அயோத்திதாசரைச் சந்தித்த கோசாம்பி

அயோத்திதாசரைச் சந்தித்த கோசாம்பி
ஆ. இரா. வேங்கடாசலபதி


வரலாற்றுப் பேரறிஞர் தர்மானந்த தாமோதர் கோசாம்பியின் தந்தை என்பதற்கும் மேல் நினைவுகொள்ளப்பட வேண்டிய ஓர் ஆளுமை தர்மானந்த கோசாம்பி (1876-1947). இந்தியாவில் பௌத்த மறுமலர்ச்சிக்கு அடிக்கல் நாட்டியவர்களில் ஒருவர் தர்மானந்த கோசாம்பி. அவர் எழுதிய ‘கௌதம புத்தர்’ இன்றளவும் (தமிழிலும்) வாசிக்கப்படும் நூலாகும்.
போர்த்துகீசிய ஆளுகைக்குட்பட்ட கோவா பிரதேசத்தில், கௌட சாரஸ்வத் பிராமண குலத்தில் பிறந்த தர்மானந்த கோசாம்பி, இந்தியா, நேப்பாளம், பர்மா, இலங்கை முதலான இடங்களுக்கும் பயணித்து பௌத்தம் பற்றி அறிந்துகொண்டார். பாலி மொழி கற்றுத் தேர்ந்து, பௌத்த மூல நூல்களைப் பயின்றார். பௌத்த ஆய்வு தொடர்பாக ஹார்வார்டு பல்கலைக் கழகத்துக்குப் பலமுறை சென்றுவந்தார். ஹார்வார்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘விசுத்திமாகா’ என்ற திரிபிடகத்தின் சாரமாகக் கருதப்படும் பௌத்த நூலுக்குப் பதிப்பாசிரியராக விளங்கினார். மராட்டியில் இவர் எழுதிய பௌத்தம் தொடர்பான நூல்கள் அவருக்குப் புகழைத் தேடித் தந்தன.
பாலி மொழியைக் கல்கத்தா பல் கலைக்கழகத்திலும், புனே ஃபெர்குசன் கல்லூரியிலும், காசி இந்துப் பல்கலைக் கழகத்திலும், காசி வித்யாபீடத்திலும் பயிற்றுவித்த தர்மானந்த கோசாம்பி, 1916இலேயே காந்தியை முதலில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். 1922 முதல் காந்திய இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, 1930இல் உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு கடும் சிறைவாசம் அனுபவித்தார். காந்தியின் அழைப்பின் பேரில், அகமதாபாதின் குஜராத் வித்யா பீடத்தில் பேராசிரியராக விளங்கினார். பின்னர் சோவியத் ஒன்றியத்தின் லெனின்கிராட் பல்கலைக்கழகத்தில் பாலி மொழிப் பேராசிரியராக அமர்ந்தார்.
சோசலிச சித்தாந்தத்தில் ஈடுபாடுகொண்டு சில அறிமுக நூல்களை எழுதினார். 1912ஆம் ஆண்டில் சோசலிசம் பற்றியும், 1916இல் காரல் மார்க்ஸ் பற்றியும் விரிவுரையாற்றிய இவர், இந்தியாவில் சோசலிச சிந்தனைகளை அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
மும்பையில் தொழிலாளர் வாழும் பகுதியில் ஒரு புத்த விகாரத்தை நிறுவி, ‘பகுஜன் விகார்’ என்று அதற்குப் பெயரிட்டார்.
1940களின் இடையில் உடல்நலிவுற்ற தர்மானந்த கோசாம்பி, பௌத்த, சமண முறைப்படி உண்ணாநிலையைக் கடைப்பிடித்து உயிர்துறக்க உறுதிபூண்டார். இதன் தொடர்பில் காந்தியோடு நடந்த கடிதப் போக்குவரத்து புகழ் பெற்றது. ஒரு மாத உண்ணாநிலைக்குப் பிறகு 4 ஜூன் 1947இல் தர்மானந்த கோசாம்பி காலமானார். இவர் தங்கியதன்மூலம் சாபர்மதி ஆசிரமம் புனிதமடைந்தது என்று காந்தி தம் இரங்கலுரையில் குறிப்பிட்டார்.
தர்மானந்த கோசாம்பியின் தன் வரலாறு 1912-1916இல் தொடராக வெளிவந்தது. முதல் உலகப் போரின் காரணமாக விட்டுவிட்டு வெளியான இத்தன்வரலாறு 1916/17இல் தொடர்ந்து எழுதப்பட்டு 1924இல் நூலாக்கம் பெற்றது. 1912ஆம் ஆண்டுடன் இத் தன்வரலாறு விவரிக்கும் வாழ்க்கை நின்றுவிடுகிறது. ‘ஆத்ம நிவேதன்’ என்று பெயரிடப்பட்ட இத் தன்வரலாறு மராட்டி இலக்கிய வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றதொரு நூலாகும்.
தர்மானந்த கோசாம்பியின் பேத்தியும், தர்மானந்த தாமோதர் கோசாம்பியின் மகளுமாகிய மீரா கோசாம்பி பேர் பெற்ற பெண்ணியலாளரும் சமூகவியல் பேராசிரியருமாவார். இவர் தம் தாத்தா எழுதிய தன்வரலாற்றை மராட்டியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, விரிவான முன்னுரை, விளக்கக் குறிப்புகளுடன் அண்மையில் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். Nivedan: An Autobiography of Dharmanand Kosambi. Translated and edited and with an Introduction by Meera Kosambi. Published by Permanent Black. Distributed by Orient Blackswan. Rs. 295
இந்தியாவில் பௌத்தம் ஏறத்தாழ நசிந்துவிட்டிருந்த சூழலில் பௌத்த கல்வியைப் பெறும்பொருட்டுக் கோசாம்பி தெற்காசியா முழுவதும் சுற்றியலைந்து பட்ட பெரும்பாடுகளையே இந்நூல் பெரிதும் விவரிக்கிறது. இவ்வலைவுகளில் 1903ஆம் ஆண்டில் ஏறத்தாழ ஏழு மாதங்கள் சென்னை நகரில் தங்கி, பௌத்த சமயப் பணியாற்றியபொழுது தமிழகத்தில் நவீன பௌத்த மறுமலர்ச்சிக்கு உழைத்த அயோத்திதாச பண்டிதர் (1845-1914), ம. சிங்காரவேலர் (1860-1946), பேராசிரியர் லட்சுமிநரசு நாயுடு (1860/61-1934) ஆகியோரையும் சந்தித்தார். இதைப் பற்றிய அரிய பதிவுகள் அடங்கிய பகுதி இங்கு மொழிபெயர்த்து வழங்கப்படுகிறது.
1902ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கல்கத்தாவிலிருந்து இலங்கைக்குப் பயணமாகிறார் தர்மானந்த கோசாம்பி. கல்கத்தா மகாபோதி சபையின் நிர்வாகி சாரு சந்திர போஸ், அதன் சென்னைக் கிளையின் செயலாளர் சிங்காரவேலருக்கு ஒரு கடிதம் கொடுக்கிறார். இனி, தர்மானந்த கோசாம்பியின் சொற்களில் . . .
ooo
16 மார்ச் 1902, ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்குச் சற்று முன் சென்னையைச் சென்றடைந்தேன். கல்கத்தாவிலிருந்து இலங்கை செல்பவர்கள் தூத்துக்குடியில் சில நாள்கள் நோய்ப் பாதுகாப்புக்காகத் தனித்துவைக்கப்படுவார்கள் என்று இரயிலில் வந்த ஒரு கனவான் என்னிடம் கூறியிருந்தார். என் கையில் பத்தரை ரூபா மட்டுமே இருந்தது. பத்து நாள் தனித்துவைத்தால் பட்டினியால் சாக வேண்டியதுதான். எனவே நேராகத் தூத்துக்குடிக்குச் செல்லாமல் சென்னையில் இறங்கி, ம. சிங்காரவேலுவைச் சந்தித்து இப்பிரச்சினையிலிருந்து மீள வழிகாண முற்பட்டேன். மிகவும் சிரமப்பட்டுத்தான் சிங்காரவேலுவின் வீட்டைக் கண்டுபிடிக்க முடிந்தது. நான் கொண்டுவந்திருந்த கடிதத்தைப் படித்து, அன்புடன் அவர் விருந்தோம்பினார். குளித்துவிட்டு அவர் வீட்டிலேயே சாப்பிட்டேன். ஆனால் எங்கள் உரையாடல் முழுவதும் சைகை மொழியிலேயே அமைந்திருந்தது. எனக்கு ஆங்கிலம் வராது; சிங்காரவேலுவுக்கு இந்தி தெரியாது. நான் சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்தில் வெளியே சென்றிருந்த சிங்காரவேலுவின் சகோதரர் வீடு திரும்பினார். அவருக்கு இந்தி தெரியுமாதலால் என் வேண்டுகோளைச் சிங்காரவேலுவுக்குத் தெரியப்படுத்தினார்: ஒன்று, நோய்த் தடுப்பில் வைக்கப்படாமல் இலங்கைக்குச் செல்ல வேண்டும்; இல்லாவிட்டால் தனித்து வைக்கப்படும்பொழுது உணவுச் செலவுக்குப் பணம் வேண்டும். அந்தக் காலத்தில், முதலியார் என்ற சிங்காரவேலுவின் நண்பரொருவர் தூத்துக்குடியில் மருத்துவ அதிகாரியாக இருந்தார். நோய்த் தடுப்பிலிருந்து விரைவில் என்னை விடுவிக்கக் கோரி அவருக்கு ஒரு கடிதம் எழுதி என்னிடம் கொடுத்தார் சிங்காரவேலு. ஒருவேளை நான் நோய்த் தடுப்பில் சிக்கிவிட்டால் உடனடியாக ஒரு தந்தி கொடுத்தால் உணவுக்குப் பணம் அனுப்புவதாகவும் தம் சகோதரர் மூலம் எனக்குத் தெரிவித்தார்.
ooo
கொழும்பு வித்யோதயா ஆசிரமத்தில் உணவும் வழங்கப்பட்டது. எனக்குத் தேவையான நூல்களை இல்லறத்தாரும் துறவிகளும் வழங்கினர். இவையெல்லாம் விரைவில் தடங்கலுக்காளாயின. சென்னை மகாபோதி சபையின் செயலாளர் திரு சிங்காரவேலு தம் பணி நிமித்தமாக இங்கிலாந்து சென்றிருந்தார். போகும் வழியிலோ, வரும் வழியிலோ கொழும்புவில் ஒரு நாள் தங்கி, வித்யோதயா ஆசிரமத்தில் எங்கள் ஆசாரியாரைச் சந்திக்க வந்தார். திரு சுமங்களாசாரியா அவரைச் சந்திக்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால், உதவி ஆசாரியர் வணக்கத்திற்குரிய தேவமித்ர அவரைச் சந்தித்தார். ஆங்கிலம் பேசும் சிங்களக் கனவான் ஒருவர் அவருடன் வந்திருக்க வேண்டும்; இல்லாவிட்டால் வணக்கத்திற்குரிய தேவமித்ரவிடம் அவர் உரையாடியிருக்க முடியாது. பேச்சினிடையே தேவமித்ர என்னைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். என்னைப் பற்றி அவர் உயர்வாகச் சொல்லியிருக்க வேண்டும். இதைக் கேட்ட சிங்காரவேலு பின்வரும் பொருள்படப் பேசினார்: ‘இந்தியப் பார்ப்பனர்கள் தந்திரமானவர்கள்; அவர்களை நம்பக் கூடாது. இவர் எளியவராகவும் அப்பாவியாகவும் தோன்றலாம்; ஆனால் அவரை நம்பிவிடாதீர்கள். இவர் ஒரு பார்ப்பனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.’ சென்னை மகாபோதி சபையின் செயலாளர் சிங்காரவேலுவின் மேற்சொன்ன அபிப்பிராயத்தை வணக்கத்திற்குரிய தேவமித்ர அன்றைக்கே பறைசாற்றிவிட்டார். ஆசாரியர் சுமங்களா இதனால் மனமாற்றமடையவில்லையாயினும், இல்லறத்தார் சிலரின் நம்பிக்கையை நான் இழந்தேன்.
இதையறிந்த நான் வருந்தினேன் - எனக்கு ஏற்படவிருந்த அசௌகரியங்களுக்காக அல்ல; கற்றவராகிய சிங்காரவேலுவைப் போன்ற ஒருவரின் சுய அழிவுச் செயல்பாட்டை எண்ணி. மரியாதையுடன் உணவளித்தும், தூத்துக்குடி மருத்துவருக்குக் கடிதம் வழங்கியும் எனக்கு உதவிய அதே மனிதர், இப்பொழுது சிங்கள மக்களிடையே நான் பிராமணன் என்பதற்காக மட்டுமே என்னைப் பற்றிய பாதகமான முன்னெண்ணத்தை ஏற்படுத்தத் தயாராக இருந்தார். இது எனக்கு வியப்பையும் வலியையும் ஏற்படுத்தியது. அதே சமயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியும் இப்பொழுது நினைவுக்கு வருகிறது. புகழ்பெற்ற ஜப்பானிய போர்த் தளபதி பொகுஷிமா ஜெர்மனியிலிருந்து ஊர் திரும்பும் வழியில் கொழும்புக்கு வந்திருந்தார். ஏழை ஜப்பானிய மாணவர்கள் சிலர் எங்கள் ஆசிரமத்தில் பாலி மொழி பயில்வதாக அறிந்து, ஸ்ரீ சுமங்களாசாரியாரைக் காண வந்தார். வித்யோதயா கல்லூரியில் அப்பொழுது ஜப்பானிய மாணவர் ஒருவர் (கௌடிண்ய என்று பெயர்) மட்டுமே படித்து வந்தார். வேறு நான்கு மாணவர்கள் மேற்குக் கரையில் வெவ்வேறு இடங்களில் படித்துவந்தனர். ஏழை ஜப்பானிய மாணவர்களுக்கு உதவி வந்ததற்காக ஆசாரியாருக்குத் தம் நன்றியைப் பொகுஷிமா புலப்படுத்தினார். என்னைப் பற்றி அறிந்த, எனக்குதவிய கற்ற இந்தியர் ஒருவர் என்னைப் போன்ற ஏழை இந்திய மாணவர் ஒருவரைப் பற்றித் தேவையில்லாத மனவேறுபாட்டை ஏற்படுத்தினார். மாறாக, முன்பின் பார்த்தறியாத ஜப்பானிய மாணவரை ஊக்குவிக்கும் பொருட்டு ஓர் உயர் இராணுவ அதிகாரி ஸ்ரீ சுமங்களாசாரியாரைத் தேடி வந்திருக்கிறார். இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒப்பிடுவது, நமது கற்ற மக்களின் தேசாபிமானத்திற்குச் சாதிய வேறுபாடுகள் எவ்வளவு இடையூறாக உள்ளன என்பதைத் தெளிவுபடுத்தும்.
திரு சிங்காரவேலு வந்துசென்ற சில நாள்களுக்குப் பின்னர் உணவுக்காக ஆசிரமத்தை நம்பாமல் உணவு இரந்து வாழலானேன். இது துறவியரின் கடமையாதலால் ஆசாரியார் என்னைத் தடுக்கவில்லை.
ooo
துறவிகள் அணியும் சீவர ஆடைகள் மூன்றையும் ஒரு திருவோட்டையும் எடுத்துக்கொண்டு 26 மார்ச் 1903ஆம் நாள் கொழும்புவிலிருந்து புறப்பட்டேன். அநகாரிக தர்மபாலரின் தந்தை சென்னைக்கு இரண்டாம் வகுப்புப் பயணச்சீட்டை வாங்கிக்கொடுத்தார். பிற நண்பர்கள் பிஸ்கட்டுகளையும் வழியில் உண்பதற்கான பிற தின்பண்டங்களையும் கொடுத்தனர். சென்னையில் இறங்கியதும் எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து திரு சிங்காரவேலுவின் வீட்டிற்கு நடந்து சென்றேன். ஓரளவுக்கு ஆங்கிலம் கற்றுக்கொண்டிருந்ததால் அவர் சொல்வதைப் புரிந்துகொள்வதில் அதிக சிரமம் இருக்கவில்லை. அவர் எனக்கு உணவளித்தாரெனினும் கல்கத்தாவுக்கான பயணச்சீட்டு வாங்கித் தர முடியாது என உறுதியாக மறுத்துவிட்டார். ‘எங்கள் சங்கம் வறியது; எனவே உங்களுக்கு உதவக்கூடவில்லை’ என்று கூறினார். இலங்கையிலிருந்து பணம் கிட்டும்வரை அவர் வீட்டில் நான் தங்குவதற்கு இசைந்தார்; இரண்டொரு நாளில் இந்தத் திட்டமும் மாறுதல் கண்டது. சென்னையில் புதியதாக ஒரு (பௌத்த) சங்கத்தை நிறுவி அதில் என்னை அமர்த்துவது என்ற புதிய எண்ணம் அவருக்குத் தோன்றியது.
கல்கத்தா செல்லப் பணம் வேண்டும் என்று இலங்கை நண்பர்கள் பலருக்கும் எழுதினேன். இதற்கு எந்த விடையும் வரவில்லை. பதில் வந்தவிடத்தும் பணம் வரவில்லை. எனவே சிங்காரவேலுவின் திட்டத்தை ஏற்பதைத் தவிர எனக்கு வேறு வழி இருக்கவில்லை. அவரது வீட்டிற்கு அடுத்திருந்த ஒரு கன்னட பிராமணருடைய வீடு காலியாக இருந்தது. அதில் நான் தங்குவதற்கு அவர் ஏற்பாடு செய்தார். அவர் வீட்டிலேயே நான் சாப்பிட்டுவந்தேன். சென்னை உணவு எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. நாளுக்கு நாள் என் உடல் நலிந்துவந்தது. இருந்தாலும் தீவிரமாக ஆங்கில மொழியைப் பயின்றுவந்தேன். எனக்குப் பயிற்றுவிக்க யாருமில்லை. அகராதியின் துணை கொண்டு நானே படித்துக்கொண்டேன்.
‘சென்னை மகாபோதி சபை’ என்றொரு பௌத்த சபை ஏற்கெனவே சென்னையில் இருந்தது. பேராசிரியர் லட்சுமிநரசு நாயுடு அதன் தலைவர், சிங்காரவேலு செயலாளர். கௌதம புத்தர் ஞானோதயம் பெற்ற நாளான வைசாக பௌர்ணமியைக் கொண்டாடுவதைத் தவிர வேறு எந்தச் செயல்பாடும் அச்சபைக்கு இல்லை. பர்மாவின் பேர்பெற்ற வணிகரான மாங்க் ஷ்வே (விஷீஸீரீ ஷிலீஷ்மீ) இவ்விழாவிற்குப் பணம் அளித்துவந்தார். சென்னை நகரில் ஏராளமான பறையர்கள் (அதி சூத்திரர்) பௌத்தத்தைத் தழுவி இருந்தனர். பண்டித அயோத்திதாசர் அவர்களின் தலைவர். ஆனால் அவருக்கும் மகாபோதி சபைக்கும் ஒத்துவரவில்லை. நான் சென்னைக்கு வந்த இரண்டு மாதங்களில் பௌத்தர் அனைவரும் ஒன்றிணைந்துவிட்டனர். இராயப் பேட்டையில் ஒரு சிறு குடிலை வாடகைக்கு எடுத்து, அதற்கு ‘பௌத்தாசிரமம்’ எனப் பெயரிட்டு என்னை அதில் அமர்த்தினர். அதன் பிறகு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையும் பௌத்தம் பற்றிய பொழிவுகளும் விளக்கவுரைகளும் நிகழ்த்தப்பட்டன. பெரும்பாலும் பாலி மொழியிலிருந்து ஒரு சூத்திரத்தைப் படித்துக் காட்டி என் அரைகுறை ஆங்கிலத்தில் அதை விளக்குவேன். அதன் அடிப்படையில் சிங்காரவேலு தமிழில் விளக்கவுரையாற்றுவார். சில சமயங்களில் பேராசிரியர் லட்சுமிநரசுவும் சொற்பொழிவாற்றுவார். சிறப்புச் சொற்பொழிவாளர்களும் அவ்வப்பொழுது அழைக்கப்படுவதுண்டு.
இந்தச் சபையின் செயல்பாடுகள் எந்தவொரு பௌத்த பிரசாரகருக்கும் உவப்பளித்திருக்கும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஏராளமான இந்துக்களும் கிறித்தவர்களும் இப்பொழிவுகளைக் கேட்க வருவார்கள். சென்னையின் வைதீக பிராமணர்களின் அனுதாபமும் இச்சபைக்கு இருந்தது. ஆனால் என் மனம் இதில் செல்லவில்லை; ஆரண்யவாசத்தையே அது வேட்டது. மேலும், சென்னை உணவும் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை; கௌதமாசிரமத்தில் தரையில் படுத்துறங்குவது என் முடுக்குவாதத்தை மோசமாக்கியது. ஒரு சமயம் சபை உறுப்பினர்கள் எனக்கொரு கட்டில் வாங்கித்தர எண்ணினர். ஆனால் அது செயலுக்கு வரவில்லை. ஈரத் தரை என்பதால் சமுக்காளத்தை விரித்துப் படுத்துக்கொள்வேன். இந்தச் சூழலில் சென்னை எனக்குச் சலிப்பைத் தந்தது. சிங்காரவேலு விந்தையான மனிதர். கோபத்தில் சில வேளையில் கடுமையாகப் பேசிவிடுவார். ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது துறவிகளெல்லாம் எகிப்திய சவங்களைப் போல் பயனற்றவர்கள் என்றார். என்னைச் சிறைக் கைதிபோல் வைத்திருப்பது பற்றி நானும் கடுமையாகப் பேசிவிட்டேன். இந்த விவாதம் எங்கள் நட்பை முறித்துவிடவில்லை என்றாலும் சென்னையைவிட்டு நீங்குவது என்று உறுதிபூண்டேன்.
நான் சென்னையைவிட்டுச் செல்வதற்குச் சிங்கார வேலு எதிராக இருந்ததால் இதற்கு எந்த உதவியையும் நான் பெற முடியவில்லை. சென்னையில் பர்மா நாட்டு மாணவர்கள் சிலர் வாழ்ந்துவந்தனர். இவர்கள் என்னைச் சிலமுறை சந்தித்துமிருந்தனர். துறவிகளின் தொடர்பில்லாமல் நான் தனியே சென்னையில் உறைவது முறையல்ல என்று அவர்கள் கூறிவந்தனர். பர்மாவில் ஏராளமாகவுள்ள விகாரைகள் எவற்றுக்கேனும் நான் சென்றால் என் கல்விக்கும் அது துணையாக இருக்குமென அவர்கள் சொன்னார்கள். நான் கல்கத்தா செல்ல இம்மாணவர்கள் உதவமாட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது; பர்மா செல்வதற்கு உதவலாம் என்றும் தோன்றியது. பண்டித அயோத்திதாசின் புதல்வர் வழியாக விசாரித்ததில், பர்மாவுக்கு நீராவிக் கப்பல் வழியாகச் செல்லப் பணம் திரட்டித் தர முடியும் என அவர்கள் உறுதியளித்தார்கள். எனவே பர்மாவுக்குச் செல்ல உடனடியாக ஆயத்தங்கள் செய்தேன்.
வனவாசம் செல்பவர்களைப்போல் சென்னையில் நாள்களைக் கடத்தினேன். பேராசிரியர் லட்சமிநரசுவுடன் ஏற்பட்ட பயனுள்ள பழக்கமே எனக்கிருந்த ஒரே ஆறுதல். வெள்ளிக்கிழமைதோறும் மாலை ஐந்து மணிக்கு எனக்காகச் சில நூல்களையும் எடுத்துக்கொண்டு அவர் பௌத்தாசிரமத்திற்கு வருவார். ஒப்பியல் ஆய்வை மேற்கொள்வது எப்படி என்பதை முதன்முதலில் அவரிடமிருந்தே கற்றேன். தமது கல்லூரி நூலகத்திலிருந்து ரிக் வேதத்தையும் பிற நூல்களையும் அவர் எடுத்துவந்தார். அவர் கற்றவை உரையாடல்களின் மூலம் எனக்குப் பயன்தந்தன. மேலும் அவர் சிறந்த ஒழுக்கசீலர். எந்தத் தீய பழக்கமும் இல்லாதவர். அவருடைய நடத்தை வெளிப்படையானது. போலித்தனத்தை அவர் வெறுத்தார். சென்னை மாகாணத்தின் தலையாய சீர்திருத்தவாதியாக அவர் மதிக்கப்பட்டார். அத்தகைய ஒருவர்மீது நன்மதிப்பு ஏற்படுவது இயல்பானது.
முன்பே சொன்னதுபோல் இலங்கை நண்பர்கள் எந்த உதவியும் செய்யவில்லை . . .
1903 அக்டோபர் மாத நடுவில் - 12ஆம் நாளாக இருக்கலாம் - நான் பர்மாவுக்குப் புறப்பட்டேன். பண்டித அயோத்திதாசும் பிறரும் வழியனுப்பத் துறைமுகத்திற்கு வந்தனர். அவர்களுடைய சென்னை நண்பர் ஒருவரும் அதே கப்பலில் வருவதாயிருந்ததால், பண்டித அயோத்திதாஸ் அவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்து, பயணத்தில் அவர் துணையாக இருப்பார் என்றும் கூறினார்.

Thanks to : http://www.kalachuvadu.com/issue-140/page43.asp

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள்