மகாவீரர்


Mahaveerarஉலகம் முழுக்க மக்கள் இரு பிரிவுகளாக இருக்கின்றனர். ஏழை, பணக்காரன் என்பது தான் அந்தப் பிரிவு. ஆனால் நமது நாட்டில் மட்டும் வேறு ஒரு பிரிவும் இருக்கிறது. அது சாதிப்பிரிவு. இந்தியாவில் மக்கள் நான்கு அடிப்படை சாதிகளாகப் பிரிக்கப்பட்டு ள்ளனர். இந்த நான்கு பிரிவுகளுக்குள் பல கிளைகள் உள்ளன. அந்த வகையில் நமது நாட்டில் பல ஆயிரம் சாதிப்பிரிவுகள் வந்துவிட்டன. இந்த சாதிப்பிரிவுகள் மக்களை ஒன்றிணைய விடாமல் தடுத்தன. ஒரு சில பிரிவினருக்கு மட்டும் உயர்ந்த மதிப்பைத் தந்தன. இந்த அளவு கொடுமையான சாதி வழக்கம், இந்தியாவுக்குள் பிழைப்பதற்காக படையெடுத்து வந்த ஆரியர்களால்தான் உருவாக்கப்பட்டது. சுமார் 3000 ஆண்டுகளாக இவ்வழக்கம் இங்கே இருந்து வருகிறது. இந்த வழக்கத்தை எதிர்த்து சில அறிஞர்கள் பாடுபட்டனர். அவர்களில் ஒருவர் தான் மகாவீரர். இவர் புத்தர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவராவார்.

மகாவீரர், வைசாலி எனும் இடத்திற்கு அருகில் உள்ள குந்தி கிராமா என்ற ஊரில் கி.மு.539 ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய பெற்றோர் சித்தார்த்தர், திரிசலை ஆகியோர் ஆவர். இருவரும் சிற்றரசர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். மகாவீரர் என்பது அவரின் பட்டப்பெயர். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் வர்த்தமானா என்பதாகும். அக்கால வழக்கப்படி, அவர் இள வயதிலேயே யசோதா என்ற பெண்ணை மணந்து கொண்டார். அவர்களுக்கு அனோஜா என்ற மகள் பிறந்தார். தன்னைச் சுற்றி நடக்கிற சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் என நினைத்தார் வர்த்தமானர்.

அக்காலத்தில் கடவுளுக்கு யாகம் செய்ய நூற்றுக்கணக்கான விலங்குகள் பலியிடப்பட்டன. சாதிக் கொடுமை இருந்தது. மருத்துவ வசதிகள் இன்றி மக்கள் அளவுக்கு அதிகமாக இறந்தார்கள். ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் அடிக்கடி சண்டை நடந்தது. இது போன்ற சிக்கல்களைத் தீர்க்க பொது வாழ்க்கைக்கு வர மகாவீரர் முடிவெடுத்தார். எனவே தனது 30 ஆவது வயதில் தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்தார். சுமார் 12 ஆண்டுகள் ஊர் ஊராகச் சுற்றினார். உடை உடுத்தாமல், பிச்சை எடுத்து சாப்பிட்டபடி சுற்றிய மகாவீரர், ரிஜிபாலிகா என்ற இடத்தில் இருந்தபோது புதிய சிந்தனை பெற்று மக்களுக்கு கற்பிக்கத் தொடங்கினார்.

நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை ஆகிய செயல்களை மகாவீரர் வலியுறுத்தினார். மக்களிடம் இக்கருத்துக்களைப் பின்பற்றச் சொன்னார். மகாவீரர் ‘ஜெயனா' என்று அழைக்கப்பட்டார். இதற்கு ‘வென்றவர்' என்று பொருள். மகாவீரர் காலத்துக்கு 250 ஆண்டுகளுக்கு முன்பாக பார்சுவநாத் என்ற ஒருவர் வாழ்ந்திருக்கிறார். அவர் உயிர்களைக் கொல்லக்கூடாது, திருடக் கூடாது, பொய் பேசக்கூடாது, அதிகப் பொருள் வைத்திருக்கக்கூடாது என்று மக்களிடம் பிரச்சாரம் செய்திருக்கிறார். மகாவீரர் காலத்தில் கோசாலா என்பவர் சமண மதத்தில் பிரிவுகளை ஏற்படுத்தினார். இந்த மூவரின் அறிவுரைகளைப் பின்பற்றுகிறவர்கள் சமணர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

பிற்காலத்தில் இந்த அறிவுரைகளில் நம்பிக்கை கொண்டவர்கள் இடையிலே கடும் வேறுபாடுகள் உருவாகின. மகாவீரர் 75வது வயதில் கி.மு.467ஆம் ஆண்டு இறந்தார். மகாவீரர் கடவுள் நம்பிக்கையை மறுத்தார். ஒழுக்கமும், எளிமையும் நிறைந்த வாழ்க்கையை வாழச் சொன்னார். உயிரினங்களை துன்புறுத்தக்கூடாது என்றார். ஆனால் மகாவீரரின் கருத்துக்களில் பல முரண்பாடுகளும் இருந்தன. அவர் மறுபிறவியிலும், மந்திரங்களிலும் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆதிக்கம் செய்யும் சாதியினரை மிகக் கடுமையாக எதிர்த்தார் என்பதால், பிற்காலங்களில் சமண மதம் அழிக்கப்பட்டது. சமணக் கோயில்கள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டன. இன்று சமண மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் உண்மையான சமணர்கள் அல்லர். அவர்கள் எல்லோரும் இந்து மதத்தில் மூழ்கி விட்டனர்.

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் எழுத்தாளர்: அ.ஜெகநாதன்