க.அயோத்திதாசப் பண்டிதரின் நினைவு நூற்றாண்டு (1845-1914)

"இவ்வாரியரென்னும் மிலேச்சர்களோ தங்களை உயர்ந்தசாதி பிராமணர்களென வேஷமிட்டு தங்களது பொய்ப்போதகங்களுக்குக் குட்பட்ட கல்வியற்றக் குடிகளையும் காமியமுற்ற சிற்றரசர்களையும் வசப்படுத்திக்கொண்டு....எதிரடையானவர்களும், பொய் வேசங்களை சகலருக்கும் பறைகிறவர்களுமான பௌத்த தன்ம விவேகிகளைத் தாழ்ந்த சாதிப் பறையர்களெனக் கூறி தங்களை அடுத்தவர்களுக்குங் கற்பித்து அவர்களைத் தலையெடுக்க விடாமல் நசிக்கத் தக்க ஏதுக்களைத் தேடிக்கொண்டு தங்களது பொய் போதகங்களையும் கல்வியற்றக் குடிகளிடம் வலுப்பெறச்செய்து வருகின்றவர்கள்...அரசாட்சிகளையும் தேசக்குடிகளையும் தங்களது பொய் வேசங்களால் வசப்படுத்திக்கொண்டு பௌத்த தன்மங்களை அழிப்பதுடன் பௌத்தர்களைத் தாழ்ந்த சாதிப் பறையர்களெனத் தாழ்த்திப் படுத்துவதற்கு வந்திருக்கின்றார்கள்" - அயோத்திதாசப் பண்டிதர்

ayothidasar 340தலித் மக்கள் மீது சாதி வேறுபாடுகளை, தீண்டாமையை மிகத் தீவிரமாக நடைமுறையில் பின்பற்றிவந்த காலம் அது. பொதுப் பாதைகளைப் பயன்படுத்துவதற்கும், கிணறுகள்-குளங்கள் போன்ற பொது நீர்நிலைகளில், அயோத்திதாசரின் வார்த்தைகளில் சொல்லப்போனால், சுத்த ஜலம் மொண்டு குடிக்கவும்கூட அம்மக்களுக்கு உரிமை இல்லை அப்போது. தீண்டத்தகாதவர்கள் என்று சமூகத்தால் ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டு, நிலமற்ற ஏழைகளாக, அழுக்கு மனிதர்களாக, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருந்த அவர்களது கல்வி நிலை எப்படி இருந்திருக்கும் என்பதற்கு புள்ளி விவரங்கள் கொடுத்துதான் விளக்க வேண்டியதில்லை அல்லவா! ஆதிக்க‌ சாதியினர் நிலபுலங்களில் தலித் மக்கள் பண்ணையாள் என்னும் அடிமைகளாக சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் கிடந்த கொடுமையானதொரு காலத்தில் அச்சமூகத்திலிருந்து அயோத்திதாசப் பண்டிதர் எழுச்சிப் பெற்று விளங்கியுள்ளார். தமிழறிஞர், தத்துவாதி, புலவர்-எழுத்தாளர், அரசியல் சிந்தனையாளர், விமர்சகர், அரசியல்வாதி, பேச்சாளர், சித்த மருத்துவர், சமயப் புரட்சியாளர் போன்ற பன்முக ஆளுமையாய் நம்முன் தோன்றும் அயோத்திதாசர் அம்பேத்கருக்கும் முற்பட்ட தலித் அரசியலுக்கான கருத்தியல் முன்னோடியாகவும் தனித்து நிற்கிறார். குறிப்பாக தமிழ் தலித் அரசியலின் நிறுவனராக விளங்கும் இவரிலிருந்தே தமிழ் தலித் அரசியலும், கருத்தியலும், ஏன் திராவிட அரசியலும்கூட தொடங்குகிறது.

கோயம்புத்தூர், அரசம்பாளையம் என்னும் ஊரில் 1845, மே-20ல் கந்தசாமி தம்பதிக்குப் பிறந்த அயோத்திதாசருக்கு அவரது பெற்றோர்கள் சூட்டிய பெயர் காத்தவராயன் என்பது. போகர் நானூறு, அகத்தியர் இருநூறு, சிமிட்டு இரத்தின சுருக்கம், பாலவாகடன் போன்ற மருத்துவ நூல்களை ஓலைச்சுவடியிலிருந்து அச்சேற்றி நூல்களாக்கிய புலவரான வீ.அயோத்திதாச கவிராஜ பண்டிதர் என்னும் தமது ஆசியரும் குருவுமானவர் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பற்றின் காரணமாக ஆசிரியர் பெயரையே தமது பெயராக மாற்றியமைத்துக்கொண்டார் காத்தவராயன். தமிழ் இலக்கியம், இலக்கணம், பன்மொழிப் புலமை, மருத்துவம் போன்ற கலைகளில் தேர்ந்தவர்களுக்கு பண்டிதர் என்னும் அடைமொழியை வழங்கி கௌரவிப்பது அக்காலத்து வழக்கமாயிருந்துள்ளது. அதன்படி காத்தவராயனான நமது அயோத்திதாசரின் பெயரை அடுத்து வரும் பண்டிதர் என்னும் அடைமொழியும் இவ்வகையில் வந்து சேர்ந்திருக்க வேண்டும். பண்டிதரின் அறிவார்ந்த இவ்வெழுச்சிக்கு அடித்தளமாக அவரது தமிழ் இலக்கிய-சித்த மருத்துவ அறிவுமிகுந்த குடும்பப் பின்னணியே காரணமாக இருந்துள்ளது எனலாம்.

அயோத்திதாசரின் பாட்டனரான கந்தப்பன் அவர்கள் ஆங்கிலேய அதிகாரியான ஆரிங்க்டன் துரை என்பவரிடம் பட்லராக பணிபுரிந்தவர். சித்த மருத்துவராகவும் இருந்த அவர் ஓலைச்சுவடிகளை பரம்பரைச் சொத்துப்போல பாதுகாத்து வந்துள்ளார். தாம் பாதுகாத்து வந்த ஓலைச்சுவடிகளை ஆரிங்க்டன் துரை மூலம் தமிழார்வம் கொண்ட ஐசிஸ் அதிகாரியான எல்லீஸ் துரை அவர்களிடம் சேர்ப்பித்து 1831களிலேயே அவை அச்சேற்றம் பெற்று திருவள்ளுவர் வரலாற்றைப் பேசும் திருவள்ளுவர் மாலை, நாலடி நானூறு ஆகிய நூல்களாக வெளிவரக் காரணமாக இருந்துள்ளார். அயோத்திதாசரின் தகப்பனார் கந்தசாமியும் சித்த மருத்துவராக, பச்சைக் கற்பூரம், பூ, நீலம், சோப்பு போன்ற பொருட்களைத் தயாரித்து விற்பனைச் செய்யும் தொழில் ஆர்வலராகவும் இருந்துள்ளார். ஆங்கிலேய அதிகாரிகளுடனான இவர்களுக்கிருந்தத் தொடர்பு அவர்களது ஆங்கில அறிவுக்கு துணைபுரிந்துள்ளது என்பதுடன் சென்னை தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்குப் பகுதிகளில் வாழ்ந்த நகர வாழ்க்கைச் சூழல் அறிவார்ந்தவர்களின் தொடர்பை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மேற்சொன்ன பின்னணிகளுடன் வாழ்ந்த பண்டிதரின் குடும்பம் பிறப்பினால் ஆதிதிராவிடராக இருந்தாலும் அச்சமூகத்துக்குரிய வறுமையும், ஏழ்மையும், கல்வியறிவற்ற சூழலும் அக்குடும்பத்தைப் பற்றி வாட்டவில்லை.

அயோத்திதாசரின் அரசியல் பணிகள்:

1870களில் 'அத்வைத நந்தா சபா' என்ற அமைப்பைத் தோற்றுவித்து கிறித்துவ பாதிரிமார்களின் மதமாற்ற நடவடிக்கைகளைக் கண்டிக்கும் விதமாகவும், நால்வருண கொள்கையின்படி சமுதாயத்தில் நிலவும் சாதி முரண்பாடுகளை அத்வைதத் தத்துவத்தின் துணையோடு களைய முடியுமா என்று ஆய்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும்கூட 1890 ஆம் ஆண்டு 'திராவிட மகாஜன சபை' என்னும் அமைப்பை நிறுவி நீலகிரி தாழ்த்தப்பட்ட மக்களை அவ்வமைப்பின் கீழ் திரட்டியதிலிருந்துதான் அயோத்திதாசப் பண்டிதரின் தீவிர தலித் அரசியல் பணி துவக்கம் கொள்கிறது. பண்டிதரின் இந்த திராவிட அரசியல் தமிழகத்தில் பார்ப்பனர் அல்லாதோர் இயக்கமாகத் தோற்றம் கொண்ட திராவிட இயக்கம் 1912ல் சி.நடேசனாரிடமிருந்து துவங்குகிறது என்று சொல்லப்படுவதற்கும் முற்பட்டது. 1870களில் ஆதிதிராவிட சங்கங்கள், 1890களில் திராவிட மகாஜன சபை, 1892களில் ஆதிதிராவிட ஜன சபை, 1916களில் ஆதிதிராவிட மகாஜன சபை என்று திராவிட அரசியலை மையமாகக்கொண்ட இயக்கங்கள் தோன்றி இயங்கியிருப்பதுடன் இவை தமிழகத்தில் பேசப்படும் திராவிட அரசியல் இயக்க வரலாற்றுக்கும் முற்பட்டதாகவும் விளங்குகின்றன. இவ்வரசியல் இயக்கங்கள் பண்டிதரின் வழிகாட்டுதல்-பங்களிப்புகளுடன் இயக்கம் கொண்டுள்ளன என்பதை ஞான.அலாய்சியஸ் அவர்களது அயோத்திதாசர் பற்றிய மதிப்பீடுகள் மூலம் அறிய முடிகிறது. தமிழகத்தின் திராவிட அரசியல் இயக்க வரலாற்றின் பக்கங்களில் மேற்சொன்ன இயக்கங்கள் பற்றிய பதிவுகள் தவிர்க்கப்பட்டிருப்பதாக தற்கால தமிழ் தலித் அரசியல் இயக்கங்கள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு திராவிட இயக்க வழித்தோன்றல்கள் என்பவர்களிடமிருந்து உரிய பதில் வெளிவரவில்லை இதுவரைக்கும். கனத்த கள்ள மவுனம்தான் நீடிக்கிறது.

1.12.1891-இல் நீலகிரியில் அயோத்திதாசர் தலைமையில் திராவிட மகாஜன சபையின் முதல் மாநாடு நடந்துள்ளது. அம்மாநாட்டில் பறையர் என்று ஒருவரை அழைத்து இழிவுபடுத்துவதைக் குற்றமாகக் கருதுவதற்கான சட்டம், தாழ்த்தப்பட்ட பிள்ளைகளுக்கு கல்வி வசதி, கல்விக் கற்கும் அப்பிள்ளைகளுக்கு ஊக்கத் தொகை, அவ்வகையில் கல்வி கற்றுத் தேர்ந்தவர்களுக்கு அரசு வேலை, உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தலித் மக்கள் நுழைவதற்கான உரிமை, கிராம முன்சீப் அலுவல்களில் இம்மக்களுக்கு பணி நியமனம், சிறைச்சாலைகளில் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவான வேலைகளை செய்யுமாறு கட்டாயப்படுத்தும் 464-வது சட்டப் பிரிவை நீக்குதல் உட்பட பத்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஆங்கிலேய அரசாங்கத்தாரிடம் கோரவிருக்கும் கோரிக்கைகளுடன் இவற்றையும் சேர்த்துக்கொள்ளுமாறு இந்திய தேசிய காங்கிரஸாருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அயோத்திதாசர் இயற்றியுள்ள இத்தீர்மானங்கள் காங்கிரஸாரால் கண்டுகொள்ளப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க அவரது வகுப்புவாரி பிரதிநிதித்துவ-இடஒதுக்கீடு கொள்கைகள் மற்றும் கல்வி சார்ந்த முன்னோடி தலித் அரசியல் சிந்தனைகள் இங்கு புலப்படுகின்றன.

1892 ஆம் ஆண்டு சென்னை விக்டோரியா மகாலில் நடந்த மகாஜன சபைக் கூட்டத்தில் நீலகிரி திராவிடர் மகாஜன சபை பிரதிநிதியாகக் கலந்துகொண்டார் அயோத்திதாசர். பி.அரங்கையா நாயுடு அவர்களைத் தலைவராகவும், எம். வீர ராகவாச்சாரியார் அவர்களை செயலாளராகவும் கொண்டு ஏரிகள், கிணறுகள், குளங்கள், பொதுச் சாலைகள் ஆகியவற்றின் மராமத்து வேலைகள் குறித்தும், வெளி மாவட்டங்களின் வளர்ச்சி குறித்தும் விவாதிக்க கூட்டப்பட்ட அக்கூட்டத்தில் தம் மக்களுக்கு சைவ-வைணவ ஆலயங்களில நுழைவதற்கு உரிமை கோரினார். அக்கோரிக்கை சபையோரால் ஒட்டுமொத்தமாக மறுக்கப்படவே அதற்கு மாறாக தம் மக்களின் ஏழைப் பிள்ளைகள் கல்வி பயில்வதற்கு இலவச கல்விச் சாலைகள் அமைத்துத் தரவும், தமது கிராமப்புறத்து ஏழை மக்களுக்கு வெறுமனே கிடக்கும் நிலங்களை வழங்குவதற்கு வழிவகை செய்யவும் கேட்டுக்கொண்டார். பண்டிதரின் இவ்விரு கோரிக்கைகளும் சபையோரால் ஏற்கப்பட்டு ஆங்கிலேய அரசுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. ஆங்கிலேய அரசும் உடனடியாக இத்திட்டங்களை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இதன் விளைவாக சென்னை, திருவாங்கூர் உள்ளிட்ட இடங்களில் லோக்கல் ஃபண்டு போர்டு மற்றும் முனிசிபாலிட்டியின் உதவியோடு கல்வி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. வெறுமனே கிடந்த நிலங்கள் கிராமப்புறத்து தலித் ஏழைகளுக்கு வழங்கப்பட பலர் பட்டாதாரர்கள் ஆயினர். இதன் நீட்சியாக 1898களில் எஸ்.எஸ்.ஆல்காட் துரை அவர்கள் நிறுவிய இலவச கல்வி நிலையங்களில் 700க்கும் மேற்பட்ட ஏழை தலித் பிள்ளைகள் கல்வி பயின்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அயோத்திதாசர் ஒரு பௌத்த அந்தணர்:

"சாதிபேதமற்ற திராவிடர்களே இத்தேசத்தின் பூர்வகுடிகளாகும். இவர்கள் பெரும்பாலும் தமிழ் பாஷா விருத்தியைக் கோரி நின்றவர்களாதலின் தென்னாட்டுக்குள் தமிழரென்றும், வடநாட்டார் திராவிடரென்றும் இலங்காத் தீவிலுள்ளோர் இப்பூர்வக் குடிகளை திராவிட பௌத்தர்கள் என்றும் வரைந்திருப்பதுமன்றி வழங்கிக்கொண்டும் வந்திருக்கிறார்கள்" 
-அயோத்திதாசப் பண்டிதர் 

பறையர்கள், ஆதிதிராவிடர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடிகள், தீண்டத்தகாதவர்கள் என்று இந்துக்களால் அழைக்கப்பட்ட தலித் மக்களை பூர்வ குடிகள், திராவிட பௌத்தர்கள், சாதிபேதமற்ற இந்தியர்கள் என்று பழம்பெருமை பேசும் பெயர்களால் அடையாளப் படுத்தினார் அயோத்திதாசர். புத்த தன்மம் நிறைந்திருந்த காலத்தில் சாதி என்ற பதமும் வார்த்தையும் கிடையாது, இன்று பறையர்கள் என்று இழிந்த சாதியாக கருதப்படும் மக்கள் அக்காலத்தில் வரலாற்று வல்லுனர்களாக, வான சாஸ்திர நிபுணர்களாக, பௌத்த தன்ம நெறிமுறைகளை மக்களுக்குப் போதிக்கும் அந்தணர்களாக இருந்துள்ளனர் என்பதை சான்றாதாரங்களுடன் முன்வைக்கிறது அவரது வாதம் "இவ்வாரியரென்னும் மிலேச்சர்களோ தங்களை உயர்ந்தசாதி பிராமணர்களென வேஷமிட்டு தங்களது பொய்ப்போதகங்களுக்குக் குட்பட்ட கல்வியற்றக் குடிகளையும் காமியமுற்ற சிற்றரசர்களையும் வசப்படுத்திக்கொண்டு.. ..எதிரடை யானவர்களும், பொய் வேசங்களை சகலருக்கும் பறைகிறவர்களுமான பௌத்த தன்ம விவேகிகளைத் தாழ்ந்த சாதிப் பறையர்களெனக் கூறி தங்களை அடுத்தவர்களுக்குங் கற்பித்து அவர்களைத் தலையெடுக்க விடாமல் நசிக்கத் தக்க ஏதுக்களைத் தேடிக் கொண்டு தங்களது பொய் போதகங்களையும் கல்வியற்றக் குடிகளிடம் வலுப்பெறச் செய்துவருகின்றவர்கள்.." அயோத்திதாசரின் விவாத வெளியெங்கும் இதுபோன்ற வாதங்கள் திரும்பத் திரும்ப இடம் பெறுவதை அவரை முழுதுமாக வாசிப்பதன் மூலம் அறியலாம். ஒரு சமூகத்துடன் மற்றொரு சமூகம் எவ்வகையிலும் தொடர்புகொண்டு விடாதபடிக்கு சமத்துவமற்ற படிநிலைத் தன்மைக் கொண்டதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இச்சாதி அமைப்பு முறையை அழித்தொழித்து சாதிபேதமற்ற சமுதாயத்தை புத்த தன்ம வழியில் கட்டியெழுப்புவது என்பது அயோத்திதாசரின் கனவாக இருக்கிறது. அவரது பௌத்த மீட்டுருவாக்கம் என்ற செயல் திட்டத்தை புத்த தன்மம் நிறைந்த காலத்தை மீட்டெடுத்து புரட்சிகரமான முறையில் மறுநிர்மாணம் செய்வதற்கான செயல் திட்டமாக புரிந்துகொள்வதுவே நியாயமானது.

1898-இல் பௌத்த சமய ஈடுபாடு கொண்டிருந்த எச்.எஸ்.ஆல்காட் துரை அவர்களை நாடுகிற அயோத்திதாசர் தமது மக்களுக்கும் பௌத்த நெறிமுறைகளுக்குமான ஆதி உறவு குறித்து எடுத்துரைத்து தாமும் தம்முடன் சிலரும் பௌத்தம் தழுவ ஆர்வமாயிருப்பதாக தெரிவிக்கிறார். அயோத்திதாசரையும் அவருடன் சிலரையும் இலங்கை அழைத்துச் செல்கிறார் ஆல்காட். கொழும்புவில் தலைமை குருக்களான சுமங்களா மற்றும் தர்மபாலா ஆகியோர் மூலம் பஞ்சசீலம் பெற்று பௌத்தம் ஏற்கிறார் பண்டிதர். அங்கிருந்து சென்னை திரும்பிய பண்டிதர் "தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கம்" நிறுவி அதுமுதல் சமயப் பரப்பு பணியில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்கிறார். தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளிலும் பெங்களூர், கோலார் தங்க வயல், ஹ¥ப்ளி போன்ற கர்நாடகப் பகுதிகளிலும் தொடர்ந்த சமயப் பணி பர்மா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அயல் நாடுகளுக்கும் விரிவடைந்துள்ளது. இக்காலக்கட்டத்தில் தான் "புத்தர் என்னும் இரவு பகலற்ற ஒளி" என்னும் அரிய நூலை எழுதி வெளியிடுகிறார் அயோத்திதாசர்.

புத்த தன்மம் நிறைந்திருந்த காலம் குறித்து அயோத்திதாசர் இவ்வாறு காட்சிப்படுத்துகிறார்: "சாதி பேதமற்ற திராவிடர்கள் எதுவரை சுகநிலை பெற்றிருந்தார்கள் என்னும் காலவரை: மகத நாட்டரசர்கள் அசோக சக்கிரவர்த்தி, மணிவண்ணன், சீவகன் முதலிய அரசர்கள் ஆளுகைவரையிலும் யாதொரு குறைவுமின்றி சகல சுகங்களையும் அனுபவித்துக்கொண்டு வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கங்களில் நிறைந்திருந்தபடியால் இத்தேசம் முழுதும் சீரும், சிறப்பும், அமைதியும், ஆற்றலும் பெற்றிருந்தது...இந்திய தேசத்தில் பூர்வக்குடிகள் யாவரும் சாதிபேதம் என்னும் ஒற்றுமெக் கேடில்லாமல் வித்தையிலும், விவசாயத்திலும், ஈகையிலும், சன்மார்க்கத்திலும் சுகசீவிகளாக வாழ்ந்து வந்தார்கள்... ஆனந்த வாழ்க்கையும், நீதிநெறியும், குருபக்தியும் இராஜவிசுவாசமும் ஒருவருக்கொருவர் அன்புடையவர்களாய் மற்ற தேசத்தார் புகழத்தக்க விவேக விருத்தியிற் காலங்கழித்து வந்தார்கள்" இவ்வாறு சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த பௌத்த தன்ம புண்ணிய காலத்தை நம்முன் காட்சிப்படுத்தும் பண்டிதர் "புலியும் பசுவும் ஓர் துறையில் இறங்கி நீரருந்திய தன்ம தேசம் மனிதனோடு மனிதன் இறங்கி நீரருந்துவதற்கு இடமில்லா அதன்ம தேசமகிவிட்டதே" என்று தமது வருத்தத்தைத் தெரிவித்துவிட்டு "புத்த தன்மம் நிறைந்திருந்த காலத்தில் மனுக்களுள் பாஷை பேதங்கள் இருந்ததேயன்றி ஒற்றுமெக்குக் கேடாய சாதி பேதங்களும் மத பேதங்களும் கிடையவே கிடையாவாம்" என்று தமது வார்த்தைகளால் ஒரு சத்திய காலத்தை நம்முன் விரித்துப் போட்டு காட்சிப்படுத்துகிறார்.

இலக்கியப் பணிகள்:

அயோத்திதாசரின் அரசியல்-சமூக-சமயசிந்தனைகள் விரிந்து பரந்துக் காணப்படுவது போலவே அவரது இலக்கியப் பணிகளும் மிகவும் விரிவானவை. 25க்கும் மேற்பட்ட நூலகள், 30க்கும் மேற்பட்ட தொடர் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள்-விமர்சனங்கள், ஓலைச்சுவடிகளுக்கான விளக்க உரைகள், கேள்விகளுக்கான பதில்கள், திருக்குறளுக்கான விளக்கவுரை(திருக்குறளுக்கான விளக்கவுரை முற்றுப்பெறுவதற்குள் பண்டிதர் பரிநிர்வாணம் அடைந்துவிட்டதால் 55 அதிகாரங்களுடன் நின்றுவிட்டது), மருத்துவக் குறிப்புகள் என்று நீளமும் அகலமும் கொண்டது பண்டிதரின் இலக்கியப் பணி. புத்தர் என்னும் இரவு பகலற்ற ஒளி, புத்தரது ஆதி வேதம், இந்திரர் தேசத்து சரித்திரம், நந்தனார் சரித்திரம், வேஷ பிராமண வேதாந்த விவகாரம் உள்ளிட்டு பல நூல்கள் அவரது படைப்புகளுள் முக்கியமானவை. 1907, ஜூன் மாதம் அயோத்திதாசர் தொடங்கிய 'ஒரு பைசாத் தமிழன்' என்ற வாரப் பத்திரிகை அவரது தமிழ் புலமைக்கும் இலக்கியப் பணிக்கும் என்றென்றும் சான்று. வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க அப்பத்திரிகை 1908-ல் 'தமிழன்' என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டு 1914 வரை வாரந்தவறாமல் தொடர்ந்து வெளிவந்துள்ளது. தமிழன் இதழில் கட்டுரைகள், அரசியல் விமர்சனங்கள், வாசகர்களின் கேள்விகளுக்கான பதில்கள் போன்றவை இடம்பெற்றிருந்ததுடன் பௌத்த சமண சமயங்கள் பார்ப்பனியத்தால் வீழ்த்தப்பட்டதும் அச்சமய இலக்கியங்கள் அனல்வாதம்-புனல்வாதத்தால் அழிக்கப்பட்டதுமான கதைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இந்திரர் தேச சரித்திரத்தில் நந்தனார், இராஜேந்திரன், சாம்பவனார், வேஷ பிராமணனான செஷன் இவர்களுக் கிடையிலான உரையாடல்கள் சைவ- வைணவத்துக்கும் சமண-பௌத்தத்துக்குமான மோதல்களையும் விவரிக்கின்றன. இந்துத்துவாவை அடிப்படையாகக் கொண்ட பக்தி இயக்கம்-பக்தி இலக்கியங்களின் திட்டமிட்ட எழுச்சி பௌத்த சமண சமயங்களையும் இலக்கியங்களையும் அழித்தொழித்துவிட்டு இச்சமயங்களின் உயர்ந்த கலாச்சாரங்கள், கலைகளை தன்வயப்படுத்திக்கொண்டு அவற்றுக்கு இந்து சாயத்தை பூசிய 
வரலாற்றை மக்கள் முன் போட்டுடைக்கும் கலகக் குரல் பண்பு அயோத்திதாசரின் இலக்கிய வெளியெங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.

"மகட பாஷை(பாலி)யை ஆதாரமாகக் கொண்டு தோன்றியது ஒன்று சகடபாஷை(சமஸ்கிருதம்)யாம், மற்றொன்று திராவிட பாஷை (தமிழ்.)யுமேயாம். மொழிகளுக்கியல் அட்சரங்களில் நஞ்செழுத்துக்கள் சிலதும், அமுதவெழுத்துக்கள் சிலதும் உண்டென்பதை நாளது வரையில் காணலாம். நஞ்செழுத்துக்களின் செயலைக்கொண்டு திராவிடமென்றும் அமுதவெழுத்துக்களின் செயலைக் கொண்டு தமிழென்றும் வழங்கி வந்தார்கள்" என்பதாக இருக்கிறது பண்டிதரின் திராவிடம்-தமிழ் குறித்த ஆய்வு முடிவு. தமிழை கொடுந்தமிழ், கருந்தமிழ், செந்தமிழ் என்று வகைப்படுத்திய பண்டிதர் மலையாளவாசிகள் வழங்குந் தமிழை கொடுந்தமிழ் என்றும், திருநெல்வேலிவாசிகள் தமிழை கருந்தமிழ் என்றும், சென்னை முதலிய புரவாசிகள் வழங்குந்தமிழை செந்தமிழ் என்றும் வகைப்படுத்தினார். கொடுந்தமிழ், கருந்தமிழ், செந்தமிழ் ஆகிய் இம்மூன்றிலும் நஞ்செழுத்துக்கள் உள்ளதால் இம்முத்தமிழுக்கு திராவிடம் என்னும் பொதுப்பெயர் உண்டாயிற்று என்றார் இத்தமிழறிஞர்.

தமிழ் எழுத்துகள் அச்சுக் கோர்ப்புக்கு எளிமையாகவும் வசதியாகவும் இருக்கும் பொருட்டு, அதே சமயம் பொருள் பிழை நேராத வகையில் எழுத்துகள் குறைக்கப்பட்டு சீர்திருத்தம் செய்யப்படவேண்டும் என்ற நோக்கில் எழுத்துச் சீர்திருத்தத்தை முன் வைத்தார். உதாரணமாக 'பழைய' என்ற சொல்லை 'பழய' என்றும் 'மௌனம்' என்ற சொல்லை 'மவுனம்' என்றும் எழுதினார். அதே போல 'மை' மகர ஐகாரத்தை 'மெய்' என்ற மகர ஏகாரமாக மாற்றியமைத்து சீர்திருத்தம் செய்தார். இதனடிப்படையில் 'நன்மை' என்பதை 'நன்மெய்' என்றும் 'தன்மை' என்ற சொல்லை 'தன்மெய்' என்றும் தமது தமிழன் இதழில் எழுதியும் பின்பற்றியும் வந்தார். தன்மை என்று எழுதுவதைத் தவிர்த்துவிட்டு தன்மெய் என்று எழுதப்படும்போதுதான் அச்சொல் சரியான பொருளை உணர்த்துகிறது என்பதால் அவர் கோரிய சீர்திருத்தமாகும் இது. பண்டிதரின் இவ்வெழுத்துச் சீர்திருத்தம் மற்றபிற தமிழறிஞர்களால் பின்பற்றப் படாமலும் பேசப்படாமலும் போனது என்றாலும் எழுத்துச் சீர்திருத்தம் முன்வைத்தவர் என்ற முறையில் தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் கோரிய தமிழறிஞர்கள் வரிசையில் வீரமாமுனிவருக்கு அடுத்தவராக விளங்குகிறார் அயோத்திதாசர். 

அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள் 1914, மே-5 ஆம் நாள் பரிநிர்வாணம் அடைந்தார். இந்த வகையில் 1914 ஆகிய இந்தாண்டு அவரது நினைவு நூற்றாண்டாக அமைந்துள்ளது. இந்த வேளையில் தலித் கருத்தியலு(Dalit Ideology)க்கு எதிர் கருத்தியலான பார்ப்பனிய கருத்தியலை-அரசியலை அவிழ்த்துக் கொட்டி அம்பலமாக்குதல், தலித் சமூகத்தின் பெருமைமிகு வரலாற்றை சான்றாதாரங்களோடு எடுத்துரைத்தல், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கும் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும் அரசியல் உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் இட ஒதுக்கீடும் கோருதல், சாதி ஒழிப்பு, பௌத்தம் ஏற்பு மற்றும் அச்சமயத்தை மீட்டுருவாக்கம் செய்தல், தீண்டாமைக் குறித்த வரலாற்றுப் பார்வை, பகுத்தறிவு சிந்தனை உள்ளிட்டு அயோத்திதாசரிடம் குவிந்து கிடக்கும் முற்போக்குச் சிந்தனைகளை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். தலித் மக்களின் விடுதலை சார்ந்த சிந்தனைகளில் புரட்சியாளர் அம்பேத்கருக்கும் முற்பட்டவர் பண்டிதர் என்பதோடு இவ்விருவருக்கிடையில் நிலவும் அரசியல் சார்ந்த, சமூகம் சார்ந்த, சமயம் சார்ந்த கருத்தொற்றுமைகளைக் கண்டுணர்ந்து செயல்படுவது நன்மை பயக்கும் இன்றைய தலித் அரசியல்வாதிகளுக்கு. இனி வரும் புரட்சிகரமான தலித் அரசியல் வரலாற்றை முன்னின்று வழிநடத்தும் வல்லமையைத் தன்னுள் கொண்டுள்ளது அயோத்திதாசர் சிந்தனைகள்.

- வெ.வெங்கடாசலம்   நன்றி : http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/26424-2014-5-1845-1914

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் எழுத்தாளர்: அ.ஜெகநாதன்