Skip to main content

சாதித் தீ பரவும் களம் ஆகிறதா கொங்கு மண்டலம்? பி.கோலப்பன்

Published: July 9, 2015 16:25 ISTUpdated: July 9, 2015 16:45 IST

சாதித் தீ பரவும் களம் ஆகிறதா கொங்கு மண்டலம்?

பி.கோலப்பன்
COMMENT   ·   PRINT   ·   T+  
ஓர் ஆதிக்க சமூகத்துக்கும் தலித் சமூகத்துக்கும் இடையே பிரச்சினை என்றால் அது தமிழகத்தின் தென் பகுதியிலேயேதான் நடந்திருக்க வேண்டும் என அறியப்பட்டு வந்த காலம் மலையேறிவிட்டது.
இதுநாள்வரை இருந்த அந்த கண்ணோட்டத்தை பொய்க்கச் செய்துள்ளது, அண்மையில் தலித் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவமும், எழுத்தாள்ர் பெருமாள் முருகன் எழுத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட சம்பவமும்.
மேற்கு மண்டலத்தில் நடந்த இந்த இரண்டு சம்பவங்களும், தமிழகத்தின் அப்பிராந்தியம் சாதியம் சுடச்சுட பொங்கும் மையமாக உருவெடுத்து வருகிறது என்பதை உணர்த்துவதாக உள்ளது.
1990-களில் நடந்த சாதிச் சண்டைகளை யாரும் மறந்திருக்க முடியாது. அதன் எதிரொலியாக அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு, அனைத்து பொது போக்குவரத்துக் கழகங்கள், அரசாங்க சாலைகள், அரசு கட்டிடங்களுக்கும் சாதித் தலைவர்கள் பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதித்தது. சாதியின் பெயரில் பிளவு ஏற்படுவதை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது.
என்றாலும், இதுமட்டுமே சாதிய அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாது அல்லவா? அப்படித்தான், கொங்கு மண்டலத்தில் அரங்கேறும் சாதிய அடக்குமுறைகள் இவ்விவகாரத்தில் தென் மாவட்டங்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
பெருமாள் முருகனுக்கு என்ன நேர்ந்தது. அவரை சொந்த மண்ணில் இருந்து வெளியேற எது உந்தியது? சில சாதி அமைப்புகளால் பெருமாள் முருகனின் மாதொருபாகன் எதிர்க்கப்பட்டது எதற்காக? கோகுல்ராஜ் என்ற தலித் இளைஞர் கொல்லப்பட்டதன் பின்னணி என்ன? இதற்கான பதில்கள் கொங்கு மண்டலத்தில் சாதியத்தின் தாக்கத்தை விளக்கும்.
இவற்றுக்கெல்லாம் பலம் சேர்ப்பதுபோல், சாதி அமைப்புகள், சமூக வலைத்தளங்கள் தங்களது வகுப்புவாத தர்க்கங்களை பெரும் பிரிவினரிடம் எடுத்துச் செல்ல வெகு நேர்த்தியாக பயன்படுத்திக் கொள்கின்றன.
கொங்கு மண்டலத்தின் சாதியம் குறித்து எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை கூறும்போது, "கொங்கு மண்டலம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது தோற்றப்பிழை. கொங்கு மண்டலத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சிலநேரங்களில் சத்தமில்லாமலும், பல நேரங்களில் மிகுந்த வன்மத்துடன் இத்தகைய கொடுமைகள் நடக்கின்றன. பெருமாள் முருகனின் புறக்கணிப்பும், கோகுல்ராஜின் படுகொலையும் போதும் ஆதிக்க சாதியினரின் எண்ண ஓட்டத்தை எடுத்துரைக்க" எனத் தெரிவித்துள்ளார்.
அறியப்படாத அருந்ததியர்...
தலித் சமூகத்தின் இரு பெரும் பிரிவினரான பள்ளர், பறையர் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் அதிகளவில் இருக்கின்றனர். கல்வியும், நிலமும் பள்ளர்களுக்கு ஒரு விதத்தில் சமூக அந்தஸ்தை அளித்திருக்கிறது என்றால், வடக்குப் பகுதியில் சில தலித் தலைவர்களால் பறையர் இனத்தவர் அரசியல் அடையாளம் பெற்றுள்ளனர்.
ஆனால், இவர்கள் இருவருக்கும் கிடைத்த இந்த அடையாளம்கூட அருந்ததியர் இனத்தவருக்கு கிடைக்கவில்லை. அருந்ததி இனத்தவர்கள் இன்னமும் இச்சமூகத்தினரால் அறியப்படவில்லை. அருந்ததி இனத்தவர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அருந்ததி இனத்தவரை இழிவுபடுத்தும் சொலவடைகள் கொங்கு மண்டலத்தில் பரவலாக, சர்வ சாதாரணமாக காணப்படுகின்றன.
அருந்ததி இனத்தவர் புறக்கணிப்பு குறித்து எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை கூறும்போது, "கோகுல்ராஜ் கொலை வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலையீடு அரசின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், கோகுல்ராஜூக்கு ஏற்பட்ட நிலை கொங்கு மண்டலத்தில் அருந்ததி இனத்தைச் சேர்ந்த இளைஞருக்கு ஏற்பட்டிருந்ததால், விவகாரம் இதே அளவிளான வீச்சை பெற்றிருக்கும் என்று என்னால் அறுதியிட்டுச் சொல்லமுடியாது" எனக் கூறியுள்ளார்.
அதேவேளையில் கொங்கு மண்டலத்தின் போக்கு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுள் ஒருவரான கே.சுப்பராயன் கூறும்போது, "கொங்கு மண்டலத்தை தென் மண்டலத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியாகாது. கொங்கு மண்டலத்தில், அண்மைகாலமாக உருவாகிவரும் சாதிய அடக்குமுறைகளுக்கு சில சாதிய சக்திகள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள எடுக்கும் முயற்சிகளே காரணம்" என்றார்.
மேலும் அவர் கூறும்போது "ஏஐடியுசி தொழிற்சங்கத்துடன் இணைந்த பிராமண, தலித் தோழர்கள் கொங்கு மண்டல ஜவுளி தொழிற்சாலைகளில் பாகுபடின்றி பழகுவதையும், சமமாக அமர்ந்து உணவு உட்கொள்வதையும் நான் பார்த்திருக்கிறேன். உழைக்கும் வர்க்கத்தினரிடம் எந்த பாகுபாடும் இல்லை.
ஆனால், உழைக்கும் வர்க்கத்தினரின் ஒற்றுமை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதாயம் சேர்க்காது என்பதால் அவர்களே உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியில் வகுப்புவாதத்தை தூண்டுகின்றனர். மாஞ்சோலை, வால்பாறை டீ எஸ்டேட் தொழிலாளர்கள் நலனுக்காக குரல் கொடுத்தது கம்யூனிஸ்டுகளே. ஆனால், காலப்போக்கில் அரசியல் அடையாளத்துக்கான வேட்கை தொழிலாளர்கள் சாதி சார்ந்த யூனியனில் இணைத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளியிருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் எழுத்தாளர்: அ.ஜெகநாதன்