சைவமும், புத்தமும் தழைத்தோங்கிய அமராவதி

சைவமும், புத்தமும் தழைத்தோங்கிய அமராவதி

அமராவதியில், 1797ல், பிரிட்டிஷ் அதிகாரி கலோனல் கோலின் மெக்காயின்சி தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில், 50 மீட்டர் விட்டத்தில், மாபெரும் ஸ்துாபியின் அடிப்பாகம் கண்டறியப்பட்டது. அதன் உயரம், 37 மீட்டர் இருந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டது. 'மஹாசைத்யா' எனும் அந்த ஸ்துாபியில், புத்த மதம் தழைத்தோங்கியதற்கான சான்றுகள் கிடைத்தன.

தொன்மை வாய்ந்த அமராவதி நகரம் குறித்து, வரலாற்றியல் துறையினர் கூறியதாவது:

சென்னை பல்கலை தொல்லியல் துறை முன்னாள் தலைவர், பேராசிரியர்பி.சண்முகம்: கி.மு., 3 மற்றும் 4ம் நுாற்றாண்டுகளில், ஆற்றங்கரையோர நகரங்களில் புத்த மதம் சிறந்து விளங்கியது. அதுபோல், கிருஷ்ணா நதிக்கரை அமராவதியிலும், புத்த மதம் தழைத்தோங்கியது. மவுரியர் ஆட்சிக் காலத்தில், அமராவதி, புகழ்பெற்ற புத்த தலமாக இருந்தது. குறிப்பாக, அசோகர் காலத்தில், அங்கு புத்த மதம் சிறப்புற்றிருந்தது. அங்கு, புத்த மதம் செல்வாக்கு பெற்று திகழ்ந்ததற்கு சான்றாக, மாபெரும் ஸ்துாபி, கல்வெட்டுகள் மற்றும் பல்வேறு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

அங்கு கிடைத்த சிற்பங்கள், ஒருங்கிணைந்த மதராஸ் மாகாணமாக இருந்தபோது, சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தன. மதராஸ் மாகாணத்தில் இருந்து, ஆந்திரா பிரிந்தபோது, அந்த சிற்பங்களில் சிலவற்றை, ஆந்திர அரசு பெற்றுக் கொண்டது. அவை தற்போது, அமராவதியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

சென்னை, பல்கலை முன்னாள் பேராசிரியர், எஸ்.எஸ்.சுந்தரம்:ஆந்திராவில், தற்போதைய கிருஷ்ணா மற்றும் குண்டூர் பிராந்தியங்களில் அமைந்திருந்த அமராவதியில், கி.மு., 220ல் இருந்து, சாதவாகன மன்னர்களின் ஆட்சி நடைபெற்றது. அது, ஐந்து நுாற்றாண்டு காலம் தொடர்ந்தது. பிற்காலத்தில், 17ம் நுாற்றாண்டில், அங்கு ஜமீன்தாரர்கள் கொடிகட்டி பறந்தனர்.

அவர்கள், கம்மவார் இனத்தைச் சேர்ந்தவர்கள். இன்றும், குண்டூர், கிருஷ்ணா மாவட்டங்களில், கம்மவார்கள், மிக அதிக அளவில் வாழ்கின்றனர். அப்பகுதியை பண்டைய காலத்தில், இந்திரன் ஆண்டதாக, அவர்கள் நம்புகின்றனர். அதனால், 'அப்போது, இந்திரன் ஆண்டார்; இப்போது, சந்திரன் ஆள்கிறார்' என கூறுகின்றனர்.

சென்னை, காயிதே மில்லத் கல்லுாரி, வரலாற்றியல் உதவி பேராசிரியை ஏ.ஜெயந்தி:
அமர் என்பது சிவனை குறிக்கும். சிவபிரானின் பெயரால் அமைந்த நகரம் அமராவதி. அமராவதி என்றால், அழியாத ஊர் என்றும் பொருள். தக்காண பீடபூமியில், அதாவது, தென்னிந்தியாவில் முதன்முதலாக, மிகப் பெரியதொரு சாம்ராஜ்ஜியத்தை அமைத்த பெருமை, இப்பகுதியை ஆண்ட சாதவாகனர்களையே சாரும். அவர்கள் காலத்தில், மிகப்பெரிய சிவாலயம், அமராவதியில் அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கான சான்றுகள், கந்தபுராணத்தில் காணப்படுகின்றன. சாதவாகனர்கள், தென்னகத்தைச் சார்ந்தவர்கள்; திராவிடர் என, அறியப்படுகின்றனர்.அமராவதி, புத்த மதக் கலை மற்றும் கலாசாரத் தொட்டிலாகவும் விளங்கியது. இங்கு, புத்தம் தழைத்தோங்கியது மட்டுமின்றி, அமராவதிக்கு மேலும் ஒரு சிறப்பு உள்ளது. காந்தாரக் கலை மற்றும் நாளந்தா கலை சிறந்து விளங்கிய சமகாலத்தில், அவற்றுக்கு இணையாக தென்னிந்தியாவில், அமராவதி கலை செழித்து விளங்கியது, சாதாரண விஷயம் அல்ல.

சாதவாகனர்களுக்கு பின், சுங்கா, துலுவா, சாளுவ மன்னர்கள் அங்கு ஆட்சி புரிந்தனர். இடைக்காலத்தில், டில்லி சுல்தான் வம்ச ஆட்சியின் ஒரு பகுதியாக அமராவதி கைமாறியது. ஆங்கிலேயர், ஆட்சிக்காலத்தில் ஒரு உடன்படிக்கையின்படி, பிரெஞ்சு அரசுக்கு இப்பகுதி தாரைவார்க்கப்பட்டது. இவ்வாறாக, பல்வேறு மன்னர்கள், கலை மற்றும் கலாசார மாற்றங்களை கண்டது, அமராவதி.இவ்வாறு அவர் கூறினார்.  நன்றி : தினமலர் 23/10/2015.

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள்