தலித்துகளின் எதார்த்தநிலை உருவாக்கமும் காட்சி ஊடகத்தின் அரசியலும் எழுத்தாளர்: கோ.ரகுபதி

காட்சி ஊடகத்தின் வழியாக கதை மட்டுமல்ல கதையின் ஊடாக அரசியலும் கற்றுத்தரப்படுகிறது.  காட்சி ஊடகத்தில் கதை என்பது கதைப்பதற்காவோ கதை சொல்லுவதற்காகவோ அல்ல, கதை அரசியலுக்காகவே சொல்லப்படுகிறது.  இதன் அரசியலானது ஏற்க னவே இருந்துவருகின்ற சமூகத்தை தக்க வைத்துக் கொண்டு அதனை மேலும் வலுப்படுத்துவதாகும். காட்சி ஊடகம் விவாதங்களை உருவாக்குவதற்கான பொதுவெளியாக மாற்றப்பட வேண்டுமென்றால் மாற்று  ஊடகம் அவசியம்.  ஆவணப் படம், குறும்படம் இவையே காட்சி ஊடகத்தில் மாற்று ஊடகங்களாகும்.  மாற்று ஊடகம், சமூக மாற்றத்தின் மீதான பற்றுடைய சமூக ஆர்வலர்கள், இயக்கச் செயல்பாட்டாளர்கள் போன்றோரை இயக்குநர்களாக மாற்றியிருக்கிறது.  சமூக எதார்த்தங்களை, அவலங்களை ஆவணப் படங்களாகவும் குறும்படங்களாகவும் உருவாக்கியதன் மூலம் விவாதங் களுக்கு வித்திட்டிருக்கின்றனர் இவர்கள்.  இதற்குள்ளும் அரசியல் இருக்கிறது, இந்த அரசியல் மிக வெளிப்படையாகவும் நேரடியாகவும் பேசப்படுகிறது.  மாற்று காட்சி ஊடகங்கள் மூலம் சமூக மாற்றத்திற்காக உரு வாக்கப்பட்ட ஆவண, குறும்படங்கள் பலவற்றினையும் ஒருசேர பார்ப்பதற்கான வாய்ப்பினை முனைவர் சி. லட்சுமணன் ஏற்படுத்தித் தந்தார்.
தலித் மெய்மையின் பிரதி: காட்சிப் பிரதியின் அரசியல் என்ற தலைப்பில் 2010 ஜனவரி, 25-27 ஆகிய நாட்களில் ஆவணப்பட திரையிடல் மற்றும் சித்திரக் கண்காட்சியும் மால்கம் ஆதிசேஷையாவின் நூற்றாண்டு விழாவின் ஒரு அங்கமாக இந்த நிகழ்வினை மால்கம் ஆதிசேஷையா நிறுவிய சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், விகாஸ் அத்யாயன் கேந்த்ரா மற்றும் பிராகிருதி ஃபவுண்டேசன் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின.  ஆவணப்படங்கள் திரையிடப்படும் நேரம், ஒவ்வொரு ஆவணப்படங்களின் உள்ளீடு, ஆவணப்பட விமர்சகர்கள் குறித்த குறிப்பு, சிற்றுண்டி மற்றும் உணவு  இடைவேளை என நிகழ்ச்சிநிரல் நேர்த்தியாக தயாரிக்கப்பட்டிருந்தது.  தொடக்க உரையில் தியடோர் பாஸ்கரன், அரசு ஆட்சி குறித்த பிரச்சா ரத்திற்கே ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டன என வரலாற்றினைக் கூறினார்.  தலித் அரசியல் எழுச்சிக்குப் பிறகான நாட்களில் சமூக செயல்பாட்டாளர்கள் ஆவணப்படம் என்ற வடிவத்தின் மூலம் சமூக அவலங்களை, சாதியின் கொடுமைகளை ஆவணப்படுத்தத் தொடங்கினர்.  இதனை நாம் ஒரு மாற்று காட்சி ஊடகமாகவும் பார்க்க முடிகிறது.எந்த ஓர் ஊடகமும் ஆதிக்கம் செலுத்தும்பொழுது அது கவனப் படுத்தாத விசயங்களை முன்னெடுக்க, மாற்று ஊடகம் என்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது என்றார் தியோடர். 
பேராசிரியர் மாதவ பிரசாத், திரைப்படத்திற்கான இயக்கத்திற்கும், இயக்கங்களுக்கான திரைப்படத்திற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது.  முதலாவது, திரைப்படத்தை மையப் படுத்துகிறது, இரண்டாவது இயக்கச் செயல்பாட்டினை முன்னிறுத்து கிறது.  தலித் ஆவணப்படம் தலித்துகளின் பிரச்சினைகளை படம் பிடித்தல் என்ற நிலையினைக் கடந்து வியாபார ஊடகங்கள் செய்யத் தவறியதை கவனப்படுத்தாதை கவனப்படுத்த வேண்டும் என்றார். அறிமுக உரையில் முனைவர் சி. லட்சுமணன், சமூக நீதி மற்றும் சமத்துவம் என்பது இடஒதுக்கீடு மூலம் மட்டும் அடையப்பெறுவதில்லை.  அதற்குப் பல தளங்களிலும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.  அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இயங்குகின்ற கலைப் பண்பாட்டிற்கான அரங்கத்தில் தலித் கலைகளுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.  பல கலைப் பண்பாட்டிற்கான அரங்கத்தில் தலித் ஆவணப்படங்களுக் கும் சித்திரங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டே வருகிறது.  எனவே, தலித்துகளின் ஆவணப்படங்களுக்கும் சித்திரங்களுக்கும் முக்கியத்தும் கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.  இதன் விளைவுதான் தலித் மெய்மையின் பிரதி: காட்சிப் பிரதியின் அரசியல்- ஆவணத் திரைப்படம் மற்றும் சித்திரக் காண்காட்சித் திருவிழா என்றார் அவர். 
ஆந்திராவிலுள்ள மாதிகா சாதியினரின் வாழ்க்கையினூடே பறை இசைக் கருவி மற்றும் மாட்டிறைச்சியைக் கொண்டாடுவதாக ''மஹாதிகா''  என்ற ஆவணப்படம் சுரேஷ் மற்றும் சிந்து ஆகியோரால் தயாரிக்கப்பட்டிருந்தது.  மாதிகா குழந்தைகள் மாட்டினை வெட்டும் பொழுது கிடைக்கின்ற ஊத்தாம்பட்டி என்று அழைக்கப்படும் குடலினை எடுத்து உடைந்த மண் பானையின் கழுத்துப்பகுதியில் அதனைக் கட்டி இசைக்கத் தொடங்கு தல் என மாட்டிறைச்சியும் பறையிசையும் இரண்டறக் கலந்திருப்பதனை யும் அது குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுக் கொள்ளப்படுவதனை யும் இயக்குநர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். இப்படம் தொண்டு நிறு வன பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பங்கேற்பாளர் ஒருவர் விமர்சித்தார். தலித்துகள் கொண்டாடுவதற்கென எது விட்டுவைக்கப் பட்டுள்ளது? பறையிசையினையும் மாட்டிறைச்சியையும் தவிர.  பறை எனது சேரியிலுள்ள வீட்டில் வைத்திருக்கவில்லை நகரத்தில் நான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பிலும் எனது அலுவலகத்திலும் வெளிப்படையாக வைத்திருக்கிறேன், என் வீட்டிற்கு வருகின்ற நண்பர் களுக்கு (பிராமணர் உட்பட) மாட்டிறைச்சியினையும் விருந்தளிக்கிறேன் என்று பதிலளித்தார் சுரேசு. 
நிறவெறிக்கு எதிராக நடைபெற்ற டர்பன் மாநாட்டில் இந்தியாவிலுள்ள தீண்டாமையும் விவாதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக தலித் மீடியா ஃபவுண்டேசன் தயாரிப்பில்  ஆர்.ஆர். சீனிவாசன் இயக்கிய ""தி அன்டச்சபிள் கண்ட்றி'' என்ற ஆவணப்படம் தலித்துகள் மீதான வன் முறை, தீண்டாமை போன்றவற்றினை வரலாற்று ரீதியாக ஆவணப்படுத்தியிருந்தது.  இப்படத்தில் பள்ளர், பறையர் குறித்து மட்டுமே பேசப் பட்டிருக்கிறது அருந்ததியர் குறித்து பேசப்பட்டிருக்கவில்லை என்று பங்கேற்பாளர் விமர்சித்தார்.  உலகளவில் நிறவெறிக்கு எதிராக நடைபெற்ற மாநாட்டிற்காக தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் என்பதால் தலித் உட்சாதி சிக்கல் குறித்து கவனம் பெற்றிருக்கவில்லை என்றார் இயக்குநர்.  இரண்டாம் ஜாலியன் வாலாபாக் என்றழைக்கப்படும் தாமிரபரணி படுகொலை குறித்த ஆர்.ஆர்.சீனிவாசனின் ஒரு நதியின் மரணம்  என்ற ஆவணப்படமும் திரையிடப்பட்டது.  இந்த படத்தை தயாரித்த பொழுதுதான் அரசு பொய்யை கட்டவிழ்த்து விட்டுக் கொண்டே இருப்பதை புரிந்து கொண்டதாக  கூறினார்.
நடந்த கதை, பந்திபோஜனம் ஆகிய குறும்படங்கள் தலித்துக ளின் சிக்கலைக் கூறுவதற்கு முயன்றிருக்கின்றன.  பொன் சுதா இயக்கத்தில் உருவான நடந்த கதை தலித்துகள் செருப்புப் போடு வதற்கு இருந்த சமூகத்தடையினால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சாதி இந்துக்கள் அணிந்திருந்த காலணிகளை எடுத்து தூரே எரிந்துவிடுகிறார். சாதி இந்துக்கள் செருப்பு அணியக் கூடாது என்ற நோக்கத்திற்காக அல்ல மாறாக, செருப்பின்றி நடப்பதால் ஏற்படும் இன்னல்களை அவர் களும் ஒருநாள் அனுபவித்து பார்க்க வேண்டும் என்பதற்காக.  அவ்விளைஞர் இராணுவ வீரராக மாறிய பின்னர் புதைமிதி அணிந்துகொண்டு நெஞ்சினை நிமிர்த்திக் கொண்டு  சொந்த கிராமத்திற்குள் நடந்து வருகிறார், அச்சமயம் அவர் ஆதிக்கச் சாதியினரால் தடுத்து நிறுத்தப்பட்டு புதைமிதியை அகற்றுமாறு அச்சுறுத்தப்படுகிறார்.  இராணுவவீரரான அவர் அடிபணிய மறுத்து அவர்களை தான் திருப்பி தாக்கிவிடுவதாகக் கூறிவிட்டு புதை மிதியை ஓங்கி ஓங்கி பூமியில் மிதித்து நடந்து செல்கிறார்.  செருப்பு அணிகிற உரிமைக்காக ஆதிக்கத்தின் குறியீடான இராணுவத்தினை முன்னிறுத்தி யிருப்பது குறித்து விமர்சிக்கப்பட்டது.  கடந்தகால வரலாற்றினை நோக்கும் பொழுது ஆதிக்கத்திற்கு எதிராக போராடிய பல தலித்துகள் இராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் என்பது சுட்டிக்காட்டப்பட்டது.  மிகச் சமீபத்தில் தமிழகத்தில் தலித் இளைஞர் ஒருவர்  செருப்பு அணிந்த குற்றத்திற்காக அவரது வாயில் மனித மலம் திணிக்கப்பட்ட கொடுமையினைச் சுட்டிக்காட்டி இப்படத்திற்கு இன்று பொருத்தம் இருப்பதாகக் கூறினார் ஆதவன் தீட்சண்யா.
பலராலும் பாராட்டப்பட்ட போதிலும் அதில் சில தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பதும் சுட்டிக் காட்டப்பட்டது.  நடந்த கதை போல் மீசை வைத்த கதை, மேலுடுப்பு அணிந்த கதை, டீக்கடையில் இருக்கையில் அமர்ந்து டீ குடித்த கதை என பல கதைகள் குறித்து ஆவணப்படம் எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.  ''பந்தி போஜனம்'' ஒரு மலையாள மொழிப்படம்.  இந்தியாவிலேயே அதிகம் கல்வி கற்ற மேதாவிகளின் நாடு என்று கூறப்படும் கேரளாவில் உணவு உண்ணும் பொழுது இருக்கிற பாகுபாடு படமாக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் உணவு உண்ணும் பொழுது ஆதிக்கச்சாதியினர் தலித்துகளோடு அமர்ந்து உண்ணாதிருப்பதையே குறும்படமாக தயாரித்திருப்பதாக ஒரு மலையாள தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்திருந்தார் அக்குறும்படத்தின் இயக்குநர் ஸ்ரீபால கே. மேனோன். ஆனால் அப்படத்தில் உண்ணும் பொழுது வழக்கறிஞர்களி டத்தில் இருக்கின்ற பாகுபாடு கூறப்பட்டிருப்பினும் இப்பாகுபாட்டினை ஒழிப்பதற்காக பந்திபோஜனம் நடத்தப்படுவதாக இல்லை. மாறாக, தலித் வழக்கறிஞர் மற்றும் ஆதிக்கச்சாதி  வழக்கறிஞர் ஆகிய இருவர் ஒரு வழக்கில் ஒருவர் எதிரிக்காகவும் மற்றவர் எதிர்வாதிக்காவும் வழக்காடுகின்றனர், இரண்டு வழக்கறிஞர்களும் பெண்கள். 
இந்த வழக்கின் தலித் வழக்கறிஞர், வழக்கறிஞர்கள் உண்ணும் பொழுது ஒதுக்கப்படுகிறார்.  ஆதிக்கச்சாதி வழக்கறிஞர் தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தலித் வழக்கறிஞருக்கு தன் வீட்டில் விருந்திற்கு ஏற்பாடு செய்கிறார். தலித் பெண் வழக்கறிஞர் தன் வீட்டில் சமைக்கப்பட்ட சேற்று மீன் கொண்டு வருகிறார், இவை அங்கு ஆதிக்கச்சாதியினர் உண்பதில்லை, ஆனால் அவர்கள் மாட்டுக்கறி உண்கின்றனர்.  இந்த பந்தி போஜனத்தினால் வழக்கில் சமரசம் ஏற்படுகிறது.  இந்த குறும்படத்தினை பார்த்த பொழுது ஆதிக்கச் சாதி வழக்கறிஞர் தான் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே பந்தி போஜனத்திற்கு ஏற்பாடு செய்ததாகத் தெரிகிறது.  இக்குறும்படம் இந்த ஆவணப்பட விழாவில் திரையிடுவதற்கு ஏற்றதல்ல என்றார் ஆர்.ஆர். சீனிவாசன். உணவில் பாகுபாடு என்பது ஏதாவது ஒரு வடிவத்தில் இந்தியா முழு மைக்கும் இருந்து கொண்டிருக்கிறது.  மாட்டுக்கறி தலித்துகளின் உண வாக இருக்கிறது ஆனால் கேரளாவில் ஆதிக்கச்சாதியினரும் அதனை உண்கின்றனர்.  ஆனால் அங்கு ஒருவகையான மீன்களை தலித்துகள் மட்டுமே உண்கின்றனர், ஆதிக்கச்சாதியினர் அதனை உண்பதில்லை என்பதை இக்குறும்படம் கூறுகிறது. இது உணவில் சாதி இருப்பதையே உணர்த்துகிறது என்றார் செரீன்.  குறும்படங்களில்கூட தலித் சிக்க லினைக் கூறும் பொழுது அப்பாத்திரத்திற்கான வாய்ப்பு தலித்துகளுக்கு வழங்கப்படுவதில்லை.  இக்குறும்படத்தில் தலித் வழக்கறிஞராக நடித் திருக்கும் பெண் ஆதிக்கச்சாதியினைச் சேர்ந்தவர் என்று விமர்சித்தார் ஓவியர் சசி.
அருந்ததியர் உள்இட ஒதுக்கீட்டிற்கு வலுசேர்க்கும் விதமாக எடுக்கப்பட்டிருந்த ''தண்டோரா'' என்ற ஆவணப்படத்தினை ஸ்ரீவாஸ் இயக்கி யிருந்தார்.  இப்படம் திரையிட்ட பின்னர் 'அமைதியே' நிலவியது.  ஏன் இந்த மவுனம் என்ற கேள்வியை எழுப்பி தனது விமர்சனத்தினைத் தொடங்கிய ஆதவன் தீட்சண்யா, தமிழகத்தில் அருந்ததியர்க்கான உள் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட பொழுது எண்ணிக்கையில் பெரும்பான் மையான தலித் சாதிகளான பள்ளர், பறையர் ஆகியோரிடத்தில் இருந்து எதிர்ப்பு வராதது அவர்களிடத்திலிருக்கின்ற ஜனநாயகப் பண்பே என்று சுட்டிக்காட்டினார்.  தமிழக தலித்துகளுக்கு இருக்கின்ற 18% இட ஒதுக் கீட்டிலிருந்தே 3% அருந்ததியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது.  தமிழக தலித்துகளில் எண்ணற்ற சாதிகள் இருக்கின்றனர்.  பள்ளர், பறையர், அருந்ததியர் ஆகியோருக்கு சேவகம் செய்கின்ற புதிரை வண் ணார், குறவர் போன்றோர் இடஒதுக்கீட்டின் எவ்வித பலனையும் அனுப வித்திருக்கவில்லை, இவர்களுக்கு என்ன தீர்வு?  நான்காம் நிலைப் பணியில்தான் தலித்துகளுக்கு பெரும்பாலும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, 18 சதவீதத்திலிருந்து அருந்ததியர்களுக்கு உள்இட ஒதுக் கீடு வழங்குவதற்குப் பதிலாக வேறு மாற்று குறித்து சிந்திக்க வேண்டும் என்ற விமர்சனமும் எழுந்தது. 
குட்டிரேவதியின் ''கல்மனிதர்கள்'' என்ற ஆவணப்படம் கல்லுடைக்கும் தொழிலாளிகளின் சிக்கலினை மட்டும் ஆவணப்படுத்தியுள்ளது.  இதில் கல்லுடைக்கும் தொழிலில் ஈடுபட்டிருக் கும் கல் ஒட்டர்கள் யார், எங்கிருந்து வந்தனர் என அவர்கள் குறித்த எவ்வித பின்புலமும் பேசப்பட்டிருக்கவில்லை என்ற விமர்சனத்தை முனைவர் பவனந்தி வேம்புலு முன்வைத்தார். மேலவளவு தலித் பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட சிலர் கொலை செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு  மேலவளவு என்ற ஆவணப்படத்தை சாந்தா இயக்கியிருக்கிறார்.  தலித்துகளின் சோகம், துக்கம் இவை மட்டுமே இவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது, கொலை செய்யப்பட்ட முருகேசன் தான் ஆதிக்கச்சாதியினரால் கொலை செய்யப் பட இருப்பதனை ஏற்கனவே அறிந்திருந்து கொண்டுதான் பஞ்சாயத்து பணிகளை செய்து வந்தார்.  எனவே, முருகேசனின் வீரம் பதிவு செய்யப் பட்டிருக்க வேண்டும் என்று விமர்சித்தார் முனைவர் மா. வேலுச்சாமி.  கோபால் மேனோன் இயக்கிய ரெசிலன்ட் ரிதம்ஸ் என்ற ஆவணப்படம் இந்தியா முழுமைக்கும் நடைபெறும் தலித்துகள் மீதான வன்முறை யினை பதிவு செய்திருந்தது.  பார்வையாளர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இப்படம் சம்பவம் நடக்கும் பொழுதும், நடந்துமுடிந்த அடுத்த நிமிடம் என வன்முறை நிகழ்வுகளை அவ்வாறே பதிவு செய்யப்பட்டுள் ளது.  இங்கு சம்பங்களே பேசுகிறது.  இந்த ஆவணப்படத்தின் மீதான விமர்சனத்தின் பொழுது இந்தியா ஒரு ஜனநாயாக நாடுதானா? என்ற கேள்வியை எழுப்பினர் கோபால் மேனோன்.
இந்த திருவிழாவின் ஒரு அங்கமாக மூன்று நாட்களும் தலித் சித்திரங்கள் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தன. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவ னத்தின் சிறிய வளாகத்தின் குறுகிய இடத்தில் நேர்த்தியாகவும் சிறப்பா கவும் கண்காட்சியினை அமைத்திருந்தார் முனைவர். சி. லட்சுமணன்.  இது இருக்கின்ற வெளியை எவ்வாறு, எந்த நோக்கத்திற்காகப் பயன் படுத்திக் கொள்ளவேண்டும் என்ற ஒரு பாடம்.  நிறைவுவிழா பேரா.ஆ.இரா.வேங்கடசலபதி தலைமையில் நடைபெற்றது. மூன்றுநாட்களும் திரையிடப்பட்ட படங்கள் குறித்து உரையாற்றிய சதானந்த மேனோன், காட்சி ஊடகம் பரவலாகி வருகிறது.  பாலியல் வன் கொடுமை,  படுகொலை, நிலமின்மை, அழுகை,  சோகம், வறுமை இவற்றினை மட்டுமே மையப்படுத்தி  தலித் ஆவணப்படங்கள் வெளி வந்திருக்கின்றன. இவை மட்டும் தலித் வாழ்க்கை அல்ல, தலித்துகளின் பண்பாட்டு விசயங்களை நோக்கியும் பயணிக்க வேண்டும்.  கடந்த 6 மாதங்களில் 6ஆவணப் பட விழாக்கள் நடைபெற்றுள்ளன.  இது போன்ற விழாக் கள் ஆவணப்படத்திற்கான முக்கியத்துவத்தை மீண்டும் உறுதி  செய்வனவாக அமைகின்றது.  தலித் ஆவணப் படங்கள் தலித்துகளை படம் பிடிப்பதைவிட ஒடுக்குகின்ற ஆதிக்கச்சாதியினரை படம் பிடிக்கவேண்டும்.  ஆதிக்கச் சாதியினரின் சாதிய மனங்களை விவரிக்கும் இதுபோன்ற படங்களின் பார்வையாளர்கள் தலித்துகளாக இருப்பதை விட ஆதிக்கச்சாதியினராக இருப்பதே பொருத்தமாக இருக்கும் என்றார் சதானந்த மேனோன்.
ஆனந்த் டெல்டும்ப்டே தனது உரையில், எல்லாவற் றிற்கும் -தலித் இலக்கியம், தலித் கலைவிழா- என தலித் என்ற முன்னொட்டு சேர்ப்பது ஏன் என்று மராட்டிய எழுத் தாளர் விஜய் டெண்டுல்கர் வினவினார்.  அப்பொழுது தலித் பேந்தர் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான மஹாதேவின் தலித் இலக்கியம் அவருக்கு வாசிப்பதற்கு கொடுக்கப்பட்டது.  அதனை முழுமையாக வாசிக்க முடியாமல் அதில் இருப்பது என்னவென்று புரியவில்லை என்று கூறியிருக்கிறார்  விஜய், அதுதான் தலித் இலக்கியம். தலித் வாழ்வை எளிதாக வாசித்து புரிந்து கொள்ள முடியாது. அதனை அனுபவிக்க வேண்டும் என்று அவருக்குக் கூறப்பட்டதாம்.  தலித் இலக்கியத்திற்கென தனி அடையாளம் இருக்கிறது அதனால்தான் தலித் என்ற முன்னொட்டு இருக்கிறது என்றார் ஆனந்த் டெல்டும்ப்டே. இந்த தலித் ஆவணப்படம் மற்றும் சித்திரக் கண்காட்சித் திருவிழா இந்திய அளவில் ஒரு முதல் முயற்சியாகக் கூறப்பட்டது, இது ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும் என்று பலராலும் வலியுறுத்தப்பட்டது.  ஊடகம் என்பது ஒரு பொதுவெளி.  இதனை பொதுவிவாத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது இந்நிகழ்வு.  இந்த விவாதம் தலித் விடுதலையினை கூர்மைப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும்.  இன்றைய தொழில் நுட்பத் தில் (தலித்துகள் உட்பட) பலருக்கும்  நிழற்படக் கருவி வாங்குவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது, இதனை எவ்வாறு  எதற்காகப் பயன்படுத்தப் போகிறோம்?
- கோ.ரகுபதி

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் எழுத்தாளர்: அ.ஜெகநாதன்