Skip to main content

முதல்முறையாக அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடுகிறது ஐ.நா. சபை

Published: April 10, 2016 11:51 ISTUpdated: April 10, 2016 11:52 IST

முதல்முறையாக அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடுகிறது ஐ.நா. சபை

பிடிஐ
COMMENT (8)   ·   PRINT   ·   T+  
ஏற்றத்தாழ்வுகளை களைந்து நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டும் வகையில் இந்திய சட்ட மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளை ஐக்கிய நாடுகள் சபை முதல்முறையாக கொண்டாட முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஒருநாள் முன்னதாக வரும் 13-ம் தேதி இதற்கான விழா நடத்தப்படுகிறது. கல்பனா சரோஜ் அறக்கட்டளையுடன் இணைந்து ஐ.நா நடத்தும் இந்த விழாவில் ‘ஏற்றத்தாழ்வுகளை களைந்து நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவது எப்படி’ என்ற தலைப்பில் விவாதமும் நடைபெறுகிறது.
இது குறித்து இந்தியாவுக்கான ஐ.நா.வின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பரூதீன் தன் ‘ட்விட்டர்’ பக்கத்தில் கூறும்போது, ‘‘பாபாசாகேப்பின் 125-வது பிறந்த நாளை, ஐ.நா. சபை முதல் முறையாக கொண்டாடவுள்ளது. சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை களையெடுக்கும் வகையில் அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா.வுக்கான இந்திய திட்ட அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘‘தேசத்தின் அடையாளமான பாபாசாகேப் மண்ணுலகை விட்டு மறைந்தாலும் இன்றும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு உந்துசக்தியாக இருக்கிறார். அவரது சமூக நீதி மற்றும் சமத்துவ கொள்கை இன்றும் உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. நிலையான வளர்ச்சி இலக்கு என்ற தொலைநோக்கு பார்வையை வகுத்து கொடுத்தவர் அம்பேத்கர். அவரது கொள்கையை தான் தற்போது ஐ.நா.சபை தத்தெடுத்து, வறுமை, பசி மற்றும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை வரும் 2030-க்குள் களையெடுக்க முடிவு செய்துள்ளது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் அரசியல் சட்டத்தை அமைத்த டாக்டர் அம்பேத்கர் கடந்த 1891, ஏப்ரல் 14-ல் பிறந்தார். 1956-ல் மறைந்த அம்பேத்கருக்கு 1990-ல் நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாக்பூரில் சோனியா பங்கேற்பு
அண்ணல் அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் நிறைவு விழா காங்கிரஸ் கட்சி சார்பில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வரும் 11-ம் தேதி நடைபெறுகிறது.
இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் எழுத்தாளர்: அ.ஜெகநாதன்