சொல்லத் தோணுது 35: அசோகர் மீண்டும் பிறப்பாரா? தங்கர் பச்சான்
சொல்லத் தோணுது 35: அசோகர் மீண்டும் பிறப்பாரா?
பணத்தை சம்பாதிக்க ஓடிக்கொண்டிருக்கும் நாம் தண்ணீருக்கும் சேர்த்து சம்பாதிக்க பழகிவிட்டோம். தேவையின்றி வீணாக்கப்படும் ஒவ்வொரு துளி நீரும் மீண்டும் திரும்பி வராது என்பது புரிவதில்லை. உலகத்தில் விலை மதிக்கமுடியாத ஒன்று தண்ணீர்தான் என்பதை மற்ற நாடுகளும்,மற்ற மாநிலங்களும் உணர்ந்து செயல்படுவதுபோல் இன்னும் நாம் செயல்படவில்லை. பணம் கொடுத்தால்தண்ணீர் வரும் என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அரசாங்கத்தை மட்டுமே குறை சொல்லப்பழகிவிட்ட நாம் ஒவ்வொரு நிமிடமும் செய்யும் குற்றங்கள் பற்றி சிந்திப்பதே இல்லை. நிறைய மழை பெய்தால் நிலைமை சரியாகிவிடும் என நினைக்கிறோம்.
தண்ணீருக்குப் பஞ்சமான நாட்டில் வளர்சசியும், செழுமையும் காணாமல் போய்விடும். தண்ணீரை பாட்டிலில் பிடித்து விற்கும் நிலைக்கு அரசாங்கமே திட்டங்களை வகுத்தற்குக் காரணம் நம்மை தொடந்து ஆண்டவர்களா? அரசாங்கத்தை நடத்திய அதிகாரிகளா? இதைப்பற்றி சிந்தனை இல்லாத இந்த மக்களா?
மக்கள் உயிர் வாழ்வதற்கான குடிநீரைக்கூட விலையில்லாமல் தாரளமாக தரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டது குறித்து யாருக்குமே இன்னும் குற்றவுணர்ச்சி இல்லை.
வங்கியில் சேமித்து வைத்திருக்கின்ற பணத்தை கண்மூடித்தனாமாக எடுத்து செலவு செய்வதை மட்டுமே வேலையாகக் கொண்டு பணத்தை சேமிப்பது குறித்து சிந்திக்காமல் விட்டுவிட்டால் என்ன நடக்குமோ அதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.
எப்பொழுதிலிருந்து தண்ணீரை பாட்டிலில் பிடித்து விலைக்கு விற்கப்படுவதை பார்த்தீர்கள்? நினைவிருக்கிறதா? வரலாற்றில் இதுவரை இப்படி தண்ணீரை விற்பது குறித்து கேள்விப்பட்டிருக்கிறோமா? நம் கண்முன்னே வெறும் இருபது ஆண்டுகளில்தான் இந்தக்கொடுமையும், சீர்கேடும் நடந்திருக்கிறது. நீரையும், நீர் ஆதாரங்களையும் பாதுகாக்கத் தெரியாதவர்கள், அது பற்றி அக்கறையில்லாதவர்கள் மூலமாகவே இத்தகைய சீரழிவு நிகழ்ந்திருக்கிறது. இருபத்தி நான்கு மணி நேரமும் பணத்தை எப்படி சேர்த்து வைப்பது எனத் தெரிந்தவர்களுக்கு, தண்ணீரை சேர்த்து வைப்பது குறித்து சிந்திக்கவே நேரமில்லாமல் போய்விட்டது.
மழை என்பது உடலுக்கு குளிச்சியைத் தருவதற்காகவும், பார்த்து மகிழ்வதற்காகவும் மட்டுமே என நினைக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்கி வைத்து விட்டோம். நகரத்து மனிதர்களுக்கு மழை என்பது எப்பொழுதுமே ஒரு இடைஞ்சல் தான். மழைநீரை பாதுகாப்பதிலும், தண்ணீரை வீணாக்காமல் இருப்பதிலும் தங்களுக்கு எந்தப்பொருப்பும் இல்லை என நினைத்து மக்கள் வாழப்பழகிவிட்டார்கள். நீர்ப்பாதுகாப்பு, நீர் மேலாண்மை குறித்து நம் கல்வி பாடத்திட்டங்களில் சொல்லித் தருவதே இல்லை. குழந்தைகளாக இருக்கும் பொழுதே அதற்கான சிந்தனையும், பயிற்சியும் தரப்பட்டிருந்தால் இந்த சீர்கேடு நிகழ்ந்திருக்காது. கேரளாவும், கர்நாடகமும், ஆந்திராவும் தான் நம்முடைய தண்ணீர் பற்றாக்குறைக்கெல்லாம் காரணம் என ஒவ்வொருவரும் நினைத்துக் கொள்ளும் அளவுக்கு நம் அரசியல்வாதிகள் நம் மக்களை பயிற்று வைத்திருக்கிறார்கள்.
அண்டை மாநிலங்கள் நீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்கும், பெருக்குவதற்கும், மழைநீரை சேமிப்பதற்கும், நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கும் உருவாக்கும் திட்டங்களையும்,நடவடிக்கைகளையும் கண்டு கொள்ளாமல், முல்லைப் பெரியாற்றுக்கும், காவிரியாற்றுக்கும், பாலாற்றுக்கும் சண்டைபோட்டு அரசியல் செய்வதிலேயே ஐம்பது ஆண்டுகளை கழித்துவிட்டோம்.
நம்மிடமிருக்கும் தமிழகத்திற்குச் சொந்தமான ஆறுகளை பாதுகாப்பதிலும், தூய்மையாக வைத்துக் கொள்வதிலும் அக்கறை செலுத்தாமல் 17 முதன்மை ஆறுகளையும், 16 துணை ஆறுகளையும் அழித்தொழித்துவிட்டோம். குடிமைக் கழிவுகளையும், தொழிற்சாலைக்கழிவுகளையும் தூய்மைப்படுத்தி கையாளும் முறையை கடைபிடிக்காமல் ஆறுகளை குப்பைத் தொட்டிகளாக கையாண்டு சாக்கடையாக மாற்றி ஆட்சி நடத்திவிட்டோம்.
நீரை உறிஞ்சி நிலத்தடியில் சேமிக்க உதவும் மணலை அள்ளி விற்பதையே இருபத்தி நான்கு மணி நேரத் தொழிலாகச் செய்து வேளாண்மைக்கு வழியில்லாமல் போனதோடு அல்லாமல் குடி நீருக்கே அலைகிறோம். ஐநூறுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ள மாநிலத்தில்தான் இ்நதக் கொடுமை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நீர் பாதுகாப்பு, நீர் ஆதாரங்கள், நீர் மேலாண்மை பற்றிய எந்த அறிவையும் பெறாத பொறியாளர்களையும் மாணவர்களையும் உருவாக்கிக் கொண்டேயிருக்கிறோம்.
வரலாறு பாடங்களைப் படிப்பதையும், படித்தவர்களையும் கேவலப்படுத்தி பரிகாசம் செய்தோம். ‘குளம், குட்டை வெட்டினார், மரம் வளர்த்தார், ஏரிகளைப் பெருக்கினார்’ என பழைய பாடத்தையே சொல்லிக் கொடுத்து அசோகர் ஆட்சி செய்ததை எத்தனை நாளைக்குதான் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம் என நாம் கேலி செய்தோம். இவைகளை செய்வதுதான் சிறந்த ஆட்சி என்பதை இன்னும்கூட நம் மண்டையில் ஏற்றிக்கொள்ள மறுக்கிறோம்.
பொதுப்பணித்துறையும், வேளாண்மைத்துறையும், சுற்றுச்சூழல் துறையும் போட்டிப் போட்டுக் கொண்டு ஆறுகளை சுரண்டிவிட்டன. காடுகளை பாதுகாக்கத் தவறிவிட்டன.இவர்கள் கடமையிலிருந்து தவறிப்போனதன் விளைவு ஆறுகள் நிறைவதற்குப் பதிலாக கடல் நிறைந்து கொண்டிருக்கிறது. ஆறுகளிலும், குளம், குட்டை ஏரிகளிலும் நீரைப் பிடிப்பதற்குப் பதிலாக கடலுக்குப் போன தண்ணீரை மேல் நாட்டுத் தொழில்நுட்ப உதவியுடன் திட்டங்களைத்தீட்டி கோடிக்கணக்கில் செலவு செய்து மீண்டும் குடிநீராக்கும் சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
கேரளமும், கர்நாடகமும் ஆற்றில் மணல் அள்ளத் தடை விதித்திருக்கும் பொழுது நாம் மட்டும் அதை அள்ளி விற்பதையே வேலையாகக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஆறுகளின் பெயரெழுதி வைத்து வீதிகளில் அண்டை மாநிலங்கள் நம் மணலை விற்கும் அவலத்தை இன்னும் எவ்வளவு காலத்துக்கு அனுமதிக்கப் போகிறோம். ஐரோப்பிய நாடுகளும், மற்ற நாடுகளுக்கும் மணல் பயன்பாட்டுக்குப் பதிலாக மாற்றுப் பொருளை கண்டுபிடித்து எப்பொழுதோ பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
ஏற்றம், கபிலை பயன்படுத்தியே இயற்கை வேளாண்மை முறையை பின்பற்றி வந்தோம். கிணறுகளிலிருந்தும், குளம், குட்டை, ஏரிகளிலிருந்தும், ஆறுகளிலிருந்தும் குடி நீரைப் பெற்றது போய் எல்லாவற்றையும் அழித்து ஆண்டாண்டு காலமாக இயற்கை சேர்த்து வைத்திருந்த நிலத்தடி நீரை ஆழ்துளை கிணறுகளை அமைத்து இரவு பகலாக உறிஞ்சிக் கொண்டிருக்கிறோம்.
மழைநீரை நம்பி புன்செய் பயிர்களை விளைவித்து வந்த உழவர்களிடம் பணப்பயிர்களைக் கொடுத்து ஆசை காட்டி அவர்களை அழித்ததோடு நிலத்தடி நீரையும் வரைமுறையில்லாமல் உறிஞ்சி இனி குடிநீருக்கு எங்கே போவது எனத் தெரியாமல் அடித்துக்கொண்டு சாகப்போகிறோம்.
நீர் ஆதாரங்கள் இருந்த இடங்களே இன்றைக்குத் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் அரசு கட்டிடங்களாகவும், பேருந்து நிலையங்களாகவும் உருவாக்கப்பட்டு ஏரிப்பகுதிகளெல்லாம் கூறுபோடப்பட்டு குடியேற்றப்பகுதிகளாகி வளர்ச்சி பெற்ற நகரங்களாக மாறி நிற்கின்றன.
ஏரிகள் மாவட்டம் என அழைக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் இன்று குடிநீருக்கு வழியின்றி தாகத்துக்குத் தவிக்கிறது. சென்னை நகரைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலுள்ள ஏரிகளை முறையாகத் தூர் வாரி நீரை சேமித்து வந்திருந்தால் எதற்காக அண்டை மாநிலங்களிடம் குடிநீருக்கு கையேந்த வேண்டும். பராமரிப்புக்காக நிதி ஒதுக்கப்பட்டாலும் முறையாக அது செயல் படுத்தப்படாததால் அதில் பலனில்லை.
சொட்டு நீர் பாசனத்தை விரிவுப்படுத்தி, கட்டாயமாக்கி, பணப்பயிர்கள் பயிரிடுவதை தடைசெய்து உழவர்களுக்கு மாற்றுப் பயிரிடும் திட்டங்களை உருவாக்கி நிலத்தடி நீர் வரைமுறையின்றி உறிஞ்சி வீணாவதைத் தடுத்து ஆழ்துளை கிணறுகளுக்கு கட்டுப்பாடு விதிகளை உருவாக்குவது இன்றைய உடனடியான அடிப்படைத் தேவை. அதே போல் நகர்ப்புறங்களிலும் மழைநீர் சேகரிப்பை கட்டாயப்படுத்தி கட்டிடங்களை ஆய்வு செய்து மறுசீரமைப்பதே முதல் கடமையாக இருக்க வேண்டும். இன்னும் கூட நீர்ப்பாதுகாப்பின் தீவிரத்தை உணராமல் நடுவண் அரசுக்கு மடல் வரைந்து கொண்டிருப்பதாலும், அண்டை மாநிலங்கள் வஞ்சிப்பதாலேயே நாம் இன்னல்களை அனுபவிக்கிறோம் எனச்சொல்வதாலும் மக்களுக்கு துயரம் மட்டுமே மிஞ்சும்.
- சொல்லத் தோணுது… ( Thanks to : https://www.blogger.com/blogger.g?blogID=1371112108559282528#editor/target=post;postID=4008407429887834425 )
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com
Comments
Post a Comment