பௌத்தரும் தமிழும்

பௌத்தமும் தமிழும்  - மயிலை திரு.சீனி. வேங்கடசாமி  (1900-1980)

பௌத்தரும் தமிழும்




    வடநாட்டிலிருந்து தென்னாட்டில் வந்த மதங்களைப் பண்டைப் பெரியோர் இரண்டு வகையாகப் பிரித்திருக்கின்றனர். அவை பிராமண மதம், சிரமண மதம் என்பன. பிராமண மதம் என்பது வைதீக மதம். சிரமண மதம் என்பது பௌத்த ஜைன மதங்களாகும். 'சிரமணம்' என்னும் சொல் தமிழில் 'சமணம்' என வழங்கும். 'சமண மதம்' என்றால், ஜைனமதத்துக்குமட்டும் பெயராக இக்காலத்தில் பெரும்பான்மையோரால் கருதப்படுகிறது. ஆனால் 'சமணம்' என்னும் சொல், வைதீக மதத்தவரல்லாத பௌத்த ஜைன மதங்களுக்குப் பொதுப் பெயராகப் பண்டைக்காலத்தில் வழங்கிவந்தது. 

    சமணர்களாகிய பௌத்த ஜைனர்கள் தங்கள் மதக் கொள்கைகளை உலகத்திலுள்ள மக்கள் எல்லோரும் அறிய வேண்டும் என்னும் விரிந்த மனப்பான்மை உடையவர்கள். ஆகையால், அந்தந்த நாடுகளில் பேசப்படும் தாய்மொழிகளில் தங்கள் சமய உண்மைகளை எழுதியும் பேசியும் வந்தார்கள். பிராமணர்களோ அத்தகைய விரிந்த மனப்பான்மை உடையவர்களல்லர். அதற்கு மாறாகத் தமது மதத்தைத் தாங்கள்மட்டும் அறியவேண்டும் என்று குறுகிய எண்ணமுடையவர்கள். பொது மக்கள் அறியாத சம்ஸ்கிருத மொழியில் தங்கள் மதக்கொள்கைகளை எழுதி வைத்துக்கொண்டதோடு, அந்த நூல்களைப் பிராமணரல்லாதவர்கள் படிக்கவும் கூடாது, பிறர் படிப்பதைக் காதால் கேட்கவும் கூடாது, அப்படிச் செய்வராயின், அவரைக் கடுமையாகத் தண்டிக்கவேண்டும் என்று சட்டமும் எழுதி வைத்துள்ளார்கள்.

    பரந்த உயர்ந்த பெரிய நோக்கமும், மனப்பான்மை கொண்டவர்களான பௌத்த ஜைனர்கள் தங்கள் மதக் கொள்கைகளை எல்லோரும் அறியவேண்டும் என்னும் நல்லெண்ணமுடையவர்களாதலின், அவர்கள் தங்கள் மத நூல்களை அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளில் மொழிபெயர்த்து வைத்தார்கள். நாட்டுமக்கள் அறியாதபடி வேறொரு மொழியில் மதக்கொள்கைகளை மறைத்து வைப்பது மன்னிக்க முடியாத பெரும்பாவம் என்பது அவர்களின் கொள்கை. இக் கொள்கையை விளக்கக் கீழ்கண்ட வரலாறுகளே போதுமானவை.

    பௌத்தர்களுக்குரிய 'கல்லவக்க' என்னும் பாலிமொழி நூலில் இச்செய்தி காணப்படுகிறது:

    பௌத்த மதத்தை சேர்ந்த இரண்டு பார்ப்பனத் துறவிகள் பகவன் புத்தரிடம் சென்று, 'புத்தரின் வாய்மொழிகளை வெவ்வேறு நாட்டிற்சென்று போதித்து  வருகிற தேரர்கள் அந்தந்த நாட்டுத் தாய்மொழியில் உபதேசம் செய்கிறபடியால், புத்தர்  மொழிகள் கெட்டுப்போகின்றன. ஆகையால், புத்தரின் உபதேசங்களைச் சந்தபாஷையில் எழுதிவைப்போமாக!' என்றனர். இங்குச் 'சந்தம்' என்பது சமஸ்கிருத சுலோகம். சமஸ்கிருத சுலோகத்தில் புத்தரின் உபதேசங்களை அமைத்து எழுதவேண்டும் என்று கூறியதாகக் கருத்து. கௌதம புத்தர் இவர்களது வேண்டுகோளினை மறுத்து "நீங்கள் புத்தரின் வாய்மொழிகளைச் சந்தபாஷையில் அமைத்து எழுதக்கூடாது; அப்படிச் செய்கிறவர் யாராயிருந்தாலும் தீங்குசெய்த குற்றத்திற்குள்ளாவர். புத்தரின் வாய்மொழிகளை ஒவ்வொருவரும் அவரவரது தாய்மொழியிலேயே அறிய வேண்டும்." என்றனர்.

    இதனால் புத்தரின் விரிந்த மனப்பான்மை நன்கு விளங்குகிறது. இந்தக் கொள்கையைப் பின்பற்றிப் பிற்காலத்துப் பௌத்தர்களும் அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளில் பௌத்தக் கொள்கையைப் போதித்து வந்தனர்.

    ஜைன சமயத்தவரும் இவ்வாறே பரந்த மனப்பான்மையுள்ளவராய், அந்தந்த நாட்டுத் தாய்மொழியிலேயே தங்கள் நூல்களை எழுதிவந்தார்கள். இதனை சித்தசேன திவாகரர் என்னும் ஜைன முனிவரின் வரலாற்றிலிருந்து நன்கறியலாம். (சித்தசேன திவாகரர் வரலாற்றைச் சமணமும் தமிழும் என்னும் நூலில் காண்க.)

    இவ்வாறு, தாய்மொழி வாயிலாகத் தமது மதக்கோட்பாட்டினை உலகத்தில் பரவச் செய்யுங் கருத்துடையவரான பௌத்தர்கள் எந்தெந்த நாட்டிற்குச் சென்றார்களோ, அந்தந்த நாட்டு மொழிகளைக் கற்று, அந்தந்த மொழிகளில் மத நூல்களையும் பிறநூல்களையும் இயற்றிவைத்தார்கள். இந்த முறையில் இவர்கள் தமிழ்மொழிக்குச் செய்த, தொண்டு தமிழர்களால் மறக்கற்பாலதன்று. அன்றியும், சிறுவர்களின் கல்வியைப் பற்றியும் இவர்கள் கருத்தினைச் செலுத்தி, அவர்களுக்குத் தாய்மொழியை எழுதிப்படிக்கக் கற்பித்து வந்தார்கள். நாம் இப்பொழுது வழங்குகிற, 'பள்ளிக்கூடம்' என்னும் சொல்லே, இவர்கள் கல்வியைப் பரப்புவதற்காகச் செய்துவந்த முயற்சியை இனிது விளக்குகின்றது. 'பள்ளி' என்னும் பெயருக்குப் பௌத்த ஜைனத் துறவிகள் வாழும் மடம் என்பது பொருள். பௌத்த ஜைனத் துறவிகள் தாங்கள் வாழும் பள்ளிகளின் கூடங்களில் பாட சாலைகளை வைத்துப் பாடஞ் சொல்லிவந்தமையால், பாடசாலைக்குப் 'பள்ளிக்கூடம்' என்னும் பெயர் உண்டாயிற்று. பௌத்த ஜைன மதங்கள் மறைந்து பல நூற்றாண்டுகள் கழிந்தும், இன்றளவும் 'பள்ளிக்கூடம்' என்னும் சொல் தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றது.

    இவ்வாறு சொல்வதால், பௌத்த ஜைனர்கள் வருவதற்கு முன்னே தமிழ்நாட்டில் கல்விச்சாலைகள் கிடையாவென்று சொன்னதாகக் கருதவேண்டா. சமணர்கள் தமிழ்நாடு வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, தமிழர்கள் கிராமங்கள் தோறும் கல்விச்சாலைகள் அமைத்து நடத்திவந்தனர். சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியருக்குக் 'கணக்காயர்' என்ற பெயர் சங்க நூல்களில் காணப்படுகின்றது. பின் ஏன் இதனை இங்குக் குறிப்பிட்டோமென்றால், பௌத்தர்களும் ஜைனர்களும் தாய்மொழிக் கல்வியைப் பரவச் செய்ய அதிகமாகக் கருத்தைச் செலுத்தினார்கள் என்பதை விளக்குவதற்காகத்தான்.  

    பௌத்த ஜைன மதத்தார் தாய்மொழியான தேச பாஷையில் பெரிதும் ஊக்கங்காட்டி, அந்த மொழியில் பொதுமக்களின் நன்மைக்காக நூல்கள் இயற்றி வைத்ததுபோல வைதீக மதத்தைச் சேர்ந்த பிராமணர் தங்கள் மதநூல்களைத் தேச பாஷையில் எழுதிவைக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் தங்கள் மதக்கொள்கைகளைத் தாங்கள் மட்டும் படிக்கவேண்டும், பிறர் அவற்றை ஒருபோதும் படிக்கக்கூடாதென்றும் குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

    வனப்புப் பொருந்திய தமிழ்மங்கை என்னும் பெருமாட்டிக்குச் சிலம்பு, மேகலை, வளை, குண்டலம், மணி என்னும் விலைபெற்ற நற்கலங்களை அணிவித்து, என்றென்றும் அப் பெருமாட்டி அழகுடன் விளங்கச் செய்தவர் சமணராகிய பௌத்த ஜைன மதத்தினரேயாவர். அதாவது, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சிந்தாமணி என்னும் ஐம்பெருங்காப்பியங்களை இயற்றித் தமிழ்மொழியை அழகுறச் செய்தவர் பௌத்த ஜைனரேயாவர்.  மணிமேகலை, குண்டலகேசி  என்னும் இரண்டையும் பௌத்தரும்; சிலப்பதிகாரம்,  வளையாபதி,  சிந்தாமணி  என்னும் மூன்றையும் ஜைனரும் இயற்றினர். அவர்கள் அப் பெருமாட்டிக்கு அணிவித்த வேறு அணிகலன்களும் பலப்பல உள்ளன.

    பௌத்தர் (ஜைனருங்கூட) தமிழ்நாட்டிலே தமிழ்மொழியிலே தமது மதக் கொள்கையைப் பரப்பிய செய்தியை இதுகாறுங் கூறினோம். இதுவன்றியும், பௌத்தர், தமிழ்நாட்டிலே பிராமி எழுத்தைப் பரவச் செய்யக் காரணமாக இருந்தனர் என்பதை விளக்குவோம். பிராமி அல்லது பிராஹ்மி என்று கூறப்படும்  எழுத்தைப் புதிதாகக் கண்டுபிடித்தவர் பகவான் புத்தர் என க்ஷேமேந்திரர் என்பவர், தாம் இயற்றிய புத்தஜனனம் என்னும் நூலிலே கூறியுள்ளார்.


வர்தமான: குமாரோத
ஸர்வ வித்யா சுபாரக:
லிபிப்ர வீனோ பினவாம்
லிபிங் பிராஹ்மீம் வினிர்மமே

என்று அவர் கூறியுள்ளார். அஃதாவது: சித்தார்த்த குமாரன் (புத்தர்) இளமையில் எல்லாவித வித்தைகளையும் கற்று வளரும்போது, தாமாகவே பிராஹ்மி எழுத்தை உண்டாக்கி  நிறுவினார் என்பது இச்செய்யுளின் கருத்தாகும். 

    பிராஹ்மி எழுத்தை இந்தியா முழுவதிலும் பரவச் செய்தவர்கள் பௌத்தர் ஆவர். கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் சக்கரவர்த்தியாக விளங்கியவரும் பௌத்த மதத்தை மேற்கொண்டதோடு, அம் மதத்தை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பரவச் செய்தவருமாகிய அசோக சக்கரவர்த்தி தமது ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகளிலெல்லாம் எழுதுவித்துள்ள கல்வெட்டுச் சாசனங்களில் பிராமி எழுத்தையே உபயோகித்து இருக்கிறார். காரோஷ்டி என்னும் வேறு எழுத்து இந்தியாவின் வடமேற்கில் அசோகர் காலத்தில் வழங்கி வந்த போதிலும், அவற்றை உபயோகிக்காமல், பிராமி எழுத்தை உபயோகித்ததன் கருத்து அது புத்தர் உண்டாக்கிய எழுத்து என்னும் நம்பிக்கையாக இருக்கலாம். அசோகர் தமது ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் மட்டும் பிராமி எழுத்து உபயோகிக்கப்பட்டது என்று கருத வேண்டா. அவர் ஆட்சிக்குட்படாத தமிழ்நாடு, இலங்கைத் தீவுகளிலும், (அசோகர் காலத்திலே) எழுதப்பட்ட சாசனங்களும் பிராமி எழுத்துக்களாக உள்ளன. இவ்விடங்களிலும் இச் சாசனங்கள் எழுதியவர்கள் பௌத்தர்கள் என்பது அறியத்தக்கது. எனவே கி.மு மூன்றாம் நூற்றாண்டில், அசோக சக்கரவர்த்தியும், அவரால் வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட பிக்குகளும் பிராமி எழுத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்தார்கள் என்பது அறியப்படுகிறது. அசோக சக்கரவர்த்தி தம் சாசனங்களில் பிராமி எழுத்தை உபயோகித்தபடியால், பிராமி எழுத்துக்கு அசோகர் எழுத்து என்றும் இக்காலத்தில் பெயர் வழங்குகிறார்கள். 

    கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து  கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் தமிழ்நாட்டிலே எழுதப்பட்ட கல்வெட்டுகள் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. இவற்றை எழுதியவர்கள் பெரும்பாலும் பௌத்தர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாண்டிநாட்டிலே, அழகர்மலை, கழுகுமலை, நாகமலை, சித்தர்மலை, திருப்பரங்குன்றம், கொங்கர் புளியங்குளம், கீழைவளவு, முத்துப்பட்டி, அரித்தாப்பட்டி, கருங்காலக்குடி, விரிச்சியூர், மருகால்தலை, குன்னக்குடி, திருச்சி ஜில்லா கருவூர் தாலுகாவில் உள்ள ஆறுநாட்டார்மலை முதலிய இடங்களில் உள்ள பாண்டவமலை என்று அழைக்கப்படும் குன்றுகளில் உள்ள குகைகளில் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவ்விடங்களில் உள்ள பிராமி எழுத்தைப்பற்றி, சென்னை அரசாங்கத்து ஆர்க்கியாலஜி, எபிகிராபி இலாக்காக்களின் அறிக்கைகளில் காணலாம்.  இச்சாசனங்கள் தமிழ்மொழியில் இருந்தும், எழுத்துக்கள் பிராமி எழுத்தாக உள்ளன. 1800 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டிலும் பிராமி எழுதப்பட்டது என்பதற்கு இக் கல்வெட்டுச் சான்றுகள் அல்லாமல் வேறு சான்றும் எதிர்பாரா வண்ணம் கிடைத்திருக்கிறது.

    புதுச்சேரிக்குத் தெற்கே பத்துமைல் தூரத்தில் உள்ள துரிக்கமேடு என்று வழங்கப்படுகிற சிறு கிராமம்,  1800 ஆண்டுகளுக்கு முன்னே, (கி.பி. 2 ஆம் நூற்றாண்டில்)  தமிழ் நாட்டிலே பேர்போன துறைமுகப்பட்டினமாக இருந்தது. இங்கு உரோமாபுரி நாட்டிலிருந்தும் கப்பல் வாணிகர் வந்து வாணிகம் செய்து வந்தனர். ஆனால், பேர்போன இந்தத்துறைமுகத்தைப் பற்றிப் புறநானூறு முதலிய சங்கநூல்களில் யாதொரு குறிப்பும் காணப்படவில்லை. இவ்விடத்தை அண்மையில் அரசாங்கத்து ஆர்க்கியாலஜி உத்தியோகஸ்தர் அகழ்ந்து பார்த்தபோது, பூமிக்குள்ளிருந்து பல பொருட்களைக் கண்டெடுத்தனர். அப்பொருட்களுடன் உடையுண்ட மட்பாண்டங்களும் கிடைத்தன. அம்மட்பாண்டங்கள் சிலவற்றில் பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. பாஷை தமிழாகவும், எழுத்து பிராமி எழுத்தாகவும் இருக்கின்றன. இவ்வாறு தமிழ்நாட்டிலே  1800 ஆண்டுகளுக்கு முன்னே, பிராமி எழுத்து வழங்கிவந்த செய்தி, காட்டிலே மலைக்குகைகளில் காணப்படும் கல்வெட்டுக்களினாலும், நாட்டிலே பூமிக்கடியில்  கிடைக்கும் மக்கள் வழங்கிய மட்பாண்டங்களில் எழுதப்பட்ட எழுத்துக்களினாலும் வலியுறுத்தப்படுகின்றது. பிராமி எழுத்தைத் தமிழ்நாட்டிலே  புகுத்தியவர்கள் பௌத்தர்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை. 

    தமிழகத்திலே பிராமி எழுத்து வருவதற்கு முன்பு வேறு எழுத்துக்கள் இல்லை என்று கருதவேண்டா. புத்தஜாதகம் எனப்படும் பழையபௌத்த நூலிலே, புத்தர் காலத்துக்கு முன்னரே எழுத்துக்கள் வழங்கிவந்த செய்தி கூறப்படுகிறது. தமிழ்நாட்டிலேயும், பிராமி எழுத்து வருவதற்கு முன்பே ஏதோ ஒருவகை எழுத்து வழங்கி வந்தது. தமிழகத்திலே பிராமி எழுத்து பௌத்தர்களால் புகுத்தப்பட்ட கி.மு. 3 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, பழைய தமிழ் எழுத்து வழக்கொழிந்துவிட்டது. ஆனாலும், புதிய பிராமி எழுத்தில் இல்லாததும் தமிழில் மட்டும் இருந்ததுமான ற, ழ போன்ற எழுத்துக்களை மட்டும் விலக்காமல் பிராமி எழுத்தோடு சேர்த்துப் பண்டைத் தமிழர் வழங்கினார்கள். கடைச்சங்கக் காலத்தில் பிற்பகுதியிலே சங்கப்புலவர்கள் பிராமி எழுத்தையே எழுதியிருக்க வேண்டும். பின்னர், பிராமி எழுத்திலிருந்து வட்டெழுத்து என்னும் ஒருவகை எழுத்து உருவாயிற்று.

    தமிழ்நாட்டிலேயிருந்த பௌத்த, ஜைனர்கள், தமது மதத்தைச் சேர்ந்த "தெய்வ" மொழிகளாகிய பாகத மொழிகளையும்  (பாலி, சூரசேனி) வழங்கிவந்தார்கள். அவர்கள், தத்தம் சமய நூல்களை எழுதுவதற்குப் பிராமி எழுத்திலிருந்து கிரந்த எழுத்து என்னும் புதுவகை எழுத்தை உண்டாக்கினார்கள். இந்தக் கிரந்த எழுத்தைக் கொண்டு அவர்கள் பாகத (பிராகிருத) நூல்களையும் சமஸ்கிருத நூல்களையும்  எழுதிவந்தார்கள். பின்னர் நாளடைவில், சோழநாட்டில், கிரந்த எழுத்திலிருந்து ஒரு வகை தமிழ் எழுத்து உண்டாக்கப்பட்டு  இப்போது வழங்கப்படுகிற தமிழ் எழுத்து வழங்கப்பட்டது. இந்தத் தமிழ் எழுத்துக்கும் கிரந்த எழுத்து என்பது பெயர். ஆனால், பாண்டிநாட்டிலும் சேர நாட்டிலும் பிராமி எழுத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பழைய வட்டெழுத்தே வழக்கத்தில் இருந்துவந்தது.

    கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் பாண்டிய நாட்டைக் கைப்பற்றியபோது, அந் நாட்டில் வழங்கிவந்த வட்டெழுத்துக்களை மாற்றிப் புதிய கிரந்தத் தமிழ் எழுத்துக்களைப் புகுத்தினார்கள். ராசகேசரிவர்மன் என்னும் சிறப்புப் பெயரையுடைய ராசராசனும் (முதல் ராஜராஜன்) அவன் மகன் ராசேந்திரனும் (முதல் ராஜேந்திரன்) பாண்டி நாட்டிலே கிரந்தத் தமிழ் எழுத்தை (இப்போது வழங்கப்படும் தமிழ் எழுத்தை)ப் புதிதாகப் புகுத்தினார்கள் என்று ஆராய்ச்சிவல்லர் கூறுவர். இந்தச் சோழ அரசர்கள் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் கிரந்தத் தமிழ் எழுத்தைப் பாண்டிநாட்டில் புகுத்தியதற்குச் சான்று என்ன வென்றால், குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோயில் சாசனங்களாகும்.  இச் சாசனங்கள், பழைய வட்டெழுத்தில் எழுதப்பட்டிருந்த சாசனங்களைப் புதிய எழுத்தில் பெயர்த்தெழுதி ராசராசன் அமைத்தான் என்று கூறுகின்றன. 

    இவ்வாறு பௌத்தர்களால் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்ட பிராமி எழுத்துச் சில நூற்றாண்டுகள் வழங்கிவந்து, பின்னர் அதிலிருந்து வட்டெழுத்து உண்டாகிச் சில நூற்றாண்டு வழங்கி வந்து, பின்னர், பிராமி எழுத்திலிருந்தே பௌத்த ஜைனர்களால் இன்னொரு வகையாக உண்டாக்கப்பட்ட கிரந்த எழுத்துக்களிலிருந்து கிரந்தத் தமிழ் எழுத்து உண்டாகி அவ்வெழுத்தே நாளிதுவரை வழங்கப்பட்டு வருகிறது. அசோகர் எழுத்து எனப்படும் பிராமி எழுத்திலிருந்தே நாகரி எழுத்து உண்டாகி இப்போது வடநாட்டில் வழங்கி வருகிறது. சுருங்கக் கூறினால், பிராமி எழுத்திலிருந்தே நாகரி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய எழுத்துக்கள் உண்டாயின. இதில் சற்றும் ஐயமில்லை. அறிஞர் ஆராய்ந்து கண்டுகொள்க. 

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் எழுத்தாளர்: அ.ஜெகநாதன்