‘அம்பேத்கர் – இன்றைய உடனடித் தேவை’ எழுத்தாளர்: அருந்ததி ராய்


Arunthathiroy- 400



பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் முதன்மையான, புகழ்பெற்ற நூல் "ஜாதியை அழித்தொழிக்கும் வழி' (Annihilation of Caste) ஆகும். இதன் முக்கியத்துவம் கருதியே இந்நூலை "தலித் முரசு' சிறப்பிதழாக 2007 இல் (11,000 படிகள்) வெளியிட்டது. அதற்குப் பிறகு நூல் வடிவில் இரண்டாம் பதிப்பாக 2010 இல் 3,000 படிகள் வெளியிட்டோம். தற்பொழுது 2014 இல் மீண்டும் 3,000 படிகள் வெளியிட்டுள்ளோம்.
ஆக, ஆறு ஆண்டுகளில் 17 ஆயிரம் படிகள் வெளியிட்டும் தமிழகத்தில் இதுவரை இந்நூல் குறித்து எவ்வித விவாதமும் – புரட்சி மற்றும் முற்போக்காளர்களின் கள்ள மவுனத்தால் – திட்டமிட்டே முன்னெடுக்கப்படவில்லை. வணிக ஏடுகளில் ஒரு பக்க அளவில் நூல் மதிப்புரைகூட வந்ததில்லை. இடதுசாரி ஏடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல! 
தற்பொழுது அம்பேத்கரின் இந்நூல் புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததிராயின் 180 பக்க முன்னுரையுடன் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. அருந்ததிராயின் முன்னுரைக்காகவே பார்ப்பனப் பத்திரிகைகள் போட்டிப் போட்டுக் கொண்டு இவருடைய முன்னுரையின் சில பகுதிகளை வெளியிட்டு வருகின்றன. இனி புரட்சியாளர்களும் முற்போக்காளர்களும் தங்கள் கள்ள மவுனத்தை திட்டமிட்டே கலைக்கக்கூடும்!
இதையொட்டி "அவுட்லுக்' வார இதழ் (10.3.2014)  அருந்ததிராயின் நீண்ட பேட்டியை வெளியிட்டுள்ளது. அம்பேத்கரின் இந்நூல் அடிப்படையில் இந்துக்கள் மற்றும் அவர்களுடைய இந்து தத்துவத்தின் உயிர்நாடியையே தர்க்க ரீதியாகத் தகர்த்தெறியும் ஆற்றலைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஜாட் –  பட் – தோடக் மண்டல் முதல் இன்றைய கணினியுக இந்துக்கள்வரை இந்நூலை இருட்டடிப்புச் செய்வதற்கான காரணம் அதுதான்.
இந்நூலுக்கான அருந்ததிராயின் முன்னுரை "டாக்டரும் துறவியும்' என்று  தலைப்பிடப்பட்டுள்ளது. காந்தியைத்தான் அருந்ததிராய் துறவி என்று குறிப்பிடுகிறார். மேலும், இந்நூலில் காந்திக்கு அம்பேத்கரின் பதிலடி என்பது ஒரு சிறு பகுதிதான். நூலின் மய்யம் அதுவல்ல.அருந்ததிராயை நேர்காணல் செய்தவரும் காந்தி – அம்பேத்கர் முரணை முன்வைத்தே எல்லா கேள்விகளையும் எழுப்பியுள்ளார். இத்தகைய விமர்சனத்தினூடே இந்நேர்காணலின் சில பகுதிகளை வெளியிடுகிறோம்.  - தலித் முரசு ஆசிரியர் குழு
டாக்டர் அம்பேத்கரின் "ஜாதியை அழித்தொழிக்கும் வழிநூலின் விரிவுபடுத்தப்பட்ட பதிப்பிற்கானஉங்களின் பங்களிப்புஅறிமுக உரை என்பதையும் கடந்து காந்தி பற்றிய நுட்பமான – எங்களைப்போல் காந்தியின் மீது அன்பும் மரியாதையும் கொண்டவர்களை சலனப்படுத்தக் கூடிய – பிரதியாகஅமைந்திருக்கிறதே?
ஆமாம். உண்மைதான். அப்படி எழுதுவதும் கூட எளிதான செயல் அல்ல. நாம் எல்லோரும் தடுமாற வைக்கும் இருளில் முற்றிலும் நம்பிக்கை தொலைத்து, நம்மைச் சுற்றி நடப்பவைகளெல்லாம் ஏன் இப்படி நடக்கின்றன என்ற காரணங்கள் விளங்காமல் நிற்கும் இந்தச் சூழலில் காந்தி – அம்பேத்கர் இடையிலான விவாதங்கள் பற்றிய மீளாய்வு என்பது – அது என்னதான் சிலரை சலனப்படுத்தினாலும் அல்லது எப்படித்தான் பழைய கெட்டித் தட்டிப்போன சிந்தனைகளைக் குலைத்தாலும் – இறுதியில் நமக்கான பாதையைத் தெளிவுபடுத்தும்.
"ஜாதியை அழித்தொழிக்கும் வழி' மிகக் கண்டிப்பாக உள்வாங்கப்பட வேண்டிய நூல் என்று நான் சொல்வேன். சாதி நம் சமூகச் சீரழிவுகளின் இதயமாக இருக்கிறது. அது ஒடுக்கப்பட்ட மக்களை எந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது என்பதைக் கடந்து ஒடுக்குகின்றவர்களின் அறம் சார்ந்த விழுமியங்களைத் தின்று அரித்திருக்கிறது. நம்முடைய இப்போதைய தேவை – அம்பேத்கர். அதுவும் உடனடியாக.
அம்பேத்கர் பற்றி எழுதப்பட்ட நூலில் காந்தி எப்படி முக்கியத்துவம் பெறுகிறார்? அதற்கான தேவை என்ன?
அரசியல் சார்ந்தும் அறிவு சார்ந்தும் மட்டுமல்ல; அற ஒழுக்கம் சார்ந்தும் காந்தியை மிகக் கடுமையாகக் கேள்விக்குள்ளாக்கியவர் அம்பேத்கர். இங்கு பொதுவாகச் சொல்லப்படும் விவரøணகள் அனைத்துமே அந்தப் பதிவுகளை மறைத்துவிட்டன. அது உண்மைக்குப் புறம்பானது. என்னைப் பொருத்தவரை இன்றுவரை நம்மீது தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கிற காந்தி – அம்பேத்கர் இடையிலான விவாதங்களை வெளிப்படுத்தாமல் என்னால் இந்நூலுக்கு அறிமுக உரை எழுத முடியாது.
"ஜாதியை அழித்தொழிக்கும் வழி' என்பது அம்பேத்கர் பேசுவதற்காகத் தயாரிக்கப்பட்டு, ஆனால் பேச முடியாமல் போன உரையின் பிரதி. உரை நிகழ்த்த அழைத்திருந்த ஆரிய சமாஜத்தின் இணை அமைப்பான "ஜாட் பட் தோடக் மண்டல்' அம்பேத்கரின் பேச்சுக்கான எழுத்துப் பிரதியைப் பார்த்து அந்த உரையின் மூலம் இந்து மதத்தையும் அதன் புனித நூல்களையும் அம்பேத்கர் நேரடியாகத் தாக்கப் போகிறார் என்பதை உணர்ந்து அவரை அழைப்பதிலிருந்து பின்வாங்கிக் கொண்டது.
அம்பேத்கர் அந்தப் பிரதியை சிறுவெளியீடாக அச்சிடுகிறார். அதற்கு காந்தி தன்னுடைய "ஹரிஜன்' இதழில் எதிர்வினையாற்றுகிறார். ஆனால் இந்த வினை – எதிர்வினை என்பது அவர்கள் இருவருக்கும் இடையே தொடர்ந்து நிகழ்ந்த கடுமையான நீண்ட முரண்பாடுகளின் ஒரு பகுதிதான்.
இதுவரை சொல்லப்பட்ட விவரணைகளில் அம்பேத்கர் பதிவு செய்யப்படவில்லை என்று நான் சொன்னது, அவற்றில் அவர் மறைக்கப்பட்டார் என்ற பொருளில் அல்ல; மாறாக அவற்றில் அவர் அளவுக்கு அதிகமான முக்கியத்துவத்தோடு பதிவு செய்யப்பட்டார்.
ஒன்று, "உயர்த்தி' வைக்கப்பட்டு – "அரசமைப்புச் சட்டத்தின் தந்தை' என்றோ அல்லது – "ஒதுக்கி' வைக்கப்பட்டு – "தீண்டத்தகாதவர்களின் தலைவர்' என்றோ புகழப்பட்டார். ஆனால் அவரை இயக்கும் ஆற்றலாக இருந்த அவருடைய அறச்சீற்றமும் நியாயமான விருப்பங்களும் அனைத்து விவரணைகளின் பக்கங்களிலும் துடைத்து அழிக்கப்பட்டு விட்டது.
இன்றைய  நம்முடைய சிக்கல்களுக்கெல்லாம் தீர்வு வேண்டுமென்றால் அம்பேத்கரைப் பற்றிய பார்வை தீவிரமடைய வேண்டும் என்பதே வழி என்று நான் சொல்வேன். தலித்துகள் முன்பே அதைப் புரிந்து கொண்டார்கள். மற்றவர்களும் அதைப் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.
ஆனால் என்ன சொன்னாலும் காந்தி ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவராக இருந்தார் இல்லையா? நம் நாட்டை சுதந்திரத்தை நோக்கி அவர்தானே நடத்தினார்?
ஒரு சிலருக்கு அது "சுதந்திரம்'. மற்றவர்களுக்கு அது "அதிகாரக்கை மாற்றம்' அவ்வளவுதான். என்னைப் பொருத்தவரை காந்தி – அம்பேத்கர் இடையிலான விவாதங்கள் என்பவை "ஏகாதிபத்தியம்' "சுதந்திரம்' போன்ற சொற்களைப் பற்றி இதுவரை நாம் கொண்டிருந்த புரிதல்களை ஆழ்ந்த சிக்கலுக்கு உள்ளாக்குகின்றன.
1931 இல் முதன்முதலாக அவர்களின் சந்திப்பு நிகழ்ந்தபோது அம்பேத்கர் காங்கிரசை கடுமையாகக் கண்டனம் செய்வது பற்றி காந்தி கேள்வி எழுப்புகிறார். காரணம், அந்தக் காலகட்டத்தில் காங்கிரசை கண்டனம் செய்வது என்பது "சொந்த மண்ணுக்கான' போராட்டத்தையே கண்டனம் செய்வதற்கு ஒப்பானது. அந்த வேளையில் தான் அம்பேத்கர் தன்னுடைய புகழ்பெற்ற உள்ளம் உலுக்கும் அந்த பதிலைச் சொல்கிறார்:
"காந்தியாரே எங்களுக்கென்று இங்கே சொந்த மண் என்று ஒன்றில்லை. தீண்டத்தகாதவர் என்ற பெயரைத் தாங்கியுள்ள எவரும் இந்த மண்ணைப் பற்றி எவ்விதப் பெருமையும் கொள்ள முடியாது.''
தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த பிறகும் கூட காந்தி தன்னை ஆங்கிலப் பேரரசின் "ஒரு பொறுப்பான குடிமகன்' என்றே கூறிக் கொள்கிறார். சில ஆண்டுகள் கழித்து முதல் ஒத்துழையாமை இயக்கத்தின் போதுதான் ஆங்கில அரசுக்கு எதிராகத் திரும்புகிறார். லட்சக்கணக்கான மக்கள் அவரைப்பின் தொடர்கின்றனர். ஆக, வெள்ளையரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு முழுக் காரணமும் காந்தியே என்பது தவறாக இருந்தாலும் அதில் அவருடைய பங்களிப்பு மிக முக்கியமானது என்பது உண்மைதான்.
போராட்டத்தின் போதும் காந்தி "சமத்துவம்' பற்றி சில நேரங்களில் ஒரு சோஷலிஸ்டைப்போல பேசினாலும் காலங்காலமாக இருந்துவரும் சாதிப்படி நிலைக்கோ, பெரிய ஜமீன்தார்களுக்கோ எதிரான நிலையை அவர் எப்போதுமே எடுத்ததில்லை.
தொழில் முதலாளிகளான பிர்லாக்கள், டாடாக்கள் மற்றும் பஜாஜ் குழுமத்தினர் அவருடைய அரசியல் செயல்பாடுகளுக்கு நிதிப்பின்புலமாக இருந்தார்கள். காந்தியும் அவர்களுடனான எந்த ஓர் உரசலையும் கவனமாகத் தவிர்த்தே வந்தார். அந்த முதலாளிகளில் பலர் முதலாம் உலகப் போரின் போது கணிசமான பணத்தைக் குவித்து உச்ச நிலைக்குப் போனார்கள்.
ஆனாலும் ஆங்கில அரசாங்கத்தின் சட்டதிட்டங்களும் இன வேற்றுமையும் அவர்களைக் கட்டுப்படுத்தி எரிச்சலூட்டியது. அதனால் அவர்கள் தேசிய இயக்கத்தின் பின்னணியில் இருந்து கொண்டு ஆங்கில அரசுக்கு நெருக்கடி கொடுத்தார்கள்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி இந்தியா வந்த காலகட்டத்தில் அகமதாபாத்தில் ஆலை முதலாளிகள் ஈட்டிய கொள்ளை லாபத்தில் எந்தப் பலனையும் பெறாததால் ஆவேசமடைந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். சமரசம் பேசும்படி ஆலை முதலாளிகள் காந்தியைக் கேட்டுக் கொண்டனர். நான் முன்பே எழுதியதைப் போல இத்தனை ஆண்டுகளில் தொழிலாளர் பிரச்சனைகளுக்கான அவருடைய குறுக்கீடுகளும் வேலை நிறுத்தம் பற்றி அவர்களுக்கு அவர் வழங்கிய அறிவுரைகளும் மிகவும் குழப்பமானவை.
தவிர மற்ற பிரச்சனைகளிலும் கூட புகழ்பெற்ற "காந்திய நடைமுறை' என்பது ஒரே நேர்கோட்டில் பயணிக்கவில்லை. எடுத்துக்காட்டாக, 1924 இல் பம்பாய் தொழிற்சாலைகளின் மின்சாரத் தேவைகளுக்காக டாடா குழுமத்தினரால் பூனாவில் இருந்து சற்று தொலைவில் "முல்ஷி அணை' கட்டப்பட்ட போது அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது காந்தி எதிர்ப்பினைக் கைவிடுமாறு அறிவுறுத்தி அவர்களுக்கு கடிதம் எழுதுகிறார்.
இக்கடிதத்தில் காந்தி சொன்ன "தர்க்க நியாயங்கள்' – ஏறக்குறைய 2000 ஆண்டில் உச்ச நீதிமன்றமானது உலக வங்கியின் நிதி உதவியோடு கட்டப்படும் சர்தார் சரோவர் அணையினைத் தடையின்றி கட்டலாம் என்று சொல்லப்பட்டதை ஒத்திருந்தன. ஆக, இந்த இடத்தில்தான் அம்பேத்கர் சொன்னது முக்கியத்துவம் பெறுகிறது. ""இங்கே கேள்வி – காங்கிரஸ் சுதந்திரத்திற்காகப் போராடுகிறதா என்பது அல்ல. யாருடைய சுதந்திரத்திற்காக அது போராடுகிறது என்பதுதான்.''
Ambedkar--Gandhi 600வெண்டி டோனிகரின் (இவர் எழுதிய நூல் இந்து மதத்தை கடுமையாக விமர்சிக்கிறது என இந்துத்துவ இயக்கத்தினர் எதிர்த்ததால் இந்நூலை வெளியிட்ட "பெங்குயின்' பதிப்பகம் இதைத் திரும்பப் பெற்றுக் கொண்டது) நூலுக்கு  நேர்ந்த கதியைப் பார்த்த பிறகு உங்களுக்குப் பதற்றமாக இல்லையா?
எனக்கு அப்படி ஒரு பதற்றம் குறிப்பாக இந்நூலைப் பற்றி இல்லை. இது அம்பேத்கரின் நூல். ஒன்றை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். எழுதுவதற்கும் நினைப்பதைச் சொல்வதற்குமான நம்முடைய சுதந்திரம் குறைந்து கொண்டே வருகிறது.
19 ஆம் நூற்றாண்டிலே யாருக்கும் தலைவணங்காத மிர்ஸா காலிப் இஸ்லாத்தோடு தனக்கிருக்கும் உறவைப் பற்றிச் சொன்னதையும், 1940 இல் சதத் ஹசன் மண்ட்டோ முல்லாக்களைப் பற்றி சொன்னதையும், 1930 இல் இந்து மதம் பற்றி அம்பேத்கர் சொன்னதையும், காஷ்மீர் பற்றி நேருவும் ஜெ.பி.யும் சொன்னதையும் இன்றைக்கு யாருமே உயிரைப் பணயம் வைக்காமல் சொல்லிவிட முடியாது.
"ஜாதியை அழித்தொழிக்கும் வழி' வெளிவந்த பிறகு காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையே நடந்த விவாதமானது காரசாரமானதாகவும் கடுமையானதாகவும் இருந்தது. ஆனாலும் அந்த உயர்ந்த மனிதர்கள் இருவருமே அது ஒரு சண்டையாக மாறிவிடுமோ என்ற அச்சப்படவே இல்லை.
இன்றைக்கு இருக்கும் புத்தகங்களை தடை செய்ய வேண்டும் என்று அதிகாரம் செய்யும் வெறியர்களைப் போல் அல்லாமல் – தனக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் அம்பேத்கருடைய பேச்சை எல்லோரும் வாசிக்க வேண்டும் என்பதோடு – "சீர்திருத்தம் வேண்டும் என விரும்பும் யாரும் அந்தப் பேச்சை ஒதுக்கிவிட முடியாது.
வெளிப்படையான விவாதத்திற்கு வழி வகுக்கிறது என்பதற்காகவே அது படிக்கப்பட வேண்டும். டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்திற்கு எதிரான அறைகூவல்'' என்று காந்தி சொன்னார்.
உங்கள் அறிமுக உரையில் இங்கு இருக்கும் அனைத்து நிறுவனங்களிலும் ஊடகங்கள் உட்பட – "உயர் சாதி'யினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதாக காட்டமான தாக்குதலோடு தொடங்குகிறீர்கள். தவிர, அவர்கள் மத்தியில் சாதிப்பிரச்சனைகளைக் கண்டும் காணாமல் இருந்துவிடும் எழுதப்படாத "கண்ணை மூடிக் கொள்ளும் ஒப்பந்தம்' (project of Unseeing) நிலவுவதாகவும் சுட்டிக் காட்டுகிறீர்கள். ஆனால் மண்டல் குழு பரிந்துரைகளுக்குப் பிறகு இங்கே நடக்கும் அத்தனை அரசியல் செயல்பாடுகளுக்கும் சாதி என்பது அடிப்படையான தேவை என்றான பிறகு மற்ற சாதிகளின் முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறதே?  
சாதி என்கிற முப்பரிமாணக் கண்ணாடி கொண்டு பார்த்தால்தான் இன்றைய இந்தியாவில் நிதியைக் கட்டுப்படுத்துவது யார், கார்ப்பரேட் நிறுவனங்களின் சொந்தக்காரர்கள் யார், ஊடகங்களின் உரிமையாளர்கள் யார், நீதித்துறை, அரசுப்பதவிகள், நிலங்கள் இவைகளுக்கெல்லாம் யார் சொந்தக்காரர்கள் அல்லது யார் சொந்தக்காரர்கள் இல்லை என்பது தெரியும். அப்போதுதான் இது "இன்றைய' இந்தியா இல்லை; "புராதன' இந்தியா என்பது புரியும். மண்டல் பரிந்துரைகளுக்கு முன்பே சாதிதான் இங்கு – இந்து சமூகத்தை மட்டுமல்ல – இந்திய சமூகத்தையே உந்திச் செல்லும் விசையாக இருந்திருக்கிறது.
என்னுடைய அறிமுக உரையின் பெரும்பகுதி – எப்படி 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதுவரை "பேரரசு' என்றிருந்த கருத்தாக்கம் "தேசம்' என்பதாக மாற்றமடைந்தபோது "ஆட்சி அதிகாரம்' மற்றும் "அனைவருக்குமான பங்களிப்பு' பற்றிய சிந்தனைகள் முகிழ்த்தபோது – "எண்ணிக்கை' "மக்கள் தொகைக் கணக்கெடுப்பு' போன்ற புதிய நடைமுறைகள் என்னவிதமான பதற்றத்தை இங்கே உண்டாக்கின என்பதை ஆராய்ந்திருக்கிறேன்.
பலநூறு ஆண்டுகளாக "உயர் சாதி'யினரின் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாக்கப்பட்டு கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்து – சாதி இழிவை உதறித் தள்ள – இஸ்லாத்திற்கும் பின் கிறித்துவத்திற்கும் சீக்கியத்திற்கும் மாறியிருந்தார்கள். இந்த இடத்தில்தான் "எண்ணிக்கை' பற்றிய முக்கியத்துவம் உணரப்பட்டது. 5 கோடி தீண்டத்தகாதவர்கள் இந்த எண்ணிக்கை விளையாட்டிற்கு இன்றியமையாதவராகிறார்கள். அங்கங்கே பல "இந்து சீர்திருத்த' அமைப்புகள் முளைக்கின்றன.
அவர்கள் மதமாற்றத்தைத் தடுக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆரிய சமாஜம் "அசுத்தப்பட்டவர்களை சுத்தமாக்குவதற்கு' என்று "சுத்தி இயக்கத்தை' தொடங்கி வேற்று மதங்களுக்கு மாறிய பழங்குடியினரையும் தீண்டத்தகாதவர்களையும் மீண்டும் இந்து மதத்திற்குள் கொண்டுவரும் வேலையைச் செய்தது. அதன் நீட்சியாக இன்றைக்கும் வி.எச்.பி., பஜ்ரங்தள் போன்றவை "கர்வப்சி'  என்ற பெயரில் மதம் மாறிய பழங்குடியினரை "சுத்தப்படுத்தி' மீண்டும் இந்து மதத்திற்குள் "அழைத்து' வருகின்றன. சந்தேகமேயில்லை. அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி, சாதி என்பது இங்கு நடக்கும் அத்தனை அரசியலுக்குமான அடிப்படைத் தேவையாகத்தான் இருக்கிறது.
 அதை எப்படி "கண்ணை மூடிக் கொள்ளும் ஒப்பந்தம்' என்று சொல்கிறீர்கள்?
"கண்ணை மூடிக் கொள்ளும் ஒப்பந்தம்' என்று நான் சொல்வது முற்றிலும் வேறு வகையானது. இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த "அறிவுஜீவிகள்' குறிப்பாக – "ஜாதி' என்பதையே ஓர் "அடிக்குறிப்பாக' தங்களுடைய மார்க்சிய வர்க்க ஆய்வில் ஒவ்வாமையோடும் வேண்டா வெறுப்போடும் சேர்க்கப்படும் – பின்குறிப்பாகப் பார்க்கும் இடதுசாரிகள் – "ஜாதி' என்கிற ஒன்றே இங்கு இல்லாதது போல் நடந்து கொள்வதைப் பற்றியே அப்படிச் சொல்கிறேன்.
"எங்களுக்கு ஜாதியில் நம்பிக்கை இல்லை' என்று சொல்வது கேட்பதற்கு நன்றாகவும் புரட்சிகரமானதாகவும் இருக்கலாம்.ஆனால் அப்படிச் சொல்கிறீர்கள் என்றால் ஒன்று – பிரச்சனைகளிலிருந்து தப்பித்து ஓடுகிறீர்கள் அல்லது சாதியின் கொடூர முகத்தை சந்திக்கும் வாய்ப்பை உங்கள் "உயர்சாதி மரியாதை' உங்களுக்கு வழங்கவில்லை என்று அர்த்தம்.
நான் சொல்லும் "கண்ணை மூடிக் கொள்ளும் ஒப்பந்தம்' நம்முடைய அனைத்து பண்பாட்டுத் தளங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. நம் திரைப்படங்கள் சாதியைப் பற்றிப் பேசுகின்றனவா? எப்போதும் இல்லை. நம்முடைய புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எத்தனைபேர் அதைப்பற்றி எழுதுகிறார்கள்? வெகு சிலர். நீதிபற்றியும் அடையாள அரசியல் பற்றியும் நவதாராளமயத்தின் கேடுகள் பற்றியும் வாதிடும் எத்தனை பேர் சாதிப்பிரச்சனைகள் பற்றி எழுதுகிறார்கள்? இங்கே இருக்கும் சில புரட்சிகர இயக்கங்கள்கூட சாதியை ஒதுக்கியே வைத்திருக்கின்றன.
2001இல் டர்பனில் நடைபெற்ற இனவெறிக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் தலித் பிரச்சனைகளைப் பேச வேண்டும் என்பதற்கு இந்திய அரசு காட்டிய முரட்டுத்தனமான எதிர்ப்புகூட "கண்ணை மூடிக் கொள்ளும் ஒப்பந்தத்தின்' ஒரு பகுதிதான். சாதி பற்றிய தரவுகள் ஏதுமின்றி இங்கே எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புகளினால் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்ட, வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட தலித்துகள் பற்றிய கணக்கு முற்றிலும் மறைக்கப்பட்டு விடுவது கூட "கண்டு கொள்ளாத ஒப்பந்தம்'தான். உங்கள் சிந்தனைக்கு ஒரு செய்தியைச் சொல்கிறேன்.
1919 இல் அமெரிக்காவில் "சிவப்புக் கோடை' என்று சொல்லப்படும் காலகட்டத்தில் ஏறத்தாழ 165 கறுப்பின மக்கள் கொல்லப்பட்டார்கள். சரியாக ஒரு நூற்றாண்டு கழித்து இந்தியாவில் 2012 இல் ஒருபெண் டெல்லியில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட அதே ஆண்டு – அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களின்படி, 1574 தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள்; 651 தலித்துகள் கொல்லப்பட்டார்கள். இவையெல்லாம் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைத் தாக்குதல்கள் மட்டுமே. அவர்கள் மீதான "பொருளாதாரத் தாக்குதல்கள்' என்பவை வெகுசில தலித் கோடீஸ்வரர்களைத் தவிர்த்து – முற்றிலும் வேறான செய்தி.
நீங்கள் "சாதி'யைப் பற்றி வரையறுக்கும்போது ""இதுவரை மனிதச் சமூகம் அறிந்திராத மிகக் கொடூரமான சமூகப்படிநிலை அமைப்பு; அது அழிக்கப்படாமல் இன்றுவரை நிலைப்பெற்றிருப்பதற்குக் காரணம் அது இந்து மதத்தோடு இறுகப் பிணைக்கப்பட்டிருப்பதுதான். அதுவும் இந்துமதம் என்பது, "அறவழிப்பட்ட' "உன்னதமான' விஷயங்களான – மாயாவாதம், ஆன்மிகம், அகிம்சை, சாத்வீகம், புலால் உண்ணாமை, காந்தி, யோகா, வெளிநாட்டு யாத்ரீகர்கள், பீட்டில்ஸ் இசைக்குழுவினர் பெற்ற முக்தி போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ள மதம்.அதனால்தான் வெளிநாட்டவர்கள் கூட, இப்படிப்பட்ட "உன்னதங்'களுக்குள் ஒளிந்து கிடக்கும் "சாதி' என்பதைப் பிரித்துப் பார்க்கவும் அதனை விளங்கிக் கொள்ளவும் முடியவில்லை'' என்கிறீர்கள். வெளிநாடுகளில் நிலவும் இனவேற்றுமைக்கும் நிறவெறிக்கும் நிகரான ஒன்றுதான் சாதி என்றும் இருப்பினும் இங்கே அப்படி பாவிக்கப்படவில்லை என்றும் வாதிடுகிறீர்கள். ஆனால் இங்கே பலர் சாதி என்கிற வரலாற்று அநீதியைச் சரிசெய்ய தேர்தல் அரசியலும் இடஒதுக்கீடுமே போதுமானவை என்று சொல்கிறார்கள். அதிலும் அண்மையில் மூத்த காங்கிரஸ் தலைவரான ஜனார்தன் திரிவேதி இடஒதுக்கீடு தேவையில்லை என்கிறார். இதற்கு உங்கள் பதில் என்ன?
அக்கிரமம். அதை யார் சொல்லியிருந்தாலும் சரி, இடஒதுக்கீடு எவ்வளவு அவசியமானது என்பது பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். ஒரு தலித் மாணவர் இடஒதுக்கீட்டின் பலனைப் பெறவேண்டுமானால், அவர் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆனால் 70 சதவிகித தலித் மாணவர்கள் அதற்கு முன்பாகவே பள்ளிப்படிப்பை நிறுத்திவிடுகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அப்படியென்றால் மிகச் சாதாரண அரசுப் பணிகளுக்குக் கூட நான்கில் ஒரு தலித்தான் தகுதியுடையவராகிறார். "ஒயிட் காலர்' (கொஞ்சம் பெரிய) பணிகளுக்குப் போகவேண்டுமானால் நீங்கள் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இங்கே வெறும் 2 சதவிகித தலித்துகள்தான் பட்டதாரிகள்.
ஆனால், என்னதான் மிகச் சிலருக்கு மட்டுமே இடஒதுக்கீட்டின் பலன் சென்றடைந்திருந்தாலும் அதிகார மட்டத்தில் தலித்துகளைப் பிரதிநிதித்துவப்படுத்த அதுதான் வழி. அது மிகவும் இன்றியமையாதது. நல்வாய்ப்பாக, கொலம்பியா பல்கலைக் கழகம் சென்று படிக்க அம்பேத்கருக்குக் கிடைத்த கல்வி உதவித் தொகை இங்கே எவ்வளவு பெரிய மாற்றங்களுக்கு வழிவகுத்திருக்கிறது என்று நினைத்துப் பாருங்கள். இன்று தலித்துகள் மருத்துவர்களாக, வழக்குரைஞர்களாக, அறிஞர்களாக, அரசுப்பணியாளர்களாக ஆகியிருப்பதற்கு இட ஒதுக்கீட்டிற்கு நன்றி சொல்ல வேண்டும்.
ஆனால் இப்படி கிடைக்கும் மிகச் சிறிய வாய்ப்பு கூட "உயர்சாதி'யினருக்கு எரிச்சலூட்டுகிறது; எதிர்க்கிறார்கள். தவிர, நம்முடைய அரசு மற்றும் அதிகார நிறுவனங்கள், நீதித்துறை, ஏன் முற்போக்கான நிறுவனம் என்று சொல்லப்படும் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் போன்றவை எல்லாம் எந்த அளவிற்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள் என்கிற பதிவேட்டைப் பார்த்தால் திடுக்கிட்டுப் போவீர்கள். ஒரே ஒரு அரசுத்துறையில் மட்டும்தான் தலித்துகளின் பங்களிப்பு அதிகமாக 6 மடங்கு இருக்கிறது.
ஏறத்தாழ 90 சதவிகித நகராட்சித் துப்புரவுத் தொழிலாளர்கள் எனப்படும் தெருக்கூட்டுவோர், உயிரைப் பணயம் வைத்து பாதாளச் சாக்கடைகளுக்குள் இறங்கி கழிவு நீக்குவோர், கழிவறைகளைச் சுத்தம் செய்வோர், மற்றவர்கள் இழிவாகக் கருதும் இன்ன பிற வேலைகளைச் செய்வோர் எல்லோரும் தலித்துகள். அந்தப் பணிகளும் கூட இப்போது தனியார் வசம் ஒப்படைக்கப்படப் போகிறது. குத்தகைக்கு எடுக்கும் தனியார் நிறுவனங்கள், உள் குத்தகையாக தலித்துகளை அமர்த்தி, அந்த வேலைகளைச் செய்ய வைப்பார்கள். குறைந்த கூலியோடு அங்கே வேலைக்கும் உத்திரவாதம் இருக்கப் போவதில்லை. போலி சாதிச் சான்றிதழ்கள் கொடுப்பது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பது உண்மைதான். அது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும். அதற்காக, இடஒதுக்கீடே இருக்கக் கூடாது என்பது நகைப்புக்குரியது.
ஆங்கில அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்ப்பின் (communal award) அடிப்படையில் தலித்துகளுக்கான தனித்தொகுதி வழங்கப்பட்டபோது, காந்தி அதனை எதிர்த்ததையும் அதில் அவர் அம்பேத்கரை "வெற்றி' கண்டதையும் பற்றிய உங்கள் விவரணை சிறப்பாக இருந்தது. குறிப்பாக அம்பேத்கரை, அவருடைய கனவினைத் தின்னக் கொடுத்து கையெழுத்திட வைக்கப்பட்ட 1932 ஆம் ஆண்டு பூனா ஒப்பந்தம் பற்றி குறிப்பாக "தனித் தொகுதி'கள் பற்றிய ஒரு கேள்வி இருக்கிறது. பல வரலாற்றாசிரியர்கள், "தனித்தொகுதி'க்கான கோரிக்கைதான் பின்னர் நிகழ்ந்த "பிரிவினை'க்கான மூலகாரணம் என்று சொல்கிறார்கள். பலர் தனித்தொகுதிக்கு எதிராக வாதிடவும் செய்கிறார்கள். இப்போதும் தனித்தொகுதிகளுக்கான தேவை இருப்பதாக நினைக்கிறீர்களா?
நம்முடைய (first - past - The - post (FPTP)  இந்தத் தேர்தல் முறையில் – 1. தொகுதிக்கு ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார். 2. யார் அதிக எண்ணிக்கையில் வாக்கு வாங்குகிறாரோ அவரே தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்தல் முறையானது கடுங்குறைபாடுடைய, தோல்வியடைந்த ஒரு முறை என்றே நான் நினைக்கிறேன். நாம் அதை மீளாய்வு செய்ய வேண்டும். அதே நேரத்தில் தனித்தொகுதி – வகுப்புவாரித் தீர்ப்பு – பிரிவினை போன்ற சர்ச்சைக்குரிய பிரச்சனைகளை ஒன்றாக இணைத்து, பெரிதாகக் காட்டி பழிகளைச் சுமத்தும் போது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நான் முன்பு சொன்னது போல, தனித்தொகுதி மற்றும் தனிப்பிரதிநிதித்துவக் கோரிக்கை பற்றிய அம்பேத்கரின் சிந்தனை மிகவும் நுட்பமானது. அதைப்பற்றி மீண்டும் மீண்டும் பேசவேண்டாம் என்று நினைக்கிறேன். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்: அம்பேத்கருடைய திட்டமானது தனித்துவமானது; அறிவுப்பூர்வமானது. தலித்துகள் தங்களுக்கான தனித்த தலைமையோடு கூடிய அரசியல் சமூகமாக உருவாகுவதற்கான சூழலை உண்டாக்க வேண்டும் என்பதே அம்பேத்கரின் சிந்தனை.
அவர் சொன்ன தனித்தொகுதி ஏற்பாடுகூட பத்து ஆண்டுகள் மட்டும் இருந்தால் போதும் என்றுதான் அவர் சொன்னார் (கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடுக்கு அம்பேத்கர் எந்த கால நிர்ணயமும் வைக்கவில்லை – மொழிபெயர்ப்பாளர்). இந்த இடத்தில் நாம் யாருக்காகப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்றால் – ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக "உயர்சாதி'யினரின் நம்ப முடியாத கொடுமைகளுக்கும், அட்டூழியங்களுக்கும் ஆளாகி ஒதுக்கி வைக்கப்பட்ட, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட, பொதுக் கிணறுகளுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் கோயிலுக்குள்ளும் அனுமதி மறுக்கப்பட்ட, இன்னும் பல புறக்கணிப்புகளுக்கு ஆளான மக்களுக்காக. அவர்கள் தங்களுக்கான தனித் தொகுதியைக் கேட்டபோதுதான் பலர் உலகமே அழிந்துவிடப் போவதைப்போல் நடந்து கொண்டார்கள்.  
காந்தி மேற்கொண்ட காலவரையறையற்ற உண்ணா விரதத்தினால் மக்கள் கொடுத்த அழுத்தம், அம்பேத்கரை தன் கோரிக்கையைக் கைவிட்டு, பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தது. அங்கே அறிவு தோற்றுப்போனது. அது எப்படி, அம்பேத்கருடைய தனித்தொகுதி கோரிக்கைதான் "பிரிவினை'க்கு இட்டுச் சென்றது என்று சொல்ல முடியும்? உண்மை அதற்கு நேர் மாறானது.
சாதி என்கிற பெயரில் கொடூரமான இன ஒதுக்கல் நிலவிக் கொண்டிருக்கிற ஒரு சமூகத்தில் சுதந்திரமும், சமத்துவமும் நிலவ வேண்டும் என்றுதான் அவர் முயற்சி செய்தார். அவர் நீதிக்கும், சகோதரத்துவத்திற்கும், ஒற்றுமைக்கும், மனித நேயத்திற்காகவும்தான் பேசினாரே தவிர பிரிவினையைப் பற்றி அல்ல. ஆனால், சாதி அடுக்குமுறையின் நியாயப்படி, "உயர்சாதி'யினர் மட்டும் தலித்துகளை நோக்கி தங்கள் கதவுகளைச் சாத்திக் கொள்ளலாம்; அதையே தலித்துகள், யாரும் வேண்டாம் என்று தங்களுக்குத் தாங்களே கதவை மூடிக் கொண்டால் அதை "துரோகம்' – "பிரிவினை' என்பார்கள்.
சாதியைக் கையாள்வதில் கம்யூனிஸ்டுகளுக்கு நேர்ந்த மிகப்பெரிய தோல்வியைப் பற்றி ஆராய்ந்திருக்கிறீர்கள். ""அவர்கள் சாதி என்பதையே – "வர்க்க ஆய்வு' என்கிற உயர்ந்த "செம்மொழி'யிலிருந்து கிளைத்த ஒரு சாதாரண "வட்டார வழக்கு' என்பதைப் போலத்தான் பார்த்தார்கள்'' என்று எழுதியிருக்கிறீர்கள்.
மாபெரும் தொழிற்சங்கத் தலைவரான எஸ்.ஏ. டாங்கே பற்றிய உங்களுடைய பதிவை கம்யூனிஸ்டுகள் அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்னுடைய கேள்வி இதுதான்: கம்யூனிஸ்ட் "கட்சி' உங்களை ஏமாற்றிவிட்டது. ஆனால் கம்யூனிசத்தின் கூறுகளில் ஏதாவது ஒன்றை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? அங்கீகரிக்கிறீர்களா?
சாதியை மய்ய நீரோட்டத்திலிருக்கும் கம்யூனிஸ்டுகள் கையாளும் விதம் பற்றிய என்னுடைய பார்வையை நான் முன்பே என்றுடைய  God of small things வெளிப்படுத்தியிருக்கிறேன். அந்தப் புத்தகம் வெளிவந்தபோது, அதன் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கோபத்தில் இருந்தது.
அந்த நாவலில், கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக வரும் தோழர் கே.என்.எம். பிள்ளை என்பவர், மற்றொரு முக்கியப் பாத்திரமான வேலுத்தா என்கிற தலித்தின் மீது காட்டுகிற சாதி ஆதிக்கத்தை நான் சித்தரித்திருந்த விதத்தைப் பார்த்து அவர்களுக்குக் கோபம்.
இங்கே இயல்பான தோழமை என்பது கம்யூனிஸ்டுகளுக்கும் தலித்துகளுக்கும் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். அதுதான் இயற்கை. ஆனால் இங்கே அப்படி ஏற்படவில்லை. அவர்களுக்கிடையேயான பிளவு என்பது 1920களிலேயே சி.பி.அய். உருவான சில காலத்திலேயே தொடங்கிவிட்டது.
இன்றைக்கு இருக்கும் பல கம்யூனிஸ்ட் தலைவர்களைப் போலவே எஸ்.ஏ. டாங்கேவும் ஒரு பார்ப்பனர். இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கமான, "கிர்னி காம்கார் தொழிற்சங்க'த்தை 70 ஆயிரம் உறுப்பினர்களோடு அவர் உருவாக்கினார். உறுப்பினர்களில் பெரும் பகுதியினர் அம்பேத்கரை உள்ளடக்கிய "மகர்' என்கிற தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் எல்லோரும் குறைந்த கூலி வழங்கப்படும் "ஸ்பின்னிங்' பிரிவில் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். ஏனென்றால், நெசவுப் பிரிவில் வேலை செய்கிறவர் நூலை தன்னுடைய வாயில் கவ்விக் கொள்ள வேண்டியிருக்கும். அதில் தீண்டத்தகாதவரைச் சேர்த்தால் அவருடைய எச்சில் பட்டு நூலும், துணியும் தீட்டுப்பட்டு விடும் என்று கருதினார்கள்.
1928 இல் டாங்கே, கர்னி காம்கார் தொழிற்சங்கத்தின் முதல் வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்துகிறார். அம்பேத்கர், போராட்டத்தின் ஒரு கோரிக்கையாக சமத்துவமும் வேலைப்பிரிவினையில் பாகுபாடு காட்டாத சமவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். இதற்கு டாங்கே ஒப்புக்கொள்ளவில்லை. அது ஒரு கசப்பான பிளவுக்கு இட்டுச் செல்கிறது. அப்போதுதான் அம்பேத்கர் சொன்னார்: ""சாதி என்பது தொழில்களுக்கு இடையிலான பிரிவினை மட்டும் அல்ல; அது தொழிலாளர்களுக்கு இடையிலான பிரிவினை.''
ஊன்றிப் படிக்க வேண்டிய, மிக முக்கியமான ஒரு பகுதி "ஜாதியை அழித்தொழிக்கும் வழி'யில் இருக்கிறது. அதில் "ஜாதியும் சோஷலிஸமும்' என்பது பற்றி அம்பேத்கர் எழுதியிருக்கிறார். கம்யூனிசத்தின் ஏதாவது ஒரு கூறு உங்களால் ஆதரிக்கவோ, அங்கீகரிக்கவோபடுகிறதா என்று கேட்டீர்கள். எனக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை. நான் கம்யூனிஸ்ட் அல்ல.
ஆனால் அதே வேளையில் முதலாளித்துவத்தை நோக்கிய, அமைப்பு ரீதியான மற்றும் உறுதியானதொரு எதிர்ப்பைச் செலுத்த வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்றே நான் நம்புகிறேன். நான் எதிர்க்க வேண்டும் என்று சொல்வது உள்ளூர்  ஒட்டுண்ணி முதலாளித்துவத்தை மட்டும் அல்ல.
மகாத்மா காந்தி என்று மதிக்கப்படும் ஒரு மனிதரை அருந்ததிராய் மிகக் கடுமையாகக் கேள்விக்கு உள்ளாக்கும்போது, அது உலகத்தின் கவனத்தைத் திருப்புகிறது. மேலும், (காந்தி போன்ற) உன்னதமான கோட்பாடுகளை உண்மையைச் சொல்கிறோம் என்று ஊறு விளைவிக்காமல், அவற்றை உயிரோட்டமாக அப்படியே வைத்துக் கொள்ளலாம் என்று கூட சிலர் சொல்கிறார்களே?
 நல்லகேள்வி.எந்த ஓர் எழுத்தாளரும் செய்வதைப்போல் அல்லது செய்ய வேண்டியதுபோல்நானும்அதைப்பற்றிநன்குசிந்தித்தேன்.பின்முடிவுசெய்தேன். அப்படி உண்மையைவெளிப்படுத்தாமல்இருப்பதுமுற்றிலும்தவறு; ஏற்றுக்கொள்ளமுடியாததுஎன்று. அப்படிப்பட்ட "மூடிமறைப்பு' அதுமூடிமறைப்பைத்தவிரவேறில்லை. அதுஒருவிலையைக்கோருகிறது.
இங்கே அந்த விலை என்பது அம்பேத்கர். காந்தியை அவருடைய நிறைமற்றும் குறைகளோடு கூடிய உரையாடலை மேற்கொள்ளும் போதுதான் அம்பேத்கர் மற்றும் அவருடைய நிறை குறைகளைப் பேசுவதற்கான வெளிகிடைக்கும். ஒருதுறவியைப்பற்றிய வெளிப்படையான ஆய்வு ஓர் அறிஞரை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும். அம்பேத்கரின் வேளை வந்துவிட்டது.

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் எழுத்தாளர்: அ.ஜெகநாதன்