காஞ்சியில் அபூர்வ புத்தர் சிற்பம் கண்டெடுப்பு : எழுத்தாளர்: மு.நீலகண்டன்

அசோகரின் இரண்டு கல்வெட்டுச் சாசனம் மூலமாகவும், மகாதீப வம்சம் என்ற இலங்கையின் பௌத்த நூல்கள் மற்றும் பாண்டிய நாட்டுக் குகைகளில் ஒன்று “அரிட்டாபட்டி” ஆகியவைகள் தரும் சான்றுகள் கொண்டு கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் ‘பௌத்த சமயம்’ தமிழ் நாட்டிற்கு வந்ததென்றும் இதனைக் கொண்டுவந்து புகுத்தியவர்கள் அசோக மன்னரும் அவரது உறவினரு மாகிய மகேந்திரரும், அவரைச் சார்ந்த பிக்குகளுமாவர் என்றும் மயிலை சீனி.வேங்கடசாமி கூறுகிறார். (பௌத்தமும், தமிழும், என்.சி.பி.எச். வெளியீடு ப.30) இதே காலகட்டத்தில் தான் காஞ்சியில் பௌத்தம் வளரத் தொடங்கியது என்று முனைவர் கபகவதி கூறுகிறார் (காஞ்சிபுரம், கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்கு முன் வெளியீடு, உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனம், ப.92)
buddhaகாஞ்சியில் காணப்பட்ட அன்றைய புத்த மதத்தின் செல்வாக்கை மணிமேகலையில் காண முடிகிறது என்றும் பௌத்த சமயத்தின் பொற் காலம் கி.பி. 460-700 ஆகும் என்றும் சோ.நா. கந்தசாமி குறிப்பிடுகிறார் (Buddhism As expounded in Manimekalai, Annamalai University p 50) எனவே, கி.பி. 7ஆம் நூற்றாண்டு வரை பௌத்தம், காஞ்சியில் சிறப்புப் பெற்று இருந்தது என அறிய முடிகிறது. பௌத்தம் செல்வாக்குப் பெற்று இருந்த தொன்மை வாய்ந்த காஞ்சியில் “கோனேரிகுப்பம்” என்ற கிராமம் உள்ளது.
இக்கிராமம் காஞ்சி ஏனாத்தூர் சாலையில் உள்ளது. சாலை ஓரத்தில் மண்ணில் புதைக்கப்பட்டுள்ள ஒர் அபூர்வ புத்தர் சிலையைக் காணமுடிகிறது. இச்சிலை 4 அடி உயரமுள்ளது 2.5 அடி பூமியில் புதைக்கப்பட்டுள்ளது. தரை மட்டத்திலிருந்து 1.5 அடி உயரத்தில் இச்சிற்பம் காணப்படுகிறது. காஞ்சி சங்கர மடத்திற்கும், மசூதிக்கும் இடைப்பட்ட பகுதியில் கட்டட வேலை செய்யும் போது பூமிக் கடியில் சுமார் 4 அடி ஆழத்தில் இந்த புத்தர் சிற்பம் கண்டெடுக்கப் பட்டதாக அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்
ஒரே கல்லில் மூன்று பக்கங்களில் மூன்று சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. ஒரு பக்கத்தில் புத்தர் தியான நிலையில் உள்ளார். மறுபக்கம் புத்தர் உருவம் உடைக்கப்பட்டுச் சிதைந்து காணப்படுகிறது. இதிலும் புத்தர் தியான நிலையில் இருப்பதைக் காணமுடிகிறது. அடுத்த பக்கவாட்டில் மைத்ரேயர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
மைத்ரேயர் ஒரு போதிசத்துவர் ஆவார். பின்னாளில் வரப்போகும் “புத்தர்” ஆவார். எதிர்கால புத்தர் (Future Budhha) எனக் கருதப்பட்ட மைத்ரேயர் மத்தியகாலக் கலையில் சிற்பமாக வடிக்கப்பட்டு உள்ளார். மைத்ரேயர் தனிச்சிற்பமாகப் பெரும் பாலும் காட்டப்படுவதில்லை. புத்தர்களுடனோ அல்லது வஜ்ராசன புத்தருடனோ சேர்த்துக் காட்டப்படுவார். இவரது சிற்பங்கள் காந்தாரக் கலையிலிருந்து தொடங்கி, அண்மைக்காலம் வரை வடிவமைக்கப்பட்டுள்ளன.
காந்தாரச் சிற்பங் களில் மைத்ரேயர், புத்தர் போன்று அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளார். அவரது கூந்தல் ஒரு முடிச்சுப் போடப்பட்டு உஷ்ணிசமாக அமைந் துள்ளது. இவரது கரங்கள் தர்மச்சக்கர முத்திரை காட்டியோ அல்லது போதி சத்துவராகவோ அமர்ந் திருக்கிறது என்று ஆர்.எஸ்.குப்தா குறிப்பிடுகிறார். (R.S. Gupte, lconography of the Hindus, Buddhists and Jains, P 111) கோனேரிக்குப்பம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட இச்சிற்பம் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச்சிற்பம் புடைப்புச் சிற்பம் எனப்படும். சிற்பம் இரண்டு வகைகளாக அமையும், சிற்பத்தின் முன்புறம், பின்புறம் என முழு உருவம் தெரியும் வகைகளில் செதுக்கப்படும் சிற்பம் “முழு உருவச் சிற்பம்” எனப்படும். சிற்பத்தின் முன்புறம் மட்டுமே தெரியும் படி சுவர்களிலும், பலகைகளிலும், கல்லிலும் வடிக்கப்படும் சிற்பம் “புடைப்புச் சிற்பம்” எனப்படும்.எனவே, இங்குக் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் புடைப்புச் சிற்ப வகையைச் சேர்ந்தது ஆகும்.
தமிழ்நாட்டை, களப்பிரர்கள் “சங்கம் மருவிய காலம்” முதல் அதாவது கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தனர். இவர்கள் காலத்தில் கருங்கல்லில் சிற்ப வடிவங்கள் “புடைப்புச் சிற்பமாக” அமைக்கப்பட்டன என்று மயிலை சீனி. வேங்கடசாமி கூறுகிறார். (களப்
பிரர் ஆட்சியில் தமிழகம், ப. 128) இவர்கள் காலத்தில் காஞ்சியில் பௌத்த சமயத்தின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. இவர்கள் ஆட்சியில் காஞ்சியில் சுமதி, ஜோதிபாலர், ஆசாரிய திக்நாகர், காஞ்சி தரும பால ஆசாரியர் போன்ற பௌத்த அறிஞர்கள் வாழ்ந்தனர்.
கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் களப்பிரர்களிடமிருந்து “சிம்மவிஷ்ணு” என்ற பல்லவ மன்னர் காஞ்சியைக் கைப்பற்றினார். களப்பிரர் ஆட்சியில், காஞ்சியில் பௌத்தம் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருக்க வேண்டும் எனக் கருத முடிகிறது. எனவே காஞ்சி, கோனேரிக் குப்பத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த அபூர்வ புத்த சிற்பம், களப்பிரர் ஆட்சிக் காலத்தைச் சார்ந்தது எனலாம்.
பயன்படுத்திய நூல்கள்
மயிலை சீனி.வேங்கடசாமி, களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
மயிலை சீனி.வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும்
முனைவர் கு.சேதுராமன், பௌத்த சமயக் கலை வரலாறு
முனைவர் கு.பகவதி, காஞ்சிபுரம் கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்கு முன் 
க.வெங்கடேசன், முற்காலத் தமிழ்நாட்டு வரலாறு
மயிலை சீனி.வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
ஆ.இராம கிருட்டிணன், தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும்
Buddhism in Tamil Nadu Collected Papers, Published by Institute of Asian Studies
R.S. Gupta, Iconography of the Hindus Buddhists and Jains
S.N. Kandaswamy, Buddhism AS Expounded in Mainmakalai,
நேர்காணல்: சந்திரசேகரன், காஞ்சி கோனேரிக் குப்பம், புத்தர் ஆலயம் நிர்வாகி மற்றும் களப்பணியில் சேகரிக்கப்பட்ட தகவல்கள்.

Comments

Popular posts from this blog

சமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம்

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்

Visit to Anandhur Sammandha vayal Buddha Vihar, Thiruvadanai Block, Ramanathapuram District.