நடுகல் வழிபாடும் தமிழர் நம்பிக்கையும்

கீ

பண்டைத் தமிழரின் வாழ்வியல் பதிவுகளை இவ்வுலகிற்கு உணர்த்திடும் சான்றுகளுள் நடுகற்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடுகற்கள் ஆங்காங்கே கண்டறியப்பட்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடுகல் என்பது வெறும் கல் அல்ல, அது பண்பாட்டின் வெளிப்பாடு, நம்பிக்கை, நன்றிபாராட்டல், வெகுமதி என்றுதான் அதனை அணுக வேண்டியுள்ளது. தமிழர்களின் அறக்கோட்பாட்டிற்குச் சான்று பகர்வதிலும் இது முக்கியப் பங்காற்றுகிறது. அத்தகைய நடுகல் பற்றிய நம்பிக்கையினை விவரிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
செவ்வியல் இலக்கியங்களில் நடுகல் பண்பாடு
'வீரன்கல், வீரக்கல், நடுகல்' எனவும் 'நினைவுத்தூண்' என்றும் இக்கற்கள் அழைக்கப்படுகின்றன. வீரயுகக் காலம் என்று அழைக்கப்படுகின்ற காலங்களில் ஏற்பட்ட போர்களில் விழுப்புண்பட்டு மடியும் வீரனுக்காக, அவனது வீரத்தைப் போற்றுகின்ற வகையிலும், அவனது தியாகத்தினை மதிக்கின்ற வகையிலும் கல் ஒன்றினை நட்டு, அதனை வழிபடுவது தமிழரின் மரபாக இருந்துள்ளதனை செவ்வியல் இலக்கியங்கள் வாயிலாக அறிகின்றோம். இதுவரை தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற நடுகற்கள் பெரும்பாலும் மக்கள் வாழ்கின்ற அல்லது வாழ்ந்ததாக அறியப்படும் ஊருக்கு வெளியில்தான் கண்டறியப்பட்டுள்ளன. ஈமக்காடுகள் உள்ள இடங்களிலும் நடுகற்கள் இருந்துள்ளன. இவை உணர்த்துவது யாதெனின், நடுகற்கள் எடுக்கப்படும் இடங்ளை நோக்குகையில், வீரன் மடிந்த போர்க்களமாகவோ அல்லது அவனைப் புதைத்த இடமாகவோ தான் அனுமானிக்க முடிகின்றது.
nadukalநடுகற்களில் வீரனின் உருவம், பெயர், செயல் போன்ற குறிப்புகள் பெரும்பாலும் இருப்பதைக் காணமுடிகின்றது. இலக்கியத் தரவுகளையும், நடுகற்களில் காணப்படும் உருவங்களையும், எழுத்துக்களையும் ஆராய்கின்றபோது ஆகோள் புரிந்தோ, (ஆநிரை கவரவோ, மீட்கவோ) கொடிய விலங்குகளுடன் போரிட்டோ, பலியாகவோ தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்காக இறக்கும் வீரனுக்கே நடுகல் எழுப்பப்பட்டுள்ளது. தொல்காப்பியர் நடுகல் எடுப்பதற்கான ஆறு நிலைகள் பற்றிக் குறிப்பிடுகின்றார். அவை, காட்சி, கால்கோல், நீர்ப்படை நடுதல், பெரும்படை, வாழ்த்தல் என்பதாகும். இதனடிப்படையில் நோக்குகையில் இவ்வழக்கம் தொல்காப்பியர் காலந்தொட்டே இருந்துள்ளதை அறியலாம்.
“என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்ன
முன்நின்று கல்நின் றவர்” 1

எனப் போரில் இறந்த பகைவர் கல்லாகி (நடுகல்) நின்றதாகத் திருவள்ளுவரும் பதிவுசெய்கின்றார். எனவே நடுகல் மரபு என்பது நீண்ட வரலாற்றுப் பின்புலத்தினைத் தன்னுள் இணைத்துக் கொண்டுள்ளதனை அறியமுடிகின்றது. இன்றைக்கு இராணுவத்தில் பணியாற்றும் வீரன், தீவிரவாதிகளுடனோ, அண்டை நாடுகளுடனோ ஏற்படும் சண்டைகளில் போராடி இறக்க நேரிட்டால் அரசால் வழங்கப்படும் விருதுகள் போல் அன்றைக்கு மக்கள் நடுகற்களை நட்டுக் கௌரவித்தனர்.
“விடுவாய்ச் செங்கனைக் கொடுவில் ஆடவர்
நல்நிலை பொறித்த கல்” 2
கடவுள் குறித்த கோட்பாடுகளும். நம்பிக்கைகளும் தீவிரமடையாத காலங்களில் இனக்குழு மக்கள் நடுகற்களை வழிபட்டுவந்தனர் என்றுணர முடிகின்றது. சங்ககாலச் சிற்றூர் மக்கள் நடுகல்லினைப் போற்றி வணங்கியதைப் புறப் பாடல்கள் வழி அறியலாம். தம் இனத்திற்காக உயிர்துறந்த வீரனுக்குச் செய்யும் மரியாதையாகவும், செய்நன்றி மறவாப் பண்பினையும் இச்செயல் காட்டுகின்றது.

“ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்ததென
கல்லே பரவி அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே” 3
நடுகல்லினை மனிதன் என்று எண்ணிய யானை அதைத் தம் காலால் உதைக்கின்றது. நடுகல் சாயவில்லை மாறாக யானையின் கால்நகம் உடைந்தது என்ற செய்திகளை அறிகின்றோம். போர்க்களத்தில் விழுப்புண்பட்டோர் நடுகல் அருகே வந்து அப்புண்ணைக் கிழித்து உயிர் விடுவர். நடுகல்லை வணங்கினால், மழைவரும், அரசன் வெற்றிபெறுவான், பயிர் செழிக்கும் என்கிற நம்பிக்கைகளும் அக்காலத்தில் மக்களிடையே இருந்தன.
“பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி
மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணிமயிற் பீலிசூட்டி பெயர் பொறித்து
இனி நட்டனரே கல்லும்….” 4
இறந்த வீரனின் பெயரையும் செயலையும் கல்லில் பொறிப்பர். அக்கலுக்கு நீராட்டி, நெய்பெய்து, வாசனைப் புகை காட்டி விளக்கேற்றுவர். அதற்குப் பூச்சொரிவர், மாலை சூட்டுவர், மயிற்பீலி சாத்தி காப்பு நூல் கட்டுவர். ஆட்டுக்கிடாய்களைப் பலியிட்டு துடிப்பறை ஒலிப்பர், எண்ணெய் பூசி கள் படைப்பர், வில், வேல், வாளால் அதனைச் சுற்றி வேலியமைப்பர். இச்செயல்கள் யாவும் நடைபெறுவதற்குக் காரணம், அக்கல்லில் இறந்த வீரனின் சக்தி நிலைகொண்டுள்ளதாக அவர்கள் நம்பினர்.

இறந்த வீரனைப் புதைக்கையில் அவன் பயன்படுத்திய போர்க் கருவிகளையும், புழங்கு பொருட்களையும் புதைகுழியிலிட்டே புதைத்தனர். அண்மைக் காலங்களில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளில் கண்டறியப்பட்ட நடுகற்களின் அருகே, கற்பதுக்கைகளும் அவற்றினுள் கிடைத்த பல உலோகக் கருவிகள், மண்பாண்டங்கள், அணிகலன்களும் இவற்றை மெய்ப்பிக்கின்றன. இறந்தவர்களின் நினைவும், அதுசார்ந்த நம்பிக்கையும் தங்களுக்கு ஆற்றலை வழங்கும் என்ற கருத்தியலின் அடிப்படையிலேயே நடுகல்லினை மக்கள் வழிபட்டிருக்கக் கூடும். பிற்காலங்களில் நடுகல் வழிபாட்டில் ஆடு, கோழி வெட்டிப் பலியிடுவது வழக்கமாகிப் போனது. கல்லுக்குரிய வீரனுக்குப் பிடித்த உணவுகள் படைக்கப்பட்டு வழிபடப்பட்டது. இன்றைக்கும் கிறித்தவ சமயத்தினரிடம் 'நீத்தார் நினைவு நாள் வழிபாடு' எனும் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் கடைபிடிக்கப்படுகின்றது. மறைந்த முன்னோர்க்கு அவர்கள் விரும்பிய பண்டங்களை அடக்கம் செய்த (கல்லறையில்) இடத்தில் படைத்துப் பூமாலை சூட்டி, நறுமணப்புகை காட்டிவழிபடும் வழக்கம் உள்ளது. இதற்கும் நடுகல் வழிபாட்டிற்கும் தொடர்பு உள்ளதை அறியமுடிகின்றது.
“இல்அடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலி ஊட்டி…” 5
“நடுகல் பீலி சூட்டி நார் அரி
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லோ…” 6
“நடுகல் பீலிசூட்டி துடுப்படுத்து
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்…” 7
போன்ற சங்கப் பாடல் வரிகள் நடுகல் வீரனுக்கு விருப்பிய பண்டங்களை படையல் இட்டு வழிபட்டதை விவரிக்கின்றன. படைக்கப்பட்ட பண்டங்களை வீரனின் ஆவி ஏற்றுக்கொள்வதாகவும், அதனால், வெற்றியும் விரும்பியது கிட்டும் என்று மக்கள் நம்பியதை இதன்வாயிலாக உணரமுடிகின்றது.
காலங்கலமாக தமிழர்களிடையே வழங்கப்பட்டு வரும் மரபுகளும் நம்பிக்கைகளும் பண்பாடுகளைப் பறைசாற்றுவனவாகும். அவற்றில் அதீத கற்பனையும், மூடநம்பிக்கைகளும் இருந்த போதிலும், அவை தமிழ்ப் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்தவை என்பதையும் நாம் உணர வேண்டும்.
குறிப்புகள்:
(குறள் -திருக்குறள், அகம் -அகநானூறு, புறம் -புறநானூறு, மேலது - மேற்சுட்டிய நூல்)
1. குறள் - 771
2. அகம் - 179: 7-8
3. புறம் - 335: 9-12
4. மேலது - 264: 1-4
5. மேலது - 329: 1-2
6. மேலது - 232: 3-4
7. அகம் - 35 : 8-9
- முனைவர் ஆ.பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி - 0
Thanks to : http://www.keetru.com/index.php/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/27835-2015-02-09-06-07-20

Comments

Popular posts from this blog

Visit to Anandhur Sammandha vayal Buddha Vihar, Thiruvadanai Block, Ramanathapuram District.

சமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம்

Dr.M.Velusamy and Ambedkar Youth Sangam, Aadhavan Nagar, Vellore Village, Santhavasal Post