போதியின் நிழல் - புத்தக மதிப்புரை

போதியின் நிழல்

போதியின் நிழல், அசோகன் நாகமுத்து, அந்திமழை, ஜி4, குருவைஷ்ணவி அப்பார்ட்மென்ட்ஸ், 20, திருவள்ளுவர் நகர், மெயின்ரோடு, கீழ்க்கட்டளை, சென்னை 600117, பக். 266, விலை 180ரூ.
உலக வரலாற்றை, பயணிகள்தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களின் சாகசங்களும் அறிவார்ந்த செயல்களும் உலக வரலாற்றின் நீள அகலங்களை மாற்றி அமைத்திருக்கின்றன. ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தின் மூலம் நமக்கு ஒரு வரியில் அல்லது ஒரு பத்தியில் மட்டுமே அறிமுகமான சீனப் பயணி யுவான் சுவாங்கின் இந்திய பயணம்தான், அசோகன் நாகமுத்துவின் இந்த நாவல்.
நாட்டைவிட்டு இன்னொரு தேசத்துக்குச் செல்வது தேசக் குற்றம் என்று சீனாவில் கருதப்பட்ட காலம். அதையும் மீறி யுவான் சுவாங் இந்தியாவை நோக்கிப் பயணிக்கக் காரணம், தான் ஏற்றுக்கொண்ட புத்தமதம் தோன்றிய பூமியைப் பார்க்கும் ஆவல். புத்தர் ஞானம் அடைந்த புத்தகயாவைத் தரிசிக்கவும், போதி மரத்தின் நிழலில் தன் ஆன்மாவை இளைப்பாற்றவும், புத்தர் மூழ்கி எழுந்த நிரஞ்சனா நதியில் நீராடவும், புத்த ஞானத்தைக் கற்பதும்தான்.
ஆனால், அதற்காக அவர் அடைந்த இன்னல்களும் சங்கடங்களும் கொஞ்சநஞ்சம் அல்ல. கிட்டத்தட்ட 17 ஆண்டு கால அவரது பயணத்தில் குறுக்கே நின்றவை ஆறுகள், வழிப்பறிகள், வானுயர்ந்த மலைகள், அரசர்களின் சுயநலம்… ஆகியவை.
இந்தியாவின் காஷ்மீரம் தொடங்கி காஞ்சிபுரம், இன்றைய ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் வரை யுவான் சுவாங்கின் பயணத்தில் எக்கச்சக்க த்ரில். கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்திய தேசத்தை தன் நாவலில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
உலகப் புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம், தென்னகத்தின் நாளந்தா என்றழைக்கப்பட்ட காஞ்சிபுரம், புத்தர் ஞானம் அடைவதற்கு முன்பும் பின்பும் மூழ்கி எழுந்த நிரஞ்சனா நதி, புத்தருக்கு பால் சோறு கொடுத்துப் பராமரித்த சுஜாதா என்கிற பெண்மணி வகித்த கிராமம், புத்தகயா, புத்தர் பிறந்த லும்பினி ஆகியவை இன்றைக்கும் புத்த மதத்தின் எச்சங்களைச் சுமந்துகொண்டு காலத்தின் தழும்பேறிக்கிடப்பதை சான்றுகளோடு அறியத் தருகிறார் அசோகன்.
கொஞ்சம் பிசகினால்கூட ஆவண நூலாகி இருக்கும் ஆபத்துள்ள கதைக்களம். ஆனால், தம் மொழியாலும் கதை சொல்லும் உத்தியாலும் ஒரு நாவலாக மாறியிருக்கும் அசோகன் நாகமுத்துவின் உழைப்பு பாராட்டுக்குரியது.
தன் 17 வருட ஆன்மிகப் பயணத்தில் இந்தியாவில் இருந்து யுவான் சுவாங் எடுத்துச் சென்றவை, 22 குதிரைகளில் 627 சமஸ்கிருத நூல்களும், 115 புனிதப் பொருட்களும், புத்தரின் பொற்சிலை ஒன்றும்தான்.
கடும்கட்டுப்பாட்டை மீறி சீனத் தேசத்தை விட்ட வெளியேறி வந்த யுவான் சுவாங், கி.பி. 645ம் ஆண்டு மீண்டும் சீனா வந்த போது கோலாகலமாக வரவேற்கப்பட்டதும், சீன தேசத்தின் மந்திரியாகும் வாய்ப்பு கிடைத்தபோது தான் வரித்துக் கொண்ட கொள்கைக்காக அதனை ஏற்க மறுத்ததும், இந்தியாவிலிருந்து கொண்டு வந்து சமஸ்கிருத நூல்களை சீனத்தில் மொழிபெயர்க்க ஆட்களை மற்றும் பெற்றுக்கொண்டு, அந்தப் பணியில் மட்டுமே தன்னை அர்ப்பணித்து 65வது வயதில்இறப்பதும், யுவான் சுவாங்கின் வாழ்வு ஒரு கனவுபோல வாசகன் முன் விரிகிறது.
நன்றி: ஆனந்த விகடன், 16/10/2013.

Comments

Popular posts from this blog

சமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம்

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்

Visit to Anandhur Sammandha vayal Buddha Vihar, Thiruvadanai Block, Ramanathapuram District.