித்தொகுதி வகுப்பினர்கள் ஓட்டளிக்கவோ தேர்தலில் நிற்கவோ முடியாது. ஒருவிதத்தில் இக்கூட்டுத்தொகுதி முறை இந்துக்களையும், தலித்களையும் கூட்டாகக் கொண்ட தொகுதி முறையாகும். இம்முறையில் அமைந்த கூட்டுத்தொகுதி முறையில் எந்த வேட்பாளரை சாதி இந்துக்கள் தேர்ந்தெடுப்பர் என்பதில் மண்டை குழப்பும் ஆய்வு இங்குத் தேவையில்லை. சாதி இந்துக்கள் தங்களுக்கு விசுவாசமாக இருக்கும் அடிமைகளை மட்டுமே தேர்ந்தெடுப்பர் என்பதை ஒற்றை வரியில் இங்கு சொல்லி விடலாம்.

இத்தகைய ‘நன்மை பயக்கும்’ கூட்டுத்தொகுதியில் காங்கிரஸ் 151 இடங்களில் 78 தொகுதியைத்தான் கைப்பற்றியது. ஏனையத் தீண்டப்படாதோர் அமைப்புகள் 73 தொகுதிகளைக் கைப்பற்றின. “மொத்த வாக்குகள் அதாவது பதினெட்டு சதவீத வாக்குகள் மட்டுமே காங்கிரசுக்குக் கிடைத்தன. அதேசமயம் 82 சதவீத வாக்குகள் காங்கிரசுக்கு எதிராக போடப்பட்டுள்ளன எனத் தெரியவரும்”(மேலது/257). இது ஒரு நுணுக்கமான ஆய்வு முறையாகும். இதனை எந்த அரசியல் நோக்கரும் காணாமல் காங்கிரஸ் தான் தலித் மக்களை பிரதிநிதித் துவப்படுத்துகிறது என்ற வாதத்தை மேலும் மேலும் உக்கிரப்படுத்தினர். (1946-ம் ஆண்டுத் தேர்தலிலும் காங்கிர° அறுதிப் பெரும் பான்மை பெற்றது. இதனால் ‘தலித்துகளை பிரதிநிதித்து வப்படுத்தும் ஒரே கட்சி காங்கிரஸ்’ என காங்கிரசும் ஆங்கிலேயே அரசும் பிரச்சாரத்தை மேற்கொண்டன. இதுவும் மேலோட்டமான அரசியல் முடிவாக இருந்தது. 1946-ம் தேர்தலுக்கான பூர்வாங்கத் தேர்தல் 1945-பிப்ரவரியில் நடைபெற்றது. பூர்வாங்கத் தேர்தலில் தலித்துகள் மட்டுமே ஓட்டளித்து அதிகபட்சமாக 4 தலித் பேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். பூர்வாங்க தேர்தல் நடந்த 43 தொகுதிகளில் காங்கிரசைக் காட்டிலும் அட்டவணைச் சாதியினர் கூட்டமைப்பு அதிகப்படியான இடங்களையும் அதிகப்படியான பிரதிநிதிகளையும் பெற்றது. இச்செயல்பாட்டை எந்த அரசியல் நோக்கரும் காணாமல் சென்றது விந்தைதான். இது குறித்தான முழு ஆய்வை அம்பேத்கர் மேற்கொண்டிருக்கிறார். விரும்புபவர்கள் தொகுதி.19ஐ படித்துக் கொள்ளவும்)

நிற்க. இக்கூட்டுத் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வாய்மூடி மௌனியாக, ஆண்டைக்கு (காந்தியார்) ஏற்ற அடிமைகளாக வீற்றிருந்தனர். “காங்கிரஸ் வேட்பாளர்களாகத் தேர்தல்களில் போட்டியிட்ட தாழ்த்தப் பட்டோரில் சிலர் சுத்த சுயம்பிரகாச சுயநலவாதிகள். தங்கள் முன்னேற்றம் ஒன்றையே வாழ்க்கையில் ஒரே குறிக்கோளாகக் கொண்டவர்கள்; சட்டமன்றத்தின் மூலம் ஏதேனும் பதவி கிடைக்காதா, ஆதாயம் கிட்டாதா என்று எப்போதும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டி ருப்பவர்கள். அதையே குறியாகக் கொண்டவர்கள். எந்த ஏணியின் மூலம் ஏறிச் செல்லுகிறோம் என்பதைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை” (அ.நூ.10/344-345 அழுத்தம் என்னுடையது) என அம்பேத்கர் காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர்களை மதிப்பிடுகிறார். இந்த அடிமைகளில் ஒருவராக இருக்க எம்.சி. ராஜாவால் முடியவில்லை. காங்கிரசின் அடிமைத் தனத்திற்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார். இதனால் “தாம் புனா ஒப்பந்தத்திற்கு பரமவைரி என்பதைப் பகிரங்கமாகவே அவர் பிரகடனம் செய்தார்”(அ.நூ.10/365). சட்டமன்றத்தில் தலித் வேட்பாளர்களை குருட்டுத்தனமாக வாக்களிக்க வைத்தல்; தலித் சமூகத்தைப் பாதிக்கும் விஷயத்தில் தலித் வேட்பாளர்களை சுதந்திரமாக வாக்களிக்க அனுமதி மறுத்தல்; எம்.சி.ராஜா கொணர்ந்த ஆலயப்பிரவேச மசோதாவை ராஜகோபாலச்சாரியார் தலித் வேட்பாளர்களைக் கொண்டே தோற்கடிக்க வைத்தது முதலான நிகழ்வுகள் எம்.சி.ராஜாவை திடுக்கிட வைத்தன. இதனால் காந்திக்கு 1938ல் ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் “சமூக, மதச்சுதந்திரம் பெறும் எங்கள் முயற்சிக்கு காங்கிர°ஸ் உண்மையில் துணைபுரியும் என்ற முழு நம்பிக்கையில் நாங்கள் புனா ஒப்பந்தத்திற்கு உடந்தையாக இருந்தது விவேகமானதுதானா என்று இவையாவும் என்னை மன உளைச்சல் கொள்ளச் செய்கின்றன” (மேலது/367 அழுத்தம் என்னுடையது) என ராஜா குறிப்பிட்டிருந்தார். காந்தி இவரின் கடிதத்தை அலட்சியப் படுத் தினார்.ராஜா தொடர்ச்சியாக காந்திக்கு கடிதம் எழுத ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் காந்தி ராஜகோபாலச்சாரியின் முடிவை ஏற்கச் சொல்லி ராஜாவிற்கு அறிவுறுத்தினார். இதனால் விரக்தியுற்ற எம்.சி.ராஜா காங்கிரஸ் சார்பை துறந்து அம்பேத்கருடன் சென்றார். ஆக, காங்கிரசின் பொய்யான பிரச்சாரம், காங்கிர°ஸ் வேட்பாளர்களின் அடிமைத்தனம் ஆகிய காரணமும் எம்.சி.ராஜாவின் கூட்டிணைவும் அம்பேத்கரை மீண்டும் இரட்டை வாக்குரிமை கோரிக்கையை எழுப்பவைத்தன.

நாகபுரியில் 1942 ஜுலை 18,19 தேதிகளில் நடைபெற்ற அகில இந்திய அட்டவணைச் சாதியினர் மாநாட்டில் பின் கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “தீர்மானம் 3. புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற வேண்டிய அத்தியாவசியமான வழி வகை ஏற்பாடுகள்: 5. எல்லா சட்டமன்றங்களுக்கும், ஸ்தல ஸ்தாபன அமைப்புகளுக்கும் ஷெட்டியூல்டு வகுப்பினரின் பிரதிநிதிகள் தனி வாக்காளர் தொகுதிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சட்டரீதியாக வழிவகை செய்யப்பட வேண்டும்” (அ.நூ.17/14,15) என்ற தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

1944ம் ஆண்டு செப் 23 அன்று என். சிவராஜ் தலைமையில் சென்னையில் கூடிய அகில இந்திய அட்டவணைச் சாதிகளின் காரியக் கமிட்டி கூட்டத்தின் தீர்மானம் 7 பின்வருமாறு கூறுகிறது. “கூட்டு வாக்காளர் தொகுதிகள் முறை, ஷெட்டியூல்டு வகுப்பினர்கள் தங்களுடைய உண்மையான திறமையான பிரதிநிதிகளை சட்ட மன்றங்களுக்கு அனுப்புவதற்கு அவர்களுக்குள்ள உரிமையைப் பறித்து விடுகிறது. அதேசமயம் இந்து பெரும்பான்மையினரின் எடுப்பார் கைப்பிளையாக கைக்கூலிகளாக இருப்பதற்குத் தயாராக இருக்கும் ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர்களை வேட்பாளர்களாக நியமிப்பதற்கு நடைமுறையில் உரிமை பெற்றுள்ளனர் என்பதை கடந்த தேர்தல் அனுபவம் மெய்ப்பித்திருக்கிறது. . . . எனவே, கூட்டு வாக்காளர் தொகுதிகள் மற்றும் இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக தனி வாக்காளர் தொகுதி முறையைக் கொண்டு வரவேண்டும்...” (அ.நூ.16/573 அழுத்தம் என்னுடையது)

இக்கோரிக்கைகளை 1946ம் ஆண்டில் பம்பாயில் என்.சிவராஜ் தலைமையில் நடந்த நிர்வாகக்குழு கூட்டத்தின் 6வது பகுதியில் இக்கோரிக்கை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. “சட்டப் பேரவைகளில் தனித்தொகுதிகள் வாயிலாக பிரதிநிதித்துவம் பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உரிமை இருக்க வேண்டும்” (அ.நூ.19/137) என அந்நிர்வாகக் குழு கேட்டுக் கொண்டிருக்கிறது. வெறும் மாநாட்டுத் தீர்மானம் மட்டும் போதுமா என கேள்வி எழுப்பும் முற்போக்காளர்கள் அம்பேத்கர் நூல் தொகுதி 19ஐ புரட்டலாம். அதிகாரப் பேரத்திற்கான வாதப் பிரதிவாதங்கள், கடிதங்கள் அடங்கிய இத்தொகுப்பில் தனித்தொகுதிமுறை தேவைக்கான அம்பேத்கர், எம்.சி.ராஜா, என். சிவராஜ் ஆகியோரின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளலாம்.

1946ல் இக்கோரிக்கையை வலியுறுத்துவதற்காக அம்பேத்கர் லண்டன் சென்றார். அங்கு “...ஓர் அறிக்கை தயாரித்து அதை இங்கிலாந்தின் எல்லாக் கட்சிகளின் முக்கியத் தலைவர்களுக்கும் அனுப்பினார்” (த.கீ./567). அத்தோடில்லாமல் “1946 நவம்பர் 5ஆம் தேதி லண்டனில் உள்ள ‘ஹவுஸ் ஆஃப் காமன்ஷில்’ ஒரு மணிநேரம்” (ரவிக்குமார் 2004 / 56) உரையாற்றவும் செய்திருக்கிறார். இப்பயணத்தால் அம்பேத்கருக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லை. இந்நேரத்தில் அம்பேத்கர் தலையில் அரசியலமைப்பு என்ற சுமை ஏற்றப்பட்டது.

இச்சூழலில் அகில இந்திய அட்டவணைச்சாதியினர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த என்.சிவராஜ் ஓர் அறிக்கையை வெளியிட்டார். “தாழ்த்தப்பட்டோரின் துன்ப நாள் ஆகஸ்ட் 15” என்ற தலைப்பில் அவ்வறிக்கை வெளியானது. அவ்வறிக்கையில் “இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் வேண்டுமானால் ஆகஸ்ட் 15 சுதந்திர நாளாக இருக்கலாம். அரசியலில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் சுதந்திரம், இந்திய அரசியலமைப்பு சபையின் மைனாரிட்டி சப் கமிட்டியும், ஆய்வு சார் கமிட்டியும் நிறைவேற்றி இருக்கும் தீர்மானங்களை அனுசரித்து, தாழ்த்தப்பட்டோர் மேற்படி கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளுதல் எங்ஙனம்?... அம்பேத்கர் அரசியல் அமைப்பு சபையில் கலந்து கொண்டார்... தனித்தொகுதி முறையை வலியுறுத்துமாறும் சம்மேளனம் அம்பேத்கரை பணித்தது. காங்கிரஸ் இதனை ஏற்காமல் அடங்கட்டி நிற்குமேல் தேர்தல் ஒன்றில் வெற்றி பெறுபவர் 35 சதவிகித வோட்டுக்களாவது தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடமிருந்து பெற்றிருக்கவேண்டும் என்ற சம்மேளனத்தின் மாற்றுக் கோரிக்கையை குறிப்பிடுமாறும் அறிவித்தது. இந்த சாதாரண கோரிக்கையையும் காங்கிரஸ் நிராகரித்து விட்டது” (அழுத்தம் என்னுடையத) என சிவராஜின் அறிக்கை கூறுகிறது. (இதே காலத்தில் ஈ.வெ.ரா. பெரியார் ‘ஆகஸ்ட் 15 துக்கநாள்’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். தனித்தொகுதி முறைக்காக என்.சிவராஜ் துக்கநாள் அறிக்கைவிடும் அளவிற்கு சென்றிருக்கிறார் எனும்போது தனித்தொகுதி குறித்தான தேவையை தலித் அமைப்புகள் எவ்வளவு தூரம் எதிர்நோக்கி இருந்திருக்கின்றன என்பதை மட்டும் இங்கு முக்கியப்படுத்தலாம்) இவ்வறிக்கையையும் மீறி இந்திய அரசியல் வரைவுசாசனம் பிப்ரவரி 26, 1948 அம்பேத்கரால் சமர்பிக்கப்பட்டது. இதன் மீதான விவாதத்தின்போது தலித் தலைவர்கள் மீண்டும் இரட்டை வாக்குரிமையை கோரியதற்கான குறிப்புகள் கிடைக்கின்றன. அம்பேத்கர் இவ்வரைவுக் குழுவின் தலைவராக இருந்தபோதும் பெரும்பாலான சாதி இந்து உறுப்பினர்களின் நெருக்குதலால் 1935ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டுவாக்காளர் தொகுதி முறை தலித்மக்கள் தலையில் திணிக்கப்பட்டது. கூட்டு வாக்காளர் தொகுதி முறை வாயிலாக 1952, 1956ம் ஆண்டுகளில் தேர்தல்கள் நடைபெற்றன. இத்தேர்தல் குறித்த அம்பேத்கரின் முடிவை 1955ல் பம்பாயில் கூடிய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் செயற்குழு வெளியிட்டது. தேர்தல் முறையில் உள்ள இடஒதுக்கீட்டை இரத்து செய்ய வேண்டும் என அச்செயற்குழு தீர்மானம் இயற்றியது. தலித் உறுப்பினர்கள் கட்சிகளின் அடிமைகளாய் இருப்பதை விட சுயமரியாதையாய் வாழ்ந்தாலே போதும் என்பதான உட்கிடக்கை இத்தீர்மானத்திற்குள் இருப்பதாகவே இன்று தோன்றுகிறது.

ஆக, 1942-ல் இருந்து 1956வரை அம்பேத்கர் இரட்டை வாக்குரிமை கோரிக்கையை மீண்டும் மீண்டும் எழுப்பிக் கொண்டே இருந்திருக்கிறார் என்பதை இங்கு ஆய்வின் முடிவாக கூறலாம்.

துணை நின்ற நூல்கள்:

அம்பேத்கர் நூல் தொகுதிகள் - 4,5,10,15,16,17,19 . காந்தி நூல் தொகுப்பு - 7

தனஞ்செய்கீர்-அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு,

டாக்டர். பட்டாபி சீதாராமையா - காங்கிரஸ் மகா சபை சரித்திரம்

எ.எஸ்.கே. -டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சனையும்

ரவிக்குமார் (தொகுப்பாசிரியர்)- தலித் என்ற தனித்துவம்

ஞான. அலாய்சியஸ் - (தொகுப்பாசிரியர்)அயோத்திதாசர் சிந்தனைகள் 1

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்