புத்தர் : ஒரு போராளியின் கதை - மருதன்

புத்தர் : ஒரு போராளியின் கதை

புரட்சி / அத்தியாயம் 7
buddhaசுமார் 2500  ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் போதித்துக்கொண்டிருந்த சமயத்தில் இந்தியாவில் சமூகக் கட்டுமானம் இறுக்கமான வடிவத்தில் இருந்தது. இந்த வடிவத்துக்குத் தத்துவார்த்தமான பின்புலமும் வழங்கப்பட்டிருந்தது. நெருப்பு என்றால் எரியவேண்டும். பாறை என்றால் கடினமாக இருக்கவேண்டும். மாடு என்றால் பால் கொடுக்கவேண்டும். உயிரற்ற பொருள்களுக்கு மாத்திரமல்ல உயிருள்ள பொருள்களுக்கும் பொருந்தக்கூடிய உலகப் பார்வையாக இது வளர்த்தெடுக்கப்பட்டது. ஒரு மனிதன் என்ன தொழில் செய்யவேண்டும், எப்படி வாழவேண்டும், அவனது கடமைகள் என்னென்ன போன்றவை முன்கூட்டியே வரையறுக்கப்பட்டிருந்தன. இந்தப் பார்வை பிற்காலத்தில் மேலும் இறுக்கமடைந்து வர்ணங்களும் சாதிகளும் தோன்றுவதற்குத் தோதான சூழலை உருவாக்கிக்கொடுத்தது. யார் நாட்டை ஆளவேண்டும், யார் சேவகம் புரியவேண்டும், யார் போர் புரியவேண்டும், யார் எப்படி வாழவேண்டும் போன்றவை பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டன.
இந்தப் பின்னணியில்தான் புத்தர் சிந்திக்கவும் செயல்படவும் தொடங்கியிருந்தார். அவருடைய போதனைகள் இந்தச் சூழலில் இருந்தும், இந்தச் சூழலை எதிர்த்தும் உருவானவை. தன் காலத்தில் நிலவிய வாழ்வியல் சித்தாந்தமும் அறவியல் தத்துவமும் பிழையானவை என்பதை புத்தர் முதலில் தெரிந்துகொண்டார். அதற்கான மாற்றை முன்வைக்கவேண்டியது அவசியம் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.
எல்லாமே முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிட்டன, குறிப்பிட்ட வட்டத்துக்குள் பிறந்த ஒருவன் குறிப்பிட்ட வகையில்தான் நடந்துகொள்வான் போன்ற கருத்தாக்கங்களை புத்தர் நேரடியாகத் தாக்கினார். ‘ஒருவன் தன் பிறப்பால் பிராமணனாகவோ விலக்கப்பட்டவனாகவோ மாறுவதில்லை. அவனது செய்கைகளே அவனது குணத்தைத் தீர்மானிக்கின்றன.’ ஆணா, பெண்ணா என்பது முக்கியமல்ல. ஏழையா, பணக்காரனா என்பது பொருட்டல்ல. செய்கை மட்டுமே முக்கியம்; செய்கையைக் கொண்டே மதிப்பீடுகள் உருவாக்கப்படவேண்டும் என்றார் புத்தர்.  புத்தரின் போதனைகள் அவர் காலத்து வரலாற்றுத் தேவையைப் பூர்த்தி செய்வதாக அமைந்தன. ஆதிக்கக் கருத்தியலுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்தன்மூலம் ஒரு தெளிவான மாற்றுப் பாதையை வகுத்துக்கொடுத்தன்மூலம் புத்தர் ஒரு சமூகப் போராளியாக எழுச்சி பெற்றார்.
இந்திய வரலாறு என்பது பிராமணியத்துக்கும் பௌத்தத்துக்கும் இடையிலான யுத்தங்களின் வரலாறே ஆகும் என்று பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப் புரட்சியும் என்னும் நூலில் குறிப்பிடுகிறார் அம்பேத்கர். வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும் என்னும் மார்க்சியப் பார்வையை நினைவுபடுத்தும் வாசகம் இது.  ‘பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதாருக்கும் இடையில் அல்ல; ஆரியர்களுக்கும் ஆரியர் அல்லாதாருக்கும் இடையில் அல்ல; வேதங்களுக்கும் பிற இந்திய கலாசாரங்களுக்கும் இடையில் அல்ல. பௌத்தத்துக்கும் பிராமணியத்துக்கும் இடையிலேயே முக்கிய மோதல்கள் நடைபெற்றன’ என்றார் அம்பேத்கர்.
நவீன உலகுக்கு ஏற்ற ஒரே மதம் பௌத்தம் என்பது அம்பேத்கரின் முடிவு. அறிவியல் உணர்வால் உந்தப்பட்டவர்களுக்கு இது மட்டுமே மார்க்கம் என்றார் அவர். அதே சமயம் பௌத்தம் மெல்ல மெல்லவே பரவிக்கொண்டிருக்கிறது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். அதற்குக் காரணம் கிறிஸ்தவர்களுக்கு பைபிள் என்பது போல் பௌத்தர்களுக்கு என்று தனியொரு நூல் கிடையாது. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் புத்தரும் அவர்தம் தம்மமும் என்னும் நூலை அம்பேத்கர் எழுதினார். அம்பேத்கருக்கு முன்பே பால் காரஸ், எட்வின் அர்னால்ட் ஆகியோர் பௌத்தம் குறித்து எழுதியுள்ளனர் என்றாலும் புத்தரை ஒரு போராளியாக அடையாளப்படுத்தி நவீன அரசியல் களத்துக்கு அவரை மறு அறிமுகம் செய்து வைத்ததில் அம்பேத்கரின் பங்களிப்பு முதன்மையானது.
2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் யாரை எதிர்த்துப் போரிட்டாரோ அவர்களையே அம்பேத்கரும் தன் காலத்தில் எதிர்க்கவேண்டிவந்தது. புத்தரின் போதனைகளை மீறி சாதியக் கட்டுமானம் மேலும் இறுக்கமடைந்து தீண்டாமைக் கொடுமைகள் வளர்ந்து நிற்பதை அம்பேத்கர் கண்டார். இவற்றையெல்லாம்விட, மேலாதிக்கத்துக்கு எதிராகப் போரிட்ட புத்தரையே மதவாதிகள் கடவுளின் அவதாரமாகவும் கடவுளாகவும் உருமாற்றியிருந்தனர்.
எனவே, அம்பேத்கர் முதலில் புத்தரை மதவாதக் குப்பைகளில் இருந்து மீட்டெடுத்தார். நோய், மூப்பு, சாவு ஆகியவற்றைக் கண்டு அதிர்ச்சியடைந்து புத்தர் தன் வீட்டைவிட்டு வெளியேறவில்லை; சாக்கியர்களுக்கும்  கோலியர்களுக்கும் இடையிலான நதி நீர்ப் பங்கிட்டுப் பிரச்னையை அமைதி வழியில் தீர்ப்பதற்காகவே அவர் வெளியேறினார் என்று தெளிவுபடுத்தினார். அடுத்து, ஆதிக்கச் சாதியினருக்கு எதிரான போராட்டத்தில் புத்தரை ஒரு வலுவான அரசியல் ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கினார்.
இந்து மதத்தில் இருந்து தீண்டாமையைப் பிரித்தெடுக்கமுடியாது என்பதால் அந்த மதத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் வெளியேறவேண்டும் என்றார் அம்பேத்கர். 1936ம் ஆண்டு மே 30, 31 இரு தினங்களில் பம்பாயில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட அம்பேத்கர் தீண்டத்தகாதவர்கள் இந்து மதத்தில் இருந்து பிரிந்து வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இந்து மதம், அதைக் கடைபிடிக்கும் அனைவருக்கும் பொதுவானது என்றால், இந்துக்களில் ஒரு பிரிவினர் ஏன் கீழ்மட்டத்தில் இருக்கிறார்கள்? அவர்கள் ஏன் மேல்சாதி இந்துக்களால் ஆளப்படுகிறார்கள்? மேல், கீழ் என்னும் பிரிவுகள் எப்படி, ஏன் தோன்றின? கால ஓட்டத்தில், இந்நிலைகள் ஏன் மாறாமல் அப்படியே நீடிக்கின்றன?
‘சமூகத்தின் அடிநிலையில் உங்களை வைத்திருக்கும் மதம் என்றுமே மாற்றமுடியாத ஒன்றாகும். காலத்துக்கு ஏற்ப, சூழ்நிலைகளுக்கு ஏற்ப இதில் மாற்றங்களுக்கு வாய்ப்பே இல்லை. நீங்கள் படிநிலைப்படுத்தப்பட்ட இந்து மதத்தில் கீழ் நிலையில் இருக்கிறீர்கள். இறுதிவரை நீங்கள் அங்கேதான் இருக்கமுடியும். இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் இடையில் நடைபெறும் போராட்டம், என்றென்றைக்கும் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதுதான் இதன் பொருள். இந்தப் போராட்டத்தை நீங்கள் எப்படி சந்திக்கப் போகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமான கேள்வி.’
அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவியதற்கும் அதையே ஒரு தீர்வாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு முன்வைத்தற்கும் என்ன காரணம்?
  • இன்றைய தீண்டப்படாதவர்கள் ஒரு காலத்தில் புத்த மதத்தினராக இருந்தனர் என்பது அம்பேத்கரின் முடிவு.
  • புத்த மதம் ஓர் இந்திய மதம் என்பதால் அன்னியத் தன்மைகள் இருக்காது.
  • புத்த மதம் மிக மிகக் கடுமையான அறிவியல் சோதனைகளைக் கூடத் தாக்குப்பிடிக்கக் கூடியது. நவீன உலகின் தலைவிதிகளை நெறிப்படுத்துவதற்கான திறனையும் ஆற்றலையும் அது பெற்றிருந்தது.
  • தீண்டப்படாதவர்கள் உலக புத்த சமூகத்தோடு சேர்ந்து உலக சகோதரத்துவத்துக்கான வழியை வகுப்பார்கள்.
புத்த மதத் தத்துவத்தின் நல்லியல்புகளை அம்பேத்கர் குறித்து ஆய்வுகள் மேற்கொண்ட டபிள்யூ.என். குபேர் பட்டியலிடுகிறார்.
  • புத்த மதம், இங்கு இந்தப் பிறவியிலேயே அடையக்கூடிய வாழ்க்கை அனுபவத்தைப் பற்றி கூறுகிறது.
  • புத்த மதம் நடப்பு இயல்புகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கருத்துமுதல்வாதத்தன்மை அதில் இல்லை.
  • சுதந்தரம், சமத்துவம்,வாய்மை மற்றும் நீதியை உயர்த்திப் பிடிக்கிறது. மனித நேயம், அன்பு, சமாதானம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
  • இயங்கியல்தன்மை கொண்டது. அறிவியல்பூர்வமானது. அனைத்தையும் தழுவிச் செல்வது. அறிவுக்கும் தர்க்கவியலுக்கும் பொருந்தக்கூடியது. அறவொழுக்கம் சார்ந்தது.
  • புத்த மதத்தில் மனிதனை மையமாகக் கொண்ட ஆராய்ச்சியும் தேர்வும் உள்ளன. மனிதனைத் தாண்டி அது சிந்திக்கவில்லை.
பௌத்தத்துக்கும் மார்க்சியத்துக்கும் உள்ள சில அடிப்படை ஒற்றுமைகளை முன்வைத்து விவாதிக்கிறார் விக்டர் குணசேகரா. புத்தர், மார்க்ஸ் இருவருமே உலகம் தொடர்ந்து மாற்றமடைந்துவருகிறது என்பதை ஏற்கிறார்கள். புத்தர் இதனை நிலையின்மை என்றார். மார்க்ஸ் இயங்கியல் என்றார். வலியும் துயரங்களும் நிஜமானவை; மனரீதியிலும் உடல்ரீதியிலும் வலி நீடிக்கிறது என்றார் புத்தர். பெரும்பாலான மக்கள் துயரங்களிலும் வலிகளிலும் சிக்கிக்கிடக்கிறார்கள் என்றார் மார்க்ஸ். நவீன முதலாளித்துவ சமூகத்தில் மக்கள் அந்நியப்படுத்தப்படுவதை மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். புத்தர், மார்க்ஸ் இருவருமே தத்துவத்தோடு நின்றுவிடாமல் உலகை மாற்றுவதற்கான அவசியம் குறித்தும் அதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதித்தார்கள். இருவருமே கருத்துமுதல்வாதத்தையும் கடவுளையும் எதிர்த்தனர். ஒரு பிரிவினரால் இன்னொரு பிரிவினர் ஆதிக்கம் செலுத்தப்படுவதை எதிர்த்தனர்.
தத்துவம், செயல்பாடு என்னும் இரு பிரிவுகளிலும் புத்தர் செயலாற்றினார். இந்தியத் தத்துவத் துறையில் புத்தரின் பங்களிப்பு கிரேக்கத் தத்துவ மரபில் ஹெராகிளிடஸின் பங்களிப்போடு ஒப்பிடப்படுகிறது.  இந்தியத் தத்துவ உலகில் முதன் முதலாகப் பொருள்முதல்வாதச் சிந்தனையை புத்தரிடமே காண்கிறோம் என்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா.
இன்று நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் முதன்மையானது மதவெறி என்றால் இன்றைய நம் தேவைகளில் முதன்மையானது பௌத்தம். முதலாளித்துவச் சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மார்க்சியம் எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவுக்கு சாதிய மேலாதிக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்தர் தேவை.  அதற்கு முதலில் எது பௌத்தம் என்பதைவிட எதெல்லாம் பௌத்தம் அல்ல என்னும் புரிதல் அவசியமாகிறது. புத்தர் எந்தவொரு மதத்தையும் நிறுவவவில்லை. என்னிடம் வாருங்கள், நான் உங்களை மீட்கிறேன் என்று சொல்லவில்லை. ஒரு புத்தரால்கூட வழியை மட்டுமே காட்டமுடியும், நீங்கள்தான் உங்கள் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும் என்கிறார் புத்தர். புத்தரின் போதனைகளில் ரகசியம் என்று எதுவும் இல்லை. பூடகம் என்று எதுவும் இல்லை. இன்றைய லாமாக்களுக்கும் புத்தருக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.  பௌத்தத்தில் சடங்குகள், சம்பிரதாயங்கள்  இல்லை. ஜென், யோகா, தவம் போன்றவற்றுக்கும் புத்தருக்கும் தொடர்பில்லை. பௌத்தம் என்பது ஒரு வறட்டுத் தத்துவப் பிரிவு மட்டுமே அல்ல. பௌத்தம் என்பது சைவ உணவு முறை அல்ல. (புத்தர் இறைச்சி உண்டதாகக் குறிப்புகள் இருக்கின்றன. அசைவம் உண்பது அசுத்தமானது என்று புத்தர் கருதவில்லை). புத்தருக்கும் அதிசயங்களுக்கும் அற்புதங்களுக்கும் தொடர்பில்லை. மந்திர உச்சாடனங்களுக்கு பௌத்தத்தில் இடமில்லை. பௌத்தம் நிச்சயமாக, இந்து மதத்தின் ஒரு பிரிவு இல்லை.

எனில், எது பௌத்தம்? மக்கள் வேதனைப்படுகிறார்கள்; அதற்கு ஒரு காரணம் இருக்கிறது; அந்தக் காரணத்தைக் கண்டறியமுடியும்; அகற்றமுடியும் என்று உணர்தல். வேதனையைக் கண்டு ஒதுங்காமல், ஓடாமல், ஒளியாமல் இருத்தல். வேதனை குறித்த வியாக்கியானங்களோடு நின்றுவிடாமல் துணிவுடன் போராடுதல். புத்தர் இதைத்தான் செய்தார்.

மார்க்ஸைக் கடந்தும் முதலாளித்துவம் உயிர்ப்புடன் இருப்பது போல் புத்தரைக் கடந்தும் சாதிய ஒடுக்குமுறையும் மேலாதிக்கமும் உயிர்ப்புடன் நீடிக்கிறது. இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கு புத்தரிடமே நாம் மீண்டும் திரும்பிச் சென்றாகவேண்டும். புத்தரை ஓர் ஆயுதமாக மாற்றியாகவேண்டும். ஒற்றை வார்த்தையில் புத்தர் சொன்னார். ‘செயல்படு!’.
(அடுத்த பகுதி : ஆசான்கள் இருவர்)

Comments

Popular posts from this blog

சமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம்

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்

Visit to Anandhur Sammandha vayal Buddha Vihar, Thiruvadanai Block, Ramanathapuram District.