வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள்

வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள்
நின்பால் பொறுப்பரியனகள்பேசில் போவதே நோயாகி
குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமம் கண்டாய் அரங்கமாநகருளானே!

திருவரங்கப் பெரும் கோயிலில் அருள்கின்ற பெருமானே! உனது பெருமையை மற்றவர்கள் கூறுவதைப் பொறுக்காமல், அதை வெறுத்து இந்த மொட்டை அடித்த சமணர்களும், உனது அருளை அறியாத பாக்கியமில்லாத பௌத்தர்களும், உன்னைப் பற்றி பொறுக்கமுடியாத பல வார்த்தைகளைத் தொடந்து கூறுவாராகில் - ஒன்று, அந்தச் சொற்களைக் கேட்டு நான் உயிர் விடவேண்டும், அல்லது, உன்னை அவதூறு பேசுவார்களின் தலையை அப்போதே அறுத்துத் தள்ளுவதே தர்மம்,

இந்தப் பாட்டைப் பாடியவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார். இந்தப்பாடல் நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தில் இன்றும் திருவரங்கக்கோயிலில் மங்களாசாஸனப் பாடலாகப் பாடப்படுகிறது. திருத்தொண்டரடிப்பொடியாழ்வார் சாதாரணமான பிராம்மண குலத்தில் பிறந்து, பூக்கள் கொய்து அரங்கனுக்கு மாலை செய்து, அவன் அருள் பெற்று, அவனையே ஆழ்ந்து ஆழ்ந்து தோய்ந்து பாடிய பாடல்களில் மேலே கண்டதும் ஒன்றாகும்.

பூக்களைக் கொய்யும் கையால் வாளெடுத்து சமண பௌத்தவாதிகளை அவர்கள் நாத்திகம் பேசுவதாலேயே அவர்கள் கழுத்தை நறுக்கிக்கொன்றுவிட வேண்டுமென ஏன் பாட வேண்டும்? நாத்திகம் பேசுவது பாரதத்தில் சாதாரணமான செயல்தான். சமணர்களின் கொள்கையே நாத்திகம்தான் என்கிறபோது அதை ஏன் எதிர்ப்பானேன். கண்டும் காணாமல் போய் தம் வேலையான பகவானை மட்டும் பிரார்த்தித்துப் போய்க்கொண்டிராமல் இப்படி வீராவேசமாய் ஒரு அப்பாவிப் பிராம்மணர், அதுவும் பிற்காலத்தில் ஆழ்வாராக அடையாளம் காட்டப்படுபவர் இப்படி பாடலாமா.. அவருக்கு ஏன் பொறுமை போகவேண்டும். உடனே போய் அவன் கழுத்தை நறுக்கிக் கொன்றால் என்ன என்று ஏன் ஆவேசப்படவேண்டும்?

இதற்குத் தகுந்த பதில்கள் அந்தக் காலகட்டத்திலிருந்தே உரையெழுதப்பட்டு வெளிவந்த ஆச்சாரிய ஆழ்வார் பாசுர உரைகளில் கிடைக்கிறது.

இந்தப் பாடல் சில வரிகளுக்கு ஆச்சாரிய விளக்க உரை கீழே தரப்படுகிறது:

சமணர் முண்டர்: மொட்டையடித்துள்ள சமணர்கள்

வெறுப்போடு: எப்படிப்பட்ட வெறுப்பு - திருவிழா நாட்களில் எம்பெருமான் வீதிகளில் வரும்போது அதனை நிறுத்துவதற்காக இவர்கள் தூக்குப் போட்டுக் கொண்டு சாவார்கள். (அப்படி திருவீதியில் ஒருவன் சவமானால் பெருமாள் திருவீதி எழுந்தருளுவது நின்று போய் உலா இல்லாமலேயே வந்த வழியே திரும்பி கோயிலுக்குள் எடுத்துச் செல்ல வேண்டியதுதான்) எம்பெருமான் எழுந்தருளும்போது திருச்சின்னம் என்னும் வாத்திய ஒலி கேட்டால் அது ஏதோ மரண வீட்டு ஒலி போல கேட்டு, தரையிலும் சுவற்றிலும் தம் மொட்டை மண்டையை முட்டிக்கொண்டு ரத்தம் வர நிற்பாராம்).

ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டில் திருவரங்கப் பெரிய கோயில் என்றல்ல, எல்லாக் கோயில்களிலும் இதுதான் நிலை. தெய்வத்தின் புகழ் பாடக் கேட்காமல் செவியை மூடிக்கொண்டு அலறும் அவர்கள் நிலையை சற்று நாம் கற்பனையாக மனக் கண்ணில் பார்த்தோமேயானால், இந்தக் கால கட்டத்தில் வேடிக்கையாக இருக்கும். ஆனால் இந்தக் காட்சி அந்தக் கால கட்டத்தில் நிதர்சனம். இன்னொன்று இப்படி தம்மைத் தாமே தற்கொலை செய்து தியாகம் செய்வோரை எல்லாம் சமண மதக் குருக்கள் கைவிடவில்லை. அவர்களுக்கு ஆங்காங்கே சமாதி எழுப்பித்து ஆராதனை செய்து, அவர்கள் தியாகங்கள் மிகப் பெரிதாகப் போற்றப்பட்டன. இவர்கள் தியாகம் பெரிதாக்கப்படும்போதெல்லாம் மற்ற சமணர்கள் கூட அவர்களை அறியாமலே இப்படி ஒரு திவ்ய பதவி கிடைக்க அந்தப் பெருமக்கள் எத்தனை புண்ணியம் செய்தனரோ, தாமும் அவர்கள் போல வாழ்ந்து தியாகம் செய்தல் நம் தர்மமன்றோ என்று ஒரு முட்டாள்தனமான போக்கை தம்முள் உண்டாக்கியதோடு மட்டுமல்லாமல் அந்த எண்ணத்தை சமண மத குருமார்கள் நன்றாகவே தமது மத வளர்ச்சிக்காக ஊட்டி வளர்த்தனர்.

Comments

Popular posts from this blog

சமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம்

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்

Visit to Anandhur Sammandha vayal Buddha Vihar, Thiruvadanai Block, Ramanathapuram District.