தலித்துகளுக்கும் சூத்திரர்களுக்கும் இடையிலான முரண்களைப் பார்க்கத் தவறுவது துரோகம்



சனவரி இதழில் வெளிவந்த ஆனந்த் டெல்டும்டே அவர்களின் பேட்டி, இந்த இதழிலும் தொடர்கிறது
தலித் அல்லாதவர்கள் திருந்தினால் தலித் விடுதலை சாத்தியமாகுமா? அல்லது இந்தியாவில் சாதி ஒடுக்குமுறைகளிலிருந்து தலித்துகளை மீட்டெடுப்பதற்கான வழி என்ன?
சாதியப் பிரச்சனையே தலித் மற்றும் தலித் அல்லாதவர் என்ற இரு தரப்பினருக்கிடையேதான் நடைபெறுகிறது. ஏனென்றால், காலப்போக்கில் சடங்குகள் ரீதியான சாதியானது, ஏறக்குறைய இல்லாமல் போய் விட்டது என சொல்லக்கூடிய ஒரு கருத்து இருந்து வருகிறது. எனவே, சூத்திரர்கள் முதல் எல்லா "உயர் சாதி'யினரையும் தலித் அல்லாதவர் என்ற ஒரு குழுமமாகவும், மற்றவர்களை தலித்துகளாகவும் வகைப்படுத்தலாம். வர்ணாசிரமம் என்று சொல்லக்கூடிய சாதியப் படிநிலையில் கூட, சூத்திரர் என்ற ஒற்றை அடைப்புக்குள் தலித்துகளையும், வரலாறு முழுவதும் இணைத்தே பார்க்கப்பட்டது. இது, மிகப்பெரிய தவறு. சூத்திரர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையில் நிலவும் உண்மையான முரண்பாடுகளைப் பார்க்கத் தவறுவது ஒரு துரோகச் செயல். சூத்திரர் மற்றும் தலித்துகளுக்கிடையில் பெரிய அளவிலான அடையாள வேறுபாடுகள் இருக்கின்றன. சூத்திரர்கள் நில உடைமையாளர்கள்; தலித்துகள் நிலமற்றவர்கள். எனவேதான் நான் சொல்லுகிறேன், சாதிய முரண்பாடுகள் என்பது தலித்துகளுக்கும் தலித் அல்லாதவர்களுக்கும்தான். வெகு இயல்பாக நீங்கள் இதனை நடைமுறையில் பார்க்க முடியும். சூத்திர அடையாளத்தோடு நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் மீது பெரிய அளவில் வெறுப்போ, காழ்ப்புணர்வோ காட்டப்படுவதில்லை. நீங்கள் தலித் என்று தெரியவந்தால், வெறுப்பும் காழ்ப்புணர்வும் திடீரென அதிகரிப்பதைப் பார்க்க முடியும். இதுதான் சாதியின் வேலை.
anand_teltumde_300சாதிப் பிரச்சனை காலங்காலமாக இருந்து வருகிறது. அடிப்படையில் சாதியை எவ்வகையில் புரிந்து கொள்வதென யோசிக்கையில், சாதி என்பது ஒரு பிரிவினை சக்தி. அது ஒரு பிரிவினை சக்தியாக இருக்கும் நிலையில், அம்பேத்கரின் முயற்சியை நாம் எடுத்துக் கொள்வோம். அவர் தீண்டத்தகாதவர்கள் என்றும், ஒடுக்கப்பட்டவர்கள் என்றும், பட்டியல் சாதியினர் என்றும் ஒன்று திரட்ட முயன்றார். இவை எல்லாம் சாதிகள் அல்ல; இவை தீண்டத் தகாத சாதிகளின் ஒருங்கிணைந்த ஒரு வகுப்பு அல்லது வர்க்கம். ஆனால், அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு தலித்துகள் உட்சாதிகளாக உடைபடுகின்றனர். மகாராட்டிரத்தில் எண்ணற்ற உட்சாதிகளாக அவர்கள் இருக்கிறார்கள். குடியரசுக் கட்சியே கூட பிளவுற்றபோது ஒவ்வொன்றும் உட்சாதிகளாகவே பிளவுற்றன.
எல்லா சாதிகளுக்குள்ளும் இயற்கையாகவே உட்சாதிகள் இருந்து கொண்டிருக்கின்றன. ஆந்திராவில் மாலா – மாதிகா ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. எல்லா இடங்களிலும் இவை இருக்கின்றன. ஒரு உட்சாதியையே எடுத்துக் கொண்டால் கூட, எவராலும் அதனுள் சில உட்சாதிகள் உருவாவதைத் தடுத்து நிறுத்தவோ, இதுதான் கடைசி உட்சாதி என்று முடிவுக்கு வரவோ நிச்சயமாக முடியாது. சாதிக்கு "எப்படிப் பிரிப்பது' என்று மட்டும்தான் தெரியும். சாதியானது படிநிலையை தேடும் ஓர் அமைப்பு. எனவே, அது உட்பிரிவுகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும். இப்படியான சாதி அமைப்பை அடிப்படையாகக் கொண்டு நாம் தீர்வைக் கண்டடைய முடியாது.
எனவே சாதியை ஒழிக்க விரும்பினால், நாம் முதலில் சாதிக்கு மாற்றான "ஒன்றிணைக்கும்' குணம் கொண்ட அமைப்பு முறைகளை உருவாக்க வேண்டும். அது என்னவாக இருக்க முடியும்? வர்க்கம்தான். இன்றைய சமூக நிலையே இதற்கு சான்று. ஒவ்வொரு சாதிக்குள்ளும் எல்லா வர்க்கங்களும் உருவாகியுள்ளன. ஒருவேளை, அம்பேத்கர் காலத்தில் இது அவ்வளவு வெளிப்படையாகத் தெரியாமல் இருந்திருக்கலாம். எனவே, தலித் எனும் ஒற்றைக் குடையின் கீழ் அவர்களால் அணி திரட்ட முடிந்தது. எண்ணிக்கையில் குறைவாகவே இருந்தாலும், தற்போது தலித்துகளுக்குள் பணக்காரர்களும் இருக்கிறார்கள்; நல்ல பொறுப்புகளில் இருப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் சாதி ரீதியான பாகுபாட்டு நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டும் இருக்க நேரிடலாம். அது பற்றி கூட பிரச்சனை இல்லை. பிரச்சனை எதுவென்றால், அவர்களுக்கும், சாதாரண மக்களுக்குமான தொப்புள் கொடி உறவு அறுபட்டுள்ளது.
சாதி – ஆளும் வர்க்கத்தின் கைகளில் ஒரு முக்கிய ஆயுதமாக வேலை செய்துகொண்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்களும் மற்றவர்களும் சாதியை லாவகமாகக் கையாளுகிறார்கள். அவர்கள் ஒன்றுமில்லாதவர்களல்லர். அவர்கள் பணக்காரர்களாகவும், ஆளும் வர்க்கமாகவும் இருந்து வருகிறார்கள். எண்ணிக்கை அடிப்படையில், நாடாளுமன்றத்திலோ, சட்ட மன்றத்திலோ அவர்கள்தான் பெரும்பான்மையினர். தேர்தல் தொகுதிகளை வரையறுக்கும்போது, சட்டங்களைக் கொண்டு வருவதிலும் சாதியை அவர்களுக்கு சாதகமான முறைகளில் பயன்படுத்துகிறார்கள். இது, நாம் இங்கு பேசும் தலித்துகளுக்கு எதிரானதாகவும், ஆபத்தானதாகவும் இருக்கிறது.
எனவே, இந்த அடுக்குக்கிடையிலான முரண்பாடுகளை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள்தான் பெரும்பான்மை மக்களை நசுக்கும் இக்கட்டமைப்பை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் கள். எனவே, இதனைக் கண்டறிந்து, நசுக்கப்படும் மக்களுக்கிடையே – சாதியைக் கடந்த ஓர் ஒற்றுமையையும் ஒருமைப்பாட் டையும் கொண்டுவர வேண்டும். இதனைச் செய்ய முடியும். சொல்வது எளிது செய்து முடிப்பது கடினம் என்று எனக்கு தெரியும். ஆனால், நமக்கு செய்வதற்கு எளிதாக இருக்கிறதென்பதற்காக அதனையே தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், ஏற்கனவே வரலாற்றில் நிறைய நேரத்தையும், ஆற்றலையும் இழந்துவிட்ட நாம், மீண்டும் எதிர்காலத்தில் அதே தவறை செய்தவர்களாவோம்.
சி.பி.அய். மற்றும் சி.பி.எம். கட்சிகளின் சாதி குறித்த பார்வையை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகின்றீர்கள்?
சி.பி.அய். கட்சியும் சரி, சி.பி.எம். கட்சி யும் சரி, இரண்டு கம்யூனிஸ்டுகளுமே திவா லானவர்கள். சாதி – வர்க்கம் என்ற இரட்டை நிலையை உருவாக்கியதற்காக, நான் ஒட்டுமொத்த கம்யூனிஸ்டுகளையும் குற்றம் சாட்டுகிறேன். எந்த ஒரு நாடானாலும், அங்கு நீடிக்கிற சமூகக் கூறுகளை, சிக்கல்களை, நிலவரங்களை கணக்கிலெடுத்துக் கொண்டே அந்நாட்டின் வர்க்க வேறுபாடுகளை நாம் ஆராய முடியும். இந்த நாட்டின் உண்மை நிலவரத்தை, சாதியை தவிர்த்து விட்டு அறிய முடியாது. எனவே, இவர்கள் முன்வைத்த இப்போதும் கவலை கொள்ளச் செய்யும் வர்க்கம் – சாதி எனும் இரட்டை நிலை இருந் திருக்காது. தனியாக தலித் இயக்கங்களுக்கான ஒரு தேவையும்கூட இருந்திருக்காது; கம்யூனிஸ்டுகளே சாதிக்கெதிரான போராட்டங்களை கையிலெடுத்திருக்க முடியும்.
இந்தியாவில் இருக்கும் சாதி – வர்க்கம் எனும் இரட்டைத் தன்மை, மற்ற இரட்டைத் தன்மைகளிலிருந்து ஒரு வகையில் தனித்தன்மையானது. இந்த இரட்டைத் தன்மை இங்கு பல்வேறு பிரச்சனைகளை விளைவித்திருக்கிறது. இதற்கெதிராக நாம் தொடர்ந்து உத்வேகத்துடன் போராடத் தவறுவோமேயானால், ஒருவேளை இந்த இரட்டைத்தன்மை மறைவதற்கேகூட வாய்ப்பில்லாமல் போகலாம். எனவே, இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டியவர்கள் கம்யூனிஸ்டுகளே. குறிப்பாக, தொடக்கக்கால கம்யூனிஸ்டுகள். அவர் கள் முழுக்க முழுக்க பார்ப்பனியர்களாக இருந்ததோடு, அவர்களுக்கிருந்த புத்தக அறிவைக் கொண்டு மட்டுமே இந்தியாவில் நிலவும் வர்க்க வேறுபாடுகளைப் பார்த்தனர்.
முதன் முதலாக வர்க்கத்தை வரையறை செய்த லெனின் (மார்க்ஸ் அல்ல) கூற்றுப்படி பார்ப்போமேயானால், இந்தியாவில் நிலவிய சாதியையும் கணக்கிலெடுத்து, அதனை உள்ளடக்கியதாகவே வர்க்கம் இருக்க முடியும். வர்க்கமும், சாதியும் தனித்தனியாக இருந்திருக்க முடியாது.
பாபாசாகேப் அம்பேத்கரின் இயக்கத்தையே எடுத்துக் கொண்டால், அவர் ஒரு மார்க்சிஸ்டாக இல்லாவிட்டாலும், மார்க்சியத்தின் சில கூறுகளிலிருந்து முரண்படுபவராக இருந்தாலும்கூட, அவர் வர்க்கத்தையே முதலில் கையிலெடுத்தார். அவரின் தொடக்ககால எழுத்துகளில், சாதியைக் குறிக்கும் இடங்களில், வர்க்கம் எனும் சொல்லையே பயன்படுத்தியிருக்கிறார். அம்பேத்கரின் வர்க்கப் பார்வை, வெப்பரின் வர்க்கப் பார்வையோடு ஒத்திருப்பதாக சிலர் சொல்வதை என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. அம்பேத்கரின் வர்க்கப் பார்வை, வெப்பரின் கருத்தியலை நோக்கி இருப்பதைப் போலவே, மார்க்சின் வர்க்கச் சித்தாந்தங்களை நோக்கியும் இருக்கிறது. கம்யூனிஸ்டுகளின்(என்று சொல்லிக்கொண்டே) ஒருங்கிணைந்த வர்க்கப் போராட்டங்களில் கைகோக்க, அம்பேத்கர் ஒருபோதும் தயக்கம் காட்டியதில்லை. ஆனால், கம்யூனிஸ்டுகள் அம்பேத்கரை ஒதுக்கினர். இந்தப் பகைமையின் விளைவாக, இன்று தலித்துகள் கம்யூனிஸ்டுகளைத் தம் பெரும் எதிரிகளாகக் கருதுகிறார்கள். எனவே, சி.பி.அய்., சி.பி.எம். இயக்கங்கள் உண்மையான வர்க்கப் போராட்டம் எதையும் நடத்தியதாக நான் கருதவில்லை.
அதே வேளையில், தெலுங்கானா போராட்டம் அல்லது தமிழ்நாட்டில் நடந்த தஞ்சாவூர் போராட்டங்களை எடுத்துக் கொள்ளலாம். இப்போராட்டங்களெல்லாம் தன்னெழுச்சியாக, இயல்பாக முன்னெழுந்த போராட்டங்கள். எவரும் வெளியிலிருந்து அல்லது கட்சியின் தலைமையிலிருந்து இயக்கியப் போராட்டங்களல்ல. இப்போராட்டங்களில் வெகு இயல்பாகவே சாதிய உணர்வு அமிழ்ந்து போனது. வர்க்கமும், சாதியுமாகப் பிரித்துப் பார்க்காமல், அம்மக்கள் ஒன்று திரண்டு நடத்திய போராட்டங்களுக்கான சான்று இவை. சாதியையும் உள்ளடக்கிய வர்க்கப் பார்வையை மக்கள் நிராகரிப்பார்கள் என்பதற்கு எதிரான சான்றுகளாக தெலுங்கானா, தஞ்சாவூர் போராட்டங்களை நான் பார்க்கிறேன். நாம் உண்மையாக உழைப்போமானால், இரண்டை ஒன்றாக்க முடியும்.
மூன்றாவதாக இன்னுமொரு வலிமையான எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமானால், அம்பேத்கரின் "சுதந்திரத் தொழிலாளர் கட்சி'. இந்தியாவின் முதல் அரசியல் கட்சி இது என்பதைக் காட்டிலும் முதல் இடதுசாரி கட்சி என்பது மிக முக்கியமானது. அப்போது கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் இயக்கத்திற்குள் ஒரு சோசியலிஸ்ட் குழுவாக மட்டுமே இயங்கி வந்தனர்; தனி அரசியல் கட்சியாக உருவாகவில்லை. எனவே, முதல் இடதுசாரிக் கட்சியை தொடங்கிய அம்பேத்கர், அக்கட்சியை உழைக்கும் வர்க்கத்தின் கட்சியாகப் பிரகடனம் செய்ததோடு, வர்க்கத்தையும், சாதியையும் எப்படி இணைக்க முடியும் என்று கொங்கன் சாலைகளில் நிரூபித்தும் காண்பித்தார். 1937இல் இதர சாதி கொங்கன் மக்களும், தலித்துகளும் ஒருங்கிணைந்து போராட்டங்களில் களமிறங்கியதையே, "இது சாத்தியமில்லை' என்று சொல்பவர்களுக்கு நான் பதிலாக தருகிறேன்.
பழங்குடிப் பகுதிகளில் இயங்கி வரும் மாவோயிஸ்டுகள் குறித்து தங்கள் பார்வை என்ன?
மாவோயிஸ்டுகள் பழங்குடி மக்களுக்காகப் போராட்டத்தை தொடங்கியவர்கள் அல்லர்; அவர்கள் இந்தியாவில் புரட்சியை உருவாக்கப் போராடி வருகிறார்கள். புரட்சியை நோக்கிய அவர்களின் செயல்பாடுகளுக்கு சாதகமான, ஆதரவான மக்களை ஒட்டிய இடங்களில் தளம் அமைக்க வேண்டியிருக்கிறது. இயல்பாகவே அது பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளாக இருக்கின்றன. மற்றபடி மாவோயிஸ்டுகளின் செயல்திட்டத்தை பழங்குடி மக்களுக்கு உதவுவது என்பதாக மட்டும் சுருக்கி புரிந்து கொள்ள முடியாது.
மாவோயிஸ்டுகள் பழங்குடியினப் பகுதிகளில் இயங்கி வந்ததின் முக்கிய நன்மை என்னவென்றால், அவர்கள் கைவிடப்பட்ட அம்மக்களின் வளர்ச்சிக்கான மாற்று வழிவகைகளை செயல்படுத்திக் காட்டினர். இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில் புரட்சி அவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிடாது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. எனினும், பழங்குடி மக்களின் கிராமங்களையொட்டி மாவோயிஸ்டுகள் தளம் அமைத்ததற்கும், சட்டீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் என்ன நடந்தது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். மாவோயிஸ்டுகள் பழங்குடியினப் பகுதிகளுக்கு 1980களில் இடம் பெயர்ந்தனர். அவர்கள் சுமார் 20 ஆண்டுகளாக சலனமின்றி வேலை செய்து வந்திருக்கிறார்கள். உங்களுக்கு தெரிந்திருக்கும், பழங்குடி மக்கள் குறிப்பாக அடர்த்தியான காடுகளுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வசிக்கும் பழங்குடிகள் அவ்வளவு எளிதில் வெளியிலிருந்து வரும் ஆட்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். முதலில் அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். இதைத்தான் மாவோயிஸ்டுகள் 20 ஆண்டுகளாகச் செய்தார்கள்.
மாவோயிஸ்டுகள் அம்மக்களுக்கு நிறைய கற்றுத் தந்தனர். மாற்றுப் பாடத்திட்டங்களோடு அங்கே பள்ளிகளைத் தொடங்கினர். அவர்களுக்கு நவீன பயிரிடும் முறைகளையும், அடிப்படையான பாசன முறைகளையும் கற்றுத் தந்தனர். இதுபோன்று இன்னும் எத்தனையோ வழிகளில் அவர்களுக்கு உதவினர். இந்திய அரசுக்கு அப்படி சில கிராமங்கள் இருந்ததே தெரியவில்லை. 2000 ஆவது ஆண்டிற்குப் பிறகு "ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம்' என்ற பெயரில் உலகமயமாக்கல் அதிகமாக தலை தூக்கியது. ஆளும் வர்க்கத்துக்கு உலகமயமாக்கலின் முதல் கட்டம் கொடுத்த உத்வேகத்தில், இரண்டாம் கட்ட உலகமயமாக்கல் 2005 க்கு பிறகு தீவிரமானது. காடுகளில் பூமிக்கடியில் உள்ள விலையுயர்ந்த தாதுப் பொருட்களை அவர்கள் குறி வைக்க, இப்பிரச்சனைகள் வெளியில் தெரியத் தொடங்கின.
எனவே, மாவோயிஸ்டுகள் பழங்குடி மக்களுக்கான போராளி களா என்று கேட்டால், அவர்கள் பழங்குடி மக்களுக்காகப் போராடினார்கள். போராட வேண்டியிருந்தது. ஆனால் அவர்களுடைய இலக்கு புரட்சியே!
மார்க்சிஸ்டுகளிடம் இருந்த பிரச்சனை என்னவென்றால், தேர்தல் பாதையை எப்போது அவர்கள் தேர்ந்தெடுத்தார்களோ அப்போதே அவர்களிடமிருந்த புரட்சிகரப் பார்வையை கைவிட்டு விட்டனர். பின்னர் பத்தோடு பதினோராவது கட்சியாக சேர்ந்து, சாதி வாக்குகளை குறிவைக்கும் சராசரிக் கட்சியாகவே இருந்து வருகிறார்கள். ஒப்பீட்டளவில் அவர்கள் மற்ற அரசியல்வாதிகளைவிட நேர்மையானவர்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு சி.பி.அய்., சி.பி.எம். கட்சியின் நிறைய தோழர்கள் மீது மரியாதை உள்ளது. ஆனால், தேர்தல் கட்டமைப்பில் உள்ள எல்லைகளை அவர்கள் உணர வேண்டும். பல நேரங்களில் பலரும் அதை உணர்ந்ததாகவே தெரியவில்லை. ஒருவேளை உள்ளிருந்தபடியே அவர்கள் தீர்வை யோசித்துக் கொண்டிருந்தாலும், தீர்வுகள் அத்தனை எளிதல்ல. அதே நேரத்தில், இந்தியாவைப் போன்ற ஒரு சிக்கலான நாட்டில் தீர்வுகள் தொடக்கத்தில் சாத்தியமற்றதாகத் தெரிந்தாலும், சாத்தியம்தான்.
காங்கிரஸ் ஆட்சி மதவாத பா.ஜ.க. வை விட ஓரளவுக்கு தாழ்வில்லை எனும் வெகுமக்கள் கருத்தியலை பினாயக்சென்னுக்கு விதிக்கப்பட்ட தண்டனை, அருந்ததிராய் போன்றோர் மீதான வழக்குகளின் பின்னணியில் எப்படிப் பார்க்கிறீர்கள்?
மதவாத அல்லது மதசார்பற்ற நோக்கில், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கிடையே எந்த ஒரு குறிப்பிடத்தகுந்த வேறுபாட்டையும் நான் உணர்ந்ததில்லை. மதவாதம் உச்சகட்டத்தில் உணரப்பட்டபோதும்கூட, இந்த இரு தரப்புக்கிடையே எந்த பெரிய வேறுபாடும் இல்லை என்றே நான் சொல்லியிருக்கிறேன். ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், ஒன்று வெளிப்படையானது மற்றொன்று மறைமுகமானது. வெளிப்படையான எதிரி, மறைமுகமான எதிரியைவிட எவ்வளவோ மேல்! பா.ஜ.க. தன்னை மதச் சார்புள்ள கட்சியாக வெளிப்படையாகவே காட்டிக் கொள்கிறது. காங்கிரஸ்தான் மதச்சார்பற்ற போர்வையை போர்த்திக் கொள்ள விரும்புகிறது. அந்த வகையில் காங்கிரஸ் ஆபத்தானது.
மற்ற கொள்கைகளைப் பொருத்தவரையில், அவர்கள் எல்லோருமே "நியோ லிபரல்'கள் என்பதால் எந்த அடிப்படை வேறுபாடும் இல்லை. அது தேசிய ஜனநாயகக் கூட்டணியானாலும் சரி, காங்கிரசானாலும் சரி, வேறு யார் ஆண்டாலும் சரி – அவர்கள் ஒரே கொள்கை களைத் தான் பின்பற்றுகிறார்கள். உலக முதலாளித்துவத்துக்கு அல்லது இந்திய முகம் பொருத்திய உலக முதலாளித்துவத்துக்கு சேவகம் செய்வது மட்டும்தான் இவர்கள் கொள்கை என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டியது. நியோ லிபரல் கொள்கை என்பதும் இதுதான். எனவே, இவர்களை வேறுபடுத்திப் பார்ப்பது தேவையற்ற வேலை.
அரசியல்வாதிகளோ, அரசு நிர்வாகமோ, நீதிமன்றங்களோ ஏதாவது செய்வார்கள் என்று எவராவது நம்பினால், அது வெறும் கற்பனையே. ஒட்டுமொத்த எந்திரமும் குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காகவே இயங்கி வருகின்றன. மிகத் தெளிவாக, அந்த நோக்கம் உலக முதலாளித்துவத்திற்கு பணி செய்வது என்பதைத் தவிர வேறில்லை.
நீதிமன்றங்களிலிருந்து வரும் தீர்ப்புகளைப் பார்த்தால், சில விஷயங்கள் தெளிவாகப் புரியும். எடுத்துக்காட்டாக, அயோத்தியா வழக்கின் தீர்ப்பையே எடுத்துக் கொண்டால், பா.ஜ.க. கூட கனவு கண்டிராத ஒரு தீர்ப்பை, மசூதியின் மய்யப் பகுதியில்தான் ராமன் பிறந்ததாக ஒரு நீதிபதி தீர்ப்பளிக்கிறார். பினாயக் சென் வழக்கில், உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வந்தபோதும், ஒரு பாமரனும் நிராகரிக்கக்கூடிய வலுவற்ற ஆதாரங்களைக் கொண்டு அவருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது. பினாயக் சென் வழக்கானாலும் சரி, நாராயண் சன்யால் உள்ளிட்ட மூன்று பேர் மீதுமே எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. எனவே, இவற்றிலிருந்து மக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறையவே இருக்கிறது.
ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக களமிறங்கும் இன்றைய இளைஞர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
எளிமையான சில செய்திகளை சொல்ல விரும்புகிறேன். தலித் மக்களுக்கு அம்பேத்கர் ஒரு திசைகாட்டியாக இருக்கிறார். ஆனால், பெரும்பாலும் தவாறன சில காரணங்களின் பெயரில் அம்பேத்கர் புகழப்பட்டும், வணங் கப்பட்டும் வந்து கொண்டிருப்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அம்பேத்கரின் லட்சியம் சாதியை அகற்றுவது. அம்பேத்கருக்கு முன்னர் மிகச் சிலர் இது குறித்துப் பேசியிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட சாதியாய் இருப்பது குறித்தும், உயர் சாதியை நோக்கி முன்னேறுவது குறித்தும் பேசியிருக்கிறார்கள். ஆனால், சாதியின் அடிப்படையான படிநிலை அமைப்பு முறையையே ஒட்டுமொத்தமாக அழிப்பது அம்பேத்கரின் கனவாக இருந்தது.
தலித் இயக்கங்களிலேயே சிலர் சாதியை வலுப்படுத்த வேண்டுமென வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். மற்ற சிலர் இதை வெளிப்படையாகப் பேசாவிடினும், அவர்களின் செயல்பாடுகள் இதனையே பிரதிபலிக்கின்றன. தலித் அடையாளங்களை வலுப் படுத்த வேண்டி என்றெல்லாம் காரணம் சொல்லிக் கொள்கிறார்கள். இவை தலித்தியத்திற்கு ஆபத்தானது. தலித் பிரச்சனைகளுக்காகப் போராட வரும் இளைஞர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் உழைப்பு சாதியை வலுப்படுத்தாமல், சாதி ஒழிப்பை நோக்கி இருக்க வேண்டும். இதற்காக சாதி அடையாளங்களை மாற்றிக் கொண்டு தான் வேலை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை, ஆனால், சாதி ஒழிப்பை இலக் காகக் கொண்டதாக இருக்க வேண்டும்.
தலித்துகளுக்கும், தலித் அல்லாதவருக்கும் இடையிலான சுவர் பற்றி சொன்னீர்கள். தலித்துகளை ஒடுக்குபவர்களை சாதி அடையாளம் கொண்டு மட்டுமே பார்க்கத் தேவையில்லை. சாதிய அடையாளத்தோடு பார்த்தால், நில உரிமையாளர்களான பிற்படுத்தப்பட்ட சாதிகள்தாம் தலித்துகளை ஒடுக்குபவர்கள். அதே நேரத்தில் அவர்களை சாதியைக் கொண்டு அடையாளப்படுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. ஒரே சாதியில் இருந்தாலும், அவர் கள் எல்லோரும் ஒரே நிலையில் உள்ளனரா? தலித்துகளின் நிலையில் உள்ள எத்தனையோ பேர் இருக்கிறார்கள். நிலமற்ற தொழிலாளர்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் மட்டுமே தலித்துகள்; மற்ற சதவிகிதத்தில் இதர பிரிவினரும் இருக்கிறார்கள். தலித்துகள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கும் இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. எனவே, அவர்களுக்கும் தலித்துகளுக்குமிடையே ஒரு நல்ல தொடர்பும், பாலமும் கட்டமைக்கப்பட்டு, இந்த இரு தரப்பையும் ஒடுக்கும் நில முதலாளிகளின் சாதிக்காரர்களாக அல்லாமல், தலித்துகளுடன் சேர்த்து தங்களை அடையாப்படுத்திக் கொள்ளச் செய்ய வேண்டும். நான் கிராமங்களில் களப்பணி செய்திருக்கிறேன், இடையில் செயற்கையாக யாராவது சாதிப் பிரச்சனையை உருவாக்காத வரையில், இயற்கையிலேயே சாதி வெறுப்புடன் அங்கே மனிதர்கள் வாழ்வதில்லை. 
சந்திப்பு : "கீற்று' பாஸ்கர்
Thanks to : http://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/2011-sp-562439341/14944-2011-06-02-08-36-40

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் எழுத்தாளர்: அ.ஜெகநாதன்