காஞ்சியில் புத்தர் தோட்டம் -- மு.நீலகண்டன்
காஞ்சியில் புத்தர் தோட்டம்
- மு.நீலகண்டன்
சென்னை மாவட்டத்தை வடக் கிலும்,
விழுப்புரம் மாவட்டத்தைத் தெற்கிலும், வேலூர் மாவட்டத்தை மேற்கிலும்,
கிழக்கில் வங்கக்கடலையும் எல்லையாகக் கொண்டுள்ளது, இன்றைய காஞ்சிபுரம்
மாவட்டம். கலைப்பணியாலும், அரசியல் தொண்டாலும் ஆன்மீகப் பயிர் வளர்த்த
மேன்மையாலும் இம்மாவட் டம் தமிழக வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற மாவட்டமாகத்
திகழ்ந்து வருகிறது. காஞ்சியின் பகுதிகள் சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, ஜைனக்
காஞ்சி, பவுத்த காஞ்சி என்ற நான்கு பிரிவுகளாக இருந்தது. இன்று, சிவ
காஞ்சி, பெரிய காஞ்சிபுரம் ஆகும். விஷ்ணு காஞ்சி, சின்ன காஞ்சிபுரம் ஆகும்.
காஞ்சி நகர் எல்லைக்கு வெளியே திருப்பருத்திக் குன்றம் என்ற சிற்றூரே
சமணம் வளர்த்த ஜைன காஞ்சியாகும். இன்றைய காமாட்சியம்மன் கோயிலைச் சுற்றிய
பகு தியே பவுத்த காஞ்சியாக இருந்தது.
காஞ்சியில் ஆர்ப்பாக்கம்
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் செல்லும்
பாலாறு மற்றும் செய்யாறு ஆகிய ஆறுகளுக்கிடையே ஆர்ப்பாக்கம் என்ற கிராமம்
உள்ளது. இங்கு பவுத்தர்களும், சமணர்களும் வாழ்ந்துள்ளார்கள். இங்கு சமணக்
கோயில் ஒன்று இன்றும் உண்டு.
தற்போது இந்தக் கிராமத்தில் உள்ள
ஆதிகேசவப் பெருமாள் கோயில் முன்னோர் காலத்தில் பவுத்தப் பள்ளியாக
இருந்திருக்க வேண்டு மெனக் கூறுகிறார்கள். சமணக் கோயிலும், ஆதிகேசவப்
பெருமாள் கோயிலும் பழம் பெருமை வாய்ந்தவை.
புத்தர் சிலைகள்
ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் உள்ளே
வெளிவட்டத்தில் ஓர் இடத்தில் நின்ற நிலையில் ஒரு புத்தர் சிலையும், கோயில்
தெற்கு மதில்சுவரின் பக்கவாட்டில் உட்கார்ந்த நிலையில் இரண்டு புத்தர்
சிலைகளும் இருந்தன. உட்கார்ந்த நிலையில் இருந்த புத்தர் சிலைகள் ஆதிகேசவப்
பெருமாள் கோயிலின் உள்ளே இருந்ததாகவும், சிலர் அதனை வெளியில் எறிந்து
விட்டதாகவும் கூறப்படுகிறது. இத் தகவலை ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த
பலர் தெரிவித்தனர். பல ஆண்டுகளாக இச்சிலைகள் இரண்டும் கோயில் அருகே
கேட்பாரற்று முட்புதரில் கிடந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு இச் சிலைகளைச்
சுற்றியிருந்த முட் புதர்கள் அகற்றப்பட்டு, சிலைகள் தெளிவாகத் தெரியும்
வண்ணம் வைக்கப்பட்டிருந்தன. சிலையின் பெருமையை உணர்ந்தவர்கள் அவ்வப்போது
சிலைகளைப் பார்த்தும், வணங்கியும் வந்தனர். பவுத்த ஆய்வுக்காக வருபவர்கள்
பலரும் இச்சிலைகளை ஆய்வு செய்துள்ளனர்.
கடத்தப்பட்ட புத்தர் சிலை
ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் வெளியே
அமர்ந்த நிலையிலிருந்து இரண்டு சிலைகளில் ஒன்று யோக நிலையான பத்மாசனத்தில்
காட்சியளிக்கிறது. தலையை மட்டும் மறைத்த கோலத்தில் ஓர் அலங்கார வளைவு பின்
புறத்தில் காணப்படுகிறது. இந்தப் புத்தர் சிலை தாமரைப் பீடத்தில் அமர்ந்த
கோலத்தில் அய்ந்து அடி உயரமும், மூன்று அடி அகலமும் கொண்டிருக்கிறது.
இரண்டு கைகளும் மடியில் வைத்தவாறு, வலக்கை மேல் இடக்கையும், விரல்கள் முழு
வதும் நீட்டியும், உள்ளங் கைகள் மேல் நோக்கியும், யோக முத்திரையை வெளிப்
படுத்துகின்றன. மூக்கு மிக தீர்க்கமானதாகவும், கண்கள் பாதி மூடிய
நிலையிலும், காதுகள் நீண்டும், நெற்றியில் மடிப்புடனும் காணப்படு கின்றன.
தலைமுடி சுருள்சுருளாகவும், தலையின் உச்சியில் ஒளிவட்டம் உள்ளது, இடத்தோள்
வழியாக உடலை மூடியவாறு பாதம் வரை அங்க வஸ்திரம் இருக்கிறது. இது சோழர்
காலத்தில் உருவான சிலையாகும்
(Archaeological Atlas of the Antique
Remains of Buddhism in Tamilnadu, Institiute of Asian Studies, Chennai -
119 pp 73-74 & p.125)..
இச்சிலை 25.11.2003 அன்று இரவு திடீரென
காணாமல் போனது. யாரோ சிலர் இச்சிலையைத் திருடிச் சென்ற தாகக்
கூறப்படுகிறது. அந்தப்பழம் பெருமை வாய்ந்த அபூர்வ புத்தர் சிலை கடத்தப்
பட்டதைக் குறித்துப் பொது மக்கள் காஞ்சிபுரம் காவல்துறையின ரிடம் புகார்
செய்துள்ளனர். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி
வருகின்றனர் எனத் தெரிய வருகிறது. காணாமல் போன புத்தர் சிலை எளிதாகத்
தூக்கிச் செல்லப்பட முடியாது. வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் உதவியுடன்
தான் கடத்திச் சென்றிருக்க வேண்டும். எனவே, இந்தச் சிலைத்திருட்டு
திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்றும் காவல்துறையினர் கருதுகின் றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக, திருடு போன புத்தர் சிலையைக் கண்டுபிடிக்க
முடியவில்லை.
இன்னொரு புத்தர் சிலை ஆதிகேசவப் பெரு மாள்
கோயிலின் தெற்குச் சுற்றுச்சுவரை ஒட்டிய புத்தர் தோட்டம் என்ற இடத்தில்
காணப்படுகிறது. சிலையின் தலை சிதைந்து (தலை உடைந்து Headless-)
காணப்படுகிறது. இது பத்மாசனத்தில் அமர்ந்து புஜ்பர்சா முத்திரையுடன்
(Bhusparsamudra) பூமியைத் தொடும் கோலத்தில் அமைந்துள் ளது. வலக்கால்
மூட்டில், வலக்கையை வைத்தவாறு உள்ளது. உள்ளங்கைகள் திறந்த நிலையில் அனைத்து
விரல்களும் கீழ்நோக்கியும் தாமரைப் பீடத்தின் கீழ் தொட்ட நிலையில் உள்ளன.
அய்ந்து விதமான தியான நிலையில் உள்ள புத்தர் சிற்பங்களில் இது கவுதம
புத்தருடைய கோலமாகும். அங்கவஸ்திரம் இடத் தோளைத் தொட்டவாறு உடல் முழுவதும்
மூடி, பாதம் வரை உள்ளது. இது மூன்று அடி உயரம், இரண்டரை அடி அகலமும்
உள்ளது. இது சோழர் காலத்திய சிற்பமாகும்.
மூன்றாவது புத்தர் சிலை ஆதிகேசவப்பெருமாள்
கோயி லில் உள்ள வெளிவட்டத்தில் ஓர் இடத்தில் நின்ற நிலையில் (A Standing
Buddha Figure is found in an Unused Room) காண முடிகிறது. இது வலக்கை அபய
முத்திரையுடனும், இடக்கை வரத முத்திரையுடனும் காணப்படுகிறது. ஆனால், கைகள்
சிதைந்து காணப் படுகின்றன. தலையில் சுருள் சுருளாக முடியுடனும், நீண்ட
காதுகளும், கழுத்து முதல் பாதம் வரை நீண்ட அங்கியால் மூடியவாறும், நாகப்பட்
டினத்தில் கண்டெடுக்கப்பட்ட சோழர் காலத்து வெங்கல சிற்பத்தை ஒத்த வாறும்
உள்ளது. இந்தச் சிலை இரண்டரை அடி உயரமும், ஒரு அடி அகலமும் கொண்டது.
சிலையின் முழு உருவத்தை மூடியவாறு பின்புறமாக அலங்கரிக்கப்பட்ட வளைவு காணப்
படுகிறது. தீர்க்கமான நாசியுடன் இச்சிலை வடிவமைக்கப் பட்டுள்ளது. சிலையின்
ஒரு பகுதி சேதமடைந் துள்ளது. உதடுகள் ஆழ மாகக் குவிந்தும், தலை யின் மேல்
ஒளி வட்ட மும் காணப்படுகிறது. இச்சிலை சோழர் காலத்தைச் சார்ந்த தாகும்.
புத்தர் தோட்டம்
ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் தெற்குப்
பகுதியில் பல ஏக்கர் நிலத்தில் மரம், செடி, கொடிகளுடன் அழகான தோட்டம் ஒன்று
உள்ளது. இதனை அங்குள்ள மக்கள் புத்தர் தோட்டம் என்று அழைக்கின்றனர்.
சி.மீனாட்சி அவர்களின் கூற்றுப்படி
புத்தர் சிலைகள் உள்ள புத்தபள்ளி தோட்டத்தில் தான் இன்றைய ஆதிகேசவப்
பெருமாள் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இப்போது புத்தர் தோட்டம் உட்பட
புத்தர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள், மனைகள் ஆதிகேசவப் பெருமாள்
கோயிலுக்குச் சொந்தமாக உள்ளன. இந்தப் புத்தர் தோட்டத்தைத் தவிர புத்தமன
பேட்டை என்கிற இடத்தில் அகழ்வாராய்வு நடத்தினால் அநேக புத்தர் சிலைகள்
கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சி.மீனாட்சி கூறுகிறார்.
ஆர்ப்பாக்கத்தைச் சேர்ந்த வர லாற்று
ஆய்வர் மறைந்த ராஜகோபாலன் என்பவர் ஆர்ப்பாக்கத்தில் பவுத்த சமய
வளர்ச்சியைக் குறித்தும், புத்தர் தோட்டம், புத்தர் சிலைகள் ஆகியவற்றின்
பழைமையான வரலாற்றைக் குறித்தும் ஆய்வு செய்து தமது நூலில்
குறிப்பிட்டுள்ளார் என்றும் அவை தற்போது காணப்பெறவில்லை என்றும் இங்குள்ள
மக்கள் தெரி விக்கின்றனர். முன்னோர் காலத்தில் ஆர்ப்பாக்கம் செல்வாக்குப்
பெற்ற பவுத்த பூமியாக விளங்கியது என்பது மரபு வழிச் செய்திகள் ஆகும்.
காஞ்சி - ஆர்ப்பாக்கம் புத்தர் தோட்டத்தைப் பற்றிய ஆய்வுசெய்த போது கீழ்க்கண்ட தகவல்கள் கிடைத்தன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழங்காலத்தில்
பவுத்த சமயம் சிறப்பாக இருந்தது என்பதைக் காட்டும் வர லாற்றுச் சின்னங்களாக
இந்த அபூர்வச் சிலைகளும், புத்தர் தோட்டமும் இருக்கின்றன. காஞ்சிபுரம்
மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளில் நூற் றுக்கும் மேற்பட்ட புத்த
விகாரங்கள் இருந்ததாக வரலாறு மற்றும் புரா ணங்கள் கூறுகின்றன. அதற்கான
அடையாளங் களும், புத்தர் சிலைகளும் ஏராளமான அளவில் கிடைத்துள்ளன. காஞ்சி
புரத்தில் புத்தர் கோயில்கள் பல மாற்றங்களுக்கு உள் ளாகிவிட்டன. அவற்றின்
அடையாளங்களும் அழிக் கப்பட்டு விட்டன, அதே நேரத்தில் நகரின் பல்வேறு
இடங்களில் பெருமை வாய்ந்த மதிப்புமிக்க புத்தர் சிலைகள் கேட்பாரற்றுக்
கிடக்கின்றன. இந்தச் சிலைகளைப் பாதுகாக்க தொல் பொருள் ஆய்வுத்துறையோ,
மாவட்ட நிர்வாகமோ எந்தவிதமான நட வடிக்கையும் எடுக்க முயலவில்லை என்று
புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
நிறைவாக
காஞ்சியில் பவுத்த சமயம் தழைத்தோங்கிய
நிலை கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரையிலும் தொடர்ந்து இருந்தது என்ற தகவலை
யுவான்சுவாங் என்ற சீனப்பயணியின் குறிப்பிலிருந்து காணமுடிகிறது. மேலும்
மணிமேகலை, பெரியபுராணம் (சாக்கிய நாயனார்) மற்றும் அகழ்வாய்வுச் சான்றுகள்
மூலம் காஞ்சியில் பவுத்த சமயம் செல்வாக்குப் பெற்று இருந்ததைக்
காணமுடிகிறது. களப்பிரர்களின் ஆரம்ப கால ஆட்சியில் அரசு மதமாக செல்வாக்குப்
பெற்றிருந்த பவுத்தம், அவர்கள் சமணத்துக்கு மாறிய பின்பு, பவுத்தம்
வீழ்ச்சி அடைய நேர்ந்தது. சமணமும், பவுத்தமும் செல்வாக்கு பெற்றிருந்த
இடங்களில் சைவமும், வைணவமும் ஆதிக்கம் செலுத்தின. பவுத்தர்களின்
இருப்பிடமான காஞ்சியின் பவுத்தப் பண்பாட்டுப் பெருமை படிப்படியாக நலிந்து,
சிதைந்து, மறைந்தது, அப்படி பவுத்த மதம் மறைந்த ஒருகிராமம் தான். காஞ்சி
வட்டத்தில் உள்ள ஆர்ப்பாக் கமும் - அதன் புத்தர் தோட்டமும் ஆகும்.
-_ நன்றி: உங்கள் நூலகம் ஏப்ரல் 2013
நன்றி : http://www.viduthalai.in/page-1/59709.html
Comments
Post a Comment