தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய இரட்டைமலை சீனிவாசனின் வரலாற்றை பாடமாக வைக்க வேண்டும்: கொள்ளுப் பேத்தி கோரிக்கை
தமிழகம்
சென்னைதாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய இரட்டைமலை சீனிவாசனின் வரலாற்றை பாடமாக வைக்க வேண்டும்: கொள்ளுப் பேத்தி கோரிக்கை
தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய இரட்டை மலை சீனிவாசனின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி, கல்லூரிகளில் பாடமாக வைக்கவேண்டும் என்று அவரது கொள்ளுப் பேத்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, முதலாவதாக உயர்கல்வி பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் இரட்டைமலை சீனிவாசன். தென்னாப்பிரிக்காவில் இருந்த போது, காந்தியடிகளுக்கு தமிழில் கையெழுத்திட கற்றுத் தந்தவரான இவர், தமிழக சட்டமன்றத்தில் தீண்டாமை ஒழிப்புச் சட்ட மசோதாவை முன்மொழிந்தவர். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இரட்டைமலை சீனிவாசனின் 155-வது பிறந்த நாளை முன்னிட்டு, ‘திராவிடமணி திவான்பகதூர் இரட்டைமலை சீனிவாசன்: சரித்திர சகாப்தம்’ என்ற பெயரில் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவரது வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியுள்ளார் முனைவர் நிர்மலா அருள்பிரகாஷ். இவர் இரட்டைமலை சீனிவாசன், சமூக புரட்சியாளர் அயோத்திதாசர் ஆகியோரின் கொள்ளுப் பேத்தி ஆவார்.
இரட்டைமலை சீனிவாசனின் வாழ்க்கை வரலாறு புத்தகம் குறித்து ‘தி இந்து’விடம் நிர்மலா அருள்பிரகாஷ் கூறியதாவது:
தலித் சமுதாய மக்கள் இன்று பெற்றிருக்கும் சமூக உரிமைகள்,கல்வி,பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுக்காக போராடியவர் இரட்டைமலை சீனிவாசன். கடந்த 1993-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமை மாநாட்டில் நான் கலந்துகொண்டேன். அந்த மாநாட்டில் என்னை ’இரட்டைமலை சீனிவாசனின் கொள்ளுப்பேத்தி’ என்று அறிமுகம் செய்து வைத்தார்கள். அப்போது பல நாடுகளிலிருந்தும் வந்திருந்த பிரதிநிதிகள் என்னிடம் வந்து, என் கொள்ளுப்பாட்டனார் பற்றி பெருமிதமாகப் பகிர்ந்து கொண்டனர். அவரைப் பற்றி பலரும் அறிந்துகொள்ளும் வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும் என்ற எண்ணம் அப்போது எனக்கு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரைப் பற்றிய ஆவணங்களைச் சேகரித்தேன். அந்தக்காலத்தில் இழிசொல்லாக கருதப்பட்ட ‘பறையன்’ எனும் பெயரில் இதழ் ஒன்றை அவர் நடத்தினார்.1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க சென்றபோது ஐந்தாம் ஜார்ஜ் மன்னரிடம் எல்லோரும் கைகுலுக்கி அறிமுகம் செய்து கொண்டனர். அப்போது, இரட்டைமலை சீனிவாசன் மட்டும் “நான் தீண்டத்தகாதோர் சமூகத்தைச் சேர்ந்தவன்.உங்களைத் தீண்டினால், நீங்கள் தீட்டுப்பட்டு விடுவீர்கள்” என்று சொல்லி, ஜார்ஜ் மன்னரிடம் தீண்டாமைக் கொடுமையின் அவலத்தை விளக்கினார்.
தாழ்த்தப்பட்ட மக்களைத் திரட்டி சென்னையில் 23.09.1893-ல் முதன்முதலாக மாபெரும் மாநாட்டை நடத்தினார். இப்படி பல பெருமைகளை உடைய இரட்டைமலை சீனிவாசனின் சமுதாயப் பணிகளை இன்றைய இளைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழக அரசு அவரது வாழ்க்கையை பள்ளி, கல்லூரிகளில் பாடமாக வைக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment