ஏதேனும் நியாயம் இருக்கிறதா?

அரசியல் நிர்ணய சபை டிசம்பர் 9, 1946 அன்று முதன் முதலாகக் கூடிய நாளிலிருந்து கணக்கிட்டால் அது தனது செயல்பாடுகளைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 17 நாட்கள் ஆகிவிட்டன. இக்காலகட்டத்தில் அரசியல் நிர்ணய சபை இதுவரை பதினோரு முறை கூடியுள்ளது. இந்த பதினோரு கூட்டங்களில் ஆறு கூட்டங்கள், நோக்கங்கள் குறித்த தீர்மானங்களை நிறைவேற்றவும், அடிப்படை உரிமைகள், கூட்டாட்சி அரசமைப்புச் சட்டங்கள், கூட்டாட்சி அதிகாரங்கள் மற்றும் மாநிலங்களின் அரசமைப்புச் சட்டங்கள், சிறுபான்மையினர், பட்டியல் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் ஆகியவை குறித்த ஆய்வுக் குழுக்களின் ஆய்வறிக்கையை விவாதிக்கவும் செலவிடப்பட்டது.
ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்றாவது கூட்டங்கள் வரைவு அரசமைப்புச் சட்டத்தை விவாதிக்க ஒதுக்கப்பட்டன. இந்த பதினோரு கூட்டங்கள் மட்டுமே ஏறத்தாழ 165 நாட்களை எடுத்துக் கொண்டன. இவற்றில் 114 நாட்களை வரைவு அரசமைப்புச் சட்டத்தை விவாதிக்க அரசியல் நிர்ணய சபை செலவிட்டது. வரைவுக் குழுவை எடுத்துக் கொண்டால் அது 29 ஆகஸ்ட் 1947 அன்று அரசியல் நிர்ணய சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அது தனது முதல் கூட்டத்தை
ஆகஸ்ட் 30 அன்று நடத்தியது. அன்றிலிருந்து இதுவரை 141 நாட்கள் அது பணியாற்றியுள்ளது. அக்காலகட்டத்தில் வரைவு அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அது ஈடுபட்டிருந்தது.
வரைவுக்குழு தனது அடிப்படை ஆவணமாக எடுத்து பணியாற்றுவதற்காக, அரசமைப்புச் சட்ட ஆலோசகரால் வரைவுக் குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட்ட அரசமைப்புச் சட்ட வரைவானது 243 தலைப்புகளையும் 13 பட்டியல்களையும் கொண்டிருந்தது. வரைவுக் குழுவால் அரசியல் நிர்ணயக் குழுவிடம் அளிக்கப்பட்ட முதல் அரசமைப்புச் சட்ட வரைவு 315 தலைப்புகளையும் 8 பட்டியல்களையும் கொண்டிருந்தது. அதன் மீதான விவாதத்தின் இறுதியில் வரைவு அரசமைப்புச் சட்டத்தின் தலைப்பு எண்ணிக்கை 386 ஆக அதிகரித்தது. அதன் இறுதி வடிவில் அரசமைப்புச் சட்ட வரைவானது 395 தலைப்புகளையும் 8 பட்டியல்களையும் கொண்டிருந்தது. அரசியல் சட்ட வரைவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் பட்டியல் ஏறத்தாழ 7,635 ஆக நீண்டது. இவற்றில் உண்மையில் அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட திருத்தங்கள் 2,473 ஆகும்.
நடந்த இந்த உண்மைகளை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், அரசியல் நிர்ணய சபை தனது பணிகளை முடிக்க மிக நீண்ட காலம் எடுத்துக் கொண்டது என்றும், மிகுந்த நிதானமாக செயல்பட்டு மக்கள் பணத்தை அது விரயமாக்குகிறது என்றும் ஒரு கட்டத்தில் சொல்லப்பட்டது. ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததோடு அது ஒப்பிடப்பட்டது. இந்தப் புகாரில் ஏதேனும் நியாயம் இருக்கிறதா?
பிற நாடுகளில் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட குழுக்கள் தங்கள் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டன என்பதை கவனிப்போம். சில சான்றுகளை மட்டும் எடுத்துக் கொண்டோம் என்றால், அமெரிக்க அரசியல் நிர்ணய சபை 25 மே, 1787 அன்று கூடி பின்னர் தனது பணியை 17 செப்டம்பர் 1787 அன்று முடித்தது. அதாவது நான்கு மாதங்களில். கனடாவின் அரசியல் நிர்ணய சபை 10 அக்டோபர் 1864 அன்று கூடியது. அரசமைப்புச் சட்டம் மார்ச் 1867 இல் சட்டமாக்கப்பட்டது. அதாவது 2 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்களை அது எடுத்துக் கொண்டது. 
ஆஸ்திரேலிய அரசமைப்புச் சட்டக் குழு மார்ச் 1891 இல் கூடியது. அரசமைப்புச் சட்டம் 9 சூலை, 1900 அன்று சட்டமாகியது. ஆக, ஒன்பது ஆண்டு காலம் எடுத்துக் கொள்ளப்பட்டது. தென்னாப்பிரிக்க அரசியல் நிர்ணயசபை அக்டோபர் 1908 இல் கூடி ஓராண்டு கால உழைப்பில் 20 செப்டம்பர், 1909 அன்று சட்டமாக்கியது. நாங்கள் அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. அதாவது, அமெரிக்க அல்லது தென்னாப்பிரிக்க அரசியல் நிர்ணய சபைகள் எடுத்துக் கொண்டதை விட அதிகம்தான். ஆனால், கனடிய அரசியல் நிர்ணய சபையை விட அதிக நேரத்தை நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஆஸ்திரேலிய அரசியல் நிர்ணய சபையைவிட மிகக் குறைவான நேரமே எடுத்துக் கொண்டுள்ளோம்.
எடுத்துக் கொண்ட காலத்தின் அடிப்படையில் ஒப்பீடு செய்யும்போது இரண்டு விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். ஒன்று அமெரிக்கா, கனடா, தென்னாப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலிய அரசமைப்புச் சட்டங்கள் நம்முடையதைவிட மிகச் சிறியவை. நான் முன்பே கூறியதைப்போல நமது அரசமைப்புச் சட்டம் 395 தலைப்புகளைக் கொண்டது. ஆனால், அமெரிக்க அரசமைப்புச் சட்டம் வெறும் 7 தலைப்புகளை மட்டுமே கொண்டுள்ளது. அவற்றில் முதல் நான்கும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மொத்தமாக 21 பிரிவுகளைக் கொண்டுள்ளது. கனடிய அரசமைப்புச் சட்டம் 147 பிரிவுகளையும், ஆஸ்திரேலிய அரசமைப்புச் சட்டம் 128 பிரிவுகளையும், தென்னாப்பிரிக்க அரசமைப்புச் சட்டம் 163 பிரிவுகளையும் கொண்டுள்ளன.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு திருத்தங்கள் எனும் சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய தேவை ஏற்படவில்லை. அவை எவ்வாறு முன்வைக்கப்பட்டனவோ அவ்வாறே நிறைவேற்றவும் பட்டன. ஆனால், இந்த அரசியல் நிர்ணய சபை ஏறத்தாழ 2,473 திருத்தங்களைக் கையாள வேண்டியிருந்தது.
இந்த உண்மைகளைக் கவனத்தில் கொண்டால், தேவையற்ற தாமதம் என்ற குற்றச்சாட்டு பொருளற்றதாகிவிடும். அத்துடன் இவ்வளவு குறைந்த காலத்தில் சாத்தியமில்லாத ஒரு செயலை முடித்ததற்காக அரசியல் நிர்ணய சபை தன்னைத்தானே பாராட்டிக் கொள்ளலாம். 
-    பி.ஆர். அம்பேத்கர்
அரசியல் நிர்ணய சபையில் 25 நவம்பர் 1949 அன்று டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய நீண்ட நிறைவுரையிலிருந்து சில பகுதிகளை மட்டும் தற்போதைய முக்கியத்துவம் கருதி "தலித் முரசு' இதழின் தலையங்கப் பகுதியில் வெளியிட்டுப் பெருமை கொள்கிறோம்.

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் எழுத்தாளர்: அ.ஜெகநாதன்