புத்தரும் புத்த மதத்தின் கோட்பாடுகளும் எழுத்தாளர்: பேரா. கே.ஏ.மணிக்குமார்
புத்தரும் புத்த மதத்தின் கோட்பாடுகளும் விவரங்கள் எழுத்தாளர்: பேரா. கே.ஏ.மணிக்குமார் தாய்ப் பிரிவு: புதுவிசை பிரிவு: ஏப்ரல்06 வெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2006 புத்தர் ஞானம் பெற்ற நாள்முதல் தனது 80 ம் வயதில் சாகும்வரை சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகள் தனது கருத்துக்களைப் பரப்பவும், மதத்திற்கு ஆதரவாளர்களைத் திரட்டவும் கிழக்கு கங்கைச் சமவெளிப் பகுதிகளில் (குறைந்தது ஐநூறு புத்த பிக்குகளுடன்) சுற்றுப்பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். மகத நாட்டு மன்னன் பிம்பிசாரன் மற்றும் கோசலநாட்டு அரசன் பிரசன்னாஜித் புத்தமதத்தின் புரவலர்களாவர். எதிர்பாராத விதமாக வாரணாசியின் செல்வந்தரான யாசர் புத்தமதத்தில் இணைந்ததைத் தொடர்ந்து நகர்ப்புறங்களில் வாழ்ந்த செல்வந்தர்கள் பலர் புத்த மதத்தின்பால் ஈர்க்கப்பட்டனர், சிற்றரசர்களும் புத்தருக்கு பெரும் ஆதரவைத் தந்தனர். குசி நகரத்திற்கு புத்தர் வருகை புரிந்த போது அவரைச் சென்று வரவேற்காதவர்கள் ஐநூறு காசுகள் அபராதம் செலுத்த வேண்டும் என மல்லர் தலைவர் உத்திரவிட்டிருந்ததாக சமகாலச் சான்றுகள் தெரிவிக்கின்றன. புத்தமதத் துறவிகளின் எண்ண...