Skip to main content

தேர் சாம்பல் எழுப்பும் கேள்வி எவிடென்ஸ் கதிர்

தேர் சாம்பல் எழுப்பும் கேள்வி

எவிடென்ஸ் கதிர்
COMMENT (47)   ·   PRINT   ·   T+  
சுதந்திரம் நம் நாட்டில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கான சாட்சி சேஷசமுத்திரம்
மாண்பிற்காக என் மனம் எங்கே விரும்புகிறதோ, அங்கே என் உடம்பு இருக்க வேண்டும். அதுதான் சுதந்திரம் என்றார் மார்ட்டின் லூதர்கிங். அந்தச் சுதந்திரம் நம் நாட்டில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கான சாட்சிகளில் ஒன்றாகியிருக்கிறது சேஷசமுத்திரம். ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை நாடே கொண்டாடிக் கொண்டிருந்த போது, தங்களுடைய வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட முயன்றதற்காக தலித் மக்கள் உலா இழுத்துச் செல்லவிருந்த தேரை எரித்தழித்திருக்கிறார்கள் சாதி வெறியர்கள்.
தேர் ஏன் கண்களை உறுத்தியது?
சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித்துகள் வழிபடும் மாரியம்மன் கோயிலின் திருவிழா ஆடி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். முதல் முறையாகக் கடந்த 2012-ல் இந்தக் கோயிலுக்காகத் தேர் ஒன்றை உருவாக்கி, வீதியுலாவுக்குச் சாமியை எடுத்து வர முயன்றபோது, பொதுப் பாதையில் தலித்துகள் தேர் ஊர்வலம் நடத்தக் கூடாது என்று தடை விதித்திருக்கின்றனர் ஆதிக்கச் சாதியினர். அது தொடங்கி, மாரியம்மன் கோயில் திருவிழா சமயத்தில் இங்கு அரசு 144 தடை உத்தரவைப் பிறப்பிப்பது வழக்கமாகிவிட்டது. இந்த ஆண்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், 14 ஆகஸ்ட் அன்று கோயில் திருவிழாவில் தேர் பவனி நடத்துவதற்கு அனுமதி அளித்திருந்தார். அரசு நம்முடைய உரிமையை மதித்திருக்கிறது என்று மகிழ்ந்திருந்தனர் தலித்துகள். ஆனால், 14 ஆகஸ்ட் அன்று சேஷசமுத்திரம் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலர் சங்கராபுரம் காவல் நிலையத்துக்குச் சென்று, தேர் பவனி நடந்தால் உயிர்ச் சேதம் எற்பட வாய்ப்பிருக்கிறது என்று புகார் கொடுத்திருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, கலவரம் ஏற்படலாம் என்று அச்சமடைந்த வட்டாட்சியர் இரண்டு தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின்போது, “நாங்கள் எந்த வன்முறையிலும் ஈடுபட மாட்டோம்” என்று வாக்களித்திருக்கிறார்கள் இரு தரப்பினரும். ஆனால், நடந்தது வேறு.
திருவிழா தினத்தன்று இரவு பெட்ரோல் குண்டு, கத்தி, அரிவாள், கடப்பாரை, உருட்டுக்கட்டை எனப் பயங்கர ஆயுதங்களுடன் பெருந்திரளான ஆதிக்க சாதியினர் தலித்துகள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்துள்ளனர். குடியிருப்புகள் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசியிருக்கின்றனர்; இதில் 5 வீடுகள் தீக்கிரையாயின. தொடர்ந்து, தேரை எரித்தழித்ததுடன் இதைத் தடுக்க முற்பட்ட - அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த - போலீஸாரையும் தாக்கியிருக்கின்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸாரையும் ஊருக்குள் விடாமல் வழிமறித்திருக்கிறார்கள். இந்தத் தாக்குதல்களில் 8 போலீஸார் உட்பட 11 பேர் அரசு ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.
சாதியம் எப்படியெல்லாம் திட்டமிடுகிறது என்பதற்குத் தாக்குதலில் ஈடுபட்ட கும்பலின் இலக்குகள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. முதல் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீடு மகேந்திரன் - லாவண்யா தம்பதியினுடையது. சாதிய விலங்கை உடைத்தெறிந்து, சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள் இவர்கள். ஆகையால், முதல் இலக்கு இவர்கள் வீடு. தொடர்ந்து அடுத்தடுத்த வீடுகளை நோக்கி முன்னேறியிருக்கிறார்கள். எல்லாக் கலவரங்களையும்போல இங்கும் பெண்கள் மீதான வன்முறையும் ஏவிவிடப்பட்டிருக்கிறது. தாக்குதலின்போது தப்பியோட முயன்ற தலித் பெண்களை உடைகளை உருவி அடித்துத் துரத்தியிருக்கின்றனர். ஏழு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரை பெட்ரோல் பாட்டில் சூழத் துரத்திவந்திருக்கிறது வன்முறைக் கும்பல். காலனி முழுவதும் சூழ்ந்துகொண்டு தாக்குதல் நடத்தியதால் 30 - 35 நபர்களாக ஒன்றாகக் கூடி 4 - 5 பெரிய வீடுகளில் பூட்டிக்கொண்டு தலித்துகள் உள்ளே இருந்துள்ளனர். மாற்றுத்திறனாளியான சக்திவேல், “முன்பக்கம் பூட்டிவிட்டு, பின் வழியாகச் சென்று வீட்டுக்குள் பயந்து கிடந்தோம். நாங்கள் உள்ளே இருப்பது தெரிந்திருந்தால் எங்களை வீட்டோடு வைத்துக் கொளுத்தியிருப்பார்கள். போலீஸ் எங்களை எப்படியும் மீட்கும் என்று கடவுளை வேண்டிக்கொண்டிருந்தோம். சம்பவம் நடந்து 10 மணி நேரம் கடந்துதான் போலீஸ் எங்கள் பகுதிக்கு வந்து எங்களை மீட்டனர்” என்று கூறினார்.
என்ன கொடுமையென்றால், இந்தக் கலவரத்தில் பங்கேற்றவர்களில் கணிசமானோர் பெண்கள், சிறுவர்கள் என்பது. பெண்கள் புடவையில் கற்களைக் கட்டிக்கொண்டு வரிசையாக எடுத்து, கற்களை வீசியிருக்கிறார்கள். எங்கே போகிறது தமிழகம்?
கூடுதல் முன்னெச்சரிக்கை தேவை
இந்தப் பகுதி கடந்த 4 வருடங்களாகப் பதற்றம் நிறைந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. ஆனால், காவல் துறையினர் போதிய முன்னெச்சரிக் கையுடன் இல்லை என்பதையே கலவரத்தின் பாதிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. தேர் உலா நடந்தால் உயிர்ச் சேதம் ஏற்படும் என்று முன்னதாக மிரட்டல் புகார் கொடுக்கப்பட்ட சூழலிலேயே கடுமையான நடவடிக்கைகளைக் காவல் துறை எடுத்திருக்க வேண்டும். மேலும், போதிய எண்ணிக்கையிலும் போலீஸார் சேஷசமுத்திரத்துக்குப் பணிக்கு அனுப்பப்படவில்லை. கலவரம் முடிந்த பிறகு ஓடிவரும் போலீஸார், கலவரம் உருவாகும் முன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் தீவிரமும் கடுமையும் காட்டினால், கலவரங்களில் ஈடுபடும் தைரியமே எவருக்கும் உருவாகாது. மரக்காணமும் தர்மபுரியும் பரமக்குடியும் நமக்குச் சொல்லும் முக்கிய செய்தி இது.
2014-ல் மட்டும் தமிழகத்தில் 2,784 கலவரங்கள் நடந்துள்ளன. சில கலவரங்கள் கணிக்க முடியாத அளவுக்கும் நடப்பதுண்டு. ஆனால், எல்லாவற்றையும் அந்தப் பட்டியலில் சேர்த்துவிட முடியாது. தலித் குடியிருப்புகளை, பொதுச் சொத்துகளை எரிப்பவர்க ளுக்குத் தண்டனையின் ஒரு பகுதியாக, கடுமையான அபராதம் விதிக்கவும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழியிருக்கிறது. ஆனால், இதுவரை தமிழகத்தில், தலித் குடியிருப்புகளை எரித்தவர்கள் எங்கேனும் அபராதம் கட்டியதாக நமக்குத் தகவல் உண்டா?
ஒட்டுமொத்தமாகக் குற்றஞ்சாட்டாதீர்கள்
சேஷசமுத்திரம் கலவரத்தில் ஈடுபட்டதாக ஆதிக்க சாதியைச் சேர்ந்த அத்தனை பேரையும் குற்றஞ்சாட்ட முடியாது. நாங்கள் அங்கே கள நிலவரங்களைப் பார்க்கச் சென்றபோது, சாதியத்துக்கு எதிராகப் பேசிய பலரைப் பார்க்க முடிந்தது. பலர் இப்படியான பாகுபாடுகளிலோ, செயல்பாடுகளிலோ, வன்முறைகளிலோ தொடர்பற்றவர்கள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களில் 2 - 3% மட்டுமே கொண்ட கும்பல்தான் இவ்வளவையும் நிகழ்த்தியிருக்கிறது. இதுபோன்ற விவகாரங்களில் ஒட்டுமொத்தமாகக் குற்றஞ்சாட்டுவது தவறானது. காரணங்களுக்குப் பின் இருப்பவர்களையே களை எடுக்க வேண்டும்.
கடவுளின் முன் அனைவரும் சமம் என்று சொன்னாலும், பால்குடம் எடுப்பதில், தீச்சட்டி எடுப்பதில், வடம் பிடிப்பதில், அர்ச்சனை செய்வதில், தேர் பவனி வருவதில், வரி வசூல் செய்வதில் என்று வழிபாட்டுத் தலங்களில் மட்டும் 40 வகையான தீண்டாமைக் கொடுமைகள் தமிழகத்தில் இருக்கின்றன. தேர் தொடர்பாக உருவெடுத்த சமீபத்திய கலவரங்களில் மட்டும் சங்கரன்கோவிலில் இரு தலித்துகளின் உயிர் போயிருக்கிறது. தஞ்சாவூரில் ஒரு தலித் பெண்ணின் பார்வை பறிபோயிருக்கிறது. இன்னும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
அரசை மட்டும் குறை சொல்லி ஆகப்போவது ஒன்றும் இல்லை. நமக்குள் இருக்கும் சாதியை என்ன செய்யப்போகிறோம்? சேஷசமுத்திரத் தேரின் சாம்பலிலிருந்து எழும் எரிக்க முடியாத கேள்வி இதுதான்!

- எவிடென்ஸ் கதிர், சமூகச் செயல்பாட்டாளர், தொடர்புக்கு: info@evidence.org.in

Thanks to  : Tamil Hindu

Comments

Popular posts from this blog

சமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம்

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்

Visit to Anandhur Sammandha vayal Buddha Vihar, Thiruvadanai Block, Ramanathapuram District.