சமத்துவத்தின் தாய்!

“மனிதர்கள் அழியக் கூடியவர்கள். அதே போன்று சிந்தனைகளும் அழியக் கூடியவையே. ஒரு சிந்தனை செயல்வடிவம் பெறுவதற்கு முன்பே வேர் பிடிக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு. ஒரு செடி வேர் பிடிப்பதற்கு நீர் எவ்வளவு இன்றியமையாததோ, அந்தளவுக்கு ஒரு சிந்தனை வேர் பிடிப்பதற்குப் பிரச்சாரம் இன்றியமையாததாகும்.”
- டாக்டர் அம்பேத்கர்
இந்தியத் துணைக்கண்டத்தின் தந்தையாக பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்தான் போற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வரலாறு பிழை செய்துவிட்டது. ஜாதிய சமூகத்தில் கீழ் ஜாதியாக அவர் பிறந்து விட்ட காரணத்தால், பொது சமூகம் அவருக்கு அந்த இடத்தை அளிக்க மறுத்துவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்களும் அவரை தங்களுக்கு மட்டுமே உரிய தலைவராகக் கருதி, ஒடுக்கும் சாதி இந்து தலைவர்களையே தேசியத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டனர். தலித் கட்சிகளும் கூட அம்பேத்கரை வெறும் படமாக (அஞ்சல் தலை அளவு) சுருக்கி, தங்களையே முன்னிறுத்திக் கொள்கின்றனர்.
ஏற்றத்தாழ்வையே உயிர் மூச்சாகக் கொண்ட இந்து சமூகத்தின் சட்டமான மநுஸ்மிருதியை எரித்த அம்பேத்கர், அதற்கு எதிராக சமத்துவத்தை நிலைநிறுத்தும் ஓர் அரசமைப்புச் சட்டத்தை இந்நாட்டிற்கே அர்ப்பணித்தார். இச்சட்டம் ஒட்டுமொத்த சமூகத்திற்குமாகானது; ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே உரியது அல்ல. இருப்பினும், இந்நாடு மதிக்கும் உச்சபட்ச விருதான ‘பாரத் ரத்னா' - ஒரு சாதாரண அரசியல்வாதியான எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட பிறகுதான் அம்பேத்கருக்கு வழங்கப்பட்டது. நன்றிகெட்ட ஜாதி இந்து சமூகத்தின் பண்பாடு இது!
அரசியல் அரங்கில் மட்டுமின்றி, சமூக மாற்றத்திற்காக அம்பேத்கர் ஆற்றிய ஒப்பற்ற பணிகள், இன்றளவும் முழுமையாக நினைவு கூரப்படாமலேயே இருக்கின்றன. அம்பேத்கருடைய முழுமையான எழுத்துகள் கூட, இன்னும் வெளிவரவில்லை என்பது வேதனையானது. இந்நிலையில், அம்பேத்கரியலை வளர்த்தெடுக்கும் பணியில் ‘தலித் முரசு' கடந்த 13 ஆண்டுகளாகத் தன்னை ஈடுபடுத்தி வந்திருக்கிறது. அதன் ஓர் அங்கமாகத்தான் ஏப்ரல் மாத இதழினை அம்பேத்கர் சிறப்பிதழாக முன்னிறுத்துகிறோம்!
இவ்விதழில், ‘தீண்டத்தகாத மக்களை இந்திய அரசியல் அரங்கிற்கு கொண்டு வருவதிலும் - இந்திய ஜனநாயகத்திற்கு அடித்தளமிடுவதிலும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பு' என்ற தலைப்பிலான விரிவான கட்டுரையின் முதல் பகுதியை வெளியிட்டிருக்கிறோம். இவ்வாண்டு முழுவதும் இக்கட்டுரைத் தொடர் வெளிவர இருக்கிறது. அம்பேத்கர் நூல் தொகுப்பின் ஆசிரியர் குழுவினர் தொகுத்த கட்டுரையே இது (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17(1). பூனா ஒப்பந்தம் குறித்து அங்கொன்றும், இங்கொன்றுமாக பேசப்பட்ட அளவிற்கு, அதன் முழுமையான வரலாறு சொல்லப்படவில்லை. இக்குறைபாட்டை இக்கட்டுரைத் தொடர் நிறைவு செய்யும்.
அம்பேத்கர் அரசியல் அரங்கில் மட்டுமே செயல்பட்டதாக ஒரு மாயை நிலவுகிறது. ஜனநாயகத்திற்கான அவருடைய போராட்டத்தை சரியாகப் புரிந்து கொள்ளாததன் விளைவே இது. ஜனநõயகத்திற்கு அம்பேத்கர் அளிக்கும் விளக்கம் இதுதான்: “சமூக ஜனநாயகமும், பொருளாதார ஜனநாயகமும் - அரசியல் ஜனநாயகத்தின் நரம்பும் நாளமும் ஆகும். இந்த நரம்பும் நாளமும் உறுதியாக இருந்தால்தான் - உடல் வலுமிக்கதாக, ஆரோக்கியமானதாக இருக்கும். ஜனநாயகம் என்பது, சமத்துவத்திற்கு மற்றொரு பெயர்.” ஆம், சுதந்திரம்,
சமத்துவம், சகோதரத்துவம் என்ற உயரிய சமூகத்தை உருவாக்குவதையே அவர் தனது லட்சியமாகக் கொண்டிருந்தார். இந்த லட்சியத்தை அடைவதற்கு சாதி ஒழிப்பை அவர் முன்நிபந்தனையாக்கினார்.
இருப்பினும், சாதியால் கடும் பாதிப்பை சந்திக்கும் தலித் மக்களுக்கும் சாதி மீதான மயக்கம் இருக்கிறது. அது, தன் வாழ்நாள் முழுவதும் சாதியை ஒழித்து, சமத்துவத்தை நிலைநாட்டிட களமாடிய அம்பேத்கருக்கு இழைக்கும் துரோகம். தலித்துகளின் இன்னல்களுக்கு முழு காரணமாக இருக்கும் சாதியை நேசிப்பது, மீண்டும் சாதி அமைப்பிற்கு உரமிடுவதாகவே அமையும். நம்முடைய போராட்டம் - கீழ்சாதிகளுக்குரிய உரிமையை கேட்பது அல்ல; கீழ்சாதிகளே இருக்கக் கூடாது என்ற விடுதலையின் பாற்பட்டது! சில அற்ப உரிமைகளைப் பெற்றுக் கொண்டு, இந்து சமூகத்தில் அடிமைகளாக உழல்வதற்கா நாம் வாழ்கிறோம்?
20 ஆம் நூற்றாண்டு பிழை செய்திருந்தாலும், 21ஆம் நூற்றாண்டில் அதை நேர் செய்தாக வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. அந்த வகையில், நாம் அம்பேத்கரை சமத்துவத்தின் தாயாகப் பிரகடனப்படுத்துகிறோம். இப்பிரச்சாரத் தீ பரவட்டும்!

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள்