தேவர்களுக்குப் பிரியமான மன்னன் பியதாசி சொல்வதாவது... -சு.தியடோர் பாஸ்கரன்

தேவர்களுக்குப் பிரியமான மன்னன் பியதாசி சொல்வதாவது... -சு.தியடோர் பாஸ்கரன்


அசோகரின் முக்கியமான கல்வெட்டு ஒன்றைக் காண குஜராத்தில் உள்ள ஜூனாகாத் நகருக்கு நாங்கள் சென்றோம். புத்த, சமண தொல்லெச்சங்கள் விரவிக்கிடக்கும் இடம் இது. இந்த ஊரில் பழனிமலை மாதிரி, ஆனால் அதைவிட உயரமான கிர்னார் மலை நகரின் பின்புலம்மாதிரி உயர்ந்துள்ளது. காடு சூழ்ந்த தனித்ததொரு குன்று. சில சமயம் கிர் சரணாலயத்திலிருந்து ஓரிரு சிங்கங்கள் இங்கே தலைகாட்டுவதுமுண்டு.  உச்சிவரை படிகள். சமணபஸ்திகளுடன் சில இந்து ஆலயங்களும் இங்குண்டு. கொஞ்சதூரம் சென்றவுடன் ஜூனாகாத் நகரம் நம் பார்வையிலிருந்து மறைந்து விடுகின்றது.  அதன்பின், மலையேறும்போது வரலாற்றில் பின்னோக்கிப் பயணிப்பது போல் ஒரு பிரமை ஏற்படுகின்றது.

நமதுகதைக்கு இங்கு முக்கியமானது இம்மலை அடிவாரத்தில் யானையொன்று மண்டியிட்டு உட்கார்ந்திருப்பது போன்று தோற்றமளிக்கும் ஒரு வட்டப் பாறையிலுள்ள கல்வெட்டு. இதுதான் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட அசோகசாசனம். முதலில் படிக்கப்பட்டதுவும் இதுதான். இந்தக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு, படிக்கப் பட்டு பல ஆண்டுகளுக்குப் பின்னரே இவை அசோகப் பேரரசரின் சாசனங்கள் என்றறியப்பட்டன.

இந்தியாவின் சுற்றுச்சூழல் கரிசனம் பற்றிய வரலாறு எழுதப்பட வேண்டுமானால் அது சக்ரவர்த்தி அசோகரிடத்திலிருந்து தொடங்கும்.‘தேவர்களுக்குப் பிரியமான மன்னன் பியதாசி சொல்வதாவது’ என ஆரம்பிக்கும் தனது கல்வெட்டு சாசனங்கள் மூலம் நாடெங்கிலும் சுற்றுச்சூழலைப் பேண என்ன என்ன செய்ய வேண்டும் என்று மக்களுக்குச் சொன்னார். சாலையோர மரம் நடுதல் பற்றி மட்டுமல்ல, காட்டுயிர் பாதுகாப்பு, நீர்நிலைகளைப் பேணல் என இன்று நாம் பதறிக்கொண்டிருக்கிற அக்கறைகளைப் பற்றி அன்றே கூறி வைத்தார். திருவிழாக்கள் கொண்டாடுதலையும் அதில் உயிர்ப் பலிகொடுப்பதையும் நிறுத்தச் சொன்னார். பல புள்ளினங்களையும் விலங்குகளையும் பட்டியலிட்டு இவைகளைக் கொல்லக்கூடாதென்றார். அதில் காண்டாமிருகம், முள்ளம்பன்றி, பரசிங்காமான், மயில், ஆமை இவை அடங்கும். உணவிற்காக விலங்குகளைக் கொல்வதை இவர் தடைசெய்யவில்லை என்பதையும் அவர் மரக்கறி உணவைப் போற்றவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். தனது அரண்மனை சமையலறையில் தேவைக்கு மேல் பறவைகளையோ, விலங்குகளையோ கொல்லக் கூடாது என்றார். யானைகள் வாழும்காட்டில் வேட்டையாடக் கூடாது என்று எழுதினார். புத்தமதத்தில் யானைக்கு ஒரு சிறப்பிடம் உண்டு.

பொறிக்கப்பட்டிருக்கும் தளத்தின் அடிப்படையில் வரலாற்றாசிரியர்கள் அசோகரின் சாசனங்களை வகைப்படுத்தியுள்ளனர் - தூண், பாறை, குகை என. இந்த சாசனங்கள் தெற்குக் கோடியில் கர்னாடகாவிலுள்ள சித்தாப்பூர் கிராமத்திலும் வடக்கில் காந்த ஹாரிலும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. குல்பர்கா அருகிலுள்ள சித்தாப்பூர் பாறைக் கல்வெட்டை ஒருமுறை சென்று பார்த்துவந்தேன். காந்தஹார் சாசனம் 1958இல்தான் கண்டறியப்பட்டது. இன்னும் எத்தனை அசோக கல்வெட்டுகள் மறைந்து கிடக்கின்றனவோ? குகை கல்வெட்டு ஒன்றில், ஆசீவிக துறவிகளுக்கு பாறைக்குடில் அமைத்துக் கொடுத்தது பற்றிய பதிவு உள்ளது. ஆசீவிகசமயம் தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் பரவி இருந்தது. கண்ணகி மதுரையை எரித்துமறைந்தபின், அவளுடைய பெற்றோர், ஆசீவிக சமயத்தினரானார்கள் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. புகழ்பெற்ற ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கவிதையை எழுதிய கணியன் பூங்குன்றனார் ஒரு ஆசீவிகர்.

இந்தக் கல்வெட்டுகளிலிருக்கும் வாசகங்கள் முதலில் பனையோலை சுவடிகளில்தான் எழுதப்பட்டிருந்தன என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். பின்னரே தூண்களிலும், பாறைகளிலும் பதிவு செய்யப்பட்டன. பயணிகள் கூடும் கிர்னார் போன்ற இடங்களில் உள்ள பாறைகளில் இவை பொறிக்கப்பட்டதன் நோக்கம், அங்கு கூடும் மக்களுக்கு உரத்து வாசித்துக் காட்டப் படவேண்டும் என்பதும்தான். இந்த சாசனங்களில் அசோகன் தன்னைப் பற்றி தற்பெருமை பேசுவதில்லை. சமண, ஆசீவிக, வைதீகமதங்களுக்கு ஆதரவாகவும் பேசுகின்றார். போரின் கொடு மையைப் பற்றியும் போரைக் கைவிட வேண்டியது பற்றியும் செதுக்கி வைத்தார். நாம் இன்றும் வல்லரசாக ஆவதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

ஒரு கத்தோலிக்க பாதிரியார் 1756இல் ஒரு அசோக சாசனத்தைக் கண்டறிந்திருந்தாலும் அதில் என்ன  எழுதப்பட்டிருக்கின்றது என்றோ யாருடைய கல்வெட்டு என்றோ யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. நூறாண்டுகள் கழித்துத்தான் 1856இல் பிராக்ரித் மொழியில் இருந்த கிர்னார் கல்வெட்டை ஜேம்ஸ்ப்ரின் செப்படிக்க முடிகிறது (இவர் கல்கத்தா நாணய ஆலையில் பணிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரி.) அவரும் அவருடைய சிங்கள உதவியாளர் ரத்னபாலா இருவரும் இந்தக் கல்வெட்டுகளில் பியதாசி என்று குறிப்பிடப்படுவது ஒரு சிங்கள மன்னன் என்றே நினைத்திருந்தனர். அந்த நோக்கிலேயே பல ஆங்கில ஆய்வாளர்கள் இந்தக் கல்வெட்டுகளில் ஆர்வம் காட்டினர்.

யாழ்ப்பாணத்திலிருந்த ஆங்கில அரசு அதிகாரி ஜார்ஜ்டர்னர் புதிரை விடுவித்தார். சயாமிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு பாலி பனுவலில் ஒரு முக்கிய தடயம் அவருக்குத் தற்செயலாகக் கிடைத்தது. “புத்தர் உள்ளொளி பெற்று 218 ஆண்டுகளுக்குப் பிறகு பிந்துசாரரின் மகனும் சந்திரகுப்தரின் பேரனுமான பியதாசி பட்டத்திற்கு வந்தார்” என்ற வரிகள் அவர்கண்ணில் பட்டது. ஆகவே பியதாசி வேறு யாருமில்லை, அசோகர்தான் என்ற சரியான முடிவிற்கு வந்தார். தனது கண்டுபிடிப்பை Journal of the Asiatic Society of Bengal என்ற ஆய்வு சஞ்சிகையில் வெளியிட்டு உலகிற்கு அசோகரின் கல்வெட்டுகளை அறிமுகப்படுத்தினார் (மகாவம்சம் காவியத்தை பாலிமொழியிலிருந்து  ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து இலங்கைக்கு வரலாற்றைக் கொடுத்தவர் இவர்தான். இவரது கல்லறை யாழ்ப்பாணத்திலுள்ள கோட்டையில் உள்ளது. அண்மைப்போரில் இக்கோட்டை குண்டுவீச்சில் சிதிலமடைந்துவிட்டது. சமாதி என்ன ஆயிற்று என்று தெரியவில்லை).

கிர்னார் கல்வெட்டு என்றறியப்படும் ஜூனாகாதில் உள்ள பாறை சாசனம் அசோகரின் மற்ற எல்லா கல்வெட்டுகளைப் போலவே ‘தேவர்களுக்குப் பிரியமான மன்னன் பியதாசி சொல்வதாவது’ என்று ஆரம்பிக்கின்றது. தனது 12வது ஆட்சி ஆண்டில் இதைப் பொறித்ததாகக் கூறும் சக்ரவர்த்தி நமக்கு முக்கியமான விவரமொன்றைத் தருகின்றார். மௌரிய சாம்ராஜ்யத்திற்கு வெளியே, தெற்கு எல்லையில் இருந்த சோழ, பாண்டிய நாடுகளைப் பற்றி குறிப்பிடுகின்றார். புத்த தர்மத்தைப் பரப்ப அந்த நாடுகளுக்கு மறையாளர்களை (Missionaries)அனுப்பியதாகவும் சொல்கிறார். அதாவது முற்காலச் சோழர்கள் என்றும் சங்ககாலச் சோழர்கள் என்றும் குறிப்பிடப்படும் வம்ச மன்னர்கள் இவர்கள். காலம் 257 கி.மு. என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

சாசனம் பொறிக்கப்பட்ட சில தூண்கள் பிற்காலத்து அரசர்களால் இடம் மாற்றப் பெற்றன. சாரனாத்தில், புத்தர் தனது முதல் பேருரை நிகழ்த்திய இடத்தில் அசோகர் எழுப்பியிருந்த இருந்த தூணின் உச்சியில் இருந்த நான்கு சிங்க சிற்பம்தான் இந்திய அரசின் சின்னமானது. அதேபோல் இந்தத் தூணில் உள்ள தர்மசக்கரம் நமது தேசியக் கொடியில் இடம்பெற்றது. இதில் முக்கியமான தகவல் என்னவென்றால் இந்த சின்னங்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து எந்தக் கோப்பிலும் குறிப்பு இல்லை. நாடாளுமன்றத்திலும் இதுபற்றிப் பேசப்படவில்லை. அரசு ஆணை மட்டுமிருக்கின்றது. இந்த விவரத்தை சிங்கம் பற்றி ஆய்வு செய்த வரலாற்றாய்வாளர் திவ்யபானு சிங் தனது The Story of Asia's Lion (2004) நூலில் பதிவு செய்திருக்கிறார். ஜவஹர்லால் நேருவிற்குப் பேரரசர் அசோகர் பாலிருந்த பெருமதிப்பு யாவரும் அறிந்ததே.

கிர்னார் பாறையில், அசோகரின் கல்வெட்டிற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு பொறிக்கப்பட்ட இன்னொரு பிராமி கல்வெட்டில் ருத்ரதாமன் என்ற மன்னன் தான் ஒரு ஏரியை செப்பனிட்டது பற்றி பதிவு செய்திருக்கிறான்,  இந்த ஏரியைப் பற்றிய விவரங்கள் அடங்கிய இந்தக் கல்வெட்டு 1863இல்தான் படிக்கப்பட்டது. சந்திரகுப்தர் கட்டிய இந்த ஏரி, அசோகரின் பிரதிநிதியாக இங்கிருந்த ஒரு கிரேக்க அதிகாரியால் ஒருமுறை சீர்படுத்தப்பட்டது. இதில் வியப்புதரும் தகவல், அந்த ஏரி இன்றும் பாசனத்திற்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. சுதர்சன் ஏரி என்றறியப்படும் இந்த நீர்நிலைக்குச் சென்று,  கரையில் குவித்து வைக்கப்பட்டிருந்த இளநீர்களில் இரண்டை வாங்கி தூரத்தில் தெரிந்த கிர்னார் மலையையும், நீர்ப்பரப்பில் அதன் பிரதிபலிப்பையும் பார்த்துக் கொண்டே குடித்தோம். 

ஜூனாகாத் சென்று இந்த கிர்னார் சாசனத்தைப் பார்க்க முடியவில்லை என்றால், டில்லியில் அரசு அருங்காட்சியக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்தப் பாறைக் கல்வெட்டின் மாதிரி ஒன்றைக் கண்டு திருப்தியடையலாம்.

அசோகரின் கல்வெட்டுகள் பற்றி எனது ஆர்வத்தை மறுபடியும் தூண்டியது அண்மையில் நான் படித்த, இந்த ஆண்டுதான் வெளியான, ஆங்கிலேய வரலாற்றாசிரியர் Charles Allen எழுதிய, Ashoka  என்ற நூல். அசோகரின் தூண்களும் கல்வெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட பல அரிய புகைப்படங்களை மீட்டெடுத்து வெளியிட்டிருக்கிறார். எளிய நடையில் வரலாற்று நிகழ்வுகளை ஒரு மர்ம நாவல்போல எழுதிச்செல்கிறார். இவர் கூறும் இருமுக்கியமான அவதானிப்புகள்

 1.அசோகரின் வரலாறு, முக்கியமாக சாசனங்கள் பற்றிய ஆய்வுகள் ஆங்கிலேயர்களால் (அரசு, ராணுவ அதிகாரிகள், மறையாளர்கள்) செய்யப்பட்டது. Orientalists என்று பிற்காலத்தில் இகழப்பட்ட இந்த மேற்கத்திய ஆய்வாளர்கள் இல்லையென்றால் அசோகனை உலகம் அறிந்திருக்காது என்கின்றார். இந்திய வரலாற்றாசிரியர்கள் ஆர்வம் காட்டாமல் அசோகரைப் புறக்கணித்தனர். ஏன்?

 2.புத்த மதத்தை தழுவிய அசோகர் ஏற்றத்தாழ்வற்ற, சாதியற்ற சமூகத்தைப் பற்றிக் கனவு கண்டார். பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வைக் கற்பித்து, சாதியையே ஆதாரமாக்கிக்கொண்ட ஒரு சமூகத்தை அமைத்து, அதில் ஆதிக்க நிலையிலிருப்பவர்களுக்கு அசோகனது சிந்தாந்தம் அச்சமூட்டுவதாக இருந்தது என்கிறார் நூலாசிரியர்.  தமிழ்நாட்டு வரலாற்றின் புத்தசமய பரிமாணம் பற்றிய ஆய்வில் இன்றும் சரியான கவனம் செலுத்தப்படுவதில்லை. காஞ்சி புரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்த விஹாரங்கள் இருந்தன என யுவான்சுவாங் பதிவு செய்துள்ளார். அவை என்ன ஆயின ? இந்தியத் தொல்லியல் துறை இதுகுறித்து அகழ்வாய்வு ஏன் நடத்தவில்லை? சென்னை அருங்காட்சியகத்திற்குச் சென்றால் தமிழ்நாட்டில் பல இடங்களிலிருந்து கிடைத்த, அகழ்வாய்வுகளிலிருந்து எடுத்த புத்தர் சிற்பங்கள் பல இருக்கின்றன. சற்று கூர்ந்து பார்த்தால் இவையாவும் பிரிட்டிஷ் அரசு காலத்தில் எடுக்கப்பட்டவை. 

அதன்பின்னர் ஆய்வு ஏதும் நடத்தப்படவில்லையா? சாக்கியமுனியின் சிலை ஏதும் கிடைக்கவில்லையா? பாலிமொழியைப் பற்றிய ஆய்வும் குறைவு. கொங்குநாட்டில் ஓடி காவிரியுடன் கலக்கும் நதியின் பெயர் அமராவதி. “மரணமற்றோர் இருக்குமிடம்” என்று பொருள்படும் இப்பாலி மொழி சொல் புத்த சொர்க்கத்தைக் குறிக்கின்றது .இப்படி பலதுறைகளில் பல தடயங்கள் இருந்தும் இந்தத் தளத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
உடுமலைப்பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் உரையாற்றச் சென்றிருந்தபோது எனக்கு இந்நூலைப் பரிசாக அளித்தார்கள். விழா முடிந்து கோவை செல்லும் வழியிலேயே புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தபோது முன்னுரையில் இருந்த ஒரு வாக்கியம் என் மனதில் தங்கியது.

Historians who conceal such uncomfortable truths do us no favours. Herein lies part of the reason for writing this book about a long-forgotten emperor whose song was silenced.
காண்க: Ashoka by Charles Allen.Little, Brown. 2012 London.
நன்றி : http://www.poovulagu.net/2012/09/blog-post.html

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் எழுத்தாளர்: அ.ஜெகநாதன்