இந்துக்களின் வெறுப்பு மற்றும் விரோதமே தீண்டத்தகாத மக்களை தனிமைப்படுத்துகிறது – VIII

தனிமைப்படுத்தப்படுதல் என்பதன் சாதகமற்ற தன்மைகளையும், உறவுமுறை என்பதன் சாதகத் தன்மைகளையும் புரிந்து கொண்டுள்ள அனைவரும் இந்த முயற்சி ஒரு பொருளற்ற முயற்சி அல்ல என்பதை ஏற்றுக் கொள்வர். தனிமைப்படுத்தப்படுதலின் விளைவுகள் என்ன? தனிமைப்படுத்தப்படுதல் என்பது சமூக இன ஒதுக்கல், சமூக அவமரியாதை, சமூக பாரபட்சம் மற்றும் சமூக அநீதி என்றே பொருள்படும். தனிமைப்படுத்தப்படுதல் என்பது பாதுகாப்பு மறுப்பு, நீதி மறுப்பு, வாய்ப்பு மறுப்பு என்றே பொருள்படும். தனிமைப்படுத்தப்படுதல் என்பது அனுதாபமின்மை, நட்புறவின்மை, கவனிப்பின்மை என்றே பொருள்படும். இன்னும் சொல்லப்போனால், தனிமைப்படுத்தப்படுதல் என்பது இந்துக்களின் இயல்பான வெறுப்பு மற்றும் விரோதம் என்றே பொருள்படும். மறுபுறத்தில் இதர சமூகக் குழுவுடன் உறவு கொள்வதன் மூலம் அந்த சமூகக் குழுவிற்குள் சமூக அந்தஸ்து, சமப் பாதுகாப்பு மற்றும் சமநீதியைப் பெறமுடியும் என்பதோடு, அதனுடைய அனுதாபத்தையும், நல்லெண்ணத்தையும் ஈட்ட முடியும்.
எதிர்ப்பாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இது முழுமையான விடை என்று நான் துணிந்து கூறுகிறேன். மதமாற்றம் மூலம் தீண்டத்தகாத மக்கள் என்ன பலன் பெறமுடியும் என்பதை அது வெளிப்படுத்துகிறது. இந்த விஷயத்தை மேலும் முன்னெடுத்துச் சென்று, மதம் மாறுவதை எதிர்ப்பவர்கள் இதுவரை எழுப்பி இராத, ஆனால் எழுப்பப்படக்கூடிய கேள்விக்கும் பதிலளித்துவிடுவது விரும்பத்தக்கது. கேள்வி இதுதான் : உறவுமுறையை உருவாக்க மதமாற்றம் தேவைதானா? ஒரு சமூகக் குழுவிற்கும், ஒரு சமுதாயத்திற்கும் அதே போன்று உறவுமுறைக்கும், குடியுரிமைக்கும் இடையில் வேறுபாடு உள்ளது என்பதை மனதில் கொண்டால் இந்தக் கேள்விக்கான விடை வெளிப்படும்.
ஒரு சமூகம் என்று சொன்னால், அது உறவுமுறைகளின் ஓர் அமைப்பு என்றே திட்டவட்டமாகப் பொருள்படும். ஒரு சமுதாயம் என்பது பல சமூகக் குழுக்களின் ஒரு தொகுப்பு ஆகும் அல்லது பல்வேறு உறவு வகைப்பட்ட அமைப்புகளாகும். ஒரு சமூகத்தை ஒன்றாக வைத்திருக்கும் உறவை குடியுரிமை என்கிறோம்.
ஒரு சமுதாயத்தில் குடியுரிமையைப் பெறுவதற்கான வழி வகைகள் என்பது, ஒரு சமூகக் குழுவினுள் உறவுமுறையைப் பெறுவதற்கான வழிவகைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. குடியுரிமை என்பது, அங்கேயே வசித்துவரும் தன்மையினால் பெறப்படுவது ஆகும். குடியுரிமையைப் பெறுவதற்கான முன்நிபந்தனையானது, அரசாங்கத்திற்கு அரசியல் விசுவாசம் செலுத்த வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்வதாகும். உறவுமுறையைப் பெறுவதற்கான முன்நிபந்தனையானது முற்றிலும் வேறுபட்டது. மனிதனுடைய பரிணாம வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் ரத்த ஒற்றுமை என்பது, உறவுமுறையாக ஏற்றுக் கொள்வதற்கான முன் நிபந்தனையாக இருந்தது. ஏனென்றால் உறவுமுறை என்பது, ஒரே மூதாதையரில் இருந்து தோன்றியுள்ளவர்கள் என்றும் அதனால் தங்களது ரத்த நாளங்களில் ஒரே ரத்தத்தை கொண்டிருப்பதாகவும் கருதும் நபர்களைக் கொண்ட அமைப்பு. ஒவ்வொரு குழுவும் உண்மையிலேயே ஒரே மூதாதையரில் இருந்து தோன்றியுள்ளதா என்பதைப்பற்றி பொருட்படுத்த வேண்டியதில்லை.
உண்மையில் ஒரு குழுவானது, ஓர் அயலவர் அதே மூதாதையரில் இருந்து தோன்றியிருக்கவில்லை என்றபோதிலும்கூட, அவரைத் தங்கள் உறவுமுறைக்குள் சேர்த்துக் கொள்வதுண்டு. ஓர் அயலவர் ஏழு தலைமுறைகளாக ஒரு குழுவுடன் திருமண உறவு கொண்டிருந்தால், அவர் இந்த உறவுமுறையின் உறுப்பினராகிவிடுவார் என்று ஒரு விதி இருந்தது என்பது ஒரு சுவாரசியமான விஷயமாகும். இது கற்பனைக் கதை என்றபோதிலும், உறவுமுறைகள் சேர ரத்த ஒற்றுமை இருக்க வேண்டும் என்ற முன்நிபந்தனை தேவையாய் இருந்திருக்கிறது.
மனிதனுடைய பரிணாம வளர்ச்சியின் பிந்தைய கட்டத்தில் ரத்த ஒற்றுமைக்குப் பதிலாக, பொதுவான மதம் என்பது உறவு என்பதற்கான முன்நிபந்தனையாக மாறியது. இது தொடர்பாக, பேராசிரியர் ராபர்ட்சன் ஸ்மித் சுட்டிக்காட்டிய முக்கியமான அம்சத்தை நினைவிற் கொள்வது அவசியமாகிறது. ஒரு சமுதாயத்தில் சமூக அமைப்பு என்பது மனிதர்களைக் கொண்டு மட்டும் உருவாக்கப்பட்டதல்ல; அது கடவுளர்களையும், மனிதர்களையும் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆகையால் ஒரு சமூகக் குழுவில் நுழைந்து உறவுமுறை பந்தத்தை உருவாக்கிக் கொள்ள விரும்புகின்ற எவர் ஒருவரும், அந்த சமூகக் குழுவின் கடவுளையோ, கடவுளர்களையோ ஏற்றுக் கொள்வதன் மூலம் மட்டுமே அதில் நுழைய முடியும்.
பழைய ஏற்பாட்டில் நவோமி ரூத்திடம் கூறுகிறார்: “உன்னுடைய சகோதரி அவளுடைய மக்களிடமும், அவளுடைய கடவுளர்களிடமும் திரும்பிச் சென்றுவிட்டாள்.'' அதற்கு ரூத்தினுடைய பதில்: “உன்னுடைய கடவுள் என்னுடைய கடவுள்.'' இதுவும் மொபைட்டுகளைக் செமோசினுடைய மகன்கள் என்றும் மகள்கள் என்றும் அழைப்பதும், ஒரு சமூகத்தில் உறவுமுறை என்ற பந்தமானது, ஒரு பொதுவான மதத்தின்பால் அவர்கள் வைத்துள்ள விசுவாசத்தின் விளைவாகவே ஏற்படுகிறது என்பதற்கான சாட்சியங்களாக அமைந்துள்ளன. பொதுவான மதமின்றி எந்தவொரு உறவும் இருக்க முடியாது.
– தொடரும்
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 416

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் எழுத்தாளர்: அ.ஜெகநாதன்