தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சவால்விடும் துணிச்சல் இந்துக்களுக்கு இல்லை – II


          










 இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின்படி, ஒவ்வொரு மதவழிப்பட்ட சமூகமும் தனக்கே உரிய அரசியல் பாதுகாப்புகளைப் பெற உரிமை பெற்றுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் தற்போதுள்ள நிலையில் – முஸ்லிம்களும், கிறித்துவர்களும் அனுபவிக்கும் அரசியல் உரிமைகளுக்கு இணையாக அனுபவித்து வருகின்றனர். தங்களுடைய மத நம்பிக்கைகளை அவர்கள் மாற்றிக் கொண்டால், அந்த மாற்றமானது இதுவரை இல்லாத எந்தவொரு அரசியல் உரிமைகளையும் அவர்களுக்கு பெற்றுத்தரப் போவதில்லை. அவர்கள் மதம் மாறவில்லை என்றால், ஏற்கனவே பெற்றிருக்கும் அரசியல் உரிமைகளை அவர்கள் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியும். ஆதலால், அரசியல் ஆதாயத்திற்கும் மதமாற்றத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்தக் குற்றச்சாட்டானது, உண்மையைப் புரிந்து கொள்ளாமல் வீசப்பட்ட மோசமான குற்றச்சாட்டாகும்.
இரண்டாவது ஆட்சேபனையானது, அனைத்து மதங்களும் ஒரே விஷயத்தையே கற்பிக்கின்றன என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தக் கோட்பாட்டிலிருந்து ஒரு முடிவுக்கு வரப்படுகிறது : அதாவது அனைத்து மதங்களும் ஒரே விஷயத்தை கற்பிப்பதால், ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்குச் செல்ல விரும்புவதற்கு எவ்விதக் காரணமும் இல்லை என்று வாதிடப்படுகிறது. வாழ்வின் பொருள் என்பது, "நல்லதை'க் கடைப்பிடிப்பதில்தான் அடங்கி யுள்ளது என்று அனைத்து மதங்களும் கருதுவதை ஏற்றுக் கொள்ளலாம். இந்த அம்சம் வரை, இந்தக் கோட்பாட்டுக்கு நம்பகத் தன்மையுண்டு என்பதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால், இந்தக் கோட்பாடு இதற்கு அப்பாலும் சென்று, இதனால்தான் ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்குச் செல்ல விரும்புவதற்குக் தேவை இல்லை என்று அழுத்தமாகக் கூறும் பொழுது, அது தவறான கோட்பாடாகி விடுகிறது.
வாழ்வின் பொருள் என்பது, நல்லதைக் கடைப் பிடிப்பதுதான் என்று கற்பிக்கும்பொழுது, அனைத்து மதங்களும் ஒன்று போலவே தோன்றும். ஆனால், "நல்லது என்பது எது?' என்ற கேள்விக்கு விடையளிக்கும்பொழுதுதான் – மதங்கள் ஒரே மாதிரியான பதிலை அளிப்பதில்லை. இதில் அவை நிச்சயமாக மாறுபடுகின்றன. சகோதரத்துவம் நல்லது என்று ஒரு மதம் கருதுகிறது; மற்றொரு மதமோ சாதியும் தீண்டாமையும் நல்லவை என்று கூறுகிறது.
இத்தகைய ஊசலாட்டங்கள் தவிர, நல்லது என்று தாம் நினைப்பவற்றை மேலும் வளரச் செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் மதங்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. வன்முறையை வலியுறுத்தக்கூடிய மதங்கள் இல்லையா? அகிம்சையை வலியுறுத்தக்கூடிய மதங்கள் இல்லையா? இந்த அம்சங்களை எல்லாம் வைத்துப் பார்க்கும்பொழுது, அனைத்து மதங்களும் ஒரே மாதிரியானவை என்றும், ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்குப் போக விரும்புவதற்கு எவ்விதக் காரணமும் இல்லையென்றும் எப்படி கூற முடியும்?
இரண்டாவது ஆட்சேபனையைக் கிளப்புவதன் மூலம் ஓர் இந்து, இந்து மதக் கோட்பாடுகளின் தகுதிகள் எவ்வாறானவை என்று பரிசீலிப்பதை தவிர்க்கவே முயற்சி செய்கிறார். மதம் மாறுவது தொடர்புடைய கருத்து மோதலில், இந்து கோட்பாடுகளில் என்ன தவறு இருக்கிறது என்று கூறும்படி கேட்டு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு சவால் விடுவதற்கு எந்த இந்துவிற்கும் துணிச்சல் இல்லை.
இந்து எனப்படுபவர் மதங்களை ஒப்புநோக்கிப் பார்க்கும் அறிவியல் அறிவின் கீழ் தஞ்சம் புகவே செய்கிறார். மதங்களை ஒப்புநோக்கிப் பார்க்கும் அறிவியல் என்பது, திருத்தூதுவர்களால் வெளிப்படுத்தப்பட்ட மதங்கள் என்பனவற்றின் அகந்தையான கூற்றுகளை உடைத்தெறிந்துவிட்டது; திருத்தூதுவர்களால் வெளிப்படுத்தப்பட்ட தங்கள் மதங்கள் மட்டுமே உண்மையானவை என்றும், அவ்வாறு திருத்தூதுவர்களால் வெளிப்படுத்தப்படாத பிற மதங்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் அவை உரிமை கொண்டாடுவதை அது தகர்ந்தெறிந்துவிட்டது.
ஓர் உண்மையான மதத்தைப் போலியான மதத்திலிருந்து பிரித்துப் பார்க்கத் திருத்தூதுவர்களால் வெளிப்படுத்தப்பட்ட மதத்தைக் கொண்டு தான் தீர்மானிக்க வேண்டுமென்பது – மிகவும் ஒருதலைப்பட்சமானது; மிகவும் தான்தோன்றித்தனமானது என்பதைக் கூறியதன் மூலம் மதங்களை ஒப்புநோக்கிப் பார்க்கும் அறிவியல், மதத்தின் லட்சியத்திற்கு ஒருமகத்தான சேவை புரிந்துள்ளது என்பதில் அய்யமில்லை. ஆனால், அந்த அறிவிய லானது அனைத்து மதங்களும் நல்லவைதான் என்றும், அவற்றை ஒன்றுக்கெதிராக மற்றொன்றை வேறுபடுத்திக் காண்பதில் பயன் இல்லை என்றும் கூறுவதன் மூலம் – தனது நற்பெயருக்கு அது இழுக்கு தேடிக் கொண்டுவிட்டது.
முதலாவது சொல்லப்பட்ட ஆட்சேபனை மட்டுமே மிகுந்த கவனத்துடன் ஆராயப்பட வேண்டிய தகுதியைப் பெறுகின்ற ஒரே ஆட்சேபனையாகும்.
– தொடரும்
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 405)
Thanks : http://www.keetru.com/index.php/2014-03-08-04-41-26/2014-03-14-11-17-85/15802--ii-sp-1619763767

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் எழுத்தாளர்: அ.ஜெகநாதன்