பௌத்தம் ஓர் அறநெறி அமைப்பா?

வண. நாரத தேரர் அவர்கள்.

தமிழில் 
செல்வி யசோதரா நடராசா
வண. நாரத தேரர் அவர்கள்.

தமிழில் 
செல்வி யசோதரா நடராசா

அத்தியாயம் 4: பௌத்தம்  ஓர் அறநெறி அமைப்பா?

    பௌத்த மதம் பொதுநலப் பண்பிலும், பரிபூரணத்திலும் இணையற்ற ஒரு சிறந்த 
அறநெறியைக் கொண்டுள்ளது என்பதில் ஐயமில்லை. இது மதகுருமார்களுக்கும் சாதாரண மக்களுக்கும் வெவ்வேறான நெறியை விளக்குகின்றது. ஆனால் பௌத்தம் ஒரு சாதாரண தார்மீகப் போதனையைவிட உயர்வானது. தூய்மைப் பாதையில் இந்த அறநெறி தொடக்க நிலையேயாம். இது இலட்சியத்தை அடைய ஒரு வழியேயல்லாமல் இலட்சியமன்று. ஒழுக்கம், முக்கியமானதேயானாலும் ஒருவனின் விடுதலைக்கு அது மாத்திரம் போதாது. ஒழுக்கம், ஞானம் அல்லது அறிவோடு (பஞ்ஞா) இணைய வேண்டும். பௌத்தத்தின் அடித்தளம் ஒழுக்க நெறியாயும், அதன் சிகரம் ஞானமாயும் உள்ளது.

    கொள்கைகளை அநுசரிக்கும் போது, ஒரு பௌத்தன், தன்னை மாத்திரம் கருதாது 
விலங்குகள் உட்பட மற்ற உயிர்களனைத்தையும் நினைவிலிருத்த  வேண்டும்.  பௌத்தம் போதிக்கும் நன்னெறி ஐயப்பாடான கருத்து வெளிப்பாடு எதனையும் ஆதாரமாகக் கொள்ளவில்லை. மேலும், அது ஒரு தனிச்சிறப்பான சிந்தனையில் தோன்றிய திறமை மிக்க வெளிப்பாடுமன்று. அதற்குமாறாக அது நிரூபிக்கக்கூடிய உண்மைகளையும், தனிப்பட்டவர்களுடைய ஆதாரங்களையும் ஆதாரமாகக் கொண்ட ஒரு பகுத்தறிவுள்ள சாதனைத் தொகுப்பாகும்.

    ஒரு பௌத்தனின் குணவியல்பை உருவாக்குவதில் வெளிப்புற இயற்கைக்கு 
மேலான ஏதுக்கள் எவையேனும் பங்கு பெறுவதில்லை என்பதை இங்கே குறிப்பிடல் வேண்டும். உபகாரங்களையோ அல்லது தண்டனைகளையோ தருவதற்குப் பௌத்தத்தில் யாருமில்லை. துன்பமும்  இன்பமும் ஒருவனுடைய செய்கைகளின் தவிர்க்க முடியாத விளைவுகள். ஒரு கடவுளின் ஆதரவையோ அல்லது வெறுப்பையோ பெற்றுக் கொள்ளும் எண்ணம் ஒரு  பௌத்தனின் மனதில் எழுவதில்லை. உபகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும், தண்டனை கிடைக்கும் என்ற பயமும்  அவனுக்கு நல்லனவற்றைச் செய்யவோ, அல்லது தீயனவற்றிலிருந்து விலகவோ தூண்டுதலாகப் பயன்படுவதில்லை. ஒரு பௌத்தன் எதிர்கால விளைவுகளைப்பற்றி அறிந்து, முன்னேற்றத்தைத்  தடைசெய்யும் தீய செயல்களைத் தவிர்த்து ஞானத்தை (போதியை) வளர்க்கும் நல்ல செயல்களைச் செய்கின்றான். நல்லது என்று நன்மையைச் செய்பவரும் தீயது என்று தீமையை விலக்குபவரும் உளர்.

    தமது சிறந்த சீடரிடமிருந்து புத்தர் எதிர்பார்க்கும் தனிச்சிறப்பான நன்னெறித் 
தரத்தைப் புரிந்து கொள்ள ஒருவன் தம்மபதம்,  சிகாலவாத சுத்தம், வியாக்கபாத 
சுத்தம், மங்கள சுத்தம், கரணிய சுத்தம், பராபவ சுத்தம், வசல சுத்தம், தம்மிக்க சுத்தம் முதலியவற்றைக் கவனமாகப் படித்தல் வேண்டும்.

    ஒழுக்க போதனையில், மற்ற நன்னெறித் தொகுதிகளைவிட பௌத்தம் மிக மேலானது. ஆனால் ஒழுக்க நெறி பௌத்தத்தின் ஆரம்ப நிலையே தவிர அதன் 
முடிவு அன்று.

    ஒரு விதத்தில், பௌத்தம் ஒரு தத்துவமன்று. ஆனால் இன்னொரு விதத்தில் அது தத்துவங்களுட் சிறந்த தத்துவமாகும்.

    ஒரு விதத்தில், பௌத்தம் ஒரு சமயமன்று. ஆனால் இன்னொரு விதத்தில் அது 
சமயங்களுட் சிறந்த சமயமாகும்.

    பௌத்தம் புலன்கடந்த அல்லது கிரியைகள் நிறைந்த நெறியன்று.

    அது ஐயப்பாடுடையதோ அல்லது பிடிவாத கொள்கையுடையதோ அன்று.

    அது சுயதுன்புறுத்தலோ அல்லது சுயநல ஈடுபாடோ கொண்டது அன்று.

    அது ஒவ்வொன்றிலும் துன்பத்தை மட்டுமே பார்க்கும் வழக்கமோ அல்லது  
    ஒவ்வொன்றிலும் பிரகாசத்தை மட்டுமே பார்க்கும் வழக்கமோ அன்று.

    அது நித்தியத் தன்மை வாதமோ அல்லது சூனியவாதமோ அன்று.

    அது முழுவதும் இம்மை பற்றியதோ அல்லது அம்மை பற்றியதோ 
அன்று.


    அது ஓர் இணையற்ற ஞானவழி ஆகும்.

    பௌத்தத்துக்கு முதன்முதல் வழங்கப்பட்ட சொல், "ஏந்துவது எதுவோ அது," 
எனப் பொருள் படும், "தம்மம்," ஆகும். இந்தக் கருத்தைக் கொண்ட பாளிப்பதத்தை விளக்க ஆங்கிலத்தில் ஒரு சமமான சொல்கிடையாது.

    உண்மையாயிருப்பது எதுவோ அதுதான், "தம்மம்." அது உண்மையாயிருக்கும் 
சித்தாந்தம் ஆகும். அது துன்பத்திலிருந்து விடுதலையளிக்கும் மார்க்கமும், விடுதலையுமாகும். புத்தர்கள் தோன்றினாலும், தோன்றாவிட்டாலும், "தம்மம்," 
நிலைத்திருக்கும். ஒரு புத்தரோ அல்லது மெய்ஞானம் பெற்ற ஒருவரோ அதை உணர்ந்து, கருணையோடு உலகுக்கு வெளிப்படுத்தும் வரை அது அறியாமை நிறைந்த மக்களின் கண்களினின்றும் மறைந்திருக்கும்.
    இத் தம்மம் ஒருவனின்றும் வேறாக நிலைபெற்றிருக்காது. அவனோடு நெருங்கி 
இணைந்திருப்ப தொன்றாகும்.

    இதனை நினைவுறுத்த, "தன்னை ஒரு தீவாக நினைத்துத் தானே அதில் ஒரு 
அடைக்கலம் என்று எண்ணிக்கொள். தம்மத்தையே தீவாகவும் அடைக்கலமாகவும் நினைத்துக்கொள். வேறு புறம்பான அடைக்கலத்தைத் தேடாதே," என்று புத்தர் கூறினார் (பரிநிப்பாண சுத்தம்).

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள்