புத்தரும் புத்த மதத்தின் கோட்பாடுகளும் எழுத்தாளர்: பேரா. கே.ஏ.மணிக்குமார்
புத்தரும் புத்த மதத்தின் கோட்பாடுகளும்
புத்தர் ஞானம் பெற்ற நாள்முதல் தனது 80 ம் வயதில் சாகும்வரை சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகள் தனது கருத்துக்களைப் பரப்பவும், மதத்திற்கு ஆதரவாளர்களைத் திரட்டவும் கிழக்கு கங்கைச் சமவெளிப் பகுதிகளில் (குறைந்தது ஐநூறு புத்த பிக்குகளுடன்) சுற்றுப்பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். மகத நாட்டு மன்னன் பிம்பிசாரன் மற்றும் கோசலநாட்டு அரசன் பிரசன்னாஜித் புத்தமதத்தின் புரவலர்களாவர். எதிர்பாராத விதமாக வாரணாசியின் செல்வந்தரான யாசர் புத்தமதத்தில் இணைந்ததைத் தொடர்ந்து நகர்ப்புறங்களில் வாழ்ந்த செல்வந்தர்கள் பலர் புத்த மதத்தின்பால் ஈர்க்கப்பட்டனர், சிற்றரசர்களும் புத்தருக்கு பெரும் ஆதரவைத் தந்தனர். குசி நகரத்திற்கு புத்தர் வருகை புரிந்த போது அவரைச் சென்று வரவேற்காதவர்கள் ஐநூறு காசுகள் அபராதம் செலுத்த வேண்டும் என மல்லர் தலைவர் உத்திரவிட்டிருந்ததாக சமகாலச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
புத்தமதத் துறவிகளின் எண்ணிக்கை கூடிய பிறகு புத்தர் அவர்களை நாட்டின் பல பகுதிகளுக்கு அனுப்பி புத்தமதத்தை பரப்பச் செய்தார். அதேநேரத்தில் மதமாற்ற நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். உருவேலாவில் (புத்தகயா) முனிவர் கசப்பாவை புத்தமதத்திற்கு மாற்றியதன் மூலம் அவரது ஆதரவாளர்களையும் புத்தமதத்தில் இணைத்தார். கசப்பா புத்தரை தனது குருவாக ஏற்றது புத்தரின் செல்வாக்கை அதிகரிக்க உதவியது. மடாலயம் அமைக்க பிம்பிசாரன் நன்கொடையாக வழங்கிய மூங்கில் காட்டைப்பெற மகதநாட்டுத் தலைநகரான ராஜகிரிகா சென்ற புத்தர் இரு பிராமண பிரமுகர்களை (சரி புத்திரர், மொகல்லானா) மதம் மாறச் செய்து பின்னர் அவர்களை தனது நம்பிக்கைக்குரிய தூதுவர்களாகப் பயன்படுத்தினார்.
கோசல நாட்டின் தலைநகர் சிரவஸ்தி சென்ற புத்தருக்கு அந்நகரின் பெருவணிகன் அனத்த பின்டிகா மடாலயம் ஒன்றைக்கட்டி நன்கொடையாக புத்தருக்கு வழங்கினான். சிரவஸ்தியில் மற்றொரு பெருவணிகரின் மனைவி விசாகா புத்தரின் சீடரானார். புத்தர் தனது மடாலயத்தினுள் பெண்களை அனுமதித்த போதிலும் பெண்கள் பற்றிய அவரது கருத்து பிற்போக்குத்தனமாகவே இருந்தது. ஆண்களின் நன்மைக்காக மட்டுமே புத்தர்கள் இவ்வுலகில் அவதரிக்கிறார்களா? என்ற ஆனந்தாவின் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாத புத்தர் அவரது வேண்டுகோளை ஏற்று பெண்களை புத்தசங்கத்தில் சேர அனுமதித்ததாக அறிகிறோம். தன்னுடன் வாதாடிய ஆனந்தாவிடம் புத்தர் பெண்கள் பற்றி கீழ்கண்டவாறு கூறுகிறார். ‘‘பெண்கள் ஆத்திரக்காரர்கள், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள், பொறாமைக்காரர்கள், முட்டாள்தனமானவர்கள். எனவேதான் ஆனந்தா பொது அவைகளில் பெண்களுக்கு இடம் கிடையாது.’’
மடாலயங்களில் பெண் துறவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை புத்தர் விதித்திருந்தார். பல்லாண்டுகள் சங்கத்தில் பணிபுரிந்திருந்தவர்கள் கூட, சமீபத்தில் சேர்ந்திருந்த சகோதர ஆண் துறவிகளைக் கண்டால் வணங்கி மரியாதை செய்யவேண்டும். எந்த ஒரு ஆண் துறவியும் பெண்களை நேரடியாக முகம் பார்த்துப் பேசக்கூடாது என புத்தர் கட்டளையிட்டிருந்தார்.
புத்தர் தனது போதனைகளை பீஹாரின் ஆதி மொழியாகக் கருதப்பட்ட அர்த-மகதியில் வழங்கினார். நீண்ட உரைகளாக இருந்த அவற்றை யாரும் எழுதி வைக்கவில்லை. அவரது பெரும்பாலான கருத்துக்கள் மொழி பெயர்க்கப்பட்டவைகளாக பாலி மொழியில் இருந்தன. இவை அனைத்தும் புத்தர் இறந்த பிறகு அவரது சீடர்கள் புத்தர் கூறியதாக எடுத்துக் காட்டியவைகளே ஆகும். திரிப்திகா என்ற நூல் புத்தரது பெரும்பாலான போதனைகளை உள்ளடக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.
புத்தர் மக்களின் மொழியிலேயே துறவிகள் போதனை செய்ய வலியுறுத்தினார். அதுபோல் புத்தரின் கருத்துக்களை ஒவ்வொருவரும் தங்களது சொந்த மொழியில்தான் கற்கவேண்டும் எனவும் புத்தர் உத்தரவிட்டிருந்தார். பல்வேறு சமூகச் சூழல்களில் இருந்து வரும் துறவிகள் மக்கள் மொழியில் போதிக்கும்போது புத்தரின் கோட்பாட்டில் உள்ள கருத்துச் செறிவு பாழாகிவிடுவதாக, பிறப்பால் பிராமணரான ஓர் புத்த துறவி சுட்டிக்காட்டி புத்தரது கருத்துக்களை சமஸ்கிருத மொழியில் போதிப்பது நல்லது என வாதாடியபோது, புத்தர் அவர் வாதத்தை நிராகரித்துவிட்டார்.
புத்த மதம் மேட்டுக் குடிமக்களின் மதமாக மாறியபோதிலும் எல்லா வர்க்கத்திலிருந்தும், சாதியிலிருந்தும் ஆதரவாளர்களை சங்கத்தினுள் புத்தர் அனுமதித்தார். உபாலி என்ற சவரத் தொழிலாளி, கோவில்களில் துப்புறவுத் தொழிலாளியாக இருந்த சுனிதா ஆகியோர் புத்தரால் சங்கத்துக்குள் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். வர்க்கம், சாதி, இனம், மற்றும் குலம் ஆகியவற்றால் மனிதனுக்கு-மனிதன் இடையே ஆன வேறுபாடுகள் மேலோட்டமானது என்றார் புத்தர். சாதியின் அடிப்படையில் சமுதாயத்தில் எந்நிலையில் இருந்தாலும் இரக்கமுடையவர்களாயிருந்தால் முக்தி அடைய முடியும் என புத்தர் மறுத்தபோதிலும், சாதியத்தை நேரடியாகத் தாக்கவோ, அல்லது அதை எதிர்கொள்ளவோ முயற்சிக்கவில்லை என்ற விமரிசனம் உண்டு. ஆனால் புத்தரின் சடங்குகள் அற்ற சமயம் பிராமணர்களின் தொழிலுக்கும், அவர்களது பிழைப்புக்கும் அச்சுறுத்துதலாக அமைந்தது. அவர் சாதி அமைப்பை நிராகரித்தது பிராமணர்களின் சமூக மேலாண்மையை கேள்விக்குள்ளாக்கியது.
சமூக நல்லுறவு, தர்மம், அனைத்திற்கும் மேல் பாலுணர்வுக் கட்டுப்பாடு ஆகியவை சமூக நன்மை அதிகரிக்க உதவும் என புத்தர் நம்பினார். சமூக உறவில் நல்லிணக்கம் என்பது பெற்றோர்களுக்கும் - குழந்தைகளுக்குமிடையே மட்டுமல்லாது எஜமான் - அடிமை, முதலாளி - தொழிலாளி இடையேயும் ஆகும் என புத்தர் எடுத்துரைத்தார். இக்கண்ணோட்டத்தில் தனிநபர் சொத்து, குடும்ப பாசம் ஆகியவை மதநலனுக்குப் பாதகமானதாக புத்தர் கருதியபோதிலும் அவற்றை ஒழிக்க முயற்சி ஏதும் மேற்கொள்ளவில்லை.
புத்தசங்கத்தில் வர்க்க அல்லது சாதிய பேதங்கள் கிடையாது. அனைவரும் தோழர்களாக கலந்து உரையாடினர். ஒன்றாக உணவருந்தினர். கங்கை, யமுனை, அசிர்வதி மற்றும் மாகி போன்ற நதிகள் கடலினுள் கலந்தவுடன் தங்களுடைய முன்னாளைய பெயர்களையும், பிறப்பிடத்தையும் இழந்துவிடுவது போல் புத்தமதத்தில் சங்கமமான அனைவரும் இங்கு கடலாகக் கருதப்படுகின்றனர் என்றார் புத்தர்.
குற்றவாளிகள், தப்பிச் சென்ற சிறைக்கைதிகள், தப்பி வந்த அடிமைகள், தண்டனையைத் தவிர்ப்பதற்காக சங்கத்தில் சேர விரும்புபவர்கள், கடன் கொடுத்தவர்களின் பிடியிருந்து தப்ப முயன்றவர்கள், அரசு ஊழியர்கள், மற்றும் போர்வீரர்கள் சங்கத்தினுள் அனுமதிக்கப்படவில்லை. தேக ஆரோக்கியமற்றவர்களும், உடல் ஊனமுற்றவர்களும் சங்கத்தினுள் சேரத்தடை இருந்தது. 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பெற்றோரின் அனுமதியின் பேரிலேயே சங்கத்தினுள் சேர முடிந்தது. 20 வயது எட்டியவர்கள் மட்டுமே துறவிகளாக முடியும்.
புத்த மடாலயங்களில் பிக்குகள் கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. துறவறம் மேற்கொண்டவுடன் பந்த-பாச உறவுகளை விட்டுவிடவேண்டும். பேச்சிலோ, செயலிலோ, ஏன் எண்ணத்தில்கூட, வன்முறையை கைவிட நேர்ந்தது, உடலுறவு, நாடகம், சங்கீதம் போன்ற கேளிக்கைகளில் ஈடுபடத்தடை, மாலை அணிதல், வாசனைத்திரவியங்கள் மற்றும் நகைகள் உபயோகிக்கத் தடை, தங்கம், வெள்ளியை கையால் கூடத் தொடக்கூடாது, பொய்பேசுதல், தீயவார்த்தைகள் உபயோகித்தல், வெத்து அரட்டை அடித்தல் போன்றவை அனுமதிக்கப்படவில்லை.
பட்டுப்புழுவைக் கொன்று பட்டுநூல் தயாரிக்கப்பட்டதால் பட்டாடை உடுத்தத் தடை செய்யப்பட்டது. காலணி அணியக்கூடாது. ஒரு துறவி தனது பிச்சை பாத்திரம் தவிர உடுத்த மூன்று சாதாரண உடை, ஒரு இடுப்புத் துணி, ஒரு சவரக்கத்தி, ஒரு ஊசி, ஒரு தண்ணீர் குடம் மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அவையும் பிச்சை எடுத்தே பெறவேண்டும். பயணம் செய்யும்போது விடுதிகளில் தங்க அனுமதி கிடையாது. ஊருக்கு வெளியே தோப்பிலோ அல்லது குகையிலோதான் தங்கவேண்டும். மடாலயத்திலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ, எப்பொருளையும் சேகரித்து வைத்துக் கொள்ளக்கூடாது. விழுந்து கிடக்கும் பழத்தைக்கூட யாராவது எடுத்துக் கொடுத்தால் மட்டுமே பெற்றுக் கொள்ளலாமே தவிர தானாக பொறுக்கி உட்கொள்ளக்கூடாது. புத்ததுறவிகள் புலால் உண்ணத் தடையேதும் கிடையாது. ஆனால் அவர்களுக்காக மிருகத்தைக் கொன்றால், அவர்களே கொன்றவர்களாவர் என்பதால், பிச்சை போடுபவர்கள் வீட்டில் சமைத்திருந்து அவற்றைக் கொடுத்தால் மட்டும் சாப்பிடலாம்.
சரியான கருத்து, சரியான எண்ணம், சரியான பேச்சு, சரியான நடத்தை, சரியான வாழ்க்கைத் தொழில், சரியான செயலூக்கம், சரியான மனநிலை, சரியான சிந்தனை ஆகிய புத்தரின் எட்டு வழிப்பாதை வாழ்வதற்காகவே அன்றி வாழ்விலிருந்து தப்பித்துச் செல்ல அல்ல என்பதை புத்தர் தெளிவுபடுத்தினார். பிராமணிய நடைமுறைகளான கடவுள் வழிபாடு மற்றும் பலிகொடுத்தல் போன்றவை எந்தப்பயனும் அளிப்பதில்லை, மாறாக ஒருவர் ஆத்திரம், தீய எண்ணம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு மனத்தூய்மையுடன் தனக்குத்தானே எஜமானராக இருக்கமுடியும் என்றார் புத்தர். புனிதமான பாவமற்ற அமைதி வாழ்வை அது இப்பூமியில் பெற்றுத் தரும். அதுதான் புத்தரின் சொர்க்கம்- அதுதான் முக்தி என புத்தர் போதித்தார். மறு உலகம் பற்றி பேச மறுத்த புத்தர் இவ்வாழ்க்கையே போதுமானதாக இருக்கும்போது எதற்காக தெரியாததோர் விசயம் பற்றி பேசவேண்டும் என வினவினார். பிரம்மா எப்படி ஓர் உலகைப் படைத்து அதை துயர் மிக்க தாக்குவான். எல்லா வல்லமையுமுடைய அவன் அவ்வாறு செய்தால் அவன் நல்லவனாயிருக்க முடியாது. வல்லமையற்றவனாயிருந்தால் அவன் கடவுள் அல்ல என புத்தர் வாதிட்டார்.
ஒரு பொருள் மீதோ அல்லது ஒரு நபர் மீதோ பற்று வைக்காது, வாழும் எல்லா உயிர்கள் மீதும் இரக்க உணர்வைக் காட்டுவதே அன்பு. ஆயிரம் போர்க்களங்களை வெல்பவனைக் காட்டிலும் தன்னைத்தானே வெல்பவன் ஆயிரம் நபர்களை வென்றவனாவான் போன்ற புத்தரின் பொன்மொழிகள் தத்துவ உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அன்றைய சமுதாயத்திற்கு வெளியே சமூக அக்கறையின்றி வாழ்ந்து வந்த புத்த துறவிகள் மக்களுடன் நெருக்கமாக இருந்தனர். வாழ்க்கையின் அர்த்தத்தை சாமானியனுக்கு உணர்த்தி துறவிகளும், துறவிகளின் வாழ்க்கைக்கான அத்தியாவசியப் பொருள்களை சாமானியர்கள் வழங்கியும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்தனர். புத்த மடாலயங்கள் கல்வி மையங்களாக விளங்கியதால் பிராமணர்களுக்கு நிகராக கல்வியறிவு உடையவர்களாக புத்த துறவிகள் இருந்தனர்.
தான் வந்த சமூகப் பொருளாதாரப் பின்னணியால் புத்தரது கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றக்கூடிய அளவில் துறவிகள் இல்லை. புரனி பேசுதலையும், வாய்ச் சண்டையைம் அவர்களால் தடுக்க முடியவில்லை. ஒருவர்க்கெதிராக ஒருவர் பழி தூற்றலில் ஈடுபட்டதன் மூலம் சில மடாலயங்கள் புத்தரது தனிக்கவனத்தை ஈர்த்தன. சில செல்வ வணிகர்கள் தடைசெய்யப்பட்ட சீமான் வாழ்க்கையை மேற்கொண்டதாக ஜடக்காக்கள் கூறுகின்றன. சில துறவிகள் ஆபரணங்களுடான காலணி, மற்றும் விலை உயர்ந்த படுக்கைகளை உபயோகித்ததாக மகாவக்கா கூறுகிறது. சில பிராமண துறவிகள் பிச்சை எடுக்கச் செல்ல மறுத்ததாகவும் இந்நூல் மேலும் தெரிவிக்கிறது. மேற்கூறிய நிகழ்வுகள் மடாலயங்களில் வாழ நினைப்போருக்கு நான்கு நிபந்தனைகளை விதிக்குமாறு புத்தரை தூண்டியது. பிச்சைபோடும் உணவின் மூலம் ஜீவிக்க வேண்டும், கந்தலாடை அணியவேண்டும், மரத்தடியில் வசிக்க வேண்டும், கழிக்கும் சிறுநீரை மருந்தாக்கும் பணியில் ஈடுபடவேண்டும் போன்றவைகளே அவை. வாழ்நாள் முழுவதும் மடாலயத்தில் வாழ எத்துறவியையும் புத்தர் நிர்பந்திக்கவில்லை. உலகப் பற்று ஏற்பட்ட எந்த நேரத்திலும் மடாலயத்தை விட்டு வெளியேற உரிமை உண்டு என்றார் புத்தர்.
மடாலய விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஒரு பிராந்தியத்தில் உள்ள புத்த துறவிகள் மாதம் இருமுறை கூடுவர். அப்போது சங்க விதிமுறைகள் வாசிக்கப்படும். இக்கூட்டத்தை எவரும் புறக்கணிக்க முடியாது. எந்த ஒரு விதியையும் மீறவில்லை என அனைவரும் இக்கூட்டத்தில் பிரகடனம் செய்ய வேண்டும். விதியை மீறியிருந்தால் செய்த தவறுக்காக தவமிருந்து வருந்த வற்புறுத்தப்படுவர். பெருங்குற்றமாக இருந்தால் சங்கத்திலிருந்து வெளியேற்றப்படுவர். தத்துவார்த்தப் பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து சிக்கல்களும் துறவிகளின் கூட்டங்களில்தான் விவாதித்து தீர்க்கப்பட்டன. ஒரு மூத்த துறவி கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார். ‘‘எனது மதத்தில் மூத்தவர்கள் பணியிலும், மரியாதை பெறுவதிலும், இருப்பிடம், குடிநீர் மற்றும் உணவு அனைத்திலும் முன்னுரிமை பெறுவர்’’ என புத்தர் பணித்திருந்தார்.
ஒரு புத்ததுறவி எத்தகைய அதிகாரமோ, புனிதமோ பெற்றவராக கருதப்படாமல், தனது தூய வாழ்க்கையின் மூலமே மதிப்பைப் பெறக்கூடியவராகக் கருதப்பட்டார். பாவ மன்னிப்பு வழங்கவோ, புனிதச் சடங்குகளைச் செய்யவோ அதிகாரம் இல்லை என புத்தர் தெரிவித்தார். புத்தர் எவ்வித நிரந்தர நிர்வாக ஆதிக்க அமைப்பையும் உருவாக்கவில்லை, தனக்குப்பிறகு யாரையும் வாரிசாகவும் நியமிக்கவில்லை.
புத்தமதத்தைப் பின்பற்றிய சாமானியர்கள் அவர்களது பாரம்பரிய சமயச்சடங்குகளையும் சாதித்தொடர்பையும் விட்டுவிட வற்புறுத்தப்படவில்லை. அறிவுரீதியான, கட்டுப்படான ஆக்கப்பூர்வமான வாழ்க்கையை சமுதாயத்தில் கடைபிடிக்குமாறு சாமானியர்களை புத்தர் அறிவுறுத்தினார். பெற்றோர்-ஆசிரியர்க்கு மரியாதை, மனைவி-குழந்தைகட்கு அன்பு, நண்பர்களுக்கு விசுவாசம், தனது பணியாளர்களின் நலன்களைப் பேணிப்பாதுகாக்கும் இயல்பு, முனிவர்கள் மீது மதிப்பு ஆகியவை சாமானியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகளாக புத்தர் கருதினார். குடி, சூதாட்டம், தெருக்களில் சோம்பிச் சுற்றித்திரிதல், தீயவர் சேர்க்கை, அடிக்கடி விழாக் காட்சிகளுக்கு செல்லுதல், கவனமின்மை ஆகியவை பணத்தை வீணடிக்கும் நடவடிக்கைகளாக புத்தர் கருதினார். பாரபட்சம், பகைமை, மடைமை, அச்சம் ஆகிய நான்கினையும் கைவிட புத்த துறவிகள் சாமானியர்களை வேண்டினர்.
உன்னதக் கருத்துக்களைக் கொண்டதாலேயே அனைத்து ஆதரவாளர்களையும் மடாலயத்தில் சேர புத்தமதம் தூண்டவில்லை. மினான்டர் மன்னர் தீவிர மதப்பற்று அல்லாதவர்கள் கூட மடாலயங்களில் இருப்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு நாகசேனர் அளித்த பதில் பலரும் பலவேறு காரணங்களால் புத்தமதத்தில் சேர்ந்திருந்தனர் என்பதை அறிய உதவுகிறது. ‘‘சிலர் உன்னத நோக்கங்களுக்காக சேர்ந்திருக்கிறார்கள், ஆனால் சிலர் மன்னரின் கொடுங்கோன்மையிலிருந்து தப்பிப்பதற்காகவும், சிலர் கடன் சுமையிலிருந்து தப்பிப்பதற்காகவும், சிலர் திருடர்களிடமிருந்து பாதுகாப்பு வேண்டியும், சிலர் பிழைப்பிற்காகவும் மடாலயங்களுக்குள் வந்துள்ளனர்.’’ இருப்பினும் உலகிலேயே முதன்முதலாக மடாலய அமைப்பு முறையை ஏற்படுத்திய பெருமை புத்தரையேச் சாரும்.
இரண்டரை நூற்றாண்டுகளுக்கு மேல் புத்தமதம் வடஇந்தியாவில் ஒரு சிறிய மதமாகவே இருந்தது. அசோகரது மதமாற்றமும் அவர் புத்த மதத்திற்குக் கொடுத்த ஆதரவும் அதை அகில இந்திய மதமாக உருவாக்கியது. அதன் பிறகு பல நூற்றாண்டுகள் அது ஓர் ஆதிக்க மதமாக இருந்தது. இருப்பினும் சாமானியர்கள் விரும்பியது போதைதரும் மதத்தையே. அவர்களுக்கு புத்தமதம் எவ்வித திருப்தியையும் தரவில்லை. எனவே அதன் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகியது.
Comments
Post a Comment