பேராசிரியர் லட்சுமி நரசு அவர்களும் அயோத்திதாசரும் இணைந்து பணியாற்றியது குறித்து
பேராசிரியர் லட்சுமி நரசு அவர்களும் அயோத்திதாசரும் இணைந்து பணியாற்றியது குறித்துச் சொல்லுங்கள்.
அயோத்திதாசரின் காலம் பொதுவாகவே, காலனியாதிக்க இந்தியாவில் பரவலாக பவுத்தம் எழுச்சி பெற முயன்று கொண்டிருந்த காலம். கர்னல் ஆல்காட்டின் தலைமையிலான "தியோசாபிகல் சொசைட்டி', பவுத்தத்திலும் ஆர்வம் கொண்டிருந்தது. அவரது உதவியால் "மகாபோதி சொசைட்டி'யும் சென்னையில் தொடங்கப்பட்டது. அந்த நேரத்தில், சிங்கார வேலனார், லட்சுமிநரசு, அயோத்திதாசர் மூவரும் பவுத்தத்தைக் கையாள முன்வந்தனர். இம்மூவரும் வெவ்வேறு சமூகச் சூழ்நிலைகளிலிருந்து செயல்பட்டனர். பவுத்தத்தை நோக்கினர். கையாண்டனர். லட்சுமிநரசின் அறிவியல் பின்னணி, பொருளாதார உயர்நிலை, தமது சமூக சூழ்நிலையைத் தவிர்த்து தாழ்த்தப்பட்ட மக்களோடு ஈடுபாடு கொண்டது ஆகியவை அயோத்திதாசர் மனதில் தயக்கங்களை ஏற்படுத்தியது உண்மை. லட்சுமிநரசு தமது அறிவியல் பின்னணியை இணைத்து, ஆங்கிலத்தில் பவுத்தத்தின் அறிவியல் அடித்தளத்தை விவரித்தார்.
ஓரிடத்தில் இதை அயோத்திதாசர், "சயன்டிபிக் புத்திசம்' என்று கேலியாகக் கூறுகிறார். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டு நாளடைவில் ஒத்துழைப்பாக மலர்ந்தது என்பதற்கு ஆதாரங்கள் "தமிழனில்' பரவிக் கிடக்கின்றன. சாதியைத் தவிர்த்ததற்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களோடு கொண்டிருந்த தொடர்புகளுக்காகவும், லட்சுமிநரசு தனது உறவினரால் ஒதுக்கி வைக்கப்பட்டார். பொதுவாகவே தனது செயல்பாடுகளில் மிக்க நேர்மையுள்ளவராய் லட்சுமி நரசு விளங்கினார். அவரது வாழ்க்கை முறையே அவரை அயோத்திதாசருடன் இணைத்திருக்க வேண்டும். அயோத்திதாசருடைய ராயப்பேட்டை ஆசிரமத்தில் லட்சு நரசு உரையாற்றியது பற்றிய குறிப்புகள் தமிழனில் உள்ளன. ஓரிரு இடங்களில் இருவரும் ஒரே மேடையிலிருந்தும் பேசியிருக்கின்றனர்.
அயோத்திதாசர் மறைந்த பிறகு அவரது பணிகளைத் தொடர்ந்து நடத்துவதற்காக, முழு இயக்கம் லட்சுமி நரசுவை ஏற்றுக் கொண்டது அவர்கள் ஒன்றிய கண்ணோட்டத்திற்குச் சான்று. இதன் விவரங்களை எனது ஆங்கில நூலில் விவரித்துள்ளேன். அயோத்திதாசரின் எழுத்துகள், தமிழகத்தில் பெருமளவில் வாசிக்கப்பட வேண்டும், விவாதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அதிகாரத்தை நோக்கி வெகு மெதுவாக முன்னேறிக் கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட தமிழ்ச் சமுதாயம், பெருமளவில் பயன்பெறும். விரவியிருக்கும் தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கையின்மை, போராட்டத்தின் உள் எழும் முரண்பாடுகள், வரலாற்றுக் கண்ணோட்டமின்மை, இவைகளை எல்லாம் பற்றி விவாதிக்கவும், விடைகாணவும் அயோத்திதாசர் சிந்தனைகள் அடித்தளமாக அமையும்.
Comments
Post a Comment