காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் புத்தர் கோயிலேநாகைப்பட்டினத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட வேறு பவுத்த உருவச் சிலைகள் சென்னைப் பொருள்காட்சிச் சாலையில் உள்ளன.

வெள்ளனூர்: இவ்வூர் புதுக்கோட்டையில் உள்ளது. இவ்வூர் கச்சேரியின் தென்புறத்தில் புத்தர் உருவச்சிலையொன்று இருக்கிறது.


செட்டிபட்டி: புதுக்கோட்டை குளத்தூர் தாலுகாவில் உள்ள இவ்வூரில், 3 அடி 9 அங்குலம் உயரம் உள்ள புத்தர் உருவச்சிலை ஒன்று இருக்கிறது.

ஆலங்குடிபட்டி: இதுவும் அதே தாலுகாவில் உள்ள ஊர். இங்கும் 3 அடி 6 அங்குலம் உயரம் உள்ள புத்தர் உருவச்சிலை இருக்கிறது.

இனி, தொண்டை நாட்டில் சிறப்புற்றிருந்த பவுத்த ஊர்களைப் பற்றி ஆராய்வோம்.

காஞ்சிபுரம்: இந்த ஊர்தொன்றுதொடு சைவ, வைணவ, ஜைன, பவுத்த மதத்தவர்களுக்கு நிலைக்களமாக இருந்துவந்தது. பவுத்தர்கள் பண்டைக்காலத்தில் இங்கு அதிகமாக இருந்தனர். இந்த ஊரில், கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட அசோக சக்கரவர்த்தியினால் கட்டப்பட்ட ஒரு பவுத்த தூபிஇருந்தாக கி.பி.ஏழாம் நூற்றாண்டில் இந்த நகரத்திற்கு வந்த யுவாங்சுவாங் என்றம் சீன யாத்திரிகர் எழுதியிருக்கின்றார். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழநாட்டை அரசாண்ட கிள்ளி-வளவன் என்னும் சோழன் தம்பி இளங்கிள்ளி என்பவன காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்ட காலத்தில், பைம்பூம் போதிப் பகவற்கு ஒரு சேதியம் அமைத்தான் என்று மணிமேகலையினால் அறிகின்றோம். இளங்கிள்ளி அரசாண்ட கி.பி.இரண்டாம் நூற்றாண்டிலே, காஞ்சிபுரத்துக்குத் தென்மேற்குத் திசையில், தருமத வனம் என்றும் ஒரு பூந்தோட்டம் இருந்ததென்றும், அதில் இளங்-கிள்ளி ஒரு புத்த பீடிகையை அமைத்து விழாவும் சிறப்பும் செய்தானென்றும் மணிமேகலையினால் அறிகின்றோம்.
காவிரிப்பூம்பட்டினத்தில் பவுத்த பள்ளியில் தலைவராக இருந்த அறவண அடிகள், பிற்காலத்தில காஞ்சிபுரத்தில் வந்து தங்கிப் பவுத்த மதத்தைப் போதித்து வந்தார் என்பதும் மணிமேகலையினால் பெறப்படுகின்றது. இன்றைக்கும், காஞ்சிபுரத்தில் அறப்பணஞ்சேரி என்னும் ஒரு தெரு உண்டு. அது அறவணஞ்சேரி என்பதன் மரூஉ. அறவண அடிகள் தங்கிருந்த சேரி (சேரி=தெரு) ஆதலின், அத்தெரு இப்பெயர் வாய்ந்தது. இப்போது அப்பெயர் அறப்பெருஞ்செல்வி தெரு என மாற்றப்பட்டிருக்கிறது. அன்றியும், புத்தேரித் தெரு என்னும் பெயருடன் ஒரு தெரு காஞ்சிபுரத்தில் இருக்கிறது. அது புத்தர் தெரு என்பதன் மரூஉ. மாதவிமகள் மணிமேகலை பவுத்த தருமங் கேட்டுத் துறவு பூண்டபின், காஞ்சிபுரத்திலே கடைநாள் வரையில் இருந்ததாக மணிமேகலை கூறுகின்றது.
கி.பி.5ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த புத்தகோஷ ஆசாரியர், பிடக நூல்களுக்கு உரைகளை எழுதியவர். இவர், தமது நண்பர்களான சுமதி, ஜோதிபாலா என்னும் பவுத்த பிக்குகளுடன் காஞ்சிபுரத்தில் வசித்திருந்ததாகவும், அவர்கள் வேண்டுகோளின்படி, இலங்கைக்குச் சென்றதாகவும் தமது மனோரதபூரணீ என்னும் உரையில் குறிப்பிடுகிறார். புத்தகோஷர் காஞ்சியில் இருந்த போது அவருக்கு அண்டாத்தகதா என்னும் நூல் கிடைத்தததாகவும், அந்நூல், தாம் திரிபிடகங்-களுக்கு உரை எழுதுவதற்குத் துணையாக இருந்தது என்றும் சாமந்தபாசாதிகா என்னும் உரையில் இவர் கூறுகிறார்.
நளாந்தா பல்கலைக் கழகத்தின் தலைமைப் பேராசிரியராக இருந்த ஆசாரிய தர்மபாலரும், அபிதம்மாத்த சங்கிரகம் முதலிய நூல்களை இயற்றிய அநுருத்தரும் காஞ்சியில் பிறந்தவர்கள். அநுருத்தர் காஞ்சியில் இருந்த மூலசோமவிகாரையில் இருந்தவர்.
கி.பி.640இல் காஞ்சிபுரத்திற்கு வந்த யுவாங் சுவாங் என்னும் சீன யாத்திரிகர், காஞ்சிபுரத்தில் நூறு பவுத்தப்பள்ளிகளும் ஆயிரம் பிக்குகளும் இருந்தாகக் கூறுகிறார். ஆசாரிய திக்நாகர் என்பவர், காஞ்சிக்கு அருகில் சிம்மவக்த்ரம் என்னும் இடத்தில் பிறந்தவர் என்று இந்த யாத்திரிகர் கூறுகிறார். இவர் கூறுகிற சிம்மவக்த்ரம் என்னும் ஊர், காஞ்சிக்கு அருகில் உள்ள சீயமங்கலமாக இருக்க வேண்டும்.
யுவாங் சுவாங் காஞ்சிக்கு வந்த சற்றேறக்குறைய அதே காலத்தில் காஞ்சிபுரத்தை அரசாண்ட மகேந்திரவிக்கிரமன் என்னும் பல்லவ அரசன் (அப்பர் சுவாமிகள் காலத்தவன்), தான் எழுதிய மத்தவிலாசப் பிரகசனம் என்னும் நூலில், காஞ்சியில் பல பவுத்த விகாரைகள் இருந்தன என்றும் அவ்விகாரைகளுக்கெல்லாம் தலைமையாக இருந்த பெரிய விகாரைக்கு இராஜ விகாரை என்று பெயர் இருந்ததென்றும் கூறுகிறார்.
காஞ்சிபுரத்தைத் தலைநகராகக்கொண்டு அரசாண்ட பல்லவ அரசர்களுள் புத்தவர்மன் என்பவன் பவுத்த மதத்தைச் சேர்ந்தவன் என்று கூறப்படுகின்றான். இவன் பவுத்தர்களுக்காகப் பவுத்தப்பள்ளிகளைக் கட்டி அவர்களைஆதரித்திருக்கக்கூடும். கி.பி.எட்டாம் நூற்றாண்டில், ஹிமிசீதளன் என்னும் அரசன் பவுத்தர்களை ஆதரித்தான் என்றும், அகளங்கர் என்னும் ஜைனர் காஞ்சிபுரத்தில் இவ்வரசன் முன்னிலையில் பவுத்தர்களுடன் சமயவாதம் செய்து வென்று, இவ்வரசனை ஜைன மதத்தில் சேர்த்ததோடு, தோல்வியுற்ற பவுத்தர்களை இலங்கைக்கு அனுப்பிவிட்டார் என்றும் தெரிகின்றது.
காஞ்சிபுரத்தில் கச்சீஸ்வரர் கோயில் காஞ்சிபுரத்தில் கச்சீஸ்வரர் கோயில் என்று வழங்கும் ஆலயம் பூர்வத்தில் புத்தர் கோயிலெனத் தெரிகிறது. இக்கோயிலின் முன் கோபுரத்தின் அஸ்தி வாரக் கல் கட்டடத்தில் சில புத்த விக்கிரகங்கள் இப்போதும் இருக்கின்றன. இன்னும் சில, முன்பு இருந்த உருவம் தெரியா-மலிருக்குமாறு அழிக்கப்பட்டிருக்கின்றன. கோவில் உள்மண்டபத்திலும் சில கல்தூண்களில் புத்தவிக்கிரங்கள் இப்போது மிருக்கின்றன. இது புத்தர் கோவில் என்பதற்கு மற்றோர் ஆதாரமிருக்கிறது. அஃதாவது இக்கோவில் மேல்புறம் வீதிக் கடைசியிலிருந்து வரும் ஏரிக்கு புத்தேரி என்றும், வீதிக்கு புத்தேரித்தெரு என்றும் பெயர்கள் ஏற்பட்டு இப்போதும் வழங்கி வருகின்றன.
கச்சீஸ்வரர் கோயிலுக்கு நான் சென்று பார்த்தபோது, தூண்களில் மட்டும் புத்தர் உருவங்களைக் கண்டேன். கோபுர அஸ்திவாரத்தில் இருந்த புத்த விக்கிரகங்கள் காணப்படவில்லை. புத்தேரித்தெரு என்று இப்போது வழங்கப்படுகிற தெரு முற்காலத்தில் புத்தர் தெரு என்று வழங்கப்பட்டு அவ்வாறே விக்கிரய பத்திரங்களிலும் எழுதப்பட்டு வந்தன. புத்தேரித் தெருவின் மேற்குச் கோடியில் உள்ள கயிலாசநாதர் கோயில் என்னும் இராஜசிம்மேச்சரம் ஆதியில் புத்தர்கோயிலாக இருக்கவேண்டும் என்பதற்கு அக்கோயிலின் புராண ஆதாரங்களால் யூகிக்கப்படுகிறது.
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் வெளிமதில்:
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் வெளிமதில் சுவரில் சில புத்த விக்கிரகங்கள் பலகைச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மதிற்சுவர் விஜய நகர அரசனை கிருஷ்ணதேவராயரால் 1509இல் கட்டப்பட்டது. பழைய புத்தர் கோயில்களை இடித்து அக்கற்களைக்-கொண்டு இந்த மதிற்சுவர் கட்டப்பட்டது. பழைய புத்தர் கோயில்களை இடித்து அக்கற்களைக் கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்க வேண்டும். அதனால்தான் இப்புத்த விக்கிரகங்கள் இச்சுவரில் காணப்படுகின்றன. காஞ்சி ஏகாம்பர ஈசுவரர் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில் ஒரு புத்த விக்கிரகம் இருக்கிறது. இது பூமியைத் தோண்டியபோது கிடைத்தது. புத்தர் பரிநிர்வாணம் அடையும் நிலையில் உள்ளது போன்ற கற்சிலையொன்று ஏகாம்பர ஈசுவரர் கோவில் மதிற்சுவரின் கீழே வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரத்தில், கச்சிக்கு நாயகர் கோயில் என்னும் புத்தர் கோயில் இருந்தது. அதற்கு மானியமாக செங்கற்பட்டு ஜில்லாவில் உள்ள நாவலூர் கிராமம் விடப்பட்டிருந்தது. இந்தக் கோவில் இப்போது காணப்படவில்லை. காஞ்சி, கருக்-கினில் அமர்ந்தாள் கோயில் என்னும் கோயிலில் இரண்டு புத்தச்சிலைகள் உள்ளன. அவை, முன்பு காஞ்சிமேட்டுத் தெருவில் இருந்தனவாம். காமாட்சியம்மன் கோயில் ஆதியில் பவுத்தரின் தாராதேவி ஆலயம்
இவ்வாலயத்தில் பல புத்த விக்கிரங்கள் இருந்தன. அவைகளில், 6 அடி உயரம் உள்ள நின்ற வண்ணமாக அமைக்கப்பட்ட சாஸ்தா (இது புத்தர் உருவம்) என்னும் உருவம் இப்போது சென்னைப் பொருள்காட்சி சாலையில் இருக்கிறது. காமாட்சி அம்மன் குளக்கரையில் இருந்த புத்தச் சிலைகள் இப்போது காணப்படவில்லை. இக்கோயிலில் இருந்த வேறு புத்த விக்கிரங்கள் (கருங்கல் சிலைகள்) சில ஆண்டுகளுக்குமுன் நன்னிலையில் இருந்ததைக் கண்டேன். ஆனால் அவை பிறகு துண்டுதுண்டாக உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டேன். இப்போது அவை இருந்தவிடமே தெரியவில்லை. காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில்உள்ள ஒரு தோட்டத்தில் புத்தவிக்கிரகம் ஒன்று இப்போதும் நன்னிலையில் இருக்கிறது. இத்தோட்டத்தில் உள்ள மண்டபத்தைக் கட்டியபோது, அதன் அடியில் சில புத்த விக்கிரகங்களைப் புதைத்து இருக்கிறார்களாம்.
கி.பி.14ஆம் நூற்றாண்டில் இருந்த ஜாவா தேசத்துக் கவிவாணர் ஒருவர், காஞ்சிபுரத்தில் 14 பவுத்தப் பள்ளிகள் இருந்தன என்று கூறியுள்ளார். அந்நூற்றாண்டில், காஞ்சியில், பவுத்தமதத்தையும் வைணவ மதத்தையும் பிரித்தறிய முடியாதபடி இரண்டறக் கலந்திருந்தன என்று தெரிகிறது.
அறவண அடிகள், மணிமேகலை, ஆசாரிய புத்த கோஷர், சுமதி, ஜோதிபாலர், திந்நாக ஆசாரியர், போதிதரும ஆசாரியர், ஆசாரிய தருமபாலர், ஆநந்ததேரர், அநுருத்தர், புத்தாதிக்யர் முதலிய பேர்பெற்ற தேரர்கள் இவ்வூரில் வசித்தவர்கள். இவர்கள் அன்றியும், அன்றியும்,

காஞ்சிபுரத்தில், கி.பி. 9 முதல் 11ஆவது நூற்றாண்டு வரையில் இருந்த சில பவுத்தப் பெரியார்களின் பெயர்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இப்பெயர்கள், பாடலிபுரத்தில் உள்ள பொருள்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ள பவுத்த உருவங்களின் பீடத்தில் நாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளன. இந்தப் பவுத்த விக்கிரகங்கள். கயா ஜில்லாவில் உள்ள குர்கிஹார் என்னும் இடத்தில் இருந்து கிடைத்தன. குர்கிஹார், பண்டைக் காலத்தில் குக்குட பாதகிரி என்னும் பவுத்த இடமாக இருந்தது. இங்கிருந்து கிடைத்த, உலோகங்களால் செய்யப்பட்ட பவுத்த உருவங்களில் 17 உருவங்கள் காஞ்சிபுரத்திலிருந்த பவுத்தப் பெரியவர்களால் அளிக்கப் பட்டவை. அவர்கள் பெயர் வருமாறு:
அம்ருதவர்மன், புத்தவர்மன், தர்மவர்மன், தூதசிம்மன், பிரபாகரசிம்மன், மஞ்சுஸ்ரீ, வீரியவர்மன், புத்தவர்மன் (இவர் காஞ்சியில் இருந்த கந்தகுடியில் இருந்தவர். புத்தர் கோயிலுக்குக் கந்தகுடி என்பது பெயர்). புத்தஞானர், சுகசுகர், விரோசன சிம்ம ஸ்தவிரர் (இவர் காஞ்சிக்கு அருகில் உள்ள நரசிம்ம சதுர்வேதி மங்கலம் என்னும் ஊரில் பிராமண குடும்பத்தில் பிறந்து, வேத வேதாங்கங்களைக் கற்றுணர்ந்து, பின்னர் பிரஞ்ஞசிம்மர் என்னும் பவுத்த குருவின் சீடராகி விரோசன சிம்ம ஸ்தவிரர் என்னும் துறவுப் பெயர் கொண்டவர்) ரகுலவர்மர், சந்திரவர்மர், நாகேந்திரவர்மர், வீரவர்மர், அவ-லோகித சிம்மர் (இவர் கேரள தேசத்திலிருந்து வந்து காஞ்சியில் தங்கியவர்) இவர்கள் எல்லோரும் பவுத்த பிக்குக்கள் என்று தெரிகிறது. இவர்களில் வர்மர் என்னும் பெயரையுடைவர்கள் பல்லவ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும். இவர்கள் கி.பி. 9 முதல்11ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இருந்தவர்.
--------------ஆதாரம்:-நூல்:- "பவுத்தமும் தமிழும்" பக்கம் 51-57 

நன்றி   :  http://thamizhoviya.blogspot.in/2009/09/blog-post_139.html


Comments

Popular posts from this blog

சமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம்

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்

Visit to Anandhur Sammandha vayal Buddha Vihar, Thiruvadanai Block, Ramanathapuram District.