புத்தர், பெண்கள் அறிவு பெறும் உரிமைக்காகப் போராடியவர் – VI
புத்தர், பெண்கள் அறிவு பெறும் உரிமைக்காகப் போராடியவர் – VI
- எழுத்தாளர்: அம்பேத்கர்
- பிரிவு: அம்பேத்கர்
பிக்குணிகளை (பெண் துறவி) பிக்குகளின் (ஆண் துறவி) அதிகாரத்தின் கீழ் வைத்ததை – ஒரு சமூகத் தவறு என்று கருதுபவர்கள், பெண்கள் துறவறம் பூணுவதை புத்தர் அனுமதித்தது எந்தளவுக்குப் புரட்சிகரமான நடவடிக்கை என்பதை உணர்வதில்லை. பார்ப்பனியத் தத்துவத்தின் கீழ், பெண்கள் அறிவு பெறும் உரிமை ஏற்கனவே மறுக்கப்பட்டு விட்டது. துறவறம் ஏற்கும் பிரச்சினை வந்தபோது, அவர்கள் இந்தியப் பெண்களுக்கு மற்றொரு அநீதியை இழைத்தனர்.
பெண்கள் துறவறம் மேற்கொள்வதை பார்ப்பனர்கள் ஏன் தடை செய்தார்கள் என்பதன் காரணத்தைப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும். ஏனெனில், அது பெண்களின்பாலான பார்ப்பனர்களின் கண்ணோட்டத்தைப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது. இது, புத்தரின் கண்ணோட்டத்திற்கு நேர் எதிரானதாகும். இதற்கான காரணத்தை மநு இவ்வாறு கூறுகிறார் :
IX 18 : வேதங்களைப் படிப்பதற்குப் பெண்களுக்கு உரிமையில்லை. அதனால்தான் அவர்களின் சடங்குகள் வேத மந்திரங்கள் இல்லாமல் நடத்தப்படுகின்றன. மதத்தைப் பற்றி பெண்களுக்கு எந்த அறிவும் கிடையாது, ஏனெனில், வேதங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. பாவத்தைப் போக்குவதற்கு வேத மந்திரங்களை உச்சரிப்பது பயனுள்ளதாகும். பெண்களால் வேத மந்திரங்களை உச்சரிக்க முடியாததால் அவர்கள் பொய்யைப் போன்றவர்கள்.
மநு, புத்தருக்குப் பின்னர் தோன்றியவராக இருந்தபோதிலும், அவர் பழைய தர்ம சூத்திரங்களில் கூறப்பட்டுள்ள பழைய கருத்தை விளம்பியுள்ளார். பெண்களைப் பற்றிய இக்கருத்து இந்தியப் பெண்களை அவமானப்படுத்துவதாகும். ஏனெனில், ஒவ்வொரு மனிதப் பிறவியின் பிறப்புரிமையான அறிவு பெறும் உரிமை, எவ்வித நியாயமுமின்றி பெண்களுக்கு மறுக்கப்படுகிறது. அது ஓர் அவமானமாகும். ஏனெனில், அறிவு பெறுவதற்கான உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்ட பின்னர், அறிவு இல்லாத காரணத்தால் ஒரு பெண் பொய்யைப் போன்று அசுத்தமானவள் என்று பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால், பிரம்மத்தை அடைவதற்கான ஒரு பாதையாகக் கருதப்பட்ட துறவறத்தை ஏற்பதற்கு பெண்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. தனது ஆன்மீக உள்ளாற்றலை எய்துவதற்குள்ள உரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்டது மட்டுமின்றி, பெண் எத்தகைய ஆன்மீக உள்ளாற்றலும் அற்றவர் என்று பார்ப்பனர்களால் பிரகடனம் செய்யப்பட்டது.
இது, பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையான ஓர் அநீதியாகும். இதற்கு ஈடிணையே இல்லை. பேராசிரியர் மாக்ஸ் முல்லர் கூறியது போன்று, “மனிதப் பிறவி தெய்வத் தன்மையிலிருந்து எவ்வளவு தொலைவிலிருந்தபோதிலும், இந்த உலகில் மனிதனை விட வேறு எதுவும் கடவுளுக்கு சமீபமாக இல்லை. உலகில் மனிதனைத் தவிர வேறு எதுவும் கூடுதல் தெய்வத் தன்மை வாய்ந்ததாக இல்லை.'' இது மனிதன் (ஆண்) விஷயத்தில் உண்மையெனில், பெண் விஷயத்தில் இது ஏன் உண்மையாக இருக்கக்கூடாது? இதற்கு பார்ப்பனர்களிடமிருந்து பதில் இல்லை.
துறவற வாழ்க்கையில் பெண்களை அனுமதித்ததன் மூலம் புத்தர், ஒரே அடியில் இவ்விரு அநீதிகளையும் அகற்றினார். அவர் பெண்களுக்கு அறிவு பெறும் உரிமையை வழங்கியதோடு, ஆண்களோடு கூடவே ஆன்மீக உள்ளாற்றல்களை எய்துவதற்கான உரிமையையும் பெண்களுக்கு அளித்தார். இந்தியாவில் இது ஒரு புரட்சி மட்டும் அல்ல; பெண்களின் விடுதலையுமாகும். இது குறித்து பேராசிரியர் மாக்ஸ் முல்லர் இவ்வாறு கூறுகிறார் :
“பழைய பார்ப்பனிய சட்டத்தின் சிறுமைப்படுத்தும் விலங்குகள் கடைசியாக உடைக்கப்பட்டன என்று இந்தியாவின் வரலாறு நமக்கு கூறுகிறது. ஏனெனில், புத்த மதத்தில் தனிநபர் சுதந்திரம், குறிப்பாக, சமூகத்தின் தடைகளை உடைத்துக் கொண்டு எழும் உரிமை, விரும்பும்போது காட்டுக்குள் சென்று ஒரு செம்மையான ஆன்மீக சுதந்திர வாழ்க்கையை வாழ்வது ஆகிய உரிமைகள் அறுதியிட்டுக் கூறப்பட்டிருப்பதை நாம் உணர வேண்டும் என்பதில் எவ்வித அய்யப்பாடும் இல்லை.''
– தொடரும்
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17(2), பக்கம் : 118
Comments
Post a Comment