திருஞான சம்பந்தரின் : திருவண்ணாமலை உட்பட்ட தொண்டைநாட்டுத் தல யாத்திரை
தொண்டைநாட்டுத் தல யாத்திரை:
ஞானசம்பந்தர் கச்சித்திருஏகம்பப் பெருமானை வழிபடும் கருத்தினராய்ச் சீகாழியிலிருந்து புறப்பட்டுத் தில்லை சென்று ஆனந்தக் கூத்தனைப் பணிந்து மாணிகுழி, பாதிரிப் புலியூர், வடுகூர், வக்கரை இரும்பை மாகாளம் முதலிய தலங்களை வணங்கித் திருவதிகை வீரட்டம் தொழுது போற்றிக் கோவலூர் அறையணி நல்லூர் ஆகிய தலங்களை வணங்கி அண்ணாமலை சென்றடைந்தார். உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவனை வணங்கிப் பதிகங்கள் பாடி திருஓத்தூர் அடைந்து இறைவனைப் போற்றினார். சிவனடியார் ஒருவர் அடியவர்க்கெனத் தான் வளர்த்த பனைகள் அனைத்தும் ஆண்பனைகளாக இருத்தலையும் சமணர்கள் சிலர் சிவனருளால் காய்க்க வைக்க முடியுமா? என ஏளனமாகக் கேட்டதையும் ஞான சம்பந்தரிடம் கூற அவர் ஆலயம் சென்று வணங்கி, `பூத்தேர்ந்தாயன` என்னும் பதிகம் பாடிய அளவில் ஆண்பனைகளனைத்தும் பெண் பனைகளாய்க் குலையீன்றன. அடியவர் அதிசயித்தனர். சமணர்கள் பிழைபொறுக்க வேண்டியதோடு சைவ சமயத்தின் சிறப்பினை அறிந்து சைவ சமயத்திற்கு மதம் மாறி ஞானசம்பந்தரைப் போற்றினர்.
திருவோத்தூரிலிருந்து புறப்பட்டு ஞானசம்பந்தர் திருமாகறல் குரங்கணில் முட்டம் ஆகிய தலங்களை வணங்கிக் காஞ்சிபுரம் சென்றடைந்தார். கச்சி ஏகம்பம் , காம கோட்டம் ஆகிய ஆலயங்களை வணங்கிக் கொண்டு அத்தலத்தின் அருகில் விளங்கும், ஆலயங் களைப் போற்றிக் காரைக்காலம்மையார் முத்திப் பேறு பெற்றருளிய திருவாலங்காட்டை வணங்கிப் போற்ற எண்ணினார். அம்மையார் தலையால் நடந்து வந்த அத்தலத்தை மிதித்தற்கு அஞ்சி அத்தலத்தின் அருகில் உள்ளதொரு ஊரில் அன்றிரவு துயில் கொண்டார். ஆலங் காட்டு இறைவர் அவர் கனவில் தோன்றி நம்மைப் பாடுதற்கு மறந்தனையோ என்ன உடனெழுந்து `துஞ்சவருவாரும்` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். பின்னர் அவ்வூரை விட்டகன்று பாசூர் வெண்பாக்கம் காரிகரை ஆகிய தலங்களை வணங்கிக் கொண்டு காளத்தியை அடைந்தார். கண்ணப்பரின் பக்தித் திறம் போற்றிக் காளத்தி இறைவரைப் பணிந்து அங்குள்ள திருமடம் ஒன்றில் பலநாள் தங்கிப் பரவினார். அங்கிருந்தே வடதிசையிலுள்ள கயிலாயம், கேதாரம், திருப்பருப்பதம் முதலிய தலங்களைப் போற்றிப் பதிகங்கள் அருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவேற்காடு பணிந்து திருவொற்றியூரை வந்தடைந்தார்.
Comments
Post a Comment