சமூக ஏற்பாடுகள் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்
சமூக ஏற்பாடுகள் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்
- விவரங்கள்
- எழுத்தாளர்: அம்பேத்கர்
- தாய்ப் பிரிவு: தலித் முரசு
- பிரிவு: ஏப்ரல்10
நாம் தற்பொழுது அரசியல் மறு சீரமைப்பு குறித்து அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதால், பிரெஞ்சு அவை தனது தேசத்தில் சமூக மற்றும் மத மறுசீரமைப்பிற்கு என்ன செய்தது என்பதை பார்ப்போம். பிரெஞ்சு தேசிய அவை வெளியிட்ட மூன்று முக்கிய அறிவிப்புகளின் மூலம், இந்த செயல் தளங்களில் அது என்ன மாதிரியான கொள்கையைக் கொண்டிருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம். முதல் அறிவிப்பு 17 சூன் 1789 இல் வெளியிடப்பட்டது. இது, பிரான்சில் உள்ள வகுப்பு அமைப்புகளைப் பற்றியது. முன்பே குறிப்பிட்டிருந்தபடி, பிரெஞ்சு சமூகம் வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பு, இந்த மூன்று வகுப்புகளையும் ஒழித்து அவற்றை ஒன்றாக்கியது. மேலும், அரசியல் அவையில் இந்த மூன்று வகுப்பினருக்கும் தனித்தனியே ஒதுக்கப்பட்டிருந்த இடங்களை அது ஒழித்தது.
இரண்டாவது அறிவிப்பு, மத குருக்களைப் பற்றியது. பழங்கால நடைமுறையின்படி, இந்த மத குருக்களை நியமிப்பதும் நீக்குவதும் தேசத்தின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டிருந்தது. அது, வெளிநாட்டு மதத்தலைமையான போப்பின் அதிகாரத்தில் இருந்தது. அவர் யாரிடம் பணியாற்றப் போகிறாரோ, அவர்களின் கண்களில் அவர் பொருத்தமானவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், போப் நியமித்த ஒருவரே மத குருவாக இருந்தார். இந்த அறிவிப்பு, மத சட்ட திட்டங்களின் சுயாட்சியை ஒழித்து, இந்தப் பணியில் யார் தொடர வேண்டும், யார் பொருத்தமானவர் அல்லது யார் பொருத்தமானவர் இல்லை; அவருக்கு அந்தப் பணிக்கு ஊதியம் வழங்க வேண்டுமா, தேவையில்லையா என்பது போன்ற பலவற்றை முடிவெடுக்கும் அதிகாரத்தை பிரெஞ்சு தேசத்திற்கு வழங்கியது.
மூன்றாவது அறிவிப்பு, அரசியல் அல்லது பொருளாதாரம் அல்லது மத அமைப்புகளைப் பற்றியது அல்ல. அது பொதுவான தன்மையுடையதாக இருந்தது. அனைத்து சமூக ஏற்பாடுகளும் எதன் மீது கட்டமைக்கப்பட வேண்டும் என்பதற்கான கொள்கைகளை அது வரையறுத்தது. அந்த நோக்கில், மூன்றாவது அறிவிப்பே மூன்றிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனை அறிவிப்புகளின் அரசன் என்றே அழைக்கலாம். "மனித சமூகத்தின் பிறப்புரிமைகள்' என உலகமே அதனை கொண்டாடுகிறது. அது பிரெஞ்சு வரலாற்றில் மட்டும் கண்டிராதது அல்ல. அதற்கும் மேலாக நாகரிகமடைந்த நாடுகளின் வரலாற்றிலேயே அது தனித்துவமானது. ஒவ்வொரு அய்ரோப்பிய தேசமும், பிரெஞ்சு அவைக்குரிய இடத்தை தங்கள் அரசியல் சட்டத்தில் வழங்கியுள்ளன. அதனால், அது பிரான்சில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியதாக சொல்லலாம். இந்த அறிவிப்பு 17 பிரிவுகளைக் கொண்டது. அவற்றில் கீழ்க்காண்பவை முக்கியமானவை :
அனைத்து மனிதர்களும் பிறப்பால் சமமானவர்கள். அவர்கள் இறக்கும் வரை சமமானவர்களாகவே இருப்பார்கள். பொது நலனிற்காக மட்டுமே அவர்களின் நிலைகளில் வேறுபாடு காணப்படும். இல்லையெனில், அவர்களுடைய சமத்துவ தன்மையே தொடரும்.
அரசியலின் அடிப்படை நோக்கமே - இந்த மனித பிறப்புரிமைகளைப் பாதுகாப்பதே.
ஒட்டுமொத்த தேசமே இறையாண்மைக்கான தாய்-மூலம். எந்த தனி நபர்கள், குழுக்கள் அல்லது சிறப்பு வகுப்பினரின் உரிமைகளும், அரசியல் மற்றும் மத உரிமைகள் உட்பட, அவை தேசத்தால் வழங்கப்பட்டிருந்தால் ஒழிய, வேறெந்த அடிப்படையிலும் அங்கீகரிக்கப்பட மாட்டாது.
எந்த ஒரு மனிதனும் தனது பிறப்புரிமையின் அடிப்படையில், சுதந்திரமாக செயல்படலாம். இதன் மீது விதிக்கப்படும் எந்தக் கட்டுப்பாடும், பிற தங்கள் பிறப்புரிமைகளை அனுபவிக்கத் தேவையான அளவிற்கானதாக மட்டுமே இருக்க வேண்டும். அந்த கட்டுப்பாடுகள் சட்டத்தால் விதிக்கப்பட வேண்டும். அவை மத அடிப்படையிலோ, நாட்டில் சட்டம் அல்லாத வேறு எதன் அடிப்படையிலோ அமைக்கப்பட மாட்டாது.
சமூகத்திற்கு தீங்கிழைக்கக் கூடிய செயல்களை மட்டுமே சட்டம் தடுக்கும். சட்டத்தால் தடை செய்யப்படாத எந்த ஒரு செயலையும் செய்யும் சுதந்திரம் அனைவருக்கும் இருக்க வேண்டும். அது மட்டுமல்லாது, சட்டம் கடமை என வரையறுக்காத ஒன்றை செய்யும்படி யாரையும் கட்டாயப்படுத்தவும் முடியாது.
எந்த குறிப்பிட்ட வகுப்பினர் வரையறுத்த எல்லைகளின் தன்மையில் சட்டம் இல்லை. சட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் மக்களிடமோ, அவர்களின் பிரதிநிதிகளிடமோ இருக்கிறது. அந்த சட்டம் பாதுகாப்பதாக இருக்கிறதோ, தண்டிப்பதாக இருக்கிறதோ - அது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். சமூக ஏற்பாடுகள் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதையே நீதி கோருவதால், அனைத்து தனி நபர்களும், எந்த வகையான கவுரவம், அதிகாரம் அல்லது பணிக்கும் தகுதியானவர்களே. அதில் ஏதேனும் வேறுபாடு இருக்குமானால், அது தனி நபர்களின் செயல் தகுதியில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும். பிறப்பின் அடிப்படையில் இருக்கக்கூடாது.
(மகத்தில் அம்பேத்கர் ஆற்றிய உரை. அர்ஜுன் டாங்ளேவின் ‘நஞ்சூட்டப்பட்ட ரொட்டி' நூல்)
Comments
Post a Comment