தீண்டாமையைக் கடைபிடித்த முகமதியர்கள்!


நான் ஒப்புக் கொண்டால் ஒரு சுற்றுலா செல்ல விரும்புவதாக, எங்கள் இயக்கத்தின் சகதோழர்கள் சிலர் 1934இல் தெரிவித்தார்கள்; நானும் ஒப்புக் கொண்டேன். வெரூலில் உள்ள புத்தமதக் குகைகளையும் நமது சுற்றுப்பயணத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. நாசிக்குச் சென்று மற்றவர்களுடன் நான் சேர்ந்து கொள்வது என்று ஏற்பாடு ஆயிற்று. வெரூல் செல்ல நாம் அவுரங்காபாத் செல்ல வேண்டும். அய்தராபாத் மேதகு நிஜாம் அவர்களின் மகமதிய சமஸ்தானத்தின் ஆளுமைக்குட்பட்ட ஒரு நகரம் அவுரங்காபாத்.
அவுரங்காபாத் செல்லும் முன் தவுலாபாத் என்னும் மற்றொரு நகரத்தை நாம் கடக்க வேண்டும்; இதுவும் நிஜாமின் அய்தராபாத் சமஸ்தானத்தைச் சேர்ந்தது. தவுலா பாத் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நகரம்; புகழ் பெற்ற இராம்தியோ ராய் என்ற இந்து மன்னரின் தலைநகராக அது ஒரு காலத்தில் விளங்கியது. தவுலாபாத் கோட்டை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நினைவுச் சின்னம் என்பதால், அப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதைக் காணத் தவறுவதில்லை. அதன்படி தவுலாபாத் கோட்டையைப் பார்ப்பது என்பது எங்கள் பயணத் திட்டத்திலும் சேர்க்கப்பட்டது.
சில சுற்றுலாக் கார்களையும் பேருந்துகளையும் நாங்கள் வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். நாங்கள் மொத்தம் 30 பேர் இருந்தோம். நாங்கள் நாசிக்கில் இருந்து புறப்பட்டு அவுரங்காபாத் செல்லும் வழியில் உள்ள யியோலாவுக்குச் சென்றோம். எங்களது சுற்றுப்பயணத்தை நாங்கள் வேண்டுமென்றே வெளிப்படையாக அறிவிக்கவில்லை. நாட்டின் புறநகர்ப் பகுதிகளில் தீண்டத்தகாத மக்கள் எதிர்கொள்ள வேண்டிய இடையூறுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் யார் என்பது வெளியில் தெரியாதவாறு பயணம் செய்ய விரும்பினோம். நாங்கள் தங்குவது என்ற முடிவு செய்த இடங்களில் இருக்கும் எங்கள் மக்களுக்கு மட்டும் நாங்கள் எங்கள் பயணத் திட்டத்தைத் தெரிவித்திருந்தோம். அதனால் நிஜாம் சமஸ்தானத்தில் பல கிராமங்களை நாங்கள் கடந்து சென்றபோது எங்கள் மக்கள் எவரும் வந்து எங்களைச் சந்திக்கவில்லை. ஆனால் நாங்கள் வருகிறோம் என்று தவுலாபாத் நண்பர்களுக்குத் தெரிவித்து இருந்ததால், எங்களை எதிர்பார்த்து அவர்கள் நகரின் வாயிலில் நின்று கொண்டிருந்தனர். வண்டியிலிருந்து இறங்கி, தேநீரும் சிற்றுண்டியும் அருந்திவிட்டு, பின்னர் கோட்டையைக் காணச் செல்லலாம் என்று அவர்கள் கூறினார்கள். எங்களுக்கு அப்போது தேநீர் மிகவும் தேவையாக இருந்தபோதும், இருட்டும் முன் கோட்டையைக் காண, போதிய நேரம் தேவை என்று கருதியதால் அதனை நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் உடனே கோட்டைக்குப் புறப்பட்ட நாங்கள் திரும்பி வரும்போது தேநீர் அருந்துவதாக அவர்களிடம் கூறினோம். அதன்படி எங்கள் ஓட்டுநர்களை விரைந்து செல்லும்படி கூறினோம்; கோட்டை வாயிலுக்குச் சில நிமிடங்களில் நாங்கள் வந்து சேர்ந்தோம்.
அந்த மாதம் மகமதியர்களுக்குப் புனிதமான ரம்ஜான் மாதமாக இருந்தது. கோட்டை வாயிலுக்கு எதிரில் விளிம்பு வரை நீர் நிறைந்த ஒரு குளம் இருந்தது. அதனைச் சுற்றி ஒரு கல்நடைபாதை இருந்தது. பயணத்தின்போது எங்கள் உடைகளும், உடலும், முகமும் தூசு படிந்து அழுக்காகி இருந்தபடியால், நாங்கள் முகம் கழுவிக் கொள்ள விரும்பினோம். அதிகமாக யோசனை செய்யாமல், எங்களில் சிலர் அந்தக் குளத்தின் கரையில் நின்று கொண்டே தங்களின் முகம், கை, கால்களைக் கழுவிக் கொண்டனர். பின்னர் நாங்கள் கோட்டை வாயிலுக்குச் சென்றோம். கோட்டையினுள் ஆயுதந்தாங்கிய இராணுவ வீரர்கள் இருந்தனர். பெரிய கதவுகளைத் திறந்து அவர்கள் எங்களை உள்ளே செல்லவிட்டனர். கோட்டையினுள் செல்வதற்கு அனுமதி பெற என்ன செய்ய வேண்டுமென்று நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தபோது, எங்களுக்குப் பின்னாலிருந்து, அந்தத் தீண்டத்தகாதவர்கள் குளத்தை அசுத்தப்படுத்தி விட்டார்கள் என்று கத்திக் கொண்டு நரைத்துப் போன தாடி கொண்ட ஒரு வயது முதிர்ந்த மகமதியர் வந்தார். உடனே அங்கிருந்த மகமதிய இளைஞர்கள், முதியவர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து கொண்டு எங்களைத் திட்டத் தொடங்கினர். "தீண்டத்தகாதவர்களுக்கு மிகவும் திமிராகி விட்டது. தங்களின் இழிந்த ஜாதியையும், தாங்கள் அடங்கி ஒடுங்கி இருக்கவேண்டும் என்பதையும் அவர்கள் மறந்துவிட்டார்கள். அவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்" என்று எங்களை அவர்கள் பயமுறுத்துவது போல் பேசிக்கொண்டே போனார்கள்.
நாங்கள் வெளியூர்க்காரர்கள் என்றும், உள்ளூர்ப் பழக்க வழக்கங்கள் பற்றி எங்களுக்குத் தெரியாது என்றும் நாங்கள் கூறினோம். அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த உள்ளூர்த் தோழர்கள் மீது அவர்கள் கோபம் திரும்பியது. இந்தக் குளத்தைத் தீண்டத்தகாதவர்கள் பயன்படுத்த முடியாது என்று நீங்கள் ஏன் இந்த வெளியூர்க்காரர்களுக்குக் கூறவில்லை என்ற கேள்வியை அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். நாங்கள் குளத்துக்குப் போனபோது அவர்கள் அங்கே வந்தே சேரவில்லை. எங்கள் தவறு அல்ல என்று அவர்கள் மறுப்புத் தெரிவித்தார்கள். எதையும் கேட்காமல் செய்தது எங்கள் குற்றம்தான் அது. ஆனால் மகமதியர்கள் எனது விளக்கத்தைக் கேட்கத் தயாராக இருக்கவில்லை. எங்களை அவர்கள் தொடர்ந்து இழிவான சொற்களில் திட்டிக்கொண்டே இருந்தது எங்களை வெறுப்படையச் செய்தது. வெகு எளிதாக அங்கே கலகம் ஏற்பட்டு அதனால் மரணம் கூட சம்பவித்திருக்க இயலும். என்றாலும் நாங்கள் ஒருவாறு எங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டோம். எங்களது சுற்றுப்பயணம் முடிவுக்கு வந்துவிடும் என்பதால் எந்தக் குற்றவியல் வழக்கிலும் சிக்கிக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை.
ஒவ்வொருவரும் அவரவர் மதத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று அங்கிருந்த ஒரு மகமதிய இளைஞர் கூறிக் கொண்டே இருந்தான். ஒரு பொதுக் குளத்திலிருந்து தீண்டத் தகாதவர்கள் தண்ணீர் எடுக்கக் கூடாது என்பதையே அவன் குறித்துக் கூறினான். எனது அமைதியை இழந்த நான் அவனிடம் கோபமான குரலில், அதுதான் உன் மதம் உனக்குப் போதிக்கிறதா? ஒரு தீண்டத்தகாதவன் முஸ்லிமாக மாறி விட்டால், இக் குளத்திலிருந்து அவன் தண்ணீர் எடுப்பதை நீ தடுப்பாயா? என்று கேட்டேன். இந்த நேரடியான கேள்விகள் அந்த மகமதியர்களைப் பாதித்தன. எந்தப் பதிலும் அளிக்காமல் அவர்கள் அமைதியாக நின்றனர். காவல்காரரிடம் திரும்பிய நான் கோபமாகவே கேட்டேன், கோட்டைக்குள் நாங்கள் போக முடியுமா, முடியாதா என்று சொல். போகமுடியாது என்றால் இங்கே நின்றுகொண்டிருக்க நாங்கள் விரும்பவில்லை என்று கேட்டேன். என் பெயரைக் கேட்ட அவர், நான் ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்ததை எடுத்துக் கொண்டு கோட்டைக் கண்காணிப்பாளர் அறைக்குச் சென்று பின்னர் திரும்பி வந்தார். கோட்டைக்குள் போகலாம் என்று எங்களிடம் கூறிய காவலர், கோட்டைக்குள் எந்த இடத்தில் இருக்கும் தண்ணீரையும் நாங்கள் தொடக்கூடாது என்று கூறினார். அதை நாங்கள் மீறிவிடாமல் இருக்க, எங்களுடன் ஒரு ஆயுதந்தாங்கிய வீரர் அனுப்பப்பட்டார்.
ஓர் இந்துவுக்குத் தீண்டத்தகாதவர் எவ்வாறு ஒரு பார்சிக்கும் தீண்டத்தகாதவர் ஆகிறார் என்பதற்கு நான் ஓர் எடுத்துக்காட்டு அளித்திருந்தேன். இப்போது இந்த நிகழ்ச்சி ஓர் இந்துவுக்குத் தீண்டத்தகாதவர் ஒரு மகமதியருக்கும் தீண்டத்தகாதவரே என்பதைக் காட்டுகிறது.
----------------------
"விசாவுக்காக காத்திருக்கிறேன்" என்னும் நூலிலிருந்து டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் நினைவலைகள் ....

Comments

Popular posts from this blog

Visit to Anandhur Sammandha vayal Buddha Vihar, Thiruvadanai Block, Ramanathapuram District.

சமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம்

Dr.M.Velusamy and Ambedkar Youth Sangam, Aadhavan Nagar, Vellore Village, Santhavasal Post