புத்தர்பிரான் - புத்தக மதிப்புரை


 

புத்தர்பிரான்

புத்தர்பிரான், கவுதம நீலாம்பரன், சூரியன் பதிப்பகம்.
போதி பகவன், என்றும், போதி மாதவன் என்றும் இன்னும் பல்வேறு நாமங்களில் போற்றப்படும், புத்த ஞாயிறு பற்றி எழுத்தாளர் கவுதம நீலாம்பரன் எழுதியிருக்கும் புத்தகம், புத்தர் பிரான். சூரியன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, புத்தரை பற்றி எழுதியுள்ள பலரது நூல்களில் இருந்தும் வேறுபட்டு புத்தரது அனைத்து பரிமாணங்களையும் பதிவு செய்துள்ள நூல் இது.
இந்த நூலில், புத்தர் குறித்து, நமக்கு நடைமுறை வாழ்வில் தெரிந்த, ஆனால் அமதன் அர்த்தங்கள் விளங்காத, பல அபூர்வமான செய்திகள், அனைவரும் புரிந்து கொள்ளும்படியாக, மிக அற்புதமாக நிறைந்துகிடக்கின்றன.
வரலாறுகளில் மறைக்கப்பட்ட புனைவுகளால் புதைக்கப்பட்ட, புண்ணிய மூர்த்தியின் தோற்றம் முதல் அவர் பரிநிர்வாணம் அடைந்த புத்த பூர்ணிமா வரை புத்தர் தொடர்புடைய யாவற்றையும், பொய் கலவாத உண்மை சரித்திரத்தோடு, மரபுக்கும் கலாசார மேன்மைக்கும், இடையூறு ஏற்படா வண்ணம், ஆய்வு கண்ணோட்டத்தோடு ஒப்பீடு செய்து, நடுவுநிலை தவறாது, இவ்வளவு விவரணைகளோடு, வேறெந்த புத்தகமும் சொன்னதில்லை. வரலாற்றுப் படைப்பு, ஆய்வு நூல், புதினம் என அனைத்து அடையாளங்களையும் ஒன்றிணைத்திருக்கும் ஒரு புதிய இலக்கிய முயற்சியான புத்தர்பிரான் உரைநடையில் ஒரு காவியம்.
புத்தரின் அருளறம், இந்த புத்தகம் முழுவதும், பூரண நிலவின் புத்தமுதாக பொங்கி பிரவகிக்கிறது. காரல் மார்க்சின் நவீன சோஷலிசம், அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகள் இவற்றோடு பண்டித ஜவகர்லால் நேரு, விவேகானந்தர், சீன யாத்ரிகர் யுவான் சுவாங் போன்ற அறிஞர் பெருமக்களின், புத்தம் தொடர்புடைய கருத்தாக்கங்களும், இன்னும் நமக்கு தெரியாத, பல புத்த இலக்கிய ஆதாரங்களும், இன்ன பிறவும் சேர்ந்து இதை, புத்த ஆய்வு புதையல் ஆக்கியிருக்கிறது.
பேரறிஞர் அயோத்திதாச பண்டிதர்தான், தமிழின் செழுமை மிக்க நீண்ட நெடிய மொழி வரலாற்றில், பூர்வ தமிழொளி என்று புத்தரை முதன் முதலில் அடையாளப்படுத்தியவர். அதற்கு ஆக சிறந்த சாட்சியமாக விளங்க கூடியது கவுதம சித்தார்த்தன் குறித்து, கவுதம நீலாம்பரன் எழுதியிருக்கும் இந்த நூல்.
இனி, அவலோகிதன் புத்தரை குறித்து முழுமையாக அறிந்துகொள்ள, வேறெந்த மொழி புத்தகங்களையும் படிக்க தேவை இல்லை. தமிழில் வந்திருக்கும் இந்த ஒரு புத்தகம் போதும்.
-பாரதி வசந்தன், எழுத்தாளர்.
நன்றி: தினமலர், 3/5/2015.

Comments

Popular posts from this blog

சமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம்

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்

Visit to Anandhur Sammandha vayal Buddha Vihar, Thiruvadanai Block, Ramanathapuram District.