ஆந்திராவின் அமராவதி பல்லவ மன்னர் ஆட்சியிலும் தலைநகராக இருந்தது: வரலாற்று ஆய்வாளர் தகவல்
- Get link
- X
- Other Apps
ஆந்திராவின் அமராவதி பல்லவ மன்னர் ஆட்சியிலும் தலைநகராக இருந்தது: வரலாற்று ஆய்வாளர் தகவல்
By ஆர். மோகன்ராம், புதுக்கோட்டை
First Published : 24 October 2015 05:47 PM IST
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ள அமராவதி பகுதி பல்லவர் ஆட்சி காலத்தில் தலைநகராகத் திகழ்ந்ததாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் அ. சுபாஷ்சந்திரபோஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பல்லவர்கள் காலத்தில் காஞ்சிபுரமும், அமராவதியும் 2 தலைநகரங்களாகத் திகழ்ந்தன. அதில், முதலாம் குமாரவிஷ்ணு (பப்பா) (கி.பி. 225 - 250) தொண்டைமான் இளந்திரையனுக்குப் பிறகு பப்பதேவா என்ற முதலாம் குமாரவிஷ்ணு முற்காலப் பல்லவர்களில் முதல் ஆட்சியாளராகக் கருதப்படுகின்றார்.
சாதவாகனர்களில் பிந்தைய ஆட்சியர்களில் ஒருவரான மூன்றாம் புளுமாயி (கி.பி. 213-226) என்பவருடைய மேலாண்மையை ஏற்றுக்கொண்டு பப்பதேவா ஆட்சி செய்தார். மூன்றாம் புளுமாயி என்பவரின் மகன் வெளியிட்ட மயிதவோலு பிராகிருத சாசனம் தான்யகடகாவில் இருந்த ஒரு அரசு அதிகாரிக்கு வழங்கப்பட்டது.
விசயஸ்கந்தவர்மனின் முதல் ஓங்கோடு பட்டயம் பப்பாதேவாவுக்கு மகாராசா பட்டம் வழங்கியது என்பதைத் தெரிவிக்கிறது (Gandhidasan, M. 1985, The Early Pallava Chronology, NS Publications, Madurai, Pp. 92-94). மூன்றாம் புளுமாயி காலத்துக்குப் பின் பப்பா சுதந்திரமாக ஆட்சி செய்த நிலப்பரப்பு பாலாற்றிலிருந்து கிருஷ்ணா வரை பரவிக் கிடந்தது.
இந்நிலப்பரப்பை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அது மட்டுமல்ல இரண்டு தலை நகரங்களும் அவரது ஆட்சியில் இருந்திருக்கின்றன. அமராவதியை மையமாகக் கொண்டு தெலுங்கு மாவட்டங்களையும், காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தமிழகத்தின் ஒரு பகுதியையும் பப்பா ஆட்சி செய்திருக்கின்றார். காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவர்களில் முதலாவது மன்னராக வரலாற்றாசிரியர்கள் பலரால் பப்பா கருதப்படுகின்றார். (Gopalakrishnan, M (Ed). 2000, Gazetteers of India, Tamil Nadu State, Kanchipuram and Tiruvalluvar Districts (Erstwhile Chengalpattu District), Vol. I, Government of Tamil Nadu, Madras, p. 91). எனவே, பல்லவர்களின் முடியரசில் ஒரு தலைநகராகத்திகழ்ந்த அமராவதியை தற்போது நடைபெறும் குடியரசில் ஆந்திராவின் புதிய தலைநகரமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வை நாம் அனைவரும் எண்ணி பெருமை கொள்ள முடியும் என்றார். நன்றி : http://www.dinamani.com/tamilnadu/2015/10/24
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment