சிவகங்கை சீமையில் தொடரும் தீண்டாமை - உண்மை அறியும் குழுவிடம் கதறிய தலித் மக்கள் எழுத்தாளர்: ப.கவிதா குமார்

சிவகங்கை மாவட்டத்தில் தலித் மக்களுக்கு எதிராக நடைபெறும் தீண்டாமைக் கொடுமைகளின் பின்னணியில் காளையார்கோவில் நிலைய காவல்துறை இருப்பது உண்மை அறியும் குழுவின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மத்திய சமூக நலத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தெரிவித்த பதிலுரையில் இந்தியாவில் உத்தரப்பிரதேசம் மாநிலம் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமையில் முதலிடத்தில் இருப்பதாகவும், 2500 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்தியாவில் தீண்டாமைக்கொடுமை அதிகம் நடைபெறும் 2வது மாநிலமாக தமிழகம் உள்ளதாகவும், 2200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் பெரும்பாலான வழக்குகள் மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
sivagangai dalit
கடந்த 2 ஆண்டுகளில் சிவகங்கை மாவட்டத்தில் தலித் மக்களுக்கு எதிரான தீண்டாமை வன்கொடுமைகள் தொடர்பான 40க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவற்றின் முயற்சியால் வெளிப்பட்டவை தான் இந்த 40 சம்பவங்களும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிக்க சாதி, காவல்துறை அச்சுறுத்தலால் வெளி உலகத்திற்கு வராமல் தலித் மக்களுக்கு எதிரான பல பிரச்சனைகள் மறைக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குகள்
குறிப்பாக, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் காவல்நிலையம், தலித் விரோத நடவடிக்கையில் முதலிடத்தில் இருப்பதாக வந்த தகவலையடுத்து ஒரு உண்மையறியும் குழு கடந்த செவ்வாயன்று நேரடி கள ஆய்வு மேற்கொண்டது. நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான ஆர்.கிருஷ்ணன் தலைமையில் சமூக செயல்பாட்டாளரும், பத்திரிகையாளருமான ப.கவிதாகுமார், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் மாநில நிதிச்செயலாளர் விடுதலை வீரன் ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். சாதி ஆதிக்கவாதிகளால் பாதிக்கப்பட்டவர்களும், காளையார் கோவில் காவல்துறையால் பாதிக்கப்பட்ட பலரும், உண்மையறியும் குழுவிடம் தங்களது வாக்குமூலத்தை அளித்தனர். காந்தி நகர், கண்ணகிபுரம், கலசாங்குடி, மறவமங்கலம், வேளாரேந்தல், ஈசனூர் ஆகிய கிராமங்களில் உண்மை அறியும் குழு கள ஆய்வை மேற்கொண்டது.
செம்பனூர் ஊராட்சிக்குட்பட்ட காந்திநகரில் கடந்த ஜனவரி - 16 ம் தேதி தலித் குடியிருப்புப் பகுதிக்குள் சாதிஆதிக்கவாதிகள் புகுந்து கடுமையான ஆயுதங்களால் தாக்கியதில் காயமடைந்தவர்கள் தங்களது பாதிப்புகளை உண்மையறியும் குழுவிடம் எடுத்துரைத்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காளையார்கோவில் காவல்துறை, பாதிக்கப்பட்ட தலித் மக்கள்மீது குறிப்பாக 4 பெண்கள் உள்ளிட்ட 18 பேரின் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ததைக் கண்ணீருடன் எடுத்துரைத்தனர். அரசால் கட்டித்தரப்பட்ட தங்களது வீடுகளுக்குள் புகுந்து அங்கிருப்பவர்களை மிரட்டி அப்புறப்படுத்த சிலர் முயற்சி செய்வதாகவும், தொடர்ந்து அச்சுறுத்தலின் பிடியில் தாங்கள் வசிப்பதாகவும் எடுத்துரைத்தனர். தங்கள் பொதுபயன்பாட்டிற்கான இடத்தில் ஒருவர் வைத்துள்ள தேநீர்க் கடையில் இரட்டைக் குவளை முறை கடைப்பிடிப்பதையும் எடுத்துரைத்தனர். உடனடியாக தங்கள் பகுதிக்கு புறக்காவல்நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியதுடன், அரசு புறம்போக்கில் உள்ள மயானத்தில் பிணம் புதைப்பதற்கு சாதி ஆதிக்கவாதியினர் எதிர்ப்புத் தெரிவிப்பதையும் கூறினர். இப்பகுதி பெண்கள் இரவு நேரத்தில் கொல்லைப்புறம் போகும் போது அப்பகுதியில் கள்ளிக்குடியைச் சேர்ந்த சிலர் வந்து தொல்லைதருவதாலும் பெரும் அச்சமாக இருப்பதாகப் பெண்கள் தெரிவித்தனர்.
வழிபாட்டு உரிமை மறுப்பு
ஈசனூர் செருவலிங்கம் அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவில் தலித் மக்களை அனுமதிக்காமல், சாதி ஆதிக்கவாதிகள் காவல்துறை துணையுடன் தடுத்து வருவதாகவும், வருகிற பிப்-19 ம் தேதி மாசி திருவிழாவில் தங்களின் பூர்வீகக் கோவிலில் தங்களது வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று தலித் மக்கள் ஆய்வுக்குழுவினரிடம் தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும் தங்களை வழிபாடு நடத்தவிடாமல், மாவட்ட நிர்வாகத்தினர், 144 தடை விதித்து விடுவதாகவும், இதை சாதி ஆதிக்கவாதிகள் பயன்படுத்தி புரவி எடுப்பை நடத்தி வருவதையும் சுட்டிக்காட்டினர்.
தாக்குதல் - கொள்ளை பாதிக்கப்பட்டவர் மீதே வழக்கு
வேளாரேந்தல் கிராமத்தில் பொதுசுடுகாட்டை தலித்மக்கள் பயன்படுத்தவிடாமல் தடுத்து தீண்டாமையைத் தொடர்ந்து சிலர் கடைபிடித்துவருகின்றனர். இதைத் தட்டிக்கேட்ட அக்கிராமத்தைச் சேர்ந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மு.திருநாவுக்கரசு உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அவர்களது குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்தி, அவர்கள் வீடுகளில் இருந்த 55 ஆயிரம் ரூபாய், 13 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடந்த மூன்று வருடங்களாக சிவகங்கை மாவட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்ற தகவலையும் பாதிக்கப்பட்டவர்கள் உண்மை அறிவும் குழுவிடம் எடுத்துரைத்தனர். பாதிக்கப்பட்டவர்கள் மீதே காளையார்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஊரை விட்டு விரட்டுதல்
மறவமங்கலம் இந்திராநகரில் வசித்து வந்த ஒரு தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவியை கேலி செய்ததைத் தட்டிக் கேட்ட அவரது தாயார் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் ரெஜினா குடும்பம் ஊரை விட்டே தற்போது துரத்தப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ரெஜினா குடும்பத்தினர் மீதே காளையார்கோவில் காவல்துறை கொலைமுயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் பொய்வழக்குகளைப் பதிவு செய்துள்ளதை கண்ணீருடன் பாதிக்கப்பட்டவர்கள் உண்மை அறியும் குழுவிடம் எடுத்துரைத்தனர். காஞ்சிப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் சேகர் மீது சாதி ஆதிக்கவாதிகள் தாக்குதல் நடத்தியதுடன், அவரது வீட்டையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, பாதிக்கப்பட்ட சேகர் மீதே கொலைமுயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இது போன்ற பல சம்பவங்களில் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் உண்மை அறியும் குழுவிடம் புகார் மனுக்களை அளித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியரிடம் புகார்
பாதிக்கப்பட்டவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தலித் மக்களுக்கு விரோதமாகச் செயல்படும் காளையார்கோவில் காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இதுவரை அந்த காவல்நிலையத்திற்குட்பட்ட தலித் வன்கொடுமை வழக்குகளில் காவல்துறை நடந்து கொண்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் முனுசாமியை சந்தித்து உண்மை அறியும் குழு வலியுறுத்தியது. சிவகங்கையில் நடைபெற்று வரும் தலித் விரோத நடவடிக்கைகள் குறித்த ஆய்வறிக்கையை தமிழக அரசு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆகியவற்றிற்கு அனுப்பப்படும் என்ற தகவலையும் ஆட்சியரிடம் குழு தெரிவித்தது. இந்த ஆய்வில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் மு.கந்தசாமி, விவசாய சங்க மாவட்டச் செயலாளர் தண்டியப்பன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
Thanks to : http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/27834-2015-02-09-05-38-35

Comments

Popular posts from this blog

சமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம்

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்

Visit to Anandhur Sammandha vayal Buddha Vihar, Thiruvadanai Block, Ramanathapuram District.