பாதுகாக்கப்பட வேண்டிய தொல்லியல் சின்னங்கள்

மதுரை மாநகரில் அமைந்துள்ள 30க்கும் அதிகமான சமணர் படுக்கைகள், இயற்கையான மலைகள் மற்றும் புராதன சின்னங்களைப் பாதுகாத்தல் மற்றும் அவைகளைக் குறித்த விழிப்புணர்வை உள்ளூர் மக்களுக்கும், பொதுமக்களுக்கும் உண்டாக்குதல் போன்ற நோக்கங்களுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக, செயல்பட்டு வருகிறது “பசுமை நடை” (GREEN WALK) எனும் பொதுநல அமைப்பு. அந்த அமைப்பின் சார்பாக கடந்த மே மாதத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள புராதன சின்னங்களைக் கண்டறிதல் மற்றும் பாதுகாத்தல் எனும் நோக்கில் முதல் கட்டமாக ஒரு பயணம் மேற்கொள்ளப்பட்டது. கொடைக்கானல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் அமைந்துள்ள புராதன சின்னங்கள் குறிப்பாக, கற்திட்டைகளைப் பார்த்து வர உருவாக்கப்பட்ட சுமார் 5௦ பேர் அடங்கிய குழுவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
கற்திட்டைகள் என்றால் என்ன, அதன் காலம், அவைகள் அமைக்கப்பட்டதன் பின்னணி, தற்போது காணப்படும் இடங்கள், அவைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட ஏராளமான, அரிதான செய்திகளை அந்த குழுவில் இடம் பெற்றதன் காரணமாக அறிந்து கொள்ள முடிந்தது.
மனிதன் உருவான காலம் முதலாக, ஒருவரது பிறப்பும் இறப்பும் முன்னரே தீர்மானிக்க முடியாத ஒன்றாகவே இன்றளவும் நீடிக்கிறது. பிறப்பைக் கொண்டாடும் சமூகம் பெரும்பாலும் இறப்பை நேரெதிராகத்தான் பார்க்கிறது. இருப்பினும் இறந்தவர்களை புதைத்த இடங்களில் அவர்களைக் குறித்த நினைவு சின்னங்கள் எழுப்பும் நிகழ்வானது ஆதி காலந்தொட்டே இருந்து வந்துள்ளதை பல்வேறு ஆய்வுகளின் வாயிலாக அறிய வருகிறோம்.
கணிப்பொறி யுகமான நடப்பு காலத்திலும், இறந்து போனவர்களை ஞாபகம் கொள்ளும் விதமாக, அவர்களைப் புதைத்த இடத்தில் பொதுவாக கல்லறைகள் கட்டுவது வழக்கமாக உள்ளது. சமூகத்தில் பிரபலமானவர்கள் அல்லது நாட்டுக்காக பாடுபட்டோர்கள் போன்றவர்களுக்கு அவர்களது பொதுப்பணிகளை அங்கீகரிக்கும் விதமாக அவ்வப்போதைய அரசுகள் நினைவு சின்னங்களும் எழுப்புகிறது. அதேபோல சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான பெருங்கற்கால காலத்தில், இறந்தவர்களுக்கு கற்படுகை, நெடுங்கல், நடுகல், குடைகல், கல்குவியல் என்பது போன்ற பல்வேறு வகைகளில் நினைவுச் சின்னங்கள் அமைப்பது வழக்கமாக இருந்துள்ளது. அதில், குறிப்பிடத்தக்க ஒரு முறையாக கற்திட்டைகள் எழுப்பும் முறை இருந்துள்ளது.
கற்திட்டைகள் ஆங்கிலத்தில் “டால்மன்கள் (DOLMENS)” என அடையாளப்படுத்தப் படுகிறது. பொதுவாக, மூன்றோ அல்லது அதற்கு அதிக எண்ணிக்கையிலோ செங்குத்தான கற்களை மண்ணில் புதைத்து, அதற்கு மேலே பெரிய தட்டையான ஒரே கற்பலகையை வைத்து மூடப்பட்டிருக்கும் வகையில் கற்திட்டைகள் உருவாக்கப் பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் கொடைக்கானல் போன்ற பகுதிகளில் கற்திட்டைகள் பரவலாக காணப்படுகின்றன. கொடைக்கானல் காட்டுப்பகுதியில் மச்சூர், சோலைக்காடு, வில்பட்டி, பெருமாள் மலை, செண்பகனூர், தாண்டிக்குடி மற்றும் பண்ணைக்காடு - தாண்டிக்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ள “சங்கரன் பொத்து” உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தற்போது சுமார் 44 கற்திட்டைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன.
கேரளாவில் மூனார் – உடுமலைப்பேட்டை சாலையில் அமைந்துள்ள மறையூர் என்ற பகுதியியிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள “அழிஞ்சுவாடு” என்னும் சிற்றூரில் கற்திட்டைகள் நூற்றுக்கணக்கில் அமைந்துள்ளன. இங்கு மட்டுமல்லாது ஆசியாவின் பல பகுதிகளிலும், ஐரோப்பாவில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் உள்ளிட்ட நாடுகளிலும் காணப்படுகின்றன. ரஷ்யா, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளிலும், பெருமளவில் காணப்படுகின்றன. இப்படியாக, உலகம் முழுவதும் சுமார் 75,௦௦௦ கற்திட்டைகள் உள்ளன.
இந்த நவீன காலத்திலும், மாநிலத்திற்கு மாநிலம் உருவாக்கப்படும் கட்டிடங்களில் மிகுந்த வேறுபாடு காணப்படுகின்ற சூழலில், வேறு வேறு கண்டங்களிலும், பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள கற்திட்டைகளில் பெரும்பாலானவைகள் ஒரே காலத்தைச் சேர்ந்தவைகளாக உள்ளன. உலகின் பல பகுதிகளிலும் கற்திட்டைகள் காணப்படுவது அதிசயிக்கத்தக்கதொரு நிகழ்வு என்றாலும், பல நாடுகளில் கற்திட்டைகளின் தோற்றமும், அமைப்பும் ஒரே தன்மையுடன் விளங்குவது இன்னும் கூடுதல் கவனிப்புக்குரியது. உலகின் நிலப்பகுதி அனைத்தும் ஒரே பகுதியில்தான் இருந்தன, பின்னர் நாளடைவில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களின் காரணமாக தற்போது உள்ளது போன்ற நிலைக்கு வந்துள்ளது எனும் ஒரு சாராரின் ஆய்வுக்கு வலுசேர்க்கும் விதமாக கற்திட்டைகளின் அமைப்பு ஒரே மாதிரியாக தோற்றமளிக்கின்றன.
கற்திட்டைகள் உள்ளிட்ட இந்தியாவிலுள்ள, பழங்கால வரலாற்று சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே, “பழங்கால வரலாற்று சின்னங்கள் பாதுகாப்பு சட்டம்” 19௦4ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

சுதந்திர இந்தியாவில், “பழங்கால வரலாற்று சின்னங்கள் மற்றும் தொல்லியல் பகுதிகள் மற்றும் வரலாற்று எச்சங்கள் சட்டம்” 1958ம் ஆண்டிலும், அதற்கான விதிகள் 1959ம் ஆண்டிலும் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு மாநில அளவில், “தமிழ்நாடு பழங்கால வரலாற்று சின்னங்கள் மற்றும் தொல்லியல் பகுதிகள் மற்றும் வரலாற்று எச்சங்கள் சட்டம்” 1966ம் ஆண்டில் இயற்றப்பட்டுள்ளது.
இச்சட்டங்களின்படி, நூறு ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள், குகைகள், பாறை ஓவியங்கள் உள்ளிட்டவைகள் அமைந்துள்ள பகுதிகள் பழங்கால வரலாற்று சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், “இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை” ஒன்று தனியே உருவாக்கப்பட்டு, அதன் கட்டுப்பாட்டின் கீழ், நாடு முழுவதிலுமுள்ள புராதன சின்னங்கள் மற்றும் பொருட்கள் கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.
வரலாற்று சின்னங்களின் வாயிலாக, அவைகள் உருவாகப்பட்ட காலத்திய சூழல்களை நாம் கண்டறியலாம். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக உள்ள பகுதிகளையே நாம் பாதுகாக்க வேண்டியதிருக்கும் போது, சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்திட்டைகளை நாம் மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால், கிருஷ்ணகிரியிலும், கொடைக்கானலிலும் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கற்திட்டைகளின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு மடங்கு எண்ணிக்கை கூட தற்போது இல்லை. மேலும் பல பதுகைகள் சிதைக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல் மலைப்பகுதியில் கற்திட்டைகள் அமைந்துள்ள பகுதிகளைக் காணும் பொழுது, அவைகள் எவ்விதமான பாதுகாப்புமின்றி உள்ளன. தொல்லியல் துறையின் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தாலும், அதில் அந்த பகுதியின் முக்கியத்துவம், அவைகளின் பின்னணி உள்ளிட்ட எந்த செய்திகளும் இடம்பெறவில்லை. அந்த இடங்கள் பெரும்பாலும் மறைவாகவும் வீதியாகவும் உள்ளதால், எவ்விதமான இடையூறும் இல்லாமல், மது அருந்துவதற்கு ஏதுவான இடமாக அது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த இடங்களைச் சுற்றிலும், காலி மது புட்டிகள் உடைந்து அதன் சில்லுகள் காணப்பட்டன. ஆனால், அயல்நாடுகளில் கற்திட்டைகள் போன்ற புராதன சின்னங்கள் மிகவும் பாதுகாப்பாக பேணப்படுகின்றன.
தொல்லியல் சின்னங்களை அழித்தல், இடையூறு விளைவித்தல், சீர்குலைத்தல் போன்ற குற்றங்களை புரியும் நபர்களுக்கு அதிக பட்சமாக மூன்று மாதங்கள் சிறை தண்டனையும், ரூபாய் 5௦௦௦ அபராதமும் மட்டுமே சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே நமது ஆட்சியாளர்களுக்கு தொல்லியல் சின்னங்களைப் பாதுகாப்பதிலுள்ள ஈடுபாடும், அக்கறையும் தெளிவாகப் புலனாகிறது. மேலும், இது மிகவும் குறைவான தண்டனையாக தோற்றம் அளித்தாலும், இந்த குறைந்த பட்ச தண்டனை கூட, குற்றம் இழைப்பவர்களுக்கு பெரும்பாலும் விதிக்கப் படுவதில்லை.
ஆகவே, இது போன்ற தொல்லியல் சின்னங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு அருகில் அமைந்துள்ள கிராமங்களில் அவைகளைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமாக இது போன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கலாம்.
பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களில் வரலாற்றுச் சின்னங்கள் குறித்த பாடங்களை இணைத்தல், அதற்கென தனி பாட வேளைகளை கட்டாயமாக்குதல், பள்ளி, கல்லூரி சுற்றுலாவில், பெரிதும் கவனிக்கப்படாத தொன்மையான இடங்கள் கண்டிப்பாக இடம்பெறும் வகையில் அரசுகள் உத்தரவு பிறப்பித்தல், பொதுமக்களுக்கும், புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு அருகேயுள்ள பகுதி மக்களுக்கும் விழிப்புணர்வு உண்டாக்குதல் என்பது போன்ற நிகழ்வுகளின் மூலமாக முன்னோர்களின் பழைய வரலாறுகளை நம் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல முடியும்.  நன்றி : http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/27550-2014-12-19-08-38-05

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள்