மாணிக்க வாசகர் பாடிய திருஞானசம்பந்தர துதியில் புத்த மத வெறுப்பு கருத்துகள்

திருஞானசம்பந்தர் துதி:

பரசமய கோளரியைப் பாலறா வாயனைப்பூம் பழனம் சூழ்ந்த
சிரபுரத்துத் திருஞான சம்பந்தப் பெருமானைத் தேய மெல்லாம்
குரவையிடத் தமிழ்வேதம் விரித்தருளும் கவுணியர்கள் குலதீ பத்தை
விரவிஎமை ஆளுடைய வென்றிமழ இளங்களிற்றை விரும்பி வாழ்வாம்.

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

சைவசமயகுரவர் திருவடி வாழ்க

திருஞானசம்பந்த சுவாமிகள்

தருமை ஆதீன வித்துவான், ஆதீனப் பல்கலைக்கல்லூரித் துணை முதல்வர், சித்தாந்த ரத்நாகரம், மதுரகவி, புலவர்,
முத்து. சு. மாணிக்கவாசக முதலியார்
திருஞானசம்பந்தர் சீகாழியில் சிவபாதவிருதயர்க்கும் பகவதிக்கும் கௌணிய கோத்திர சிகாமணியாய்த் தோன்றியவர். மூன்றாவது வயதில், திருக்குளக்கரையில், திருத்தோணியப்பர் அம்மையுடன் எழுந்தருளி நல்கிய ஞானப்பால் உண்டதால் திருஞானசம்பந்தர் ஆனார். `தோடுடைய செவியன்` எனத் தொடங்கிய திருப்பதிகம் பாடிச் சுட்டுதற்கு எட்டாத கடவுளைச் சுட்டிக் காட்டினார். திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்றார். பல தலங்களை அடைந்து தரிசித்துப் பாடியுள்ளார். திருநீலகண்டப் பெரும்பாணர்க்குத் தம் அருட்பாக்களை யாழில் அமைத்து இசைக்கும் வரங்கொடுத்தவர். திருநெல்வாயில் அரத்துறையில் முத்துப்பல்லக்கு, முத்துக்குடை, முத்துச்சின்னங்கள் பெற்றார். உபநயனம் புரியுங்கால், ஓதியுணர்ந்த அந்தணர்க்கு ஓதாதுணர்ந்த நம் பெருமானார் ஐயம்திரிபகற்றி, ஐந்தெழுத்தின் பெருமையெல்லாம் உபதேசித் தருளினார்.

திருநாவுக்கரசரொடு கூடியிருந்தார். அவருக்கு `அப்பர்` என்ற திருப்பெயர் உண்டானது, இவர் அழைத்ததால்தான். திருப்பாச் சிலாச்சிராமத்தில் கொல்லிமழவன் புதல்வியைப் பற்றிய முயலகன் என்னும் நோயை நீக்கினார். திருக்கொடி மாடச்செங்குன்றூரில் நச்சுக்காய்ச்சலைத் தவிர்த்து அடியரைக் காத்தார். திருப்பட்டீச்சரத்தில் முத்துப்பந்தரைப் பெற்றார். திருவாவடுதுறையில் உலவாக்கிழியாக ஆயிரம் பொன் பெற்றார். திருத்தருமபுரத்தில் யாழ்மூரிப் பதிகம் பாடி, அருட்பாடல் கருவியில் அடங்காத சிறப்பைப் புலப்படுத்தினார்.

திருமருகலில், பாம்புகடித்திறந்த வணிகனை உயிர்த்தெழச் செய்து, பெருவாழ்வுநல்கி, அவனையே நம்பியிருந்த திக்கில்லாத வளுக்குத் தெய்வத்துணையானார். திருச்செங்காட்டங் குடியையும், திருப்புகலூரையும் தரிசித்தார். சிறுத்தொண்டர், முருகர் முதலிய நாயனாரைச் சிறப்பித்துப் பாடினார். அங்கும் அப்பரைக் கூடினார். திருவாரூர்த் திருவாதிரைச் சிறப்புரைத்தார். திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றுப் பஞ்சத்தை ஒழித்தார். திருமறைக்காட்டில் அப்பருடன் கூடி, பாடித் திருக்கதவைத் திறந்து மூடுஞ் சீருடைய தாக்கினார். திருமதுரை சென்று, மங்கையர்க்கரசியாரையும் குலச் சிறையாரையும் சிறப்பித்தார். அரசன் வெப்பு நீங்கித் தப்பும்படி திரு நீற்றுப் பதிகத்தை அருளினார். அங்கு, தம் மடத்தில் இட்ட தீயை அரசனுக்கு வெப்புநோயாக்கினார். தீயில் இட்ட ஏட்டைப் பச்சை யாகக் காட்டினார். நீரிலிட்ட ஏடு எதிரேறிச்செல்லும் பாட்டினார் ஆனார். சைவர்மடத்தில் தீவைத்த காரணத்தால் கழுவேறியவர்களை விலக்காதிருந்தார். `வேந்தனும் ஓங்குக` என்று வாழ்த்திப் பாண்டியன் கூன் நிமிரச் செய்தார். பாண்டிநாடு, புறச்சமய இருளின் நீங்கித் திரு நீற்றொளியொடு விளங்கித் திருநெறியில் ஒழுகிற்று.

திருக்கொள்ளம்பூதூரில் ஓடம்போக்கினார்.
போதிமங்கை யில் எதிர்த்த புத்தநந்தியின் தலைமேல் இடிவிழ வைத்த நந்தி யாயினார். சிவிகையைத் தாங்கிய அப்பரைப்போற்றிச் சின்னாள் திருப்பூந்துருத்தியில் இருந்தார். ஒருவரையொருவர் உசாவிப் பாண்டிநாடு தொண்டைநாடுகளில் தரிசன விசேடங்களை அறிந்தனர். திருவோத்தூரில் ஆண் பனைகளைப் பெண் பனைகளாக்கினார். திரு மயிலாப்பூரில், தமக்கென்றிருந்து பாம்பு கடித்திறந்த பூம்பாவையின் எலும்பைக்கொண்டு, திருப்பதிகம்பாடி, உயிருடைய உருவமாக்கி யருளினார்; வீட்டையும் காட்டினார். திருநல்லூர்ப் பெருமணத்தில் நம்பாண்டார் நம்பிகள் திருமகளை மணம்புரியுங்கால், இவளொடும் சிவனடி சேர்வன் என்று திருக்கோயிலை உற்றுத் திருப்பதிகம் பாடி னார். திருமணம் காணவந்தார் எல்லாரும் அருள் மணம் புரிந்து அழியா இன்பம் அடைகின்றனர். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிப் பாடிய திருவைந்தெழுத்தின் பெருமையே எல்லா நலங்களுக்கும் காரணம். 

`நமச்சிவாய வாழ்க`
திருஞானசம்பந்தர் திருவடி வாழ்க.

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் எழுத்தாளர்: அ.ஜெகநாதன்