அயோத்திதாசப் பண்டிதரின் கல்விப் பணிகளும் சிந்தனைகளும்

"கல்வித் துறையின் சட்டங்களும் உத்தரவுகளும் பறையர்கள் மீதும் பிற தாழ்ந்த இனத்தவர்மீதும் எவ்விதத் தடையையும் விதிக்கவில்லை. ஆனால் கட்டுப்படுத்தவே முடியாத நிலையில் சமூக வழக்கத்தால் அவர்கள் பள்ளிகளிலிருந்து வெளியே தள்ளபட்டு அரசின் கல்வி நடவடிக்கைகளினால் விளையும் பலனில் தங்களுக்குரிய பங்கைப் பெறாமல் இருக்கிறார்கள்... பறையர்கள் மத்தியில் கல்வி அதிக அள்வில் பரவலாகும் வரை அவர்களது பொருளாதார நிலையில் உருப்படியான எந்த முன்னேற்றமும் ஏற்படாது..." - சி.ஏ.கால்டன்

இந்தியவாழ் ஐரோப்பிய குழந்தைகளின் கல்வி வசதிக்காக 1815ல் 'பம்பாய் கல்விக் கழகம்' என்ற அமைப்பை நிறுவியது ஆங்கிலேய அரசு. சூரத், தாணா ஆகிய பகுதிகளில் அக்கல்விக் கழகம் பள்ளிக்கூடங்களைத் தொடங்கியதுடன் அப் பள்ளிக்கூடங்களில் உயர்சாதி இந்தியக் குழந்தைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இதன் நீட்சியாக 1820ல் இந்தியப் பிள்ளைகளுக்காக மும்பையில் நான்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. 1822ஆம் ஆண்டு மவுண்ட் ஸ்டூவர்ட் என்பின்ஸ்டன் அவர்கள் பம்பாய் கல்விக் கழகத்தை பம்பாய் சுதேசி கல்விக் கழகம் என்று மாற்றியமைக்கிறார். 1825ல் பம்பாய் அரசாங்கம் தனது சொந்தச் செலவில் மாவட்டத் தலைநகரங்களில் தொடக்கப் பள்ளிகளை அமைக்கிறது; 1840ல் ஒரு கல்விக் குழுமம் உருவாக்கப்படுகிறது; 1855ல் பொது கல்வி இயக்குநர் நியமிக்கப்படுகிறார்.
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் கல்விப் பணிகள் இந்த ரீதியில்தான் துவக்கம் கொண்டு வளர்ச்சி அடைந்துள்ளது. இது போன்ற கல்விப் பணிகளின் தொடர்ச்சியாக 1855 மார்ச் மாதம் மேற்படி கல்விக் குழுமம் கலைக்கப்பட்டப்போது 256 வட்டார மொழிப் பள்ளிகளும் 15 ஆங்கிலக் கல்லூரிகளும் இயங்கி வந்துள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.

ayothidasar 3401813-1855 வரைக்குமான ஆங்கிலேயரின் இந்தியக் கல்விப் பணிகள் அன்றைய அரசாங்கச் செயலாளர் சி.ஏ.கால்டன் 1892ல் சொன்னதுபோல தலித் மக்களை பள்ளிக் கூடங்களை நெருங்க விடாமலும் கல்வியில் அவர்களுக்குரிய பங்களிப்பை வழங்காமலும்தான் வைத்திருந்தது. இந்திய மண்ணில் 1813களில் துவங்கிய ஆங்கிலேயரின் கல்விக் கொள்கை 1855 வரைக்கும் இந்தியாவின் பெரும்பான்மை சமூகங்களுள் ஒன்றான தலித் மக்களுக்குக் கல்வி அளிப்பது குறித்து சிந்திக்கவில்லை. "வெகுஜனக் கல்வி சம்பந்தமாக தனக்குள்ள பொறுப்பை அரசாங்கம் அங்கீகரித்தப்போதிலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களைப் பொருத்தவரையில் அது பெயரளவில்தான் நன்மைத் தந்தது. ஏனென்றால், வெகு ஜனங்களுக்குப் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டாலும் பள்ளிக்கூடங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த குழந்தைகளை அனுமதிக்கும் பிரச்சினை இன்னும் தீர்வு காணப்படாமலேயே இருந்தது" என்ற 1856-57 பம்பாய் ராஜதானி பொதுக்கல்வி இயக்குநர் அறிக்கையையே இதற்கு சான்றாக சொல்லலாம்.
அவர்களது கல்விச் சிந்தனைகள் இங்கு கால்கொண்ட 42ஆண்டுகளுக்குப் பிறகு 1855 ஆகஸ்டு 24ல் அகமத் நகர் தலித் மக்கள் ஒரு விண்ணப்பம் தயாரித்து கல்வி இலாகாவின் பொறுப்பிலிருந்த குழுமத்துக்கு அனுப்பி வைக்கின்றனர். அவ்விண்ணப்பத்தில் தங்களது பிள்ளைகளின் கல்விக்காக ஒரு பள்ளிக்கூடம் தொடங்குமாறுக் கேட்டுக்கொண்டிருந்தனர். அரசாங்கத்தின் கல்வி விதிமுறைகளின்படி ஆசிரியர்களுக்கான சம்பளத்தில் பாதியை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் 30 மாணவர்கள் உட்கார்ந்துப் படிக்குமளவு ஒரு பள்ளிக்கூட அறை கட்டப்பட்டு தயாராக இருப்பதாகவும் சொல்லப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் தொடங்கிய கல்விக் குழுமங்கள் சுயேட்சையாய் நடத்திய பள்ளிக்கூடங்களில் தலித் பிள்ளைகள் அனுமதிக்கப்படாத சூழலில் அகமத் நகர் தலித்துகள் இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளனர் என்பதுடன் அவர்களது வேண்டுகோளை ஏற்று 1855 நவம்பரில் முதன்முறையாக தலித் பிள்ளைகளுக்கென்று தனிப் பள்ளிக்கூடம் ஒன்றும் தொடங்கப்பட்டிருக்கிறது.

1856 ஜூன் மாதம் ஒரு மகர் சிறுவன் ஆங்கிலேய அரசு நிர்வாகத்துக்கு ஒரு மனு தாக்கல் செய்துள்ளான். அம்மனுவில் எல்லாப் பிள்ளைகள் போல தானும் வழக்கமான கல்விக் கட்டணத்தைச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் ஆனால் தார்வார் அரசாங்கப் பள்ளியில் தனக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தான். அம்மகர் சிறுவனின் மனு மீது கீழ்வருமாறு கருத்தைத் தெரிவித்தது பிரிட்டிஷ் கல்வி நிர்வாகம்: "சாதி இந்துக்கள் மட்டுமே படிக்கும் ஒரு பள்ளியில் சேருவதற்கு அனுமதி வேண்டி ஒரே ஒரு மகர்தான் இதுவரை முன் வந்திருக்கிறான். அந்த ஒரு நபருக்காக நடவடிக்கை மேற்கொள்வதும், அவனை சாதி இந்துக்களின் பிள்ளைகள் மத்தியில் திணிப்பதும் சரியல்ல. இந்தக் கல்வி நிலையத்தை ஏராளமான சுதேசி மக்களுக்குப் பயனற்றதாக செய்துவிடும் அபாயம் இதில் பொதிந்துள்ளது" என்றது. ஆனால் அத்துடன் அம்மகர் சிறுவனின் மனு உறங்கிவிடாமல் விவாதத்துக்கு ஆட்பட்டு "மனுதாரர் மகர் சிறுவன் பக்கம் கோட்பாட்டளவில் நியாயம் இருக்கிறது என்பதில் ஐயமில்லை, தார்வாரில் தற்போதுள்ள கல்வி வசதியை அவன் பயன்படுத்திக் கொள்வதற்கு குறுக்கே நிற்கும் தப்பெண்ணங்கள் விரைவில் அகற்றப்படும் என்று அரசாங்கம் நம்புகிறது" என்று அரசாங்கத்தை அறிவிக்கச் செய்தது. இதனைத் தொடர்ந்து "அரசாங்கக் கல்வி நிலையங்கள் எல்லா வகுப்பினர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதே நம்து நோக்கம்" என்ற கோட்பாட்டு ரீதியான முடிவு எடுக்கும் நிலைக்கு அரசாங்கத்தை நெருக்கியுள்ளது என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும் இங்கு. அகமத் நகர் தலித்துகளின் விண்ணப்பமும் மகர் சிறுவனின் மனுவும் தலித் மக்களின் கல்வி வளர்ச்சி வரலாற்றில் இவ்வாறு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்தி தலித்துகளின் மனங்களில் நீக்கமற‌ நிறைந்திருக்கிறது.

ஆங்கிலேய அரசின் கல்வி நிர்வாகம் சாதி, மத பேதம் பாராது தலித் மக்களுக்கு கல்வி அளிக்க முன்வந்தபோது அம்முயற்சியைக் கடுமையாக சாதி இந்துக்கள் எதிர்த்து வந்த நிலையில் அப்பணியை மேற்கொள்ள கிறித்துவ சமயப் பரப்பாளர்கள் துணிந்து முன்வந்தனர்.
தலித் மக்கள் மத்தியில் கிறித்துவ மிஷினரிகள் கல்விப் பணியாற்ற முன்வந்ததை "தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களையே மிகச் சிறந்த மாணாக்கர்களாக அவர்கள் கண்டனர்" என்று பாராட்டுத் தெரிவித்துள்ளார் மவுண்ட் ஸ்டூவர்ட் என்பின்ஸ்டன் அவர்கள். இதுபோன்ற அனுபவங்களைக் கணக்கில் கொண்டு கீழ்காணும் முடிவுகளுக்கு வந்தது அரசாங்கம்:

1) கீழ் சாதி குழந்தைகளுக்கு தனியாக அரசாங்கப் பள்ளிகளை நிறுவுவது

2) சமயப் பரப்பு அமைப்புகள் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளுக்கு கல்விப் பணிகளை தங்கு தடையின்றி மேற்கொள்வதற்கு உதவித் தொகை வழங்குவது சம்பந்தமான விதிகளைத் தளர்த்தி அவற்றை விசேடமாக ஊக்குவிப்பது

இந்த ரீதியில் தட்டுத் தடுமாறி எழுந்து நின்ற தலித் மக்களின் கல்வி நிலை குறித்து 1902-1907 ஐந்தாண்டு அறிக்கை பம்பாய், கத்தியவார், தெற்கு வட்டாரம் போன்ற பகுதிகளில் தலித்துகளுக்கென்று தனிப் பள்ளிக்கூடங்கள் இயங்கி வருவதாக அறிவித்தது. தெற்குப் பகுதிகளில் மட்டும் 72 விசேடப் பள்ளிக்கூடங்கள் அல்லது வகுப்புகள் நடத்தப்படுகின்றது என்று தெரிவித்தது அவ்வறிக்கை. தெற்குப் பகுதி என்று அறிக்கைக் குறிப்பிடுவதில் பிரதானமாக சென்னைப் பகுதியும் அடக்கமாகிறது. இக்காலக்கட்டங்களில் அமைக்கப்பட்ட ஹண்டர் கமிஷன் முகம்மதியர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஆதரவாகவும் தலித்துகளின் கல்வி மேல் பாராமுகமாகவும் நடப்பதாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் "வெறும் சாதி அடிப்படையில் எந்தப் பையனும் ஓர் அரசாங்கக் கல்லூரியிலோ அல்லது பள்ளியிலோ அனுமதி மறுக்கப்படலாகாது", "கீழ்ச்சாதிக் குழந்தைகளுக்கு விசேடப் பள்ளிக் கூடங்களைத் தொடங்குவதை தாராளமாக ஊக்குவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தி கல்வி தலித்துகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்குமான உரிமை என்றாகுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது என்பதையும் மறக்கலாகாது. முழுக்க முழுக்க அரசு நிதியினால் நடத்தப் பெறும் அனைத்துப் பள்ளிகளும் எவ்வித வேறுபாடுமின்றி அரசின் குடிமக்களின் எல்லாப் பிரிவினருக்கும் உரியதாயிருக்க வேண்டும் என்று 1858 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசின் செய்திக் குறிப்பு அறிவித்து கல்வியை குடிமக்கள் அனைவருக்குமான உரிமை என்றாக்கியது.
ஆங்கிலேய அரசின் கல்விக் குழுமங்கள், கிறித்துவ சமயப் பரப்பாளர்களின் கல்விக் கோட்பாடுகள் மற்றும் கல்விப் பணிகள் மூலம் உயிர்ப்பு பெற்று, சாதி இந்துக்கள் எழுப்பிய தடங்கல்களால் தாமதப்பட்டு, பிறவியிலேயே இருகால்களும் ஊனமாகப் பிறந்த குழந்தையின் நடைபோல கெந்திக் கெந்தி மெல்ல மேலெழுந்து வந்துள்ளது தலித்துகளின் கல்வி என்ற புரிதலுடன் அம்மகத்தான பணிகள் தோற்றம் பெறவும் துரிதமாக அம்மக்களைச் சென்றடைவதற்கும் அயோத்திதாசப் பண்டிதர் போன்ற மாபெரும் ஆளுமைகளின் கல்விச் சிந்தனைகளும்/பணிகளும் தான் அடித்தளமிட்டு வளர்த்தெடுத்தன என்பதை நாம் நன்றியுணர்வுடன் அவதானிக்கத்தாக வேண்டும்.

அயோத்திதாசப் பண்டிதரின் கல்விப் பணிகள்:

இதற்கு முன் நாம் கண்ட ஆங்கிலேய அரசின் இந்திய கல்விப் பணிகள் தென்னகத்து தலித் மக்களை வந்தடைவதற்கு அயோத்திதாசரின் புரட்சிகரமான கல்விப் பணிகள் மட்டுமே காரணமாக அமைந்துள்ளன என்பதற்கு கீழ் வருவனவற்றை சான்றாகக் கொள்ளலாம்.

அயோத்திதாசப் பண்டிதரின் அரசியல், சமூகம், கல்வி சார்ந்த சிந்தனைகளைப் பேச முன்வருபவர் அவரது நீலகிரி மாநாட்டுத் தீர்மானங்களையும் சென்னை மகாஜன சபாவில் அவர் பங்கேற்றதையும் குறிப்பிடாமல் பேச இயலாது. திராவிட மகாஜன சபா என்னும் அமைப்பின் கீழ் தலித் மக்களை ஒருங்கிணைத்த பண்டிதர் 1891ல் நீலகிரியில் ஒரு மாநாடும் நடத்தினார். அம் மாநாட்டில் பத்துத் தீர்மானங்களை நிறைவேற்றி அத்தீர்மானங்களை இந்திய தேசிய காங்கிரஸாருக்கு அனுப்பி, ஆங்கிலேய அரசாங்கத்துக்கு காங்கிரஸார் விடுக்கவிருக்கும் கோரிக்கைகளுடன் தங்களது தீர்மானங்களையும் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
பொதுக் கிணறுகள், பொதுக் குளங்கள், பொதுப் பாதைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு தலித் மக்களாகிய தங்களுக்கு உரிமை வேண்டுதல்,
தலித்துகளை பிரத்யேகமாக சிறைச்சாலைகளில் இழிவான வேலைகளை செய்ய நிர்பந்திக்கும் சிறைச்சாலை சட்டத்தை நீக்கக் கோருதல், அரசியலிலும் அரசு வேலைகளிலும் தங்களது பங்கைக் கோருதல் என்று வடிவமைக்கப்பட்ட அக்கோரிக்கைகளுள் தலித் பிள்ளைகளுக்கு கல்வி சார்ந்த உரிமைகளும் சலுகைகளும் கோரப்பட்டிருந்தன என்பதுடன் கல்வி சம்பந்தமான கோரிக்கைகளுக்கே மிக அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தகுந்தது.
அக்கோரிக்கைகளாவன:

1). ஏழை தலித் மக்கள் கல்வி அறிவு பெற்று முன்னேற்றம் காணும் பொருட்டு இவர்களுக்கென தனிப் பள்ளிகூடங்கள் அமைத்து அப்பள்ளிகளுக்கான ஆசிரியர்களை அம்மக்கள் பிரிவினிலிருந்தே நியமிக்க வேண்டும்; தீண்டத்தகாத மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரை பாகமாக குறைத்து சலுகை வழங்கவேண்டும்.

2) மெட்ரிகுலேசன் எனப்படும் உயர்நிலைப் பள்ளித் தேர்வில் வெற்றி பெற்ற மூன்று தலித் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகை(ஸ்காலர்ஷிப்) வழங்கவேண்டும்.

3) இவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களை ஒவ்வோர் அரசு அலுவலகங்களிலும் ஒருவருக்கு வேலை என்ற அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்

4) கல்வி அடிப்படையிலும் நன்னடத்தை அடிப்படையிலும் தலித்துகளுக்கு அரசு வேலை வழங்குவதற்கு எவ்விதத் தடையும் இருக்கலாகாது.

அயோத்திதாசர் அனுப்பி வைத்த இக்கோரிக்கைகள் வழக்கம்போல காங்கிரஸாரால் கண்டுகொள்ளப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க தலித் மக்கள் வாழ்வின் முன்னேற்றத்துக்கு கல்வி மட்டுமே அடிப்படையானது என்பதை உணர்ந்திருந்த அவரது சிந்தனையும், அக்கல்வியை தலித் மக்களிடம் சேர்ப்பதற்கு எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன.
ஏப்ரல் 1892ல் சென்னை மகாஜன சபைக் கூட்டம் சென்னை விக்டோரியா மகாலில் நடந்தது. பி.அரங்கைய நாயுடுவை தலைவராகவும், எம்.வீரராகவாச்சாரியர் அவர்களை செயலாளராகவும் கொண்டு நடத்தப்பட்ட அக்கூட்டத்தில் நீலகிரி திராவிடர் மகாஜன சபை பிரதிநிதியாகக் கலந்துகொண்ட அயோத்திதாசர் தலித் மக்களை சைவ-வைணவ கோவில்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். சாதி இந்துத் தலைவர்கள் மட்டுமே நிறைந்திருந்த அச்சபையால் பண்டிதரின் கோரிக்கை மறுக்கப்படவே
"அப்படியிருக்குமாயின் உங்கள் சாமி எங்களுக்கு வேண்டாம். இக்குலத்து சிறுவர்களுக்கு கிராமங்கள் தோறும் கல்விச் சாலைகளை வைத்து இலவசமாக் கல்வி கற்க வைக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். இக்கோரிக்கையுடன் கிராமங்களில் வெறுமனே கிடக்கும் நிலங்களை ஏழை தலித்துகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். பண்டிதரின் இக்கோரிக்கைகள் சபையோரால் ஏற்கப்பட்டதுடன் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் சிபாரிசு செய்யப்பட்டது.
பண்டிதரின் கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை எடுத்த பிரிட்டிஷ் அரசாங்கம் கிராமங்களில் தலித் சிறுவர்களுக்கு தனிப் பள்ளிக்கூடங்கள் அமைக்குமாறு ஆணையிட்டதுடன் லோக்கல் பண்டு போர்டும் முனிசிபாலிட்டி நிர்வாகமும் இப்பள்ளிகள் அமைவதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி தலித் பிள்ளைகளுக்காக தனிப் பள்ளிகள் சென்னை, செங்கல்பட்டு, திருவாங்கூர் ஆகியப் பகுதிகளில் நிறுவப்பட்டு பல பிள்ளைகள் அங்கு கல்வி பயின்றனர். அயோத்திதாசரின் இதுபோன்ற கல்விப் பணிகளின் தொடர்ச்சியாக தியோசிபிக்கல் சொசைட்டியின் தலைவரான கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் அவர்களால் 'பஞ்சமர் இலவசப் பள்ளிகள்' துவங்கப்பட்டன.

பஞ்சமர் இலவசப் பள்ளிகள்: 

ஹெலினா பெட்ரோவ்னா பிளாவட்ஸ்கி அவர்களும் கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் அவர்களும் இணைந்து நிறுவிய தியோசபிகல் சொசைட்டி என்னும் இயக்கத்தின் தலைமையகத்தை பம்பாயிலிருந்து சென்னைக்கு 1882ல் மாற்றினர். சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு கல்வி அறிவு மட்டுமே முடிவு கட்டும் என்பதில் நம்பிக்கை கொண்ட ஆல்காட் அவர்கள் தியோசபிக்கல் சொசைட்டியின் சார்பில் 1894 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட பிள்ளைகளின் கல்விக்காக 'பஞ்சமர் இலவசப் பள்ளிகள்' நிறுவினார்.
அயோத்திதாசப் பண்டிதர், ரெவரண்ட் ஜான் ரத்தினம், இரட்டைமலை சீனிவாசன் போன்ற தலித் தலைவர்களுடன் ஆல்காட் துரை அவர்களுக்கு இருந்த தொடர்பு மேற்படி பஞ்சமர் இலவசப் பள்ளிகள் தோற்றம் கொள்வதற்குக் காரணமாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆல்காட் துரை அவர்களல் துவக்கப்பட்ட இப்பள்ளிகளுக்கு 'பஞ்சமர் இலவசப் பள்ளிகள்' என்று பெயரிடப்பட்டது அயோத்திதாசருக்குப் பிடிக்கவில்லை. 'சாதி பேதமற்ற எளிய பிள்ளைகளின் இலவச கலாசாலை' என்று பெயரிடப்பட வேண்டுமென்று விரும்பினார் பண்டிதர். பஞ்சமர் என்றாலே சாதி இந்துக்களால் இழிவாகப் பார்க்கப்படும் சூழலில் தலித் பிள்ளைகள் பயிலும் பள்ளிகளுக்கு அப்பெயர் வைக்கப்படுவதை அவர் வெறுத்தார். ஆல்காட் அவர்களின் இப்பெயர் வைப்பைக் குறித்து "தீண்டப்படாத மக்களின் எதிரிகளாக விளங்குவோரின் அபிப்ராயங்களைக் கேட்டுக்கொண்டு 'பஞ்சமர் இலவசப் பள்ளிகள்' என்று பெயர் வைத்தது வேஷ பிராமணர்களெனும் சத்துருக்களுக்கு பருப்பில் நெய்யை விட்டது போலும், பாலில் பழம் விழுந்தது போலும் ஆனந்தம் பிறந்தது" என்று விமர்சித்துள்ளார்.

பஞ்சமர் கல்வித் திட்டம்:

"எந்த வகையான கட்டணமும் இல்லாமல் அவர்களுடைய (தலித்துகளுடைய-க.ஆர்.) குழங்தைகள் படிப்பதற்கான ஒரு பள்ளியைத் திறந்தேன். மாணவர்களெல்லாம் அப்பள்ளியில் நான்காம் வகுப்பு வரையிலும் எழுத்துக்களை உச்சரித்தல், வாசித்தல், எழுதுதல், கணிதம் செய்தல், தங்களது தாய்மொழியாகிய தமிழ் மற்றும் அவர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவு ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்க வேண்டும். தென்னிந்தியாவிலும் பர்மாவிலுமுள்ள ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்களின் வீட்டு வேலைக்காரர்கள் எல்லாமே பறையர்களாதலால் சமையல் செய்வது, கிழிந்த ஆடைகளைத் தைப்பது, உணவு மேசையை ஒழுங்குபடுத்துவது, குடும்ப கணக்கினை எழுதுவது போன்றவற்றை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தேன். அவர்களுக்கு எளிதில் கிடைக்கக் கூடியதும் நல்ல ஊதியம் தருவதுமான வேலைகளைப் பெற்று அவற்றில் நிலைத்திருப்பதை உறுதி செய்யும் வகையில் இப்யிற்சியை அவர்களுக்கு அளித்தேன். மதிப்பிற்குரிய என் உடன் ஊழியரும் நண்பருமான 'தியோசிபிக்கல் சொசைட்டி'யின் பதிவு செயலாளர் டபிள்யூ.ஏ இங்கிலிஷ்,எம்.டி. அவர்களும் நானும் வகுத்த இவ்வெளிய திட்டத்தினடிப்படையில் தொடங்கப்பட்டதுதான் 'பஞ்சமர் கல்வித் திட்டம்' -ஹெச்.எஸ். ஆல்காக்ட்
ஹென்றி ஆல்காட் அவர்களால் நடத்தப்பட்ட சென்னை தியோசிப்பிகல் சொசைட்டியானது பல்வேறு இடங்களில் பஞ்சமர் இலவசப் பள்ளிகளைத் தொடங்கி நடத்தி வந்துள்ளது. தியோசிப்பிகல் நிறுவனரான பிளாவட்ஸ்கி அம்மையார் அவர்களது பெயரிலும் கே.மாவலங்கர், திருவள்ளுவர் ஆகியோரது பெயர்களிலும் அப்பள்ளிக்கூடங்கள் இயங்கி வந்துள்ளன. 1898 ஆண்டு அமெரிக்கப் பெண்மணியான செல்வி எஸ்.இ.பால்மர் அவர்கள் பஞ்சமர் பள்ளிகளின் பொதுச்செயலராக பொறுப்பு ஏற்றுகொண்டார். அவ்வம்மையார் பொறுப்பேற்றுக்கொண்டபோது அவரை வரவேற்று திராவிட சாக்கிய பௌத்த சங்கத்தின் சார்பாக 'வந்தனோப்பச்சார பத்திரம்' வாசித்து தலித் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக மேலும் பள்ளிகள் திறக்குமாறு கோரிக்கையையும் வைத்துள்ளார் அயோத்திதாசர்.
"சகோதர‌ர்களே நீங்கள் கோரிய விண்ணப்பம் ஏற்று ஏழை என்னாற்கூடிய கல்வி விருத்தி செய்து வைப்பேன்" என்று வாக்களித்துள்ளார் பால்மர்.

அதன்பின் செல்வி பால்மர் அவர்கள் பண்டிதரை அழைத்து தேனாம்பேட்டை உட்பட பிற இடங்களில் பள்ளிக்கூடங்கள் அமைப்பது பற்றிய ஆலோசனைகளைக் கேட்டறிந்துள்ளார். இதன் நீட்சியாக தேனாம்பேட்டை, மயிலாப்பூர், கோடாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பஞ்சமர் இலவசப் பள்ளிகளை நிறுவியுள்ளார். அக்கல்வி நிலையங்களில் கட்டணமில்லாக் கல்வி அளிக்கப்பட்டதுடன் நான்காம் வகுப்பு வரைக்கும் புத்தகங்கள், சிலேட்டுகள், பென்சில்கள், சித்திர வேலைகள் செய்யும் சாமான்கள் போன்றவைகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் வாடிய ஏழை சிறுவர்களுக்கு உணவும் உடையும் கூட பால்மர் அம்மையார் அவர்களால் வழங்கப்பட்டுள்ளன. 1901 ஆண்டைய பால்மரின் ஆண்டறிக்கை ஆல்காட் நினைவு பஞ்சமர் பள்ளிகளில் 384 மாணாவர்கள், 150 மாணவிகள் என்று 534 பேர் பயில்கின்றனர், 16 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர் என்று அறிவித்தது.

கணக்குகளை எழுதுதல், விலைப்பட்டியல் தயாரித்தல், ஆங்கிலேயர் மற்றும் இந்திய நாணயங்களின் கூட்டுக் கணக்குகள் கற்றுக்கொள்ளுதல், எடைகளைக் கணக்கிடுதல், கால நேரத்தை கணித்தல், ஆங்கிலத்தில் உரையாடுதல், பொது சுகாதாரம் பற்றி கற்றுக்கொள்ளுதல், மாதமிருமுறை சமையல் கல்வி கற்றல், ஆடைகளைத் தைத்தல் என்று இன்றைய கல்வியாளர்களால் பேசப்படும் செயல் வழிக் கற்றல் என்னும் போதனா முறை கல்வி அன்றே பஞ்சமர் இலவசப் பள்ளிகளில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இக்கல்வி நிலையங்களில் பயின்று தேர்ச்சிப் பெற்றவர்கள் ஆங்கிலேய துரைமார்களின் வீடுகளின் சமையல்காரர்கள், ஆடை அணிவிப்பவர்கள், பட்லர்கள் போன்ற வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் வேலைகளைப் பெற்றுள்ளனர். ஆசிரியர்கள், காவல் துறை ஊழியர்கள், அலுவலக ஏவலர்கள் ஆகிய பணிகளிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளிகளில் பயின்ற பறையிரினக் குழந்தைகளைப் பொருத்த மட்டிலும் கீழை நாட்டிலும் மேலை நாட்டிலும் உள்ள ஏனைய வகுப்பினரின் குழந்தைகளுடன் ஒப்பிடத்தக்க நிலையிலேயே இருக்கின்றனர் என்றது பால்மர் அறிக்கை.

"மக்களின் நலனுக்காகப் பாடுபடுகிறவர்கள் என்ற முறையில் நமது கடமை மிகத் தெளிவாகவே இருக்கிறது. நண்பர்களே இல்லாமல் துன்புறுகிற நமது அயலாருக்கு உதவுவது நமது கடமையென்று நாம் நம்புவோமானால் ஆதரவற்ற இப்பறையர்கள் நமது வழிப்பாதையிலேயே நிற்பதைக் காணலாம். அவர்களுக்குத் தேவையானது கல்வியே. பல்கலைக் கழக மட்டத்திலான கல்வியல்ல, தங்களைத் தாங்களே உயர்த்திக்கொள்ள தேவையான கல்வியே" என்ற ஆல்காட் துரை கல்வி என்பது தலித் மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த காலத்தில் அவர்கள்பால் கருணைகொண்டு கல்விப் பணிகளைச் செய்து வந்தார். அவரது மறைவுக்குப் பின் சென்னை தியாசபிகல் சொசைட்டியின் தலைவரானார் அன்னிபெசண்ட் அம்மையார் அவர்கள்.
தலித் பிள்ளைகளுக்கான கல்வி விசயத்தில் ஆல்காட்டிற்கு இணையான ஆர்வம் அன்னிபெசண்ட்டிடம் இருக்கப் போவதில்லை என்று நம்பினார் அயோத்திதாசர். அன்னிபெசன்ட் அவர்கள் பஞ்சமர் இலவசப் பள்ளிகளை முனிசிபாலிட்டி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் எண்ணம் கொண்டிருக்கிறார் என்பதையறிந்து உடனடியாக அவ்வம்மையாரைச் சந்தித்து கர்னல் ஆல்காட் துரையைப் போலவே தாங்களும் மேற்படி பள்ளிகளுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டுமென்றும் அத்துடன் கைத்தொழிற்சாலை ஒன்றையும் நிறுவி ஏழை தலித் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவி புரிய வேண்டும் என்றும் விண்ணப்பித்தார். பண்டிதரின் விண்ணப்பத்திற்கு மதிப்பளித்து பஞ்சமர் இலவசப் பள்ளிகள் அன்னிபெசன்ட்டின் ஆதரவில் தொடர்ந்து இயங்கியதாக டிசம்பர் 1,1909 தமிழன் இதழில் பதிவிட்டுள்ளார் அயோத்திதாசர்.

அயோத்திதாசரின் கல்வி சிந்தனைகள்:

"கல்வி என்பது வெறும் வாழ்க்கைக்கும் வசதிக்கும் என்று இல்லாமல் ஒவ்வொருவரும் நல்ல ஒழுக்கத்தைப் பெறவும் பிறரையும் சிறந்த ஒழுக்கத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்யவும் நூற்கல்வி பயன்பட வேண்டும் என்றும் கருதுகிறார். இத்தகைய படிப்பு சிறுவயது முதற்கொண்டே அமைய வேண்டும் என்றும் விரும்புகிறார்" அயோத்திதாசரின் கல்விச் சிந்தனைகள் குறித்து ஞான.அலாய்சியஸ் அவர்கள் அயோத்திதாசர் சிந்தனைகள் என்னும் தொகுப்பு நூலுக்கான சிறப்புரையில் மதிப்பிட்டு வழங்குவதை இங்கு நினைவுகூர்வது பொருத்தமானது. பழந்தமிழ் திராவிட நூல்களென்றும் ஒழுக்க நூல்கள் என்றும் பண்டிதரால் அடையாளப்படுத்தப்படும் திருக்குறள், நாலடியார் போன்ற நீதி நூல்களை கற்பிப்பதன் மூலம் வித்தை, ஈகை, புத்தி, சன்மார்க்கம் போன்ற உயர்ந்த நெறிகளை மக்கள் பெறுவர், சமுதாயம் வளம் பெறும் என்பதாக விரவிக் கிடக்கின்றன பண்டிதரின் கல்விச் சிந்தனைகள்.
"திராவிட மொழியில்... அந்த பூமியில் வாழும் குடிகளின் செயல்களையும் சிறப்புகளையும் நெறிகளையும் தெள்ளென விளக்கி, அநேக நூற்களை வரைந்து வைத்திருக்கிறார்கள். அத்தகைய நூற்களை தற்கால சிறுவர்களுக்குக் கற்பித்து வருவதாயின் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் இவைகள் பெருகுவதுடன் குரு விசுவாசமும் ராஜவிசுவாசமும் நிலைத்து தாங்கள் சீரடைவதுடன் பிறரையும் சீர் பெறச் செய்வார்கள்...அத்தகைய நூற்களை கலாசாலையில் கற்பித்தால் தற்கால நூதனமாக ஏற்படுத்திக் கொண்ட சாதி வித்தியாசங்களையும் மதக்கடை வியாபாரங்களும் இராஜாங்கத்தோடு விளங்கிவிடுவதுடன் சிறுவர்களும் விவேக விருத்திப் பெற்று சாதி தலைவர்களையும் சமயத் தலைவர்களையும் மதியாமற் போய்விடுவார்கள் என்ற கருத்தினால் சாதித் தலைவர்களும் சமயத் தலைவர்களும் பூர்வ திராவிட நூல்களை கலாசாலையில் பரவி விடாமல் செய்துவிட்டனர்"
சாதி-சமய சார்பு கல்விமுறையை இப்படி விமர்சித்த பண்டிதர் பூர்வ திராவிட நீதி நெறி ஒழுக்க நூல்களாக திருக்குறள், நாலடியார் போன்ற நீதி நூல்களை முன்வைக்கிறார். புத்த தன்மம் நிறைந்திருந்த காலத்து பழந்தமிழ் நீதி நூலகளையும் ஓலைச்சுவடிகளையும் அழித்தொழிப்பதற்காகவே விழா எடுத்து ஆற்று நீரில் வீசியெறிந்து அழித்தனர், அழிந்தது போக திருக்குறள், நாலடியார் மற்றும் சில பழந்தமிழ் நூல்கள் மிஞ்சின என்ற வரலாற்றை தமது சிந்தனைகளில் அவ்வப்போது நினைவுபடுத்துகிறார் அயோத்திதாசர்.

வித்தியா விருத்தி:

அயோத்திதாசரின் அரசியல், சமூக, பொருளாதார, கல்வி சிந்தனைகளை மேலோட்டமாக கவனிப்பவர்களும் கூட அவரது சிந்தனைகளில் உள்ளார்ந்து கிடக்கும் புரட்சிகரமான கூறுகளை சுலபமாக உள்வாங்கிக் கொள்ள முடியும். பழமை மீதான நம்பிக்கையை, சமுதாய முன்னேற்றத்துக்கு உதவாத பிற்போக்கு சிந்தனைகளை, மூடப் பழக்கவழக்கங்களை அவர் தயவு தாட்சண்யமின்றி உடைத்து நொறுக்கும் ஆளுமையாக விளங்குகிறார். சாதி பேதமற்ற ஒரு சமூக அமைப்பு என்பதை வலியுறுத்துகிறது அவரது சமுதாய மாற்று சிந்தனை.
இந்த வகையில்தான் தமது சமகால கல்வி முறையானது சாதி சமய மேலாதிக்கத்தை பாதுகாக்கும் விதத்திலும் சமுதாய மாற்றத்துக்கும் முன்னேற்றத்துக்கும் பயன்படாத வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றதுடன் "கண்டு படிப்பது படிப்பு, மற்றபடியெல்லாம் தெண்ட படிப்பு" என்று நையாண்டி செய்தார். அதென்ன கண்டுபடிக்கும் படிப்பு? அவரது சொல் முறையிலேயே படிப்போம்:

"ஐயா, B.A. பட்டம் பெற்றவர் காப்பி சாப்பு வைத்துக்கொண்டார். B.A. பட்டம் பெற்றவர் கான்டிராக்டு வேலைக்கு மேஸ்திரியாக இருக்கிறார்...உத்தியோகங்கள் கிடைத்தவர்கள் மட்டிலும் தங்கள் பெண்சாதிகளுடன் சுகிப்பதும், கிடையாதோர் தாங்கள் பெண்சாதிப் பிள்ளைகளுக்கும் சுகமின்றி ஊரூராய் அலைவதுமே பெரும்பயனாக விளங்குகிறபடியால் கண்டு படிக்கும் படிப்பையே கருத்திலூன்றி நமது தேசத்தில் வித்தியா விருத்தியையும், விவசாய விருத்தியையும் பெருக்கி தேச மக்களின் விவேகத்தை வளரச் செய்வார்களென்று நம்புகிறோம்" கண்டுபடிக்கும் படிப்பு என்பதை "தான் கற்றளவில் நின்று உலகத்தில் அங்கங்குள்ள தேசத்தோர் உலோகங்களைக் கொண்டும், மரங்களைக் கொண்டும், உபரச சத்துக்களைக் கொண்டும், பஞ்சுகளைக் கொண்டும், தானியங்களைக் கொண்டும் அனந்தமான வித்தைகளைக் கண்டுபிடித்து தாங்களும் தங்கள் மக்களும் சீவனத்தை அடைவதுடன் ஏழை மக்களும் அவர்களுடைய குடும்பங்களும் சுகசீவனம் பெற்று சுக வாழ்க்கையிலிருப்பதை நோக்கி தாங்களும் அத்தகைய வித்தைகளை விரும்பி, அறிவைப் பெருக்கி எடுத்த வித்தை முடிப்பதே கண்டுபடிப்பதின் செயலும் அதன் பயனும் சகல மக்கள் விருத்திக்கும் ஆதரமாக விளங்கும்" எனும் பண்டிதர் தாய்மொழிக் கல்வியை சீராக கற்க வேண்டும், தனியொருவருக்கும் சமூகத்துக்கும் ஒருசேர பயனளிக்கும் விதமான- தொழில் துறை வளர்ச்சிக்கு உதவும் வகையிலான தொழில் நுட்பக் கல்வியை நடைமுறைப் படுத்துதல் வேண்டும் என்றும் கற்ற கல்வி அறிவைக் கொண்டு சமூக வளர்ச்சிக்கு உதவும் வகையில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கும் கல்வி முறையை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அயோத்திதாசர் வேண்டினார்.
நாவலர், பாவலர் என்ற பட்டங்களுடன் பி.ஏ., எம்.ஏ. பட்டதாரிகள் அவர்கள் படித்தப் படிப்பினால் அவர்களும் அவர்களது மனைவி பிள்ளைகளும் பிழைப்பதற்கு மட்டும் பயன்பட்டு ஏனையோருக்குப் பயன்படாது போனால் அதுவே காணாப்படிப்பு ஆகும் என்றவர் தனி நபருக்கும் அவரது குடும்பத்தாரின் வயிற்றுப் பிழைப்புக்கு பயன்படும் கல்வி முறையை என்றும் அவலப் படிப்பு என்றும் குருட்டுத்தனமான படிப்பு என்றும் வன்மையாக சாடியிருக்கிறார். "படிப்பவர் படிப்பு வித்தையிலும், ஈகையிலும், சன்மார்க்கத்திலும் நோக்குமாயின் வித்தியாவிருத்தி மேலும் மேலும் பெருகி கைத்தொழிற்சாலைகளும் அமைந்து கனமடையச் செய்யும்" என்னும் அயோத்திதாசர் "தற்காலம் நமது தேசத்துள் வாசிப்பவர் எல்லவரும் இராஜாங்க உத்தியோகத்தை நாடி வாசிக்கிறார்களன்றி விவேக விருத்தியை நாடி வாசிப்பதைக் காணோம்..." என்னும் பண்டிதரின் கூற்றில் தமது சமகால கல்வி முறை சமூக முன்னேற்றுத்துக்குப் பயன்படும் வகையில் இல்லை மாறாக, தனிநபர்களின்/ஆதிக்க-சாதி சமூக சக்திகளின் நலன்களை மனதில் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை தோலுரித்துக் காட்டுவதுடன் கல்வி வளச்சி, தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி ஆகியவற்றை வளர்த்தெடுக்க உதவும் வகையில் கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார். அத்தகையக் கல்விமுறை இன்றைக்கும் கூட நடைமுறையில் இல்லை என்பதுடன் தனியார் கல்வி நிலையங்கள் புற்றீசல் போல பெருகி வரும் தற்போதைய சூழலில் அவை அதிக மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களை உற்பத்தி பண்ணும் கல்வித் தொழிற்சாலைகளாகவே செயல்படுகின்றன. அயோத்திதாசரின் மேற்படி சமூகப் பயன்பாட்டுக்கு உகந்த கல்விமுறை குறித்த கனவு கனவாகவே நீடிக்கிறது.

ஆங்கிலேயரின் கல்விக் கோட்பாடுகளும் செயல் திட்டங்களும் உயர்சாதி இந்துக்களை திருப்திப் படுத்தும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டபோது அத்திட்டங்களில் தலித்துகளுக்கு இடமில்லாமல் இருந்ததை எதிர்த்துக் குரல் எழுப்பினார் பண்டிதார். 1892ல் சென்னை மகாஜன சபையில் ஒரு கலகக்காரனாக நுழைந்து தலித் பிள்ளைகளுக்கு கல்வி நிலையங்கள் வேண்டும் என்று அவரது குரல் ஒலிக்காமல் போயிருந்தால் அப்பிள்ளைகளுக்கான தனிப் பள்ளிகளும், பஞ்சமர் இலவசப் பள்ளிகளும் வாய்க்காமலேகூட போயிருக்கக் கூடும் அல்லது பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கலாம் அல்லது வெகுகாலத்துக்குப் பிறகு வேறு ஏதேனும் ஒரு பயனளிக்காத வடிவத்தில் கிடைக்கப் பெற்றிருக்கலாம். தலித் மக்கள் மீது கருணை கொண்டு செயல்பட்ட கர்னல் ஆல்காட் போன்ற ஆங்கிலேய அதிகாரிகளைக் கண்டறிந்து அவர்களை உரிய நேரத்தில் சந்தித்துப் பேசி தம் பிள்ளைகளுக்கு கல்விச் சாலைகளின் வாசல்களைத் திறந்து வைத்து சாதித்த பெருமை அயோத்திதாசப் பண்டிதருக்கே உரியது.
முற்போக்கான அரசியல்/பொருளாதார/சமூக சிந்தனைகளுக்கு -பகுத்தறிவுவாத சிந்தனைகளுக்கு எல்லாம் முற்பட்டதாக விளங்கும் அயோத்திதாசர், கல்விச் சிந்தனைகள் என்ற வகைப்பாட்டிலும் அவரே முன்னின்று பாட்டனாக வழிகாட்டி நிற்கிறார். சமூக நீதி/சமூக சமத்துவம் கூடாது என்பதையே தனது சித்தாந்தமாகக் கொண்ட-வெட்கங்கெட்ட- பழமைவாத இந்து சாதி சமூகம் தான் அச்சிந்தனைகளை கற்றுத் தரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது.

உதவிய நூல்கள்:
1) அயோத்திதாசர் சிந்தனைகள்-I-ஞான.அலாய்சியஸ், நாட்டார் . வழக்காற்றியல் மையம், பாளையங்கோட்டை.

2) பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்:பேச்சும் எழுத்தும்- நூல் . தொகுப்பு:23,

3) தலித் மக்களும் கல்வியும்-தொகுப்பாசிரியர்:வெ.அலெக்ஸ், எழுத்து, மதுரை

4) தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும்- தி.பெ.கமலநாதன், தமிழில்:ஆ.சுந்தரம், எழுத்து-மதுரை
- வெ.வெங்கடாசலம் (venkatasalamve@gmail.com)  நன்றி : http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/26196-2014-03-31-05-39-56

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள்