புத்தம் - மதமா? மார்க்கமா?
புத்தம் - மதமா? மார்க்கமா?
- விவரங்கள்
- எழுத்தாளர்: பெரியார்
புத்தர் கொள்கை கடவுளை ஏற்றுக் கொள்வது கிடையாது. ஆத்மா என்ற ஒன்றையும் ஏற்றுக் கொள்வது கிடையாது. அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன்படி நட என்று சொல்லுகிற ஒரு மார்க்கமாகும்.
நேற்று நான் தங்கிருந்த இடத்தில் ஒரு பார்ப்பனர் என்னை வந்து சந்தித்தார்.
அவர் கேட்டார், நீ மதங்களைப் பற்றிக் கண்டித்துப் பேசுகிறாயே! புத்த மார்க்கத்தில் சேரச் சொல்லி மக்களைப் பார்த்துச் சொல்லுகிறாயே! அதுவும் ஒரு மதம் தானே என்று அதற்கு நான் சொன்னேன். அப்படிப் பித்தலாட்டமாக மக்களிடம் நீங்கள் (பார்ப்பனர்கள்) சொல்லி அப்படி அவர்களை ஆக்கி வைத்திருக்கிறீர்கள் என்பதாகச் சொன்னேன்!
அதற்கு அவர் சொன்னார்.
ஏன் அதில் புத்தம் சரணம் கச்சாமி; தம்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி என்று சொல்லுகிறார்களே என்றார். அதற்கு நான் சொன்ன பதிலை எடுத்து விளக்கினால் அது ஓரளவு பயன்படும் என்று நினைக்கிறேன்.
புத்தம் சரணம் கச்சாமி என்பது ஒன்றும் மூடநம்பிக்கைத் தத்துவம் அடங்கியதல்ல. நீ யாரைத் தலைவனாக ஏற்றுக் கொண்டிருக்கிறாயோ, அவனிடத்தில் உண்மையாக நடந்து உறுதியோடு பின்பற்று என்பதாகும்.
நீ தலைவனைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் நன்றாகத் துருவித் துருவிப் பார்த்து ஆராய்ந்து தேர்ந்தெடுத்து விட்ட பிறகு அவனது கட்டுப்பாட்டுக்கு அடங்கி அவனைப் பின்பற்ற வேண்டும் என்ற நல்லொழுக்கந்தான் அது போதிக்கிறது. தலைவன் என்று நீ ஒருவனை ஏற்றுக் கொண்டால் அவனுக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்பதுதானே ஒழிய வேறில்லை மற்றும் புத்தம் என்பது உன் புத்தியை குறிப்பதேயாகும்.
அதுபோலவே தம்மம் சரணம் கச்சாமி என்ப தற்குப் பொருள் நீ ஏற்றுக் கொண்டுள்ள கர்மங் களைக் - கொள்கைகளை உண்மையான முறையில் பக்தி செலுத்திக் கடைப் பிடித்து வர வேண்டும். அந்தக் கொள்கைக்கு மாறாக நடக்கக் கூடாது உறுதியோடு அவைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான்.
மூன்றாவதாக சங்கம் சரணம் கச்சாமி என்பது. நீ நல்லடி யோசித்து சேர்ந்திருக்கிற ஸ்தாபனத்தை மரியாதை பண்ணிப் பாதுகாக்க வேண்டும். அதற்கு எந்தவித இழுக்கும் வராத வண்ணம் நீ நடந்து கொள்ள வேண்டும். ஸ்தாபனத் தின் பெருமையை நீ கருத வேண்டும் என்பதுதானேயொழிய வேறில்லை. ஆகவே இந்த மூன்றுக்கும் அர்த்தம் (பொருள்).
நீ உன் தலைவனை மதி!
உன்னுடைய கொள்கைகளை உறுதியாகப் பின்பற்று!
உன் ஸ்தாபனத்திற்கு மரியாதை செய்து பாதுகாத்து வா
என்பதாகும்.
இவர்களெல்லோரும் உங்கள் புத்த நெறிக்கு மரியாதை கொடுத்து அது எல்லோரும் கொள்கைகளைஏற்றுக் கொண்டு புத்த மார்க்கத்தைக் கடைப் பிடித்து ஒழகுவது என்பது அறிந்த நான் மிகவும் மகிழ்ச்சிஅடைகிறேன். மற்ற கொள்கைகளுக்கு நீங்கள் இடங் கொடுக்கக் கூடாது. பார்ப்பன இந்துமதக் கொள்கைகளை மறந்தும் உள்ளே புகவிடக் கூடாது.
--------------------
15.02.1959 அன்று புதுடில்லி அம்பேத்கர் பவனத்தில் பெரியார் சொற்பொழிவு விடுதலை 22.02.1959
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா
Thanks to : http://www.keetru.com/index.php/2014-03-08-04-41-26/2014-03-14-11-17-84/27786-2015-01-30-02-48-22
Comments
Post a Comment